கொரோனா பரவலால் குழந்தைகளின் கல்வி பாதிப்படையத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. என்னென்ன இழந்திருக்கிறார்கள் நம் குழந்தைகள் எனப் பட்டியலிட்டு சொல்லியிருக்கிறது உலக குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்.
கொரோனா பரவல் 2019-ம் ஆண்டு தொடங்கியிருந்தாலும் சரியாக மார்ச் 2020-ல் தான் குழந்தைகளின் கல்வி உள்ளிட்டவற்றில் அதன் நேரடி பாதிப்புத் தொடங்கியது. இந்த இரண்டு ஆண்டிகளில் சுமார் 63.5 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் கூறியுள்ளது.
யுனிசெப்
இது குறித்துப் பேசிய யுனிசெப் தலைவர், “இந்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இழந்த கல்வியை மீட்க இனி வரும் காலத்தில் பள்ளிகள் திறக்கப்படும் போது, அவை வெறும் கற்றல் மையங்களாக இல்லாமல், குழந்தைகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதாகவும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டியது அவசியம்” எனக் கூறியுள்ளார்.
இந்த கொரோனா பரவல் காலத்தில் குழந்தைகளின் மன, உடல் ஆரோக்கியமும் சமூக வளர்ச்சியும் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. குழந்தைகள் அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவு திறன்களை இழந்துவிட்டனர். கோடிக்கணக்கான மாணவர்கள் தங்கள் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், பள்ளிகள் மூடப்படுவதால் ஏற்படும் விளைவாக, 10 வயதுடைய குழந்தைகளில் 70 சதவீதம் பேர் வரை ஒரு எளிமையான வரியை வாசிக்கச் சிரமப்படுபவர்களாகப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக உள்ளனர்.
வயதில் குறைந்த, தொடக்க கல்வி பெறும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்கா முதலான பெரிய நாடுகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. பிரேசிலில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 15 வயதிலான 10 மாணவர்களில் ஒருவர் மீண்டும் பள்ளிக்கு திரும்பப்போவதில்லை எனத் தெரிவிப்பதாக கூறுகின்றனர்.
இவை தவிர கோவிட் குழந்தைகளிடையே மனச்சோர்வையும்
ஊட்டச்சத்து குறைபாட்டையும் உருவாக்கியிருக்கிறது என்கிறது யுனிசெப் -ன் அறிக்கை. இவற்றிலிருந்து குழந்தைகளைக் காக்க வேண்டியது நம் தலையான கடன்.