ஒலிம்பிக் தடகளப் போட்டியில், ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கிக் கொடுத்து ஒட்டுமொத்த தேசத்தையும் சிலிர்க்க வைத்த நீரஜ் சோப்ரா, தன்னுடைய வலது கரத்தைத்தான் பயன்படுத்தி ஈட்டி எறிகிறார்.
ஆனால் ராணுவத்தில் பணியாற்றி வருவதன் காரணமாக, தேசத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, ஒருவரின் வலது கை வெடித்துச் சிதறினால் என்ன செய்ய முடியும்?
அப்படி ஒரு சூழலை ஒரு ராணுவப் பின்புலம் கொண்ட ஹங்கேரி நாட்டு விளையாட்டு வீரர் எதிர்கொண்டார். அவர் தன்னுடைய வலது கை போனால் என்ன...? இடது கை இருக்கிறதே என களத்தில் இறங்கி அடுத்தடுத்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் பெயர் Karoly Takacs.
ஹங்கேரி நாட்டின் புதபெஸ்டில் 1910ஆம் ஆண்டு பிறந்த கரோலே டாகாஸ் இளம் வயதிலேயே ஹங்கேரி நாட்டு ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வம் ஏற்பட்டு, துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
1936ஆம் ஆண்டு வாக்கில், கரோலே டாகாஸ் உலக அளவில் குறிப்பிடத் தகுந்த, நல்ல ஷூட்டர்களில் ஒருவராக உருவெடுத்திருந்தார்.
1936ஆம் ஆண்டு வரை, ஹங்கேரி ராணுவத்தில் கமிஷன் அதிகாரிகளாக இருப்பவர்கள் மட்டுமே ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என்கிற விதி நடைமுறையில் இருந்ததால், கரோலே டாகாஸ் 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியவில்லை. காலப்போக்கில் இந்த விதிமுறையை நீக்கியது ஹங்கேரி ராணுவம்.
1938ஆம் ஆண்டு வாக்கில், ஹங்கேரி நாட்டின் சார்பாக உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் அணியிலும் இடம் பிடித்திருந்தார் 28 வயதான கரோலே டாகாஸ்.
உலக சாம்பியன்ஷிப் போன்ற பெரிய போட்டிகளில் பதக்கம் வென்றுவிட்டால் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம். எனவே தன் கனவுப் பாதையில் வெற்றிநடைபோட்டுக் கொண்டிருந்த மனிதருக்கு, பயிற்சி மூலம் வந்தது வினை.
1940ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. அந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கலாம், பதக்கம் வெல்லலாம் என்கிற கனவில் பயிற்சி பெற்று வந்தார் கரோலே டாகாஸ்.
1938ஆம் ஆண்டு பயிற்சியின் போது ஒரு கிரனேட் குண்டு, கரோலே டாகாஸின் வலது கையிலேயே வெடித்தது. வலது கையின் ஒரு பகுதி அப்படியே சிதறிவிட்டது.
கரோலே டாகாஸுக்கு ஏற்பட்டது ஏதோ தோல்பட்டை காயம், மூட்டுக் காயம், தசை வலி, சுளுக்கு... போன்ற காயமல்ல. ஒரு கையே போய்விட்டது. இப்படி ஒரு சூழலைப் பார்த்து அவர் அதிகம் துவள வில்லை.
கை போனாலும், கரோலே டாகாஸ் தன் கனவைக் கைவிடவில்லை. சுமார் ஒரு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, பழைய படி உடல் நலம் தேறினார். சுடுவதற்கு கை வேண்டும் அவ்வளவு தான். வலது கை போனால் என்ன இடது கை இருக்கிறதே என மீண்டும் துப்பாக்கியோடு பயிற்சியில் இறங்கினார்.
இந்த முறை யார் கண்ணிலும் படாமல் தனியே தன்னந்தனியே பயிற்சிகளை மேற்கொண்டார். இத்தனை ஆண்டுகாலம் துப்பாக்கி சுட்ட அனுபவமும், தன்னம்பிக்கையும் தவிர கரோலே டாகாஸுடம் வேறு எதுவும் இல்லை.
பால பாடத்தில் இருந்து பயிற்சியைத் தொடங்கினார். மெல்ல தன் வலது கையில் துப்பாக்கி கொண்டு என்ன மாயத்தை நிகழ்த்த முடிந்ததோ, அதே ஜாலத்தை தன் இடது கையிலும் கொண்டு வந்தார்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு தன்னைத் தயார் செய்து கொண்ட பின், மெல்ல ஹங்கேரி நாட்டுக்குள்ளேயே நடைபெற்ற போட்டிகளில் பதக்கங்களை வெல்லத் தொடங்கினார். அதன் விளைவாக ஹங்கேரியின் துப்பாக்கி சுடுதல் தேசிய அணியில் இடம்பிடித்தார் கரோலே டாகாஸ்.
1938ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டு வலது கையை இழந்த கரோலே டாகாஸ், அடுத்த ஓராண்டுக்குள், அதாவது 1939ஆம் ஆண்டு மீண்டும் ஹங்கேரியின் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வானார். அவர் பார்வையாளர்களில் ஒருவராகப் பார்க்க வந்திருக்கிறார் என கருதிய போது, துப்பாக்கி எடுத்து சுட்டு தன் திறனை நிரூபித்து பார்வையாளர்களை "அட..." போட வைத்தார்.
சூப்பர்... அடுத்தது ஒலிம்பிக் தான் என காத்திருந்தவருக்கு இரண்டாம் உலகப் போர் என்கிற செய்தி பேரிடியாக வந்திறங்கியது. 1940ஆம் ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக்ஸ் போட்டிகள், இரண்டாம் உலகப் போர் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
சரி அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் நிச்சயம் என லட்சியத்தோடு பயிற்சி செய்தார். இரண்டாம் உலகப் போர் உக்கிரமடைந்திருந்த காலமது. 1944 ஒலிம்பிக் போட்டிகளும் ரத்தானது.
பல மணி நேரங்களைப் பயிற்சியில் செலவிடத் தெரிந்த கரோலே டாகாஸால் இந்த ஒலிம்பிக் போட்டி ரத்து அறிவிப்புகளை ஜூரணித்துக் கொள்ள முடியவில்லை. மறுபக்கம் அவரது வயது 38-ஐத் தொட்டிருந்தது. ஒரு விளையாட்டு வீரருக்கு வயது எத்தகைய பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை இங்கு தனியே விளக்க வேண்டியதில்லை.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. மறுபக்கம் ஹங்கேரியில் தன் திறமையை நிரூபித்து மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார் கரோலே டாகாஸ் (Karoly Takacs).
அப்போது ஏதேச்சையாக, துப்பாக்கி சுடுதல் போட்டியில் உலக சாம்பியனாக இருந்த அர்ஜென்டினாவைச் சேர்ந்த கார்லோஸ் என்ரிக், கரோலே டாகாஸைப் பார்த்து "நீங்கள் லண்டனில் என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார். "நான் இங்கு கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன்" என கரோலே டாகாஸ் கூறியதாக 'தி இந்து' நாளிதளின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஒலிம்பிக் போட்டி களத்தில் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் போட்டி அறிவிக்கப்பட்டது. உலக சாம்பியனாகத் திகழ்ந்த கார்லோஸ், கரோலே டாகாஸிடம் தோற்றார். பதக்கங்களை வழங்கும் நிகழ்வின் போது "நீங்கள் போதுமான அளவுக்கு கற்றுணர்ந்துவிட்டீர்கள்" என தங்கம் வென்ற கரோலே டாகாஸிடம் தோற்ரு, வெள்ளி வென்ற கார்லோஸ் என்ரிக் கூறியதாக சில வலைதளங்கள் அச்சம்பவத்தை நினைவுகூர்கின்றன.
கரோலேவின் ஒலிம்பிக் தாகம், 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளோடு தீரவில்லை. மீண்டும் 1952ஆம் ஆண்டு ஃபின்லாந்தின் ஹெல்சென்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்றார்.
முதலில் தனக்கு ஏற்பட்ட விபத்து, பிறகு தன் வயது என தன் மனதோடும், உடலோடும் போராடி இரு ஒலிம்பிக் தங்க பதக்கங்களை வென்ற கரோலே டாகாஸ் (Karoly Takacs) இன்று வரை விளையாட்டு உலகின் தன்னம்பிக்கை நட்சத்திரமாக ஒலிம்பிக் வானில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
உங்கள் வாழ்வில் நீங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்காத பிரச்னைகள் வரலாம். அதனால் நீங்கள் பேரிழப்புகளைக் கூட சந்திக்க நேரிடலாம், அதைத் தாண்டி பயிற்சி செய்து, முயற்சிக்கும் போது உங்கள் வெற்றி, உங்களுக்கு மட்டுமே உரித்தான மகத்தான வெற்றியாகிறது. அதை தன் சொந்த வாழ்கை மூலம் நிரூபித்துக் காட்டிய பெருமகனார் கரோலே டாகாஸ்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust