Pizza

 

NewsSense

உலகம்

பீட்சா : இத்தாலிய ஏழைகளின் உணவு - உலகம் முழுவதும் பரவியது எப்படி? | Pizza History

பல நூற்றாண்டுகளாக மக்கள் ஏதோ ஒரு வடிவில் பீட்சாவை சாப்பிட்டு வந்திருக்கின்றனர். பழங்காலத்தில் தட்டுக்கள் வாங்க இயலாத சாதாரண மக்கள் தட்டையான ரொட்டித் துண்டுகளில் சுவையூட்டிகளைச் சேர்த்து உண்டு வந்திருக்கின்றனர்.

Govind

ஆங்கிலத்தில் பீஸ்ஸா (Pizza) என்பது தமிழில் பீட்சா என்றழைக்கப்படுகிறது. பீட்சா உலகின் பிரபலமான துரித வகை உணவாகும். நாம் அதை வீடுகளிலும், உணவகங்களிலும், தெருமுனைகளிலும் கூட உண்ணுகிறோம். அமெரிக்காவில் மட்டும் ஒரு வருடம் 300 கோடி பீட்சாக்கள் விற்பனையாகின்றன. அதாவது ஒரு அமெரிக்கர் ஒரு வருடத்தில் சராசரியாக 46 பீட்சாக்களை சாப்பிடுகிறார்.

பீட்சா எப்படி இன்று உலகப் புகழ் பெற்ற உணவானது? மக்கள் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு புலம்பெயர்ந்த வரலாறு, மாறிவரும் பொருளாதாரம், நவீன தொழில்நுட்பம் ஆகியவைதான் பீட்சாவின் இன்றைய உலக அவதாரத்திற்கு காரணம்.

பல நூற்றாண்டு உணவு

பல நூற்றாண்டுகளாக மக்கள் ஏதோ ஒரு வடிவில் பீட்சாவை சாப்பிட்டு வந்திருக்கின்றனர். பழங்காலத்தில் தட்டுக்கள் வாங்க இயலாத சாதாரண மக்கள் தட்டையான ரொட்டித் துண்டுகளில் சுவையூட்டிகளைச் சேர்த்து உண்டு வந்திருக்கின்றனர்.

கி.மு.விற்கு முன்பேயே பீட்சா இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விர்ஜில் என்பவர் எழுதிய எய்னய்ட் எனும் லத்தீன் காப்பியத்தில் பீட்சா வருகிறது. அதில் அவர்கள் ரொட்டித் துண்டுகளில் காட்டில் விளைந்த காளான்கள் மற்றும் மூலிகைகளை தூளாக்கி சாப்பிட்டிருக்கின்றனர்.

நவீன பீட்சா 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இத்தாலி நாட்டின் நேபிள்ஸில் தோன்றியது. போர்பன் அரச வம்சத்தின் கீழ் நேபிள்ஸ் நகரம் ஐரோப்பாவின் பெரும் நகரங்களில் ஒன்றாக மாறியது. வெளிநாட்டு வர்த்தகம், கிராமப்புறத்திலிருந்து வந்த விவசாயிகள் காரணமாக மக்கள் தொகை பெருகியது. 1748 ஆம் ஆண்டில் அதன்மக்கள் தொகை கிட்டத்தட்ட நான்கு இலட்சம்.

ஒரு நகரம் வளரும் போது அதன் கூடவே ஏழைகளும் வளருவார்கள். நேப்பிள்ஸ் நகரப் பொளுதாராம் நெருக்கடிக்குள்ளாகிய போது நகரின் பல மக்கள் ஏழைகளாக மாறினர். அவர்களை லசாரோனி என்று அழைக்கிறார்கள். சுமைதூக்கும் கூலிகளாகவும், உதிரியான வேலை செய்பவர்களுமான இந்த ஏழைகள் எப்போதும் வேலை தேடி அலைந்தார்கள். கூடவே மலிவான உணவையும் தேடி வந்தார்கள். பீட்சா அவர்களின் தேவையை நிவர்த்தி செய்தது.

தட்டை ரொட்டிகள்

அந்த தட்டை ரொட்டிகளை தெருவோர வியாபாரிகள் பெரும் பெட்டிகளில் தூக்கி வந்து விற்றார்கள். அவை எளிமையான பீட்சாக்களாக இருந்தன. தொழிலாளிகளின் காலை உணவை அவை பூர்த்தி செய்தன.

இப்போதும் கூட பீட்சாக்கள் எளிமையான சுவையான பொருட்களை தூவி தயாரிக்கப்படுகின்றன. பூண்டு, பன்றிக் கொழுப்பு, உப்பு ஆகியவை அடிப்படை பீட்சாவில் இருக்கும். பிறகு குதிரை பாலில் இருந்து தயாரிக்கப்படும் பாலாடைக் கட்டி, துளசி இன்னபிறவற்றைச் சேர்த்தார்கள். சிலர் மேலே தக்காளியையும் வைத்தார்கள்.

இவையெல்லாம் சமீபத்தில்தான் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் ஆரம்பத்தில் மேட்டுக்குடி அமெரிக்கர்களால் இந்த பீட்சாக்கள் இழிவாகப் பார்க்கப்பட்டன. ஆனால் சாதராண மக்களுக்கு பீட்சாக்களின் குறைந்த விலை கவர்ச்சியான ஒன்றாக இருந்தது.

உழைக்கும் மக்களின் உணவு

உழைக்கும் மக்களின் உணவாக இருந்த பீட்சாவை பல எழுத்தாளர்கள் அதிலும் உணவு வகைகளைப் பற்றி எழுதுபவர்கள் அவமதித்தார்கள். பீட்சாவை சாப்பிடுபவர்கள் ஏழைகள் என்பதால் அவர்கள் அருவருப்பானவர்களாகப் பார்க்கப்பட்டார்கள். குறிப்பாக வெளிநாட்டு பார்வையாளர்களின் மதிப்பீடு அப்படி இருந்தது.

அமெரிக்காவின் சாமுவேல் மோர்ஸ் என்பவர்தான் தந்தி எந்திரத்தைக் கண்டுபிடித்தார். அவர் 1831-ம் ஆண்டில் பீட்சாவை மிகவும் குமட்டல் எடுக்கின்ற ஒரு ரொட்டி வகை என்று விவரித்தார். தக்காளி துண்டுகளால் மூடப்பட்டு, சிறிய மீன் துண்டுகள், கருப்பு மிளகுத் தூள் தூவி மற்றும் என்னவன்று தெரியாத சில பொருட்களால் நிரப்பப்பட்ட பீட்சாவை ஏதோ சாக்கடையில் எடுக்கப்பட்ட ரொட்டித் துண்டு என்று அவர் விவரிக்கிறார். பீட்சாவைப் பற்றி 19-ம் நூற்றாண்டின் மேட்டுக்குடி மக்கள் இப்படித்தான் கருதினார்கள்.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் முதன்முதலில் சமையல் புத்தகங்கள் எழுதப்பட்டன. அதை எழுதியவர்கள் அனைவரும் பீட்சாவைப் புறக்கணித்தனர். நேப்பிள்சின் மாநிலமான நியோபோலிடன் சமையலை எழுதியவர்கள் கூட பீட்சாவை புறக்கணித்தார்கள். எனினும் இக்காலத்தில் பீட்சாவுக்கென்று தனி உணவகங்கள் தோன்ற ஆரம்பித்தன.

தனித்தனி பகுதிகளாக இருந்த இத்தாலி ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு எல்லாம் மாறிவிட்டது. 1889 ஆம் ஆண்டில் இத்தாலிய அரசர் உம்பர்டோ 1 மற்றும் ராணி மார்கெரிட்டா இருவரும் நேப்பிள்ஸுக்கு விஜயம் செய்தனர். அப்போது ஐரோப்பாவில் பிரெஞ்சு பண்பாடே ஆளும் வர்க்கத்தினரிடம் கோலேச்சியது. அதன்படி ராஜ தம்பதி இருவருக்கும் மூன்று வேளையும் அளிக்கப்பட்ட பிரெஞ்சு வகை உணவுகள் பிடிக்கவில்லை. பிறகு உள்ளூர் நிர்வாகிகள் உடனடியாக உள்ளூர் சமையல்காரரான ரஃபேர் எஸபோசிடோவை அழைத்து சமைக்கச் சொன்னனர். அவர் மூன்று வகையான பீட்சாக்களை சமைத்துக் கொடுத்தார். பன்றிக்கொழுப்பு, கேசியோகாவல்லோ மற்றும் துளசியுடன் ஒரு பீட்சா, இரண்டாவது செசெனியெல்லி என்றழைக்கப்படும் பீன்ஸ் வகை மற்றும் கடல் உணவு, மூன்றாவது எருமையின் பாலாடைக்கட்டி, தக்களி மற்றும் துளசியுடன் சமைக்கப்பட்டன. ராணிக்கும் மூன்றும் மிகவும் பிடித்து விட்டன, குறிப்பாக மூன்றாவது பீட்சா. பிறகு அந்த பீட்சாவிற்கு ராணியை மரியாதை செய்யும் விதமாக மார்கெரிட்டா பீட்சா என்று பெயர் சூட்டப்பட்டது.

அரசக் குடும்பத்தின் நாவில் பீட்சா நுழைந்த உடன் பெரும் மாற்றம் ஏற்பட்டது. லாசரோனி எனும் ஏழைகளின் உணவான பீட்சா அரச குடும்பம் சுவைத்த பின்பு அதனை மற்றவர்களும் ஏற்கத் துவங்கினர். உள்ளூர் அளவில் இருந்த பீட்சா தேசிய உணவாக மாற்றியது. பாஸ்தா மற்றும் பொலெண்டா போன்ற இத்தாலிய உணவு வகைகளைப் போன்று பீட்சாவும் தகுதி பெற்றது.

பீட்சாவின் பயணம்

எது எப்படியோ பீட்சா மெதுவாக நேப்பிள்ஸ் பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு பயணிக்கத் துவங்கியது. 1930-லிருந்து நேப்பிள்ஸின் நெப்போலிட்டியன்ஸ் மக்கள் வடக்கு இத்தாலி நோக்கி வேலை நிமித்தம் இடம் பெயரத் துவங்கினர். கூடவே தங்கள் பீட்சாவையும் கொண்டு சென்றனர். இரண்டாம் உலகப்போர் இந்தப் போக்கை துரிதப்படுத்தியது.

1943 – 44 இல் இத்தாலியை ஆக்கிரமித்த நேசநாட்டுப் படை வீரர்கள் பீட்சாவின் ரசிகர்களானார்கள். எங்கு சென்றாலும் பீட்சாவைக் கேட்டார்கள். போருக்கு பிந்தைய சுற்றுலா கொஞ்சம் மலிவாக இருந்ததால் பீட்சா உண்மையிலேயே ஒரு இத்தாலியன் உணவாக மாறியது. வருகின்ற சுற்றுலா பயணிகள் இத்தாலிய வகை உணவுகளைச் சுவைப்பதில் ஆர்வமாக இருந்தனர். இத்தாலி நாடு முழுவதும் இத்தாலிய வகை உணவுகளை அளிக்கும் உணவகங்கள் நிறையத் தோன்றின. அந்த உணவு வகைகளில் பீட்சாவும் இருந்தது.

ஆரம்பத்தில் தரத்தில் வேறுபாடு இருந்தது. எல்லா உணவகங்களிலும் பீட்சாவுக்கென்று ஓவன் அடுப்பு இல்லை. இருப்பினும் பீட்சா துரிதமாக நாடு முழுக்க பரவியது. புதிய சமையல் பொருட்கள் உள்ளூர் சுவைக்கேற்ப பீட்சாவில் சேர்க்கப்பட்டன. மேலும் பீட்சாவின் விலை உயர்ந்ததால் வாடிக்கையாளர்களும் அதை வாங்கி உண்ண தயாராக இருந்தார்கள். இப்படியாக ஏழை இத்தாலியர்களின் உணவான பீட்சா மேட்டுக்குடி உலகிற்கு நுழைந்து விட்டது.

பீட்சாவின் இரண்டாவது தாயகம் அமெரிக்கா. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலியிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை அடைந்தனர். முதல் பீட்சா கடை நியூயார்க்கில் துவங்கப்பட்டது. விரைவில் அமெரிக்க நகரங்களின் வளர்ச்சியுடன் பீட்சாவும் சேர்ந்து வளர்ந்தது. ஆனால் அமெரிக்காவில் பரவிய பீட்சா கடைகளை நடத்தியவர்கள் அனைவரும் இத்தாலியர்கள் அல்ல. அவர்கள் உள்ளூர் சுவைகள், அடையாளங்கள் மற்றும் தேவைகளை கணக்கில் கண்டு பீட்சாவை மாற்றினார்கள். இப்படியாக அமெரிக்காவில் பல வகை பீட்சாக்கள அந்தந்த பகுதிகளில் தோன்றின. டாப்பிங் எனப்படும் பீட்சாவின் மேலடுக்கில் விதவிதமான சுவையுடன் வேறுபட்ட பொருட்களுடன் அவர்கள் உருவாக்கினார்கள். பீட்சாவின் காப்பிரைட் ஓனர்களான நியோபோலிடன்களை இந்த புதிய பீட்சாக்கள் திகைக்க வைத்தன.

1950-களில் ஏற்பட்ட பொருளாதார தொழில்நுட்ப மாற்றங்கள் அமெரிக்காவில் பீட்சாவின் வளர்ச்சியை வேறு தளத்திற்கு உயர்த்தின. குளிர்சாதனப் பெட்டிகளும், குளிர்சாதனக் கிடங்குகளும் பயன்பாட்டிற்கு வந்த பிறகு உறைந்து போன பீட்சா உருவானது. அதை வாங்கி வீட்டிற்கு எடுத்துச் சென்று சமைக்கலாம். பிறகு பீட்சா உருவாக்கத்தில் சில மாற்றங்கள். தக்காளி துண்டுகள் தக்களா பேஸ்ட்டாக மாறின. இதனால் பீட்சா வறண்டு போகாமல் இருந்தது. புதிவகை பாலாடைக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

வணிகமயமான பீட்சா

அடுத்து பீட்சா வணிகமயமாக்கப்பட்டது. கார்களும், இருசக்கர வாகனங்களும் அதிக பயன்பாட்டிற்கு வந்த பிறகு பீட்சாவை வீட்டிற்கு டெலிவரி செய்யும் பணி துவங்கியது. 1960-ல் டாம் மற்றும் ஜேம்ஸ் இருவரும் மிக்சிகன் நகரில் டொமினிக் பீட்சா உணவகத்தை ஆரம்பத்தார்கள். சுடச்சுட பீட்சாவை வீட்டிற்கு டெலிவரி செய்வதில் இவர்களது நிறுவனம் பெயரெடுத்தது. பிறகு நிறுவனத்தின் பெயரை டொமினியோஸ் என்று பெயர் மாற்றியபிறகு நாடு முழுவதும் பிரபலமானது. அதன்பிறகு அவர்களும் அவர்களது போட்டியாளர்களும் உலகம் முழுவதும் பரவினர். பீட்சா உணவகம் இல்லாத ஒரு நகரத்தை உலகில் நீங்கள் பார்க்க முடியாது.

இந்த மாற்றங்களின் விளைவு பீட்சாவை தரநிலைப்படுத்தியது. தக்காளி, பாலாடைக்ட்டியைத் தாண்டி வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் புதுமையான பொருட்கள் சேர்க்கப்பட்டன. போலந்தில் உள்ள பீட்சா ஹட் நிறுவனம் இந்திய வகை பொருட்களை சேர்த்து பிரபலமானது. ஜப்பானின் டோமினோஸ் அறிமுகப்படுத்திய எல்விஸ் பீட்சாவில் எல்லாமே உள்ளது.

ஆனால் இன்றைக்கும் நேப்பிள்ஸில் தயாரிக்கப்படும் பீட்சாவில் இத்தகைய அயல்நாட்டு மாற்றங்களை தடுத்து ஒரிஜனலான பீட்சாவை தயாரிக்கிறார்கள். ஆனால் லாசரோனி எனப்படும் ஏழைகளின் உணவு இன்று உலக அளவில் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. பல நூற்றாண்டுகளாக சுடப்பட்டு வந்த பீட்சாவில் அன்றாடம் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே உள்ளன.

நீங்கள் சுவைக்கும் பீட்சாவின் கதை இதுதான்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?