பாகிஸ்தானில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை, சமீபத்தைய ஆட்சி மாற்றங்கள் என பல்வேறு பிரச்னைகளுக்கு மணிமகுடமாக அந்நாட்டின் நிதி பொருளாதாரப் பிரச்னைகள் இருக்கின்றன.
தற்போது அந்நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகளை ஓரளவுக்காவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஷெபாஷ் ஷரீஃப் (Shehbaz Sharif) தலைமையிலான அரசு அந்நாட்டிலுள்ள ஷாப்பிங் மால்கள் மற்றும் சந்தைகளை இரவு 8:30 மணிக்கு எல்லாம் மூட உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதனால் கணிசமான மின்சாரம் மிச்சமாகும் என பாகிஸ்தான் அரசு எதிர்பார்க்கிறது. வணிக மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு இப்படி ஒரு சவால் என்றால், பல்வேறு அரசு அலுவலகங்களிலும் மின்சார நுகர்வை சுமார் 30 சதவீதம் வரை குறைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியைக் கேட்ட பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் அதிர்ந்து போயிருக்கிறார்களாம்.இதனைத் தொடர்ந்து திருமண மண்டபங்கள் மற்றும் உணவு விடுதிகள் போன்ற இடங்களில் கூட, இரவு 10 மணிக்கு எல்லாம் கொண்டாட்டங்கள் மற்றும் உணவு வழங்குவதை நிறுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் நாட்டின் அமைச்சரவை அனுமதி கொடுத்திருப்பதாகவும் இதனால் சுமார் 62 பில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் மிச்சப்படுத்தப்படும் என்றும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா அசிப் (Khwaja Asif) கடந்த ஜனவரி 3ஆம் தேதி பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் மின்சாரத்தை சேமிக்க மின்சார பல்புகள் மற்றும் காத்தாடிகள் உற்பத்தியை தடை செய்வது போன்றவைகளும், இத்திட்டத்தில் அடக்கம் என, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஊடகங்களிடம் பேசிய போது கூறினார். பாகிஸ்தானில் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை காத்தாடிகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
பாகிஸ்தான் நாட்டில் கோடை காலத்தில் மின்சார பயன்பாடு 29 ஆயிரம் மெகாவாட்டாகவும், குளிர்காலத்தில் வெறும் 12 ஆயிரம் மெகாவாட் ஆகவும் இருக்கிறது. அதுவும் கோடை காலத்தில் அதிக அளவில் காத்தாடிகளை பயன்படுத்துவதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
நாட்டில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதின் ஓர் அங்கமாக, அந்நாட்டில் உள்ள தெருவிளக்குகளில் பாதி விளக்குகள் மட்டுமே ஒளிர விடப்படும், மீதி விளக்குகள் அணைத்து வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச பன்னாட்டு நிதியமான ஐ எம் எஃப் அமைப்பின் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதிக்காக பாகிஸ்தான் தவித்துக் கொண்டிருக்கிறது.பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 11.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது, அதில் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நாட்டின் மத்திய வங்கி இடம் இருக்கிறது என டெய்லியோ (dailyo) வலைதளம் சொல்கிறது.
இது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததில் பாதி தான் என்றும் அவ்வலைதளம் சொல்கிறது. தற்போது பாகிஸ்தான் நாட்டின் கையில் இருக்கும் அந்நிய செலாவணியை வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு தேவையான பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் ஒட்டுமொத்த பாகிஸ்தான் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பேரழிவு மற்றும் மிகப்பெரிய நிதி இழப்புகள் அந்நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கிவிட்டன.
பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து 21 முதல் 23 சதவீதமாகத் தொடரலாம் என்று பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் கணித்து இருக்கின்றன. அதுபோக அந்நாட்டின் நிதி பற்றாக்குறை 115 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் டெய்லியோ செய்திகளில் பார்க்க முடிகிறது.
2022 - 23 நிதி ஆண்டில் மதிப்பிடப்பட்டிருந்த பட்ஜெட் வளர்ச்சியை விட குறைவான வளர்ச்சியே பதிவாகலாம் என பாகிஸ்தான் நாட்டின் நிதி அமைச்சர், தன்னுடைய மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே இந்த வளர்ச்சி குறைவுக்குக் காரணமாக குறிப்பிட்டு இருக்கிறார்.
கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் நாட்டு பொருளாதாரத்திற்கு, குறைந்தபட்சம் 30 பில்லியன் அமெரிக்க டாலர் வேண்டும், அப்போதுதான் பாகிஸ்தானால் கடனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய தொகைகளை எல்லாம் செலுத்தி, அவர்களுக்கு தேவையான எரிசக்தி பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள முடியும் என டெய்லியோ வலைதளம் கூறியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் நாட்டின் அரசாங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அதனால் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்து வெளியேறி, ஷெபாஷ் ஷரிஃப் பிரதமராகப் பதவியேற்றார்.
ஏற்கனவே இம்ரான் கான் ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் நாட்டு பொருளாதாரம், ஒரு நிலையற்ற தன்மையை எதிர் கொண்டு வந்தது. ஏப்ரல் மாதம் புதிதாக பொறுப்பேற்ற ஷெபாஷ் ஷரீஃப் அதைக் கட்டுப்படுத்த அல்லது முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்ல எதுவும் செய்ததாக தெரியவில்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் பிரதமர் சவுதி அரேபியாவுக்கு ஒரு ராஜரிக ரீதியிலான பயணத்தை மேற்கொண்டு 8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான நிதி உதவிகளை பெற்று வந்தார். ஆனால் அந்தத் தொகை, அந்நாட்டுக்கு எந்தவித நன்மையும் பயக்கியதாகத் தெரியவில்லை.
கிட்டத்தட்ட கடந்த 15 ஆண்டுகளாக, அமெரிக்காவில் காலியாக இருக்கும் பாகிஸ்தான் நாட்டுக்குச் சொந்தமான பழைய தூதரக அலுவலகங்கள் கட்டிடங்களை எல்லாம், கடந்த மாதம் விற்று பணத்தை தேற்றி இருக்கிறது என்றால், பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார சூழல் எத்தனை மோசமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
பாகிஸ்தான் அரசு, தன்னால் முடிந்த வரை இறக்குமதிகளை கட்டுப்படுத்தி பண வீக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால் பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் இறக்குமதிக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நுகர்வோர் பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust