பூகம்பம் : உலக வரைப்படத்தை மாற்றி அமைத்த 10 பூகம்பங்கள் - விரிவான தகவல்கள் NewsSense
உலகம்

துருக்கி நிலநடுக்கம் : உலக வரைப்படத்தை மாற்றி அமைத்த 10 பூகம்பங்கள் - விரிவான தகவல்கள்

பூகம்பங்களில் மிக அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்திய 10 நிலநடுக்கங்களை இங்கே பார்க்கலாம். இந்த பத்து பூகம்பங்களில் 25 இலட்சம் மக்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். மேலும் இந்த பத்து பூகம்பங்களில் 9 ஆசியக் கண்டத்தில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

NewsSense Editorial Team

"முற்றுப்பெறாத கிரகமான பூமியின் மேலடுக்கில்தான் நாம் நடக்கிறோம். இதை நினைவூட்டுவதற்குப் பூகம்பம் தேவைப்படுகிறது". - சார்லஸ் குரால்ட். (சார்லஸ் பிஷப் குரால்ட் (செப்டம்பர் 10, 1934 - ஜூலை 4, 1997) ஒரு அமெரிக்க தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் வானொலி பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.)

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டும், சுமார் 1,500 பேர் காயமடைந்தும் இருக்கிறார்கள். இது 2002ஆம் ஆண்டுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த மிக மோசமான நில நடுக்க உயிரிழப்பு ஆகும்.

நிலநடுக்கம் ஏற்படும் போது நடக்கும் இறப்பு எண்ணிக்கையை அப்பகுதி எந்த இடத்தில் இருக்கிறது, நிலநடுக்கம் நடக்கும் பகுதியில் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு இருக்கிறது ஆகிய இரண்டு காரணிகள் தீர்மானிக்கின்றன.

பூகம்பங்களில் மிக அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்திய 10 நிலநடுக்கங்களை இங்கே பார்க்கலாம். இந்த பத்து பூகம்பங்களில் 25 இலட்சம் மக்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். மேலும் இந்த பத்து பூகம்பங்களில் 9 ஆசியக் கண்டத்தில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவால் மதிப்பிடப்படுகிறது. ரிக்டர் என்பது நிலநடுக்கத்தின் அளவு ஆகும். ஒரு நிலநடுக்கத்தில் ஏற்படும் நடுக்கம், தூரம், மேற்பரப்புப் பொருட்களின் வகை மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் இடத்திற்கு இடம் மாறுபடும் பல மதிப்புகளைக் கொண்டுள்ளது. ரிக்டர் அளவு அதிகரிப்பதற்கேற்ப சேதமும், பாதிப்பும் அதிகரிக்கும்.

Deadliest Earthquakes

10. அஷ்கபத் பூகம்பம் - துர்க்மெனிஸ்தான், 1948

ஈரானின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அஷ்கபத் தற்போதைய துர்க்மெனிஸ்தானின் தலைநகரம் ஆகும். அக்டோபர் 6, 1948 அன்று அதிகாலை 1:12 மணியளவில், அஷ்கபாத்தில் இருந்து தென்மேற்கே 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.3 ரிக்டர் அளவிலான மேற்பரப்பு அலையானது அப்பகுதியில் உள்ள பெரும்பாலான செங்கல் கட்டிடங்களை இடித்ததோடு கான்கிரீட் கட்டமைப்புகளையும் பெரிதும் சேதப்படுத்தியது. அப்போது இந்நாடு சோவியத் யூனியனில் இருந்ததால் இறப்பு எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. ஊடக செய்திகள் மற்றும் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால் இந்த பூகம்பத்தில்10,000 முதல் 11,000 பேர் வரை உயிர் இழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

9. பெரிய கான்டோ பூகம்பம் - ஜப்பான், 1923

ஜப்பானின் வரலாற்றில் மிக மோசமான நிலநடுக்கம் செப்டம்பர் 1, 1923 அன்று ஏற்பட்டது. முதல் நிலநடுக்க அலை காலை 11:58 மணிக்கு தாக்கியது. ஆரம்ப அலையைத் தொடர்ந்து கடலில் 40 அடி உயர சுனாமி அலை ஏற்பட்டது. ஏனெனில் பிளவுபட்ட நிலத்தின் தட்டு, சாகாமி விரிகுடாவின் தரைக்கு அடியிலிருந்தது. இது டோக்கியோவிற்கு தெற்கே 30 மைல் தூரத்தில் இருக்கிறது.

7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நான்கு முதல் பத்து நிமிடங்கள் வரை நீடித்தது. இது டோக்கியோவின் பெரும்பகுதியையும் பிராந்தியம் முழுவதும் உள்ள பல முக்கிய நகரங்களையும் அழித்தது. புறநகர் டோக்கியோவில் உள்ள ரிகுகுன் ஹொன்ஜோ ஹிஃபுகுஷோவை நெருப்புச் சுழல் சூழ்ந்து, அங்கு தஞ்சமடைந்திருந்த 38,000 பேரை சாம்பலாக்கியது. கடற்கரையில் ஒரு வலுவான சூறாவளி அதிக காற்றை உருவாக்கியதால் தீ வேகமாக பரவி 1,42,800 பேர் இறந்து போயினர்.

8. அர்டாபில் பூகம்பம் - ஈரான், கி.பி. 893

மார்ச் 23, 893 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றி முழு விவரங்களும் இல்லை. ரிக்டர் அளவும் தெரியவில்லை. ஆனால் 1,50,000க்கும் மேற்பட்ட மக்கள் அதன் உயிர்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

7. Damghan பூகம்பம் - ஈரான், கி.பி. 856

டிசம்பர் 22, 856 அன்று ஏற்பட்ட இந்த 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிகபட்ச சேதம் சுமார் 350 கிலோமீட்டர்கள் (220 மைல்கள்) வரை நீடித்தது. இந்த நிலநடுக்கம் அந்த நேரத்தில் பாரசீக மாகாணமான குமிஸாக இருந்த தம்கானுக்கு அருகில் நிகழ்ந்தது.

பூமியின் நிலநடுக்கப் பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ள அல்பைட் பூகம்ப தட்டின் மாற்றம் இரவு நேர மேற்பரப்பு அலையை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. 2,00,000க்கும் அதிகமான உயிரிழப்பினால் இது 7 வது மிக மோசமான பூகம்பமாக உள்ளது.

Deadliest Earthquakes

6. ஹையுன் பூகம்பம் - சீனா, 1920

டிசம்பர் 16, 1920 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் சீனாவின் தொலைதூர கன்சு மாகாணத்தை பேரழிவிற்கு உட்படுத்தியது. இந்த 8.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வரலாறு காணாத அளவிற்கு நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. அதனால் இறப்பு எண்ணிக்கை கூடியது. இரவு 7:06 மணிக்கு தாக்கிய நிலநடுக்கம், அதன் பின் அதன் அதிர்வுகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் தொடர்ந்தன. இந்த பிராந்தியத்தில் சுமார் 2,00,000 பேர் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் கருதப்பட்டது. இருப்பினும், 2010 சீன அரசின் ஆய்வில் அந்த எண்ணிக்கை சுமார் 2,73,000 மக்களாக உயர்த்தப் பட்டது.

125 சுற்றளவில் (ரேடியஸ்) உள்ள கிராமங்களும் அனைத்து வீடுகளும் அழிக்கப்பட்டன. கிராமப்புறங்களில் 70% கட்டமைப்புகள் இடிந்து விழுந்தன. 675 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 1,00,000 உயிர்கள் மட்டும் மேற்பரப்பு நிலநடுக்க அலைகளிலிருந்து உருவாகும் நிலச்சரிவுகளால் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

5. ஹைட்டியன் பூகம்பம் — ஹைட்டி, 2010

இந்த பயங்கரமான நிலநடுக்கம் ஜனவரி 12, 2010 அன்று மாலை 4:53 மணிக்கு ஏற்பட்டது. வடக்கு அமெரிக்க கண்டத்தின் தெற்கு எல்லையில் உள்ள ஹைட்டி நாட்டின் தலைநகரான போர்ட்-ஓ-பிரான்ஸிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் நிகழ்ந்தது. இந்த நில அதிர்வு ஹைட்டி மற்றும் டொமினிகன் குடியரசு நாடுகளுக்கு பேரழிவை ஏற்படுத்தியது.

ஆரம்ப நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. அதைத் தொடர்ந்து 5.9 மற்றும் 5.5 ரிக்டர்களில் இரண்டு பின் அதிர்வுகள் ஏற்பட்டன. ஜனவரி 20 அன்று ஏற்பட்ட மற்றொரு 5.9 ரிக்டர் அளவு உட்பட பல நாட்களுக்கு நிலநடுக்கங்கள் தொடர்ந்தன. ஹைட்டி மற்றும் டொமினிகன் குடியரசு மட்டுமின்றி, கியூபா, ஜமைக்கா, போர்ட்டோ ரிக்கோ ஆகிய நாடுகளிலும் நடுக்கம் உணரப்பட்டது.

ஹைட்டியில் 10 இலட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் வீடற்றவர்களாகவும், அடிப்படைத் தேவைகள் இன்றியும் பல மாதங்களாகத் தவித்தனர். இப்பேரழிவில் 3,00,000க்கும் அதிகமானோர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. அலெப்போ பூகம்பம் - சிரியா, கி.பி.1138

அக்டோபர் 11, 1138 அன்று, வடக்கு சிரியாவில் உள்ள அலெப்போ நகரம் நில நடுக்கத்தால் முற்றிலும் அழிக்கப்பட்டது. ஆப்பிரிக்கத் தட்டிலிருந்து அரேபியத் தகட்டைப் பிரிக்கும் விளிம்பு அடிக்கடி மோதிக் கொள்வதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு பூகம்பங்கள் பழக்கமான ஒன்றுதான். துல்லியமான அளவு தெரியவில்லை என்றாலும், சேதத்தின் அளவிலிருந்து, விஞ்ஞானிகள் இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டரை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.

நிலநடுக்கத்திற்கு முந்தைய நாள், அலெப்போவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த எச்சரிக்கையை முன்வைத்து, அலெப்போவின் பெரும்பான்மையான மக்கள் பாதுகாப்பிற்காக நகரத்தை விட்டு வெளியேறினர். அடுத்த நாள் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ​​தப்பி ஓடிய சிலர் அழிந்தனர். என்றாலும் அவர்கள் நகரத்தை விட்டு வெளியேறாமல் இருந்திருந்தால், இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும்.

அலெப்போ நகரின் உள்ளே, கோட்டை பெரும் சேதத்தை சந்தித்தது மற்றும் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்தன. 2,30,000 பேர் இறந்து போனதால் மனித வரலாற்றில் இது மிகவும் கொடிய பூகம்பங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.

3.சுமத்ரான் பூகம்பம் — இந்தியப் பெருங்கடல், 2004

இந்தப் பட்டியலில் உள்ள பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கங்களில் மிகச் சமீபத்திய நிலநடுக்கம் இதுதான். கிறிஸ்மஸ் அல்லது குத்துச்சண்டை நாள் சுனாமி என்றும் அழைக்கப்படும் சுமத்ரா பூகம்பம், டிசம்பர் 20, 2004 அன்று நிகழ்ந்தது. 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் 900 மைல் ஆழத்தில் இருக்கும் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய தட்டுகள் மோதியதால் ஏற்பட்ட ஒன்றாகும்.

கடல் தளத்தில் இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய சுனாமியை உருவாக்கியது. நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடங்களில் பல 100 அடி உயர அலைகள் இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே கடற்கரையைத் தாக்கின. அது உடனடியாக 1,00,000க்கும் அதிகமான மக்களைக் கொன்றதோடு நகரத்தையும் அழித்தது.

தாய்லாந்து, இந்தியா மற்றும் இலங்கையின் கரையோரங்களில் ராட்சச அலைகள் தொடர்ந்து தாக்கின. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நீர் மற்றும் குப்பைகளின் தாக்குதலால் இறந்தனர். ஆரம்ப நிலநடுக்கத்திற்கு எட்டு மணி நேரத்திற்குப் பிறகு, அதன் மையப்பகுதியிலிருந்து 5,000 மைல்கள் தொலைவில், சுனாமி தென்னாப்பிரிக்காவின் கடற்கரையைத் தாக்கி அங்கேயும் பல உயிர்களைக் கொன்றது. மொத்தமாக இந்த நிலநடுக்கம் 2ஃ30,000 பேரை கொன்றது.

2 டாங்ஷான் பூகம்பம் - சீனா, 1976

ஜூலை 28, 1976 அன்று, அதிகாலை 3:42 மணியளவில் 7.8 மற்றும் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் சீனாவின் டாங்ஷானைத் தாக்கியது. இந்த நேரத்தில் டாங்ஷானில் சுமார் 10 இலட்சம் மக்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

பசிபிக் தட்டுக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த பகுதி நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு வாய்ப்புள்ள பகுதியாகும். நிலநடுக்கத்திற்கு முந்தைய நாட்களில், நகரத்தில் விசித்திரமான நிகழ்வுகளை குடியிருப்பாளர்கள் கவனிக்கத் தொடங்கினர். உயரும் மற்றும் உள்வாங்கும் நீர் நிலைகள், தெருக்களில் பீதியுடன் ஓடும் எலிகள், கோழிகள் சாப்பிட மறுப்பது போன்றவை நடந்தன.

ஆரம்ப நிலநடுக்கம் 23 வினாடிகள் மட்டுமே நீடித்தது. ஆனால் டாங்ஷானின் 90% கட்டமைப்புகளை அழிக்கும் அளவுக்கு வலுவாக இருந்தது. நடுக்கம் நின்ற பிறகு, தீ எரியத் துவங்கியது. அவற்றின் வெப்பம் நகரின் தொழிற்சாலைகளில் வெடிபொருட்களையும் விஷ வாயுக்களையும் விரைவாகப் பற்ற வைத்தது. நகரம் முழுவதும் தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நகருக்குள் செல்லும் ரயில் பாதை அழிக்கப்பட்டது. சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. பாழடைந்த நகரத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்க அரசாங்கம் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை நம்பியிருந்தது.

சீன அரசாங்கம் இறப்பு எண்ணிக்கையை 2,42,000 என தெரிவித்தது. ஆனால் சில மதிப்பீடுகள் அந்த எண்ணிக்கை 5,00,000 ஆக இருக்கலாம் என தெரிவித்துள்ளன.

1. ஷான்சி பூகம்பம் - சீனா, 1556

ஜனவரி 23, 1556 அன்று ஷாங்க்சி மற்றும் ஷான்சி சீனா மாகாணங்களில் 8.0 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்த இரண்டு பகுதிகளிலும் 60% க்கும் அதிகமான மக்களைக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

நடுக்கம் சில வினாடிகள் மட்டுமே நீடித்தாலும் இந்த பகுதியில் ஏற்பட்ட அதிர்வினால் மலைகள் அழுத்தப்பட்டு பூமியில் புதையுண்டது. இதனால் பல நாட்கள் இப்பகுதி தீப்பற்றி எரிந்தது. மேலும் பாரிய வெள்ளத்தை ஏற்படுத்தியதோடு ஆறுகளின் பாதைகளைக் கூட மாற்றியது.

ஆறு மாதங்களாக அப்பகுதியில் நில அதிர்வுகள் தொடர்ந்தன. இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை மென்மையான மண்ணால் கட்டியிருந்ததன் காரணமாக இறப்புகள் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. யாடோங்ஸ் என்று அழைக்கப்படும் பூமி தங்குமிடங்கள், மலைப்பகுதியில் மனிதனால் செதுக்கி உருவாக்கப்பட்ட ஒரு வகை குகையாகும். இந்த வீடுகள் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் சூடாகவும் இருந்தன. ஆனால் நில அதிர்வு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்போது இவை மிக எளிதாக உடைந்துவிடும். நிலநடுக்கம் ஏற்பட்டதும், மலைப்பகுதி முழுவதும் விழுந்து அதன் குடிமக்களை புதைத்து விட்டது.

இறப்பு எண்ணிக்கை 8,30,000 பேரை கொன்றிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மில்லியன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் அல்லது வீடற்றவர்களாக இருந்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?