அபுதாபி ரூல்ஸ்

 

Pexels

உலகம்

அரபு உலகம் : பேருந்து பயணத்தில் சூயிங்கம் சாப்பிட்டால் 4000 ரூபாய் அபராதம் – எங்கு?

திஜெ

உலகின் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் முக்கியமானதாகக் கருதப்படும் ஐக்கிய அரபு நாடுகள் சுற்றுலாத்துறையில் முதன்மையானதாகவும் விளங்கி வருகிறது. தனது நாட்டு மக்களுக்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் அங்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் ஏராளம். இது குறித்த தகவல்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடிமகனாக இருக்கலாம் , வேலைக்காக சென்றிருப்பவராக இருக்கலாம் அல்லது சுற்றுலாவுக்கு சென்றிருப்பவராக இருக்கலாம். ஆனால் அந்த நகரங்களின் பொது போக்குவரத்துகளில் பயணம் செய்வதற்கு நீங்கள் சிலவற்றை அவசியம் அறிந்திருக்க வேண்டும். ஒருவேளை துபாயில் ஒரு பேருந்தில் ஏறிய நீங்கள் உங்களுக்கு பிடித்தமான சூயிங்கம்மை வாயில் போட்டு மென்று கொண்டு வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிச்சயம் 200திர்ஹாம் (DH) அபராதம் விதிக்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4000ரூபாய்! ஆம் நம் ஊர் பேருந்து பயணங்களில் டீ, வடை, பிஸ்கட், மாங்காய், வெள்ளரி முதல் கொத்துப் புரோட்டா வரை பிய்த்து போட்டு சுவைத்து வந்த மக்களுக்கு இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். சூயிங்கம் ஒரு உதாரணம் மட்டுமே. இதுபோல் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு 100DH (2000ரூபாய்) முதல் 500DH(10,000ரூபாய்) வரை அபராதங்களும் விதிக்கப்படுகிறது.

Bus

பொதுமக்களுக்கும், தினசரி பயணிகளுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அபுதபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் (Integrated transport center) சமூகவலைதள பக்கங்களின் மூலம் இதுகுறித்த தகவல்களை மக்களிடம் கொண்டுசேர்க்கப்படுகிறது. விதிகளை தொடர்ச்சியாக மீறுவோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நிச்சயம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்து வருகிறது.

அபுதாபி பேருந்துப்பயண விதிமீறல்களும் அதற்கான அபராத விவரங்களும் :


• எரியக்கூடிய பொருட்கள் அல்லது கூர்மையான பொருட்களை எடுத்து செல்லுதல் கூடாது. மீறினால் dh100 (2000ரூபாய்) அபராதம்.

• மற்றவருக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் அல்லது நாகரிகமற்ற முறையில் பயணித்தால் dh500 (10,000ரூபாய்) அபராதம்.

• பேருந்துக் கட்டணம் செலுத்த தவறினால் dh200 (4000ரூபாய்) அபராதம்.

• ஹஃபிலட் கார்டு (hafilat) எனப்படும் அபுதபியின் பொது போக்குவரத்திற்கான ஸ்மார்ட் கார்டை விற்க முயன்றால் dh500 (10,000ரூபாய்) அபராதம்.

• மற்றவருக்காக ஒதுக்கப்பட்ட அல்லது தங்களுக்கு உரிமையில்லாத இருக்கையில் அமருவோருக்கு dh100 (2000ரூபாய்) அபராதம்.

• பேருந்துகளில் உணவு உண்பது, சூயிங்கம் மெல்வது, பானங்கள் அருந்துதல் கூடாது. மீறினால் dh200 (4000ரூபாய்) அபராதம்.

• புகைப்பிடித்தல் கூடாது. மீறினால் dh200 (4000ரூபாய்) அபராதம்.

• பேருந்தினுள் இடமில்லாத போது தங்களது சைக்கிளுடன் உள்ளே நுழைய முயல்வோருக்கு dh200 (4000ரூபாய்) அபராதம்

Dubai

துபாய் பேருந்துப்பயண விதிமீறல்களும், அதற்கான அபராத விவரங்களும் :

நீங்கள் துபாய் வாசியாக இருந்து அடிக்கடி பேருந்தில் பயணம் செய்பவராக இருப்பின் இதோ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டுப்பாடுகளும், விதிமீறல்களுக்கான அபராத விவரங்களும்.

• துபாயின் பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவோர் அதற்கான நுழைவு மற்றும் வெளியேறுவதற்கான கட்டணங்களை முறையாக செலுத்த தவறும்பட்சத்தில் அவர்களுக்கு dh200 (4000ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.

• அடுத்தவரின் பயண அட்டையை பயன்படுத்துவோர், போலி பயண அட்டையை பயன்படுத்துவோர், காலவதியான பயண அட்டையை பயன்படுத்துவோருக்கு dh200 (4000ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.

• செல்லாத பயண அட்டையுடன் பயணிப்போருக்கு dh500 (10000ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.

• பொது போக்குவரத்து வாகனங்களை சேதப்படுத்துவோருக்கு dh200 (4000ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.

• பயணத்தின் போது எச்சில் துப்புதல், குப்பைகளை போடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் dh100 (4000ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.

• பேருந்தினுள்ளே புகைப்பிடித்தல், மது அருந்துதல், தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை எடுத்து செல்லுதல், பொருட்களை விற்பனை செய்தல் அல்லது விளம்பரப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் dh200 (4000ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.

அபராதங்களை தவிர்ப்பதற்கு பொது மக்கள் விழிப்புணர்வுடன் பயணம் செய்ய வேண்டுமென ஐக்கிய அரபு நாடுகள் வலியுறுத்தி வருகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?