பக்தபூர்: சிதைந்த 500 ஆண்டு பழமையான நகரச் சதுக்கம்! முன்னாள் நேபாள தலைநகரின் வரலாறு என்ன? twitter
உலகம்

பக்தபூர்: சிதைந்த 500 ஆண்டு பழமையான நகரச் சதுக்கம்! முன்னாள் நேபாள தலைநகரின் வரலாறு என்ன?

NewsSense Editorial Team

இந்தியாவைத் தாண்டி இந்து மதம் பரவியிருக்கும் இன்னொரு நாடு என்றால் அது நேபாளம் தான். நேபாள் நாட்டின் தலைநகராக விளங்கக்கூடிய காத்மாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம்.

இந்நகரில் மிக முக்கியமான இந்து மற்றும் பௌத்தத் தலங்கள் அமைந்திருக்கின்றன.

நேபாளத்தின் காசியாகக் கருதப்படுகிற பசுபதிநாத் கோயில் தொடங்கி மன்னராட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழங்காலத்தைய கட்டடங்கள் வரலாற்றுச் சின்னமாக இன்றைக்கும் நிலைத்திருக்கின்றன.

காத்மாண்டு நகரில் மட்டும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 7 புராதனத் தலங்கள் அமையப் பெற்றிருக்கிறது.

தர்பார் ஸ்கொயர் என்று சொல்லப்படக்கூடிய நகரச் சதுக்கங்களும் இந்தப் புராதனத் தலங்களின் வரிசையில் உள்ளது. பக்தபூர் நகரச் சதுக்கம், அனுமன் தோகா நகரச் சதுக்கம், பதான் நகரச் சதுக்கம் ஆகிய மூன்று நகரச் சதுக்கங்கள் காத்மாண்டு நகரின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கின்றன.

இவை முந்தைய காலத்தில் புகழ்பெற்றிருந்த பகோடா கட்டடக்கலையில் எழுப்பப்பட்டிருக்கும் அரண்மனைகள், கோயில்கள் மற்றும் வணிக வளாகங்களை உள்ளடக்கியிருக்கின்றன.

காத்மாண்டு நகரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்தபூரில் அமைந்திருந்திருக்கிறது பக்தபூர் நகரச்சதுக்கம். முந்தைய காலத்தில் பக்தபூர்தான் நேபாள நாட்டின் தலைநகரமாக விளங்கியிருக்கிறது.

மன்னர் வம்சத்தைச் சேர்ந்த நாராயணன் ஷா 1768ம் ஆண்டு மல்லர் அரசுக்கு எதிராகப் போர் புரிந்து பக்தபூர், லலித்பூர் மற்றும் காத்மாண்டு ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். அதன் பிறகு பக்தபூர் நகரச்சதுக்கம் கூர்க்கா மன்னர் வம்சத்தின் ஆளுகைக்குக் கீழ் வந்தது என்பதுதான் இதன் வரலாறு.

மிகப்பெரிய நகரச்சதுக்கமான பக்தபூர் நிலநடுக்கங்களின் விளைவாகவே பெரும் அழிவைச் சந்தித்திருக்கிறது. 1681ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்திலேயே பெரும் சேதாரத்துக்கு ஆளாகியிருக்கிறது. அதன் பிறகு 1833ம் ஆண்டு நிலநடுக்கம், 1934ம் ஆண்டு நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்பட்டன.

கடைசியாக 2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் வரை பக்தபூர் பல சேதாரங்களை எதிர்கொண்டிருந்தாலும் அதையெல்லாம் கடந்து இன்றைக்கும் மிக பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. 99 வாயில்களைக் கொண்டு பரந்து விரிந்திருந்த இந்நகரச்சதுக்கம் தற்போது 6 வாயில்களை மட்டுமே கொண்டிருப்பதுதான் வேதனை.

மல்லர் அரச வம்சத்தால் நிறுவப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டு வந்த இந்நகரச்சதுக்கத்தின் வரலாற்றில் கூர்க்கா அரச வம்சத்தினருக்கும் இடம் இருக்கிறது.

மல்லா ஆட்சியில்தான் மற்ற இரண்டு நகர சதுக்கங்களான பதான் நகரச் சதுக்கம் மற்றும் ஹனுமன் தோஹா நகரச் சதுக்கம் ஆகியவையும் நிறுவப்பட்டிருக்கின்றன.

இந்த மூன்று நகரச்சதுக்கங்களும் மேலோட்டமாகப் பார்க்கையில் ஒன்று போலவே தோன்றுகிறது. அதற்குக் காரணம் அதன் கட்டடக்கலைதான். உன்னிப்பாக கவனித்தோம் என்றால் ஒவ்வொன்றின் தனித்துவத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

பக்தபூர் அரண்மனை, தெளமதி சதுக்கம், தத்தாத்திரேயர் சதுக்கம், மட்பாண்ட சதுக்கம் ஆகிய நான்கையும் உள்ளடக்கியதே பக்தபூர் நகரச்சதுக்கம்.

இந்துத் தலமாக விளங்கும் இந்நகரச் சதுக்கத்திலும் பசுபதிநாதர் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ராமேஷ்வர் கோயில், வத்சலா தேவி கோயில், உக்கிர பைரவர் கோயில், பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில் கோபிநாத் கோயில் ஆகிய கோயில்கள் இச்சதுக்கத்தில் அமையப் பெற்றிருக்கின்றன.

வத்சலா கோயில் மற்றும் பௌத்த விகாரங்களும் 2015ம் ஆண்டு நிலநடுக்கத்தில் இடிந்து போயின.

இப்படியாக ஐநூறு ஆண்டுகள் வரலாற்றைத் தாங்கி நிற்கும் பக்தபூர் நகரச்சதுக்கத்தில் நுழைந்தால் பழமையான கோயில் மற்றும் வணிக வளாகக் கட்டடங்களைப் பார்க்கலாம். ஒவ்வொரு கோயிலின் முகப்பிலும் கற்சிலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

கம்பீரமான சிங்கம், யானை மற்றும் மனிதர்களின் சிலைகளைக் காண முடிகிறது. காத்மாண்டிலுள்ள ஒவ்வொரு புராதனத் தலத்தையும் நிதானமாகப் பார்க்க ஒரு நாள் தேவை.

அதிலும் இந்த மூன்று நகரச் சதுக்கங்களை ஒவ்வொன்றுக்கும் ஒரு நாள் ஒதுக்கிப் பார்க்கலாம். கட்டடக்கலை, மர வேலைப்பாடுகள், சிற்பம் என பார்த்து ரசிக்க பலவையும் இருக்கின்றன. கட்டடங்களைத் தாங்கி நிற்கும் மரத்தூண்கள் மற்றும் பரண்களில் மரச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. கட்டடங்களின் அடிப்பகுதி கற்களால் ஆகியது.

நாய், பன்றி சிலைகளும் செதுக்கப்பட்டிருக்கின்றன. நகர சதுக்கத்தின் மையப்பகுதியில் தூண் எழுப்பப்பட்டு மன்னர் பூபேந்திரரின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் கைகூப்பி தொழும்படியாக அச்சிலை வடிக்கப்பட்டிருக்கிறது.

பூபேந்திரர் சிலையை ஒட்டியே கல்தூணில் இரும்பால் செய்யப்பட்ட மிகப்பெரிய மணி தொங்கவிடப்பட்டிருக்கிறது. நகரச் சதுக்கத்தின் மத்தியில் நின்று 360 டிகிரி கோணத்தில் பார்த்தால் எங்கும் இந்தப் பழமை தாங்கிய கட்டடங்களே தெரியும்.

காத்மாண்டு செல்கிறவர்கள் பக்தபூர் நகரச்சதுக்கத்தை தவற விட்டு விடாதீர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?