முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

twitter

உலகம்

Morning News Tamil : நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக ஸ்டாலின் கடிதம் - முக்கிய செய்திகள்

Antony Ajay R

நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்துங்கள் - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும் ஆய்வகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது என மத்திய அணுசக்தித்துறை தெரிவித்திருக்கிறது.


தமிழகத்தின் தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (I.N.O.) அமைக்கும் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக, 2021 ஜூன் 17-ம் தேதியன்று மத்திய அரசுக்கு தான் வைத்த கோரிக்கையை நினைவுகூர்ந்து பிரதமரின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தனது கோரிக்கை, வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்திடவும், சுற்றுச்சூழல் அமைப்புக்கு மீள, சரிசெய்ய இயலாத சேதத்தை ஏற்படுத்துவதை தடுக்கவும் முன்வைக்கப்படுகிறது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நியூட்ரினோ திட்டத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள இடம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள மதிகெட்டான்-பெரியார் புலிகள் வழித்தட எல்லைக்குள் வருகிறது என்றும், நியூட்ரினோ ஆய்வகத் திட்ட நடவடிக்கைகள், இப்பகுதியிலுள்ள வன உயிரினங்களின் மரபணு வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா vs இலங்கை

இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்றது இந்தியா!

இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. போட்டியில் இந்தியா முதல் நாளில் இருந்தே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்சில் இந்தியா 252 ரன்களும், இலங்கை 109 ரன்களும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2ம் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, 2வது நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து தடுமாறியது.

நங்கூரம் போன்று நீண்ட நேரம் களத்தில் நின்ற கேப்டன் கருணாரத்ன 107 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். மறுமுனையில், குஷால் மெண்டிஸ் (54) தவிர, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். எனவே, இலங்கை அணி 208 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இரண்டாவது இன்னிங்சில் இந்தியா தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். பும்ரா 3 விக்கெட், அக்சர் பட்டேல் 2 விக்கெட், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Students

உக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்கள் எதிர்காலம்? - நாடாளுமன்றத்தில் விவாதம்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து சுமார் 20,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். உக்ரைனுக்கு மீண்டும் திரும்பிசெல்ல முடியாத நிலையில் இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பினார். உக்ரைனில் இருந்து நாடுதிரும்பிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. உக்ரைனின் அண்டை நாடுகளில் இந்த மாணவர்கள் தங்கள் கல்வியை நிறைவு செய்ய வாய்ப்பு இருக்கிறதா, மத்திய அரசின் கொள்கை என்ன என்று அவர் கேள்வி கேட்டார்.

இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, "மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டுள்ளோம். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

மாநிலங்களவையில் இதே விவகாரத்தை பிஜு ஜனதா தளம் எம்.பி. அமர் பட்நாயக் எழுப்பினார். அவர் கூறும்போது, இந்தியாவில் செயல்படும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 5 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும். அந்த இடங்களில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவ, மாணவியர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் கூறும்போது, "இந்திய மாணவர்கள் மீண்டும் உக்ரைனுக்கு திரும்பி செல்ல முடியாது. அவர்களின் எதிர்காலம் குறித்த கொள்கைகளை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்"என்றார்.

உச்சநீதிமன்றம்

கொரோனா நிவாரண நிதியில் முறைகேடு - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்ட நிவாரண நிதியில் முறைகேடு செய்வதாக எழுந்துள்ள புகார் கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக உயிரிழந்தவர்களின் ஆர்டிபிசிஆர் சோதனை அறிக்கை, இறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், குஜராத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலி இறப்பு சான்றிதழ் பெற்று இழப்பீட்டுத் தொகையை பெறுவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி எம்.ஆர்.ஷா கூறும் போது, “கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை போலியான பெயரில் பெற முயற்சித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுவார்கள் என்பதைஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. போலியான பெயரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு சேரவேண்டிய தொகையைப் பெறும் அளவுக்கு நெறி தவறி இருப்பது கவலை அளிக்கிறது.

இதில் சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குமானால் அது மிகவும் மோசமான செயலாகும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது” என்றார்.

கிஷன் ரெட்டி

2.1 கோடி பேர் சுற்றுலா துறையில் வேலையிழப்பு

மக்களவையில் மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷண் ரெட்டி நேற்று கூறியதாவது: கரோனா முதல் அலையின்போது இந்தியாவுக்கு சுற்றுலாவரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 93 சதவீதம் குறைந்தது. இரண்டாவது அலையின்போது 79 சதவீதமும், மூன்றாவது அலையின்போது 64 சதவீதமும் வெளிநாட்டினரின் வருகை குறைந்தது.

இந்திய சுற்றுலா துறையில் 3.8 கோடி பேர் பணியாற்றுகின்றனர். முதல் அலையின்போது இந்திய சுற்றுலா துறையில் 1.4 கோடி பேர் வேலையிழந்தனர். 2-வது அலையின்போது 52 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பறிபோனது. 3-வது அலையின்போது 18 லட்சம் பேர் வேலை இழந்தனர். ஒட்டுமொத்தமாக 2.1 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்திருக்கிறது. எனவே சுற்றுலா தொழில் மீண்டும் எழுச்சி பெறும் என நம்புகிறோம். சுற்றுலா தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. அனைத்து மாநில அரசுகளும் சுற்றுலா தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?