உலகில் உள்ள எல்லா விஷயங்களையும் மனிதன் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கொண்டு வந்து, உன்னுடையது, என்னுடையது என பிரித்துப் பேசினான். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்தில் விண்வெளி மனிதனின் கைகளுக்கு அப்பால் இருந்தது.
ஆனால் இந்த 2022ஆம் ஆண்டில் விண்வெளியையும் மனித இனம் விட்டு வைக்கவில்லை. ஒரு பக்கம் எலான் மஸ்க் போன்ற சிலர் மனித நாகரிகத்தை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றுவேன் என்கிறார்கள். வேறு சிலரோ, விண்வெளியில் ஏலியன்கள் ஏதாவது இருக்கின்றனவா என ஆராய்ந்து வருகிறார்கள்.
இதெல்லாம் போக, விண்வெளியில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை (International Space Station) அமைத்துள்ளது நாசா. இதில் பல நாடுகளின் பங்களிப்பு இருக்கின்றது.
சீனாவோ, தனக்கென ஒரு தனி விண்வெளி மையம் அமைக்கப்பட வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே வேலை பார்த்து வருகிறது. அதன் விளைவாக டியாங்காங் (Tiangong) விண்வெளி மையம் இந்த ஆண்டுக்குள் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டியாங்காங் விண்வெளி மையத்துக்குத் தேவையான சரக்குப் பொருட்களை, நவம்பர் 12 சனிக்கிழமை காலை, ஹைனன் மாகாணத்தில் உள்ள வெங்செங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் - 7 ஒய் 6 ராக்கெட் மூலம் டியான்சு 5 (Tianzhou 5) என்கிற விண்களத்தை, கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும் டியாங்காங் மையத்தை நோக்கி ஏவியது, சரியாக தன் சுற்றுவட்டப் பாதையைச் சென்றடைந்ததாக சைனா மேண்ட் ஸ்பேஸ் ஏஜென்சி (China Manned Space Agency) என்கிற முகமை கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்பயணம் முழுமையாக வெற்றி அடைந்துள்ளதாக சின்ஹுவா செய்தி முகமையில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தான், சீனா மெங்டியன் (Mengtian) என்கிற ஆராய்ச்சிக் கூடத்தை அனுப்பி வைத்தது. China Aerospace Science and Technology Corporation (CASTC) என்கிற சீன அமைப்பும், டியாங்காங் விண்வெளி மையத்தின் கட்டுமானம் இந்த ஆண்டுக்குள் நிறைவடையலாம் என்று கூறி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
டியாங்காங் விண்வெளி மையத்தில் மூன்று பேரைக் கொண்ட இரு விண்வெளி வீரர்கள் குழு, மாறி மாறி பணிகளைச் செய்து வருகிறார்கள் என்று எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் டியாங்காங் விண்வெளி மையம் செயல்பாட்டுக்கு வந்தால், உலகிலேயே நாசாவின் விண்வெளி மையத்தைத் தொடர்ந்து தனக்கென தனி விண்வெளி மையம் வைத்திருக்கும் நாடு சீனா தான் என்கிற பெருமையைப் பெறும்.
அதோடு இந்த டியாங்காங் விண்வெளி மையத்தில் இருக்கும் இரு ராட்சத கரங்களால் (குறிப்பாக நீளமான கரத்தால்) ஒரு செயற்கைக் கோளையே விண்வெளியில் இருந்து பிடிக்க முடியும் என்பது நினைவுகூரத்தக்கது. வெறுமனே ஒரு செயற்கைக் கோளைப் பிடிப்பதைத் தாண்டி, அதை ஒரு குறிப்பிட்ட திசையில் எரியும் சக்தி கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ராட்சத எந்திரக் கரங்களைக் குறித்த தன் அச்சத்தை அமெரிக்கா நீண்ட காலமாக எச்சரித்து வருவதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust