Suez Canal

 

Twitter

உலகம்

Suez History : அரபு உலகம் VS இஸ்ரேல் - சூயஸ் கால்வாய்க்காக நடந்த ஒரு பெரும் போர்

Govind

மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் கட்டப்பட்டது உலக வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. ஆனால் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டு திறந்தாலும் அது யாருக்குச் சொந்தம் என்பது சில போர்களுக்கு வழி வகுத்தது.

1888ஆம் ஆண்டில் துருக்கியைச் சேர்ந்த கான்ஸ்டான்டினோபிள் நகரில் நடந்த மாநாட்டு ஒப்பந்தப்படி சூயஸ் கால்வாய் நடுநிலையாக செயல்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் கால்வாயின் பாதுகாப்பு ஆங்கிலேயர்களின் கீழ் இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன் பொருட்டு சூயஸ் கால்வாயை சுற்றியுள்ள எகிப்து மற்றும் சூடானைச் சேர்ந்த பகுதிகள் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.

1915-இல் நடந்த முதல் உலகப்போரின் போது ஓட்டோமான் பேரரசு தாக்கதலில் இருந்து சூயஸ் கால்வாயை ஆங்கிலேயர்கள் பாதுகாத்தனர்.

1936 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஆங்கிலேய எகிப்து ஒப்பந்தத்தின் படி கால்வாயின் கட்டுப்பாடு ஆங்கிலேயரிடமே ஒப்படைக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப் போரில் காத்திரமான விளைவை ஏற்படுத்தியது. பிரிட்டன் , பிரான்ஸ் நாடுகளுக்கு எதிராகப் போரிட்ட அச்சு நாடுகளாக ஜெர்மன், இத்தாலி இரண்டும் கால்வாயை பயன்படுத்த முடியாத படி தடுக்கப்பட்டன. இரண்டாம் போர் முடிந்த பிறகு எகிப்து 1936 இல் பிரிட்டனோடு போட்ட ஒப்பந்தத்தில் இருந்து 1951 ஆம் ஆண்டில் விலகிக் கொண்டது.

Gamal Abdel Nasser

கமால் அப்துல் நாசர்

அப்போது எகிப்தை புகழ் பெற்ற கமால் அப்துல் நாசர் எனும் அதிபர் ஆட்சி செய்தார். அவரது முயற்சிகள் மூலம் சில வருட பேச்சுவார்த்தைக்கு பிறகு 1956 ஆம் ஆண்டில் பிரிட்டன் தனது படைகளை கால்வாயிலிருந்து விடுவித்துக் கொண்டன. அப்துல் நாசரின் தலைமையிலான எகிப்திய அரசிடம் சூயஸ் கால்வாய் கட்டுப்பாட்டை ஒப்படைத்தன.

விரைவிலேயே நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார். அரசாங்கத்தின் பாதி பங்குகுளைக் கொண்ட சூயஸ் கால்வாய் ஆணையத்தை உருவாக்கி அதன் கட்டுப்பாட்டில் கால்வாயைக் கொண்டு வந்தார்.

இதனால் பிரிட்டனும் அமெரிக்காவும் கோபமடைந்தன. மேலும் அக்காலத்தில் நாசர் சோவியத் யூனியனோடு உறவுகளை ஏற்படுத்த முயன்றதும் அந்நாடுகளுக்கு எரிச்சலூட்டின. இதனால் சூயஸ் கால்வாய் மேம்பாட்டு திட்டம் மற்றும் அஸ்வான் அணைக் கட்டுமானத்திற்கான நிதி உதவியை அவர்கள் வாபஸ் பெற்றனர்.

மேலும் இஸ்ரேல் நாட்டை செங்கடலுடன் இணைக்கும் டிரான் ஜலசந்தியை மூடுவதற்கு நாசர் முடிவு செய்தார். இதனால் இஸ்ரேல் கப்பல்கள் செங்கடலில் நுழைய முடியாது. இதனாலும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கோபமடைந்தனர்.

சூயஸ் நெருக்கடி

சூயஸ் நெருக்கடி

பதிலுக்கு, அக்டோபர் 1956 இல், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் துருப்புக்கள் எகிப்து மீது படையெடுப்பதாக அச்சுறுத்தின. இது சூயஸ் நெருக்கடி என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறது.

போர் நெருக்கடி முற்றிய தருணத்தில் கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லெஸ்டர் பி.பியர்சன் ஒரு முன்மொழிவை முன்வைத்தார். அதன்படி கால்வாயை பாதுகாப்பதற்கும், அதை அனைவரும் பயன்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையை கால்வாயில் நிறுத்தலாம் என்று பரிந்துரைத்தார். நவம்பர் 4, 1956 அன்று பியர்சனின் முன்மொழிவை ஐ.நா. அங்கீகரித்தது.

இதன்பிறகு சூயஸ் கால்வாய் நிறுவனம் தனது செயல்பாட்டை தொடர்ந்தாலும் ஐ.நா.வின் படைகள் கால்வாயில் அமைதியையும், அனைத்து கப்பல்கள் செல்வதற்கும் ஒழுங்குபடுத்தின. ஆனால் சூயஸ் கால்வாய் நெருக்கடி இத்தோடு முடிந்து விடவில்லை.

அரபு-இஸ்ரேல் போர்

அரபு-இஸ்ரேல் போர்

1967 ஆம் ஆண்டில் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் ஆறு நாட்கள் போர் நடந்தது. போரின் துவக்கத்தில் எகிப்திய அதிபர் நாசர் சினாய் தீபகற்பத்தில் நிலை கொண்டிருந்து ஐ.நா. சபை அமைதி காக்கும் படைகளை வெளியேற உத்திரவிட்டார்.

இஸ்ரேல் உடனடியாக துருப்புக்களை அப்பகுதிக்குள் அனுப்பியது. இறுதியில் சூயஸ் கால்வாயின் கிழக்குக் கரையைக் கைப்பற்றியது. இஸ்ரேலிய கப்பல்கள் சூயஸ் நீர்வழிப்பாதையை அணுகுவதை விரும்பாத நாசர் அனைத்து கடல் போக்குவரத்திற்கும் தடை விதித்தார்.

இந்தப் பிரச்சினையின் போது சூயஸ் கால்வாயில் இருந்த 15 வணிகக் கப்பல்கள் முற்றுகை காரணத்தால் சில வருடங்கள் அங்கேயே மாட்டிக் கொண்டன.

பிறகு அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் கால்வாயில் இருந்து கண்ணி வெடிகளை அகற்றி பாதுகாப்பான பாதையாக மீண்டும் மாற்றின. எகிப்தின் புதிய அதிபர் அன்வர் சதாத் 1975-இல் கால்வாயை மீண்டும் திறந்து வைத்து போக்குவரத்திற்கு ஒழுங்கு செய்தார்.

இருப்பினும், இஸ்ரேலிய துருப்புக்கள் 1981 வரை சினாய் தீபகற்பத்தில் இருந்தன. 1979 ஆம் ஆண்டில் போடப்பட்ட எகிப்து-இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பன்னாட்டுப் படை மற்றும் பார்வையாளர்கள் அங்கே ஒழுங்கை பராமரிக்கவும், கால்வாயைப் பாதுகாக்கவும் சினாய் தீபகற்பத்தில் நிறுத்தப்பட்டன. அவை இன்றுவரை தொடர்கின்றன.

இன்று சூயஸ் கால்வாய்

இன்று சூயஸ் கால்வாய்

தற்போதைய நிலவரப்படி சூயஸ் கால்வாயில் தினசரி சராசரியாக 50 கப்பல்கள் பயணிக்கின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 30 கோடி டன்களுக்கும் அதிகமான பொருட்களை கொண்டு செல்கின்றன.

2014 ஆம் ஆண்டில் எகிப்திய அரசாங்கம் சூயஸ் கால்வாயை விரிவுபடுத்தும் திட்டத்தை 8 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் செயல்படுத்தியது. இதன்படி சூயஸ் கால்வாயின் அகலம் 61 மீட்டரிலிருந்து 312 மீட்டராக 21 மைல் தூரத்திற்கு விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டம் முடிய ஒரு வருடம் ஆனது. இதனால் கால்வாயின் இருபுறமும் கப்பல்கள் வந்து போக முடியும். அதற்கு முன்பு வரை ஒரு நேரத்தில் ஒரு கப்பல் மட்டுமே செல்ல முடியும்.

இப்படி பாதை விரிவாக்கப்பட்ட போதிலும் மார்ச் 2021 இல் சீனாவிலிருந்து சென்ற ஒரு மிகப்பெரிய கப்பல் கால்வாயின் ஒரு பகுதியில் மாட்டிக் கொண்டது. இதனால் கால்வாயின் இரு முனைகளிலிலும் நூறு கப்பல்கள் தடுக்கப்பட்டன. இந்த சம்பவம் உலக வர்த்தகத்தில் ஒரு வாரம் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்தியப் பெருங்கடலையும், மத்திய தரைக் கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் மனித குலத்தின் மிகப்பெரும் சாதனைகளில் ஒன்று என்றால் மிகையில்லை. ஆனால் அதைக் கட்டுவதற்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் இறந்து போயினர் என்பதும், கால்வாயின் முக்கியத்துவம் காரணமாக அங்கே போர் பதட்டம் முன்னர் ஏற்பட்டதும் இதன் சோகமான பக்கங்கள்.

முந்தைய பகுதியைப் படிக்க

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?