Mao Zedong

 

Newssense

உலகம்

மா சே துங் : சீனாவின் புதிய வரலாற்றை உருவாக்கியவரின் கதை

சீனாவின் வளர்ச்சிப்பாதையில் மறுக்க முடியாத பல மாற்றங்களையும் மறைக்க முடியாத பல ஏற்றங்களையும் நிகழ்த்திய ஓர் மிகப்பெரும் தலைவர் மா சே துங்

NewsSense Editorial Team

வாழ்க்கையில் நாம் எந்த பாதையை தேர்ந்தெடுக்கின்றோம் என்பது தான் பின்னாளில் நாம் யார் என்பதை தீர்மானிக்கின்றன.அப்படி ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து தன் சக விவசாய குடும்பங்கள் படும் துயரங்களை கண்டு அவர்களின் தலைவிதி மாற்றி எழுதப்பட வேண்டுமானால் அதற்கு முதலில் இந்த நாட்டின் தலைவிதி மாற்றி எழுதப்பட வேண்டும் என்று தன் மிக இளம் வயதிலேயே புரட்சிக்கர அரசியலே தமக்கான பாதை என்பதை கண்டறிந்து தொடர்ந்து அந்த வழியில் பயணித்து தான் நினைத்ததை போலவே தனது தாய் நாட்டின் தலைவிதியை மாற்றி காட்டிய மாபெரும் தலைவர் தான் மாவோ எனப்படும் மா சே துங். மா சே துங் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன என்பதையும் அவருடைய அரசியல் பயணத்தின் பல முக்கியமான நிகழ்வுகளைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

Mao Zedong

சீனாவின் வளர்ச்சிப்பாதையில் மறுக்க முடியாத பல மாற்றங்களையும் மறைக்க முடியாத பல ஏற்றங்களையும் நிகழ்த்திய ஓர் மிகப்பெரும் தலைவர் மா சே துங்.போர் என்பது ஆயுதம் ஏந்தும் அரசியல்.அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர் என்று சீன அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாமல் உலக அரசியல் வரலாற்றிலும் ஒரு புதிய அரசியல் இலக்கணத்தை வகுத்து கொடுத்த மா சே துங் ஓர் அரசியல் தலைவராக மட்டுமின்றி ஓர் புரட்சிகர சிந்தனையாளராகவும் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறார்.

மாவோ வின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு முன் அப்போதைய சீனாவின் அரசியல் பொருளாதார சமூக சூழலை அறிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது . ஏன் எனில் அங்கு அப்போது நிலவிய அரசியல் சூழலே மாவோ வின் அரசியல் வருகைக்கும் அவர் ஏற்படுத்திய சமூக அரசில் புரட்சிகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது . கி பி 1840 ல் சீனாவில் அபினி யுத்தம் நடந்து கொண்டிருந்த கால கட்டத்திலும் அதற்கு பிறகும் சீனா மிகப்பெரிய சீரழிவை சந்தித்துக்கொண்டிருந்தது.அப்போதைய மஞ்சூ ஏகாதிபத்திய அரசின் நிர்வாக சீர்கேடுகளாலும் சுரண்டல் கொள்கைகளாலும் விவசாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். வெளிநாட்டு பொருட்களின் இறக்குமதியால் உள்ளூர் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது . இதனால் விவசாய மக்களும் உள்ளூர் கைத்தொழில் தொழிலாளர்களும் மிக மோசமான பாதிப்பை சந்தித்திருந்தனர். அதிக வட்டிக்கு கடன் கொடுப்பவர்களும் நில பிரபுக்களும் ஏழை எளிய மக்களின் நிலங்களை அபகரித்து அவர்களை நிலமற்றவர்களாக ஆக்கி இருந்தார்கள்.இதனால் நாடெங்கும் பசியும் பஞ்சமும் கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது . எளிய மக்கள் ஒருவேளை உணவுக்காக வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தனர்

மாவோ எனப்படும் மா சே துங் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷாவ்ஷான் சுங் என்னும் கிராமத்தில் கி பி 1893 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் பிறந்தார்.இவருடைய பெற்றோர் மா ஷென் செங் மற்றும் வென் குய் மெய்.மாவோவின் தந்தை சீன ராணுவத்தில் கொஞ்ச நாட்கள் பணி செய்த பிறகு தன் சொந்த கிராமத்திற்கு திரும்பி விவசாயம் செய்ய தொடங்குகிறார். ஆரம்பத்தில் சிறு விவசாயியாக இருக்கும் அவர், நாளடைவில் விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட அதிக அளவில் விவசாயம் செய்ய தொடங்கி ஓரளவு வசதியான நிலைக்கு மாறுகிறார்.விவசாய வேலைகளுக்கு கூலி ஆட்களை பயன்படுத்திய மாவோவின் தந்தையார் மாதத்தின் முதல் பிறை அன்று அவர்களுக்கு கூலி கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.மாவோவின் குடும்பத்தினர் பெரும்பாலான நாட்களில் தீட்டாத அரிசியும் காய்கறிகளையும் மட்டுமே சாப்பிடும் சிக்கனத்தை கொண்டிருந்தாலும் தங்களின் வேலையாட்களுக்கு முட்டை மீன் பன்றி இறைச்சி போன்றவற்றை உணவாக கொடுத்தனர். விவசாய வேலைகள் வியாபாரம் போன்றவற்றை மாவோ வின் தந்தை பார்த்துக்கொள்ள மற்ற குடும்ப வேலைகளை அவரின் தாயார் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார். இப்படிப்பட்ட விவசாய குடும்பத்தில் பிறந்ததால் மாவோவும் தன் இளமைப்பருவத்தில் விவசாய வேலைகளையே செய்து வந்தார் . பகலில் பள்ளிக்கு செல்ல வேண்டும். காலையும் மாலையும் விவசாய வேலைகளை செய்ய வேண்டும் என்பதே மாவோவின் அன்றாட வாழ்க்கையாக இருந்து வந்தது.

ஆறு வயதில் இருந்தே விவசாய வேலைகளில் ஈடுபட்டு வந்த மாவோ தன் பதின் மூன்று வயதில் விவசாயத்தின் எல்லா வேலைகளையும் கற்று தேர்ந்தவராக இருந்தார் . கிராமப் புற சூழ்நிலையில் பிறந்து இளமையில் இருந்தே உடல் உழைப்பில் ஈடுபடுபவராக இருந்ததனால் மாவோ மற்ற விவசாயிகளின் துன்பங்களையும் துயரங்களையும் நேரடியாக உணரும் வாய்ப்பை பெற்றிருந்தார்.அதனால் அவருக்கு இயல்பாகவே எளிய மக்களின் துயர் துடைப்பதில் ஓர் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு இருந்து வந்தது.

தன் பதின்மூன்றாம் வயதில் பள்ளி படிப்பை நிறுத்திய மாவோ அதற்கு பிறகு முழு மூச்சாக விவசாய வேலைகளில் ஈடுபட தொடங்கினார் . பள்ளி படிப்பு முடித்திருந்தது அவருக்கு வீட்டு கணக்கு வழக்குகளை பார்ப்பதில் பெரும் உதவியாக இருந்திருக்கிறது . படிப்பை நிறுத்தி இருந்தாலும் புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்திருக்கிறார் மாவோ.இரவில் புத்தகங்கள் படிப்பதால் எண்ணெய் வீணாகிறது என்று இவரின் அப்பா கோபப்படும்போதெல்லாம் தனது அறையில் நீல நிற திரையை கட்டி அதில் விளக்கு எறிவது தெரியாதது போல் மறைத்துக் கொள்வாராம் மாவோ.இவரின் அழுக்கடைந்த அறையில் அப்போதே நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்திருந்திருக்கிறார்.

செங் குவான்யிங் என்பவரால் எழுதப்பட்டு 1894 ஆம் ஆண்டு வெளிவந்த.வளமான யுகத்திற்கான எச்சரிக்கை வார்த்தைகள்.என்னும் புத்தகத்தை படிக்க நேர்ந்த மாவோ அந்த புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தால் மீண்டும் படிப்பை தொடர முடிவு செய்கிறார்.தன் 16 ஆம் வயதில் சியாங் கியாங் சென்று அங்குள்ள டுங்ஷான் கழகம் என்ற உயர்தர ஆரம்பப் பள்ளியில் தன் படிப்பை தொடர்ந்தார். அந்த பள்ளியானது வசதி படைத்த மாணவர்கள் பயிலும் உயர்வர்க்கத்திற்கான பள்ளியாக இருந்தாலும் சில வசதி குறைவான மாணவர்களும் அங்கே படித்ததால் மாவோவிற்கு அங்கே சில நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். அந்த பள்ளியில் வகுப்பு தொடங்குவதற்கு முன் சீனாவின் சீர்குலைவு பற்றியும் மற்ற நாடுகள் எப்படி சீனாவை அலைக்கழிக்கின்றன என்பது பற்றியும் பிரசங்கம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் அதை கேட்கும் மாவோவிற்கு தன் தாய் நாட்டின் மீது மேலும் பற்றை அதிகப்படுத்தி தன்னால் முடிந்த அரசியல் பங்களிப்பை செய்ய தூண்டும் விதமாக அமைந்தது. டுங் ஷான் பள்ளியில் ஒரு வருடம் மட்டுமே பயின்ற மாவோ பிறகு சாங் ஷா என்ற ஊரில் உள்ள மத்திய தர பள்ளியில் தன் படிப்பை தொடர்ந்தார்.1911 ஆம் ஆண்டு இந்த பள்ளியில் சேர்ந்த மாவோ இங்குதான் டாக்டர் சன்யாட் சென் போன்றவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க பெற்றார்.

மேலும் இந்த பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஊச்சாங் கலவரம் என்ற மக்கள் புரட்சி அப்போதைய சீன மஞ்சூ ஆட்சிக்கு எதிராக நடக்க தொடங்கியது . இந்த புரட்சியில் கலந்து கொள்ள விரும்பிய மாவோ தன் 18 வயதில் அந்த புரட்சியை தலைமை தாங்கி நடத்திய ஒரு புரட்சிப்படை ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்தார் . இந்த புரட்சியின் மூலம் மஞ்சூ ஆட்சி ஹுனான் மாகாணத்தில் முடிவுக்கு வந்தது.இதற்கு பிறகு சோஷலிச கருத்துக்களின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் அது தொடர்பான நூல்களை படிக்க தொடங்குகிறார் மாவோ.பிறகு ராணுவத்தில் இருந்தும் விலகி மீண்டும் வேறொரு பள்ளியில் தன் படிப்பை தொடர்கிறார்.பிறகு இந்த பள்ளியில் இருந்தும் விலகிய மாவோ.ஹூனானில் உள்ள ஆரம்ப முதல் தரப்பள்ளியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் பயில்கிறார்.இந்த பள்ளியில் படிக்கும்போது தன் பள்ளி தோழர்களை ஒருங்கிணைக்கும் மாவோ.ஒரு சிறந்த இயக்க ஒருங்கிணைப்பாளராகவும் சிறந்த மக்கள் தலைவராகவும் மாற்றம் பெறுகிறார்.அதற்கு முக்கிய காரணம் இந்த பள்ளியில் சேர்வதற்கு முன் அவர் பல்வேறு புத்தகங்களை மிக தீவிரமாக வாசித்து தன் வாசிப்பறிவை வளர்த்துக்கொண்டிருந்தார் என்பதே ஆகும்.

சாங் ஷா வில் மேல்நிலை கல்வியை முடித்த மாவோ பின்னர் பீஜிங்கில் உள்ள பீகிங் பல்கலை கழகத்தில் நூலக உதவியாளர் பணியில் சேர்கிறார் 1912 ல் மன்ச்சூ ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் உருவான சீன குடியரசு ஆட்சி சன்யாட்சென் தலைமையில் நடந்து கொண்டிருந்தது . சன்யாட்சென் மிகச்சிறந்த அறிவாளியாக இருந்தாலும் அவரின் நிர்வாக குளறுபடிகளால் நில பிரபுக்கள் நாடு முழுவதும் கலகம் செய்து வந்தனர்.மேலும் சீனா பல்வேறு ஆக்கிரமிப்புகளையும் சந்தித்து கொண்டிருந்தது . இதனால் கோபம் கொண்ட சீன இளைஞர்கள் மே நான்கு என்ற இயக்கத்தை உருவாக்கி அரசுக்கு எதிராக போராட துவங்கினார்கள் . லீ தசாவ் மற்றும் சென் டுக்சியு ஆகிய இருவருமே மே நான்கு இயக்கத்தின் அடித்தளமாக இருந்து செயல்பட்டார்கள் . மாவோவும் இந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட துவங்கினார் . பிறகு இந்த இயக்கத்தின் நீட்சியாகத் தான் 1921 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட்கட்சி உதயமானது

1923 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி சன் யாட் சென்னின் குவாமின் டாங் எனப்படும் சீன தேசிய வாத கட்சியுடன் கூட்டணி அமைக்கிறது. சீன தேசியவாத கட்சியுடன் இணைந்த முதல் கம்யூனிஸ்ட் ஆக அறியப்படுகிறார் மாவோ . ஆனால் 1925 ல் சன் யாட் சென்னின் மறைவுக்கு பிறகு குவாமின் டாங் கட்சியையும் அதன் ஆட்சியையும் சியாங் கை ஷேக் கைப்பற்றுகிறார். சியாங் கை ஷேக் கிற்கு சோவியத் ஒன்றியம் ஆதரவு அளித்தாலும் அவர் சீன கம்யூனிஸ்ட்களுடன் விரோத போக்கையே கடை பிடித்து வந்தார் . சீன கம்யூனிஸ்ட்டுகளை ஒழித்துக்கட்ட அவர் எடுத்த முயற்சிகளுக்கு எதிராக உருவானது தான் மக்கள் விடுதலை ராணுவம் . 1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி உருவான மக்கள் ராணுவம் சீன மக்களை ஒன்றிணைத்து நடத்திய பல உள்நாட்டு போர்கள் சீன வரலாற்றை வேறு திசை நோக்கி அழைத்து சென்றது .

1949 ஆம் ஆண்டு சீனாவின் ஆட்சி அதிகாரம் சீனாவின் பொதுவுடைமை கட்சியின் தலைவர் என்கிற முறையில் மாவோ வின் கீழ் வந்தது . ஆட்சியை கைப்பற்றிய மாவோ புதிய சீனாவை உருவாக்க வேண்டிய பணியை மிக முக்கியமான ஒன்றாக கருதினார் . பழமைவாதமும் வறுமையும் சீனாவின் அனைத்து பகுதிகளிலும் நீக்கமற நிரம்பி இருந்தது . மக்கள் 30 ஆண்டுகால உள்நாட்டு போர்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தனர் . துயரத்தின் பிடிகளில் சிக்கிக் கொண்டிருந்த சீனாவை மீட்டெடுக்க பல புதிய திட்டங்களையும் கொள்கைகளையும் உருவாக்கினார் மாவோ. பரீட்சார்த்தமான அந்த திட்டங்கள் சமூகத்தில் பெரும் விளைவுகளை எதிர்கொண்டன.

வலிமையையும் வளமும் மிகுந்த சீனாவை உருவாக்குவதே மாவோ வின் உறுதியான இலக்காக இருந்தது. தொழில்துறையை வளர்ச்சி அடைய செய்வதன் மூலமே சமூக மாற்றத்தை எளிதாக நிகழ்த்த முடியும் என்று அவர் திடமாக நம்பினார்.தொழில்துறை மேம்பாட்டில் சோவியத்தை முன் மாதிரியாக கொண்டு முன்னோக்கிய பெரும்பாய்ச்சல் என்ற திட்டத்தை செயல்படுத்தினார் .

1966 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாள் சீன பண்பாட்டுப் புரட்சியை அறிவித்தார் மாவோ. சீனாவில் மீண்டும் முதலாளித்துவ ஆட்சி ஏற்படுவதற்கான முயற்சிகளை ஒடுக்குவதற்காகவும். சீனாவின் திட்டங்கள் பெரும்பாலும் சோவியத்தை பின்பற்றி இருப்பதால் தனது தனித்துவத்தை சீன வரலாற்றில் ஏற்படுத்தும் விதமாக இதை வடிவமைத்தார். 1968 ஆம் ஆண்டு பண்பாட்டு புரட்சியை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தாலும் 1976 ஆம் ஆண்டுவரை அது தொடர்ந்ததாகவே கருதப்படுகிறது .

நூறு பூக்கள் மலரட்டும் என்ற கருத்துரிமையின் கதவுகள் எனது ஆட்சியில் எப்போதும் திறந்தே இருக்கும் என்று அறிவித்தாலும் மாவோவின் ஆட்சியில் அதற்கான முழு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதே நிதர்சனமாக இருந்து வந்தது . ஆனாலும் குடும்பப் பற்று மிக்க சீனர்களை தேசப்பற்று மிக்கவர்களாக மாற்றியதும் சீனாவை ஒரு ஒன்று பட்ட தேசமாக மாற்றி அமைத்ததிலும் மாவோவின் பங்கு மறுக்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்தது .

மாவோவின் ஆட்சியில் பல எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் நாடு நவீனப்படுத்தப்பட்டது என்பதையும் தொழில் வளர்ச்சியை நோக்கி வேகமாக நாட்டை முன்னெடுத்து சென்றவர் என்பதிலும் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. கல்வி சுகாதாரம் மக்களின் அடிப்படை பொருளாதாரம் ஆகிவற்றில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன . சீன முதலாளித்துவ பொருளாதார முறையை பொதுவுடைமை ஆக்கியதுடன்.அரசியல் ஆட்சி முறையை பொது ஏகாதிபத்தியத்தை அடிப்படையாக கொண்டு நிறுவினார் மாவோ.தன் இறுதி காலம் வரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மைய குழுவையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

பொதுவுடைமை அரசியல் வரலாற்றில் எப்போதும் கொண்டாடப்படும் தலைவராக இருந்து வரும் மாவோ 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் நாள் இவ்வுலக வாழ்வில் இருந்து விடை பெற்றார். இன்றைய நவீன சீனாவில் தொழிற்புரட்சியும் வேளாண் புரட்சியும் ஏற்பட மிக காரணமாக இருந்த மாவோ சீனாவை உருவாக்கிய சிற்பி என்றே இன்றுவரை அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்.

1. பெரிய வீடுகளில் புகுந்து சாப்பிடுதல் என்பது சீனாவின் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் ஒரு புரட்சி வடிவமாக இருந்தது. பெரிய பெரிய நில பிரபுக்கள் பஞ்ச காலங்களில் தங்களிடம் உள்ள அரிசி முதலான உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்றதால் கோபமடைந்த மக்கள் நில பிரபுக்களின் வீடுகளுக்குள் கூட்டமாக புகுந்து அவர்களின் தானிய கிடங்கில் உள்ள அரிசியை எடுத்தது அங்கேயே சமைத்து சாப்பிட்டு வரும் பழக்கத்தை ஒரு போராட்ட வடிவமாக செய்து வந்தனர் . எந்த அளவுக்கு சீனாவில் பசியும் பஞ்சமும் தலை விரித்தாடியது என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே சாட்சிகள் .

2. மாவோவின் கிராமத்தில் அவரின் இளமை காலம் தொடர்புடைய சில கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன.

ஒரு அறுவடை காலத்தின் பொது மழையில் நனையும் தங்கள் வீட்டு தானியத்தை அள்ளாமல் ஒரு ஏழை குடும்பத்தின் தானியங்களை மழையில் நனையாமல் சேகரிக்க உதவினார். ஏன் எனில் அவர்கள் குத்தகைக்கு விவசாயம் செய்பவர்கள் அவர்கள் நஷ்டம் அடைய கூடாது என்பதே அவரின் விளக்கம் .

ஒருமுறை மாவோவின் வீட்டிற்கு சொந்தமான பன்றியை வாங்கியவரிடம் பணத்தை வசூல் செய்து வரும்படி அவரின் தந்தை அனுப்பி வைக்க.மாவோ பணத்தை வாங்கி வரும்போது வழியில் காணும் பசியுடன் இருந்த ஏழை மக்களுக்கு முழு பணத்தையும் கொடுத்து விடுகிறார். அதே போல் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு வீட்டிற்கு செல்லும்போது அங்கே குளிரில் வாடி கொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு தன் மேல் சட்டையை கழட்டி கொடுத்தது விடுகிறார்.

3. மாவோ ஆறு மாத கால ராணுவ பணியில் இருந்து நின்ற பிறகு.ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு நூலகத்திற்கு தினம்தோறும் சென்று வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்கிறார் . அப்படி செல்லும் நாட்களில் நூலகத்திற்கு முதல் ஆளாக சென்று கடைசி ஆளாக திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சீன வரலாறு இதிகாசம் தத்துவ சாஸ்திரம் , வெளிநாடுகளின் சரித்திரம் பூகோளம் , இலக்கியம். போன்றவற்றை விரும்பி வாசிக்கிறார்

சில முக்கிய நூல்கள். ஆடம் ஸ்மித்தின் தேசங்களின் செல்வம்.சார்லஸ் டார்வினின் உயிர்களின் தோற்றம் , தாமஸ் ஹக்ஸ்லே யின் பரிணாமவாதமும் அறங்களும் ஜெ எஸ் மில் லின் தர்க்க சாஸ்திர முறை போன்ற நூல்களை வாசிக்கிறார்

4. குவாமின் டாங் கட்சியுடன் நடந்த உள்நாட்டு போரின்போது மாவோ ஓர் நெடும்பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்.1934 தொடங்கும் இந்த பயணம் சுமார் இரண்டு வருடங்களை தாண்டி 1936 டிசம்பரில் முடிவடைகிறது. சுமார் 8000 மைல்களை தனது 80000 க்கும் மேற்பட்ட மக்கள் விடுதலை படையினருடன் கடந்து செல்லும் மாவோ இந்த நிகழ்வின் மூலமாக தான் ஓர் மக்கள் தலைவராக அடையாளம் காணப்படுகிறார் . இந்த பயணத்தில் குவாமின் டாங் பலவீனமாக இருக்கும் பகுதிகளில் செல்வதால் பெருந்திரளான கிராம விவசாயிகள் மக்கள் விடுதலை படையோடு இணைகிறார்கள். இதில் நிறைய பேர் நோயுற்று இறந்து போகிறார்கள்.

5. சீனா மாவோ ஆட்சிக்கு வந்த கால கட்டத்தில் மக்கள் பசியாலும் சுகாதார குறைபாடுகளாலும் பாதிக்கப்படுகிறார்கள்.இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்யும் மாவோ. எலிகளும் சிட்டு குருவிகளும் தானியத்தை உண்பதுதான் பஞ்சத்திற்கு காரணம் என்றும்.கொசுக்களும் ஈக்களும் அதிகம் இருப்பதுதான் சுகாதார சீர் கேட்டிற்கு காரணம் என்றும் நினைத்து அவற்றை ஒழிக்க கெட்ட குருவிகளை அழித்தல் என்னும் திட்டத்தை உருவாக்கி அவற்றை எல்லாம் அழிக்கிறார் ... சிட்டுக்குருவிகள் அழிந்ததால் வெட்டு கிளிகள் அதிகமாகி விவசாயத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன .. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது ...

6. 1958-60 ஆகிய காலகட்டங்களில் முன்னோக்கிய பெரும்பாய்ச்சல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த்துகிறார். சோவியத்தை முன் மாதிரியாக கொண்டு நாட்டை தொழில் வளர்ச்சியின் பாதையின் அழைத்து செல்வதே இதன் பிரதான நோக்கம் . .. தொழில்துறையில் மனித வளத்தை அதிகப்படுத்துவது , கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறிய எக்கு ஆலைகளை உருவாக்குவது கிராமம் நகர்ப்புற தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் கம்யூன்களை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன .. மேலும் கூட்டு பண்ணைகள் திட்டம் உருவாக்கப்பட்டு தனி விவசாய முறை ஒழிக்கப்படுகிறது . இது பெரிய பஞ்சத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது .

1966 ஆம் ஆண்டுமே 16 ஆம் நாள் சீன பண்பாட்டுப் புரட்சியை அறிவிக்கிறார் மாவோ .. இதில் சீன செம்படைகள் உருவாக்கப்பட்டு மீண்டும் முதலாளித்துவ முயற்சி மேற்கொள்ளப்படுவது முடக்கப்படுகிறது ... செம்படையானது கிராமம் நகரம் என எல்லா இடங்களிலும் ஊடுருவி பரவுகிறது ... இதன் மூலம் மாவோ தன் தனித்த அடையாளத்தை வரலாற்றில் பதிவு செய்ய முயற்சிக்கிறார் ..

7. மக்கள் புரட்சியை அடுத்து பாட்டாளிகள் சர்வாதிகார அரசே நிலவ வேண்டும் என்பது மார்க்சிய கருத்தாகும். அதை மா சே துங் நிராகரித்து சீனாவில் தொழிலாளர்களையும் சிறிய பூர்சுவாக்களையும், தேசிய பூர்சுவாக்களையும் கொண்ட கூட்டுச் சர்வாதிகாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பூர்சுவாக்களின் பங்களிப்புகள் அவசியம் என மாவோ வலியுறுத்தினார். இதனால் புரட்சிக்குப் பின்னர் பூர்சுவாக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் மார்க்சியத்தைப் புறந்தள்ளினார். மேலும், அவர்கள் தொடர்ந்து ஒரு வர்க்கமாக இயங்கிட அனுமதித்தார். இதுதவிர, திருத்தியமைக்கப்பட்ட கல்வி முறையின் மூலமாகப் பூர்சுவாக்களிடையே நிலவிவரும் பழைய மனப்பான்மைகளைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும் என்றார். சீனக் குடிமைச் சமத்துவ சமூகம் பொதுவுடைமைக் கோட்பாட்டை நோக்கி முன்னேறுவதற்கு மக்கள் கம்யூனிசங்களை ஒழுங்கமைப்பது இன்றியமையாதது எனவும் மாவோ கருதினார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?