Olga Fikotova twitter
உலகம்

Olga Fikotova: பனிப்போரின் உச்சத்தில் அமெரிக்க வீரரை கரம்பிடித்த தங்க மங்கை

அமெரிக்காவும், ரஷ்யாவும் பனிப்போரின் உச்சத்தில் இருந்த போது, இருநாடுகளுக்கு இடையில் ஒரே ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இரு விளையாட்டு வீரர்கள் மத்தியில் ஒரு காதல் கதை அரங்கேறியது. அதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

NewsSense Editorial Team

உச்ச நட்சத்திரமாகத் திகழும் இந்திய விளையாட்டு வீரர் ஒருவர், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்?

இந்திய பெண்கள் டென்னிஸை உலக அரங்கத்துக்குக் கொண்டு சென்ற சானியா மிர்சா, பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டதை உதாரணமாகச் சொல்லலாம்.

எத்தனை விமர்சனங்கள், ஏச்சுக்கள், பேச்சுக்கள் என இப்போது கூட இணையத்தில் பார்க்க முடியும்.

அப்படி அமெரிக்காவும், ரஷ்யாவும் பனிப்போரின் உச்சத்தில் இருந்த போது, இருநாடுகளுக்கு இடையில் ஒரே ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இரு விளையாட்டு வீரர்கள் மத்தியில் ஒரு காதல் கதை அரங்கேறியது. அதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

மருத்துவ மாணவி - ஹேண்ட் பால் வீராங்கணை - டிஸ்கஸ் த்ரோ

1932ஆம் ஆண்டு பராக் நகரத்துக்கு அருகில் அன்றைய செக்கோஸ்லோவாக்கியாவில் பிறந்த ஓல்கா ஃபிகொடோவா இயற்கையாகவே நல்ல உடல் வலிமையோடும், உயரமாகவும் இருந்தார்.

விளையாட்டு வீரர்கள் என்றாலே படிக்கமாட்டார்கள் என்கிற பொது கருத்துக்கு மாறானவர் இந்த வீராங்கணை. ஓல்கா, செக்கோஸ்லோவாக்கியாவின் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவியாக இருந்த போதே மறுபக்கம் விளையாட்டுகளிலும் கலக்கிக் கொண்டிருந்தார்.

ஹேண்ட் பால், பேஸ்கெட் பால் என தன் தாய் நாட்டுக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு திறமைப் படைத்தவராக இருந்தார்.

சுமார் ஆறு அடி உயரம், அஜானுபாகுவான தோற்றம் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி ஓல்காவுக்கு வட்டு எறிதல் (Discuss Throw) மீது எப்படியோ காதல் வர, வட்டைக் கையில் எடுத்து தன் பாணியில் வீசத் தொடங்கினார். அப்போது ஆண்டு 1954.

இரண்டே ஆண்டில் உலக நாயகியான ஓல்கா:

வட்டு எறிதலுக்கு முன்பே பல விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்த ஓல்காவுக்கு, இயல்பாகவே நல்ல திறமை இருந்ததை அவரது பயிற்றுநர் ஒடகர் ஜண்டெரா (Otakar Jandera) அடையாளம் கண்டார். ஆனால் அவரிடம் வட்டு எறிவதற்குத் தேவையான ரிதம் மட்டும் இல்லை.

அதையும் ஓல்கா மெல்ல சரி செய்து கொண்டார். 1955ஆம் ஆண்டில் அவர் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அவரை மேற்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தயார் செய்ய, சில பிரபல வட்டு எறிதல் சாம்பியன்கள் களமிறங்கியதாக சில வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

ஒரு கட்டத்தில் ஓல்கா உலக அளவில் முக்கிய வட்டு எறிதல் வீராங்கணைகளில் ஒருவராக உருவெடுத்தார். 1956 மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவும் தகுதி பெற்றார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் செக்கோஸ்லோவாக்கியா நாட்டுக்காக போட்டியிட்டு தங்கப் பதக்கமும் வென்றார்.

சொல்லவா சொல்லவா காதல் கதை:

ஓல்காவுக்கு, அதே மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டிகளில் ஹேமர் த்ரோ போட்டியில் அமெரிக்கா சார்பாக கலந்து கொண்டு தங்கம் வென்ற ஹரால்ட் வின்சென்ட் கானொலி (Harold Vincent Connolly ) என்பவருடன் காதல் மலர்ந்தது.

ஒரு பக்கம் ரஷ்யாவும் (ரஷ்ய ஆதரவு நாடுகளும் இதில் அடக்கம்), அமெரிக்காவும் பதக்கப் பட்டியலில் மோதிக் கொண்டிருக்க, மறுபக்கம் இந்த காதல் ஜோடி மெல்பர்ன் முழுக்க காதல் வழிந்தோட சுற்றித் திரிந்தது.

செக்கோஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த ஓல்கா மழலை ஆங்கிலத்தில் பேசி காதல் செய்தார் என்றும் சில விளையாட்டு செய்தி வலைதளங்கள் சொல்கின்றன.

ஒலிம்பிக் போட்டி எல்லாம் முடிந்து அனைவரும் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்த போது, இருவரும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டனர்.

செக்கோஸ்லோவாக்கியாவின் கடுங்கோபமும் - அமெரிக்காவின் ஆதரவும்:

ஓல்கா ஃபிகொடோவா - ஹரால்ட் கானொலியின் காதலை அவர்களது வீட்டார் எதித்தார்களோ இல்லையோ, செக்கோஸ்லோவாக்கியா கடுமையாக எதிர்த்தது.

அந்த அமெரிக்கரைத் திருமணம் செய்து கொண்டால், இனி செக்கோஸ்லோவாக்கியா நாட்டுக்காக ஓல்கா விளையாடவே முடியாது என அச்சுறுத்தியது. அப்போது செக்கோஸ்லோவாக்கியா கடுமையான ரஷ்ய ஆதரவு நாடாக இருந்தது.

எல்லா அச்சுறுத்தல்களையும் கடந்து, ஓல்கா ஃபிகொடோவா, ஹரால்ட் கானொலியை மணந்து அமெரிக்காவில் குடியேறினார். செக்கோஸ்லோவாக்கியாவும், ஓல்காவை அச்சுறுத்தியதோடு நிற்காமல், அவர் மீண்டும் செக்கோஸ்லோவாக்கியாவுக்காக விளையாட முடியாத படி எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தது.

ஆனால், மாப்பிள்ளை நாடான அமெரிக்கா ஓல்காவை அன்போடு வரவேற்றது. அதோடு தன் நாட்டின் சார்பாக சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கவும் அனுமதித்தது.

1956-க்குப் பிறகு 1960, 1964, 1968, 1972 என நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவுக்காக விளையாடினார் ஓல்கா. இதை எல்லாம் விட 1972 ஒலிம்பிக் போட்டிகளின் போது, அமெரிக்க தேசியக் கொடியை ஏந்தி, அமெரிக்க அணியை வழிநடத்திச் செல்லும் பெருமையை ஓல்காவுக்கு வழங்கி கெளரவித்தது அந்நாடு.

இன்றும் அந்த வீராங்கணை ஓர் அமெரிக்கராக, அந்நாட்டில் வாழ்ந்து வருகிறார், அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறார்.

1968ஆம் ஆண்டு, 'தி ரிங்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்கிற பெயரில் தன் காதல் கதை குறித்து ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டார் ஓல்கா கானொலி ஃபிகொடோவா. ஒட்டுமொத்த சர்வதேச பனிப்போர் அரசியலும் உற்றுப் பார்த்த இந்த காதல் ஜோடி, 1975ஆம் ஆண்டு பிரிந்தது சற்றே வருத்தமளிக்கும் விஷயம் தான்.

நாடுகளுக்கு இடையிலான கோடுகள் மறையட்டும், அன்பெனும் ஒளிச்சுடர் வீசட்டும் என்பதற்கு இவர்களின் காதல் கதை ஒரு நல்லுதாரணம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?