மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ளவே மொழி என்கிற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மொழியின் வளமை எப்படி இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்நாட்டு மக்கள் வாழ்க்கை செழிப்பாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியா போன்ற பறந்து விரிந்த துணைக் கண்டத்தில் ஆயிரக் கணக்கான மொழிகள் பேசப்பட்டு வருவதால் தான் இந்த நாடு இன்றளவும் உலக வரைபடத்தில் பலர் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் போலப் பல மொழி பேசும் ஒரு சிறு பகுதி இந்தியாவுக்கு வடக்குப் பகுதியிலேயே இருக்கிறது. அந்த நிலப்பரப்பின் பெயர் என்ன? யார் அவர்கள்? வாருங்கள் பார்ப்போம்.
ஒரு காலத்தில் மத்திய ஆசியாவின் நுழைவாயிலாக இருந்த காஷ்மீர் பகுதியில் இருக்கும் குரெஸ் (Gurez) பள்ளத்தாக்கு, தற்போது தார்த் மக்களின் வாழ்விடமாக இருக்கிறது.
காஷ்மீரின் தலைநகரான ஶ்ரீநகரில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் வட மேற்கில் அமைந்திருக்கிறது குரெஸ் பள்ளத்தாக்கு. அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் நம்மை மலைக்க வைக்கும் அதே நேரத்தில், நம் மனதை நெருடுவதாகவும் இருக்கிறது.
கோத்லெய்ப் வில்ஹெம் லெய்ட்னர் (Gottlieb Wilhelm Leitner) என்பவர் தன் "தார்திஸ்தான் 1861" என்கிற புத்தகத்தின் வழி தார்திஸ்தான் (Dardistan) என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
இந்த சொல் அத்தனை எளிதில் எல்லோர் மத்தியிலும் எளிதாக ஏற்றுக் கொள்ளப்படாத சர்ச்சைக்குரிய சொல்லாகவே இருந்தது. புவியியல் ஆய்வாளர்கள் மத்தியில் இந்த சொல் அதிகம் பயன்படுத்தப்பட்டு, கல்வித் துறையில் பரவி கடைசியாகத் தான் உள்ளூர் மக்கள் மத்தியில் தார்திஸ்தான் (Dardistan) என்கிற சொல் பரவியது, பிரபலமடைந்தது எனலாம்.
ஆப்கானிஸ்தானின் வட கிழக்குப் பகுதி, ஜம்மு & காஷ்மீரில் ஒரு பகுதி, வடக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு சிறு பகுதி என பல நாடுகளின் நிலபரப்பை தார்திஸ்தான் என்கிற சொல் குறிக்கிறது.
தார்த் (Dards), தராதா (Darada), தார்திக் (Dardic) போன்றோர் இதன் முக்கிய இனக்குழுவாகக் கூறப்படுகிறார்கள். இவர்களைத் தொடர்ந்துதான் தார்திஸ்தான் என்கிற பெயர் வழங்கப்பட்டது.
தார்த் மக்கள் பல இந்தோ - ஆரிய மொழிகளைப் பேசினர், இப்போதும் பேசி வருகின்றனர். அவை எதும் சிந்து நதிச் சமவெளி அல்லது கங்கை நதிச் சமவெளிப் பகுதியில் பேசப்பட்ட அல்லது பேசப்பட்டு வரும் இந்தோ - ஆரிய மொழிகளோடு அதிகம் ஒத்துப்போவதில்லை.
இந்த நிலப்பரப்பை காஃப்பிரிஸ்தான் என்கிற கடுமையான சொல்லால் அழைக்கிறார்கள். காஃபிர் என்றால் அரபி மொழியில் நம்பிக்கையற்றவர் என ஒரு பொருள் உண்டு. இந்த நிலப்பகுதியில் தொடர்ந்து போர் தொடுத்தவர்கள், பயணிகள், ஆய்வாளர்கள் என இந்தியாவை ஆட்சி செய்து வந்த முகலாயர்களோடு தொடர்புடையவர்கள், ஆப்கானியர்கள், மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் வந்து சென்றனர்.
கைபர் போலன் கனவாய் உள்ள சித்ரால் மாவட்டத்தின் சில பகுதி, பஞ்சகோரா ஆற்றின் மேற்பகுதி, கோஹிஸ்தான், கில்ஜித்தின் மேற்பகுதி போன்ற நிலப்பரப்புகள் தார்திஸ்தானில் அடங்கும்.
தார்த் மக்கள் ப்ளினி சீனியர், டாலமி, ஹெரொடொடஸ் போன்ற பிரபல அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் குறிப்புகளில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். தார்த் மக்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பஞ்சாப் சமவெளிப் பகுதியிலிருந்து வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கிப் பயணித்து சித்ரால் மாவட்டம் வரை வந்தடைந்ததாக இந்தியா டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
14ஆம் நூற்றாண்டு காலத்தில்தான் இவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதாகவும், அவர்கள் கொவர், ஷினா என இருமொழிகளைப் பேசுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மொழிகளுக்கான எழுத்து வடிவம் பெர்ஷிய மொழியில் உள்ளன.
பிரிட்டிஷ் இந்தியாவோடு தொடர்புடைய பல பயணிகள் மற்றும் கல்வியாளர்கள் இந்து குஷ் மலைப் பகுதி, காரகோரம், இமாலயத்தில் வடகோடிப் பகுதிகளில் தார்திஸ்தான் என்று அழைக்கிறார்கள். இன்றுவரை தார்திஸ்தான் உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் இடமாக அறியப்படுகிறது.
தார்திஸ்தான் பகுதியில் வாழும் மக்கள் ஆறு குழுக்களாகப் பிரிந்து வாழ்கின்றனர். இவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றனர். இந்த 50க்கும் மேற்பட்ட மொழிகளும் ஆறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. புருசாஷ்கி (Burushaski), சினோ - திபெத்தியன் (Sino - Tibetan), துருக்கி, இந்தோ - ஆரியம், இராணியம், இந்தோ - ஐரோப்பியம் ஆகியவையே அந்த மொழிக் குடும்பங்கள்.
இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த 30 மொழிகள் இங்குப் பேசப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து இராணிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான், சீனா, இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படும் மொழிகள் அதிகம் பேசப்படுகின்றன.
காஷ்மீரி, ஷினா, கொவார் போன்ற தார்திக் மொழிகளுக்கு இடையில் புருஷாஸ்கி என்கிற மொழியும் பேசப்படுகின்றன. நுரிஸ்தானி போன்ற தனித்துவமான மொழிகளுக்கு இடையில் உலகிலேயே வெகு சில ஆயிரம் பேர் மட்டும் பேசும் கலசா மொழியும் இங்கு பயன்பாட்டில் இருக்கிறது.
இந்தியாவின் தென் பகுதியில் வாழும் மக்கள் வடக்கில் வாழும் இந்தி மொழி பேசும் மக்களோடு சிரமப்படுவதைப் போல, தார்த் பகுதியிலும் மக்கள் பஷ்தோ அல்லது உருது மொழி பேச வேண்டியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust