Wagner: உலகையே அச்சுறுத்தும் தனியார் இராணுவம் - கொடூர குற்றங்களில் ஈடுபடும் இவர்கள் யார்? Twitter
உலகம்

Wagner: உலகையே அச்சுறுத்தும் தனியார் இராணுவம் - கொடூர குற்றங்களில் ஈடுபடும் இவர்கள் யார்?

"எங்களுக்காக 4 ஆண்டுகள் பணியாற்றினால் உங்களுக்கு விடுதலை கிடைக்கும். தப்பி ஓட நினைத்தால் உங்கள் உயிரைப் பறித்துவிடுவோம்" எனப்பேசி ரஷ்ய சிறைகளில் இருக்கும் கொடூர குற்றவாளிகளை தன் படையில் சேர்த்துக்கொள்கிறார் பிரிகோஜின்.

Antony Ajay R

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போரில் கடந்த வாரம் புதினையே அதிரவைக்கும் சம்பவம் நடந்தது. ரஷ்யாவின் தனியார் இராணுவமான வாக்னர் அரசுக்கு எதிராக திரும்பியது தான் அந்த சம்பவம்.

மாஸ்கோ நோக்கி படையெடுத்து சென்ற வாக்னர் படை இரண்டு ரஷ்ய ஹெலிகாப்டர்களை சுட்டுத்தள்ளியது. தலைநகர் மாஸ்கோவை அடைய 200 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே இருந்த போது அண்டை நாடான பெலாரஸ் அதிபர் தலையிட்டு வாக்னர் மற்றும் ரஷ்ய அரசு தரப்புக்கு இடையே பேச்சு வார்த்தை நடத்தினார்.

இறுதியில் ரஷ்யாவை விட்டு வெளியேற வாக்னர் குழுவின் தலைவர் எவ்கேனி பிரிகோசின் ஒப்புக்கொண்டார். அவர் மீதான வழக்குகளை ரஷ்ய அரசு திரும்ப பெற்றது. ஒரு தனியார் இராணுவத்தால் அரசையே மிரட்டிப் பார்க்க முடியும் என்பதை ரஷ்யா மூலம் உலக நாடுகள் கண்டுகொண்டன.

வாக்னர் போல ரஷ்யாவில் இன்னும் 3 தனியார் இராணுவங்கள் இருக்கின்றன. தனியார் இராணுவங்களை சர்வதேச அளவில் செயல்படும் கூலிப்படைகள் எனக் கருதலாம்.

அமெரிக்கா, யுனைடட் அரபு எமிரேட்ஸ், லிபியா, நைஜீரியா தென்னாப்பிரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தனியார் இராணுவங்களைப் பயன்படுத்தியிருக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் முதலிய நாடுகளிலும் தனியார் இராணுவங்கள் இருக்கின்றன. அமெரிக்கா ஈரானில் யுத்தம் செய்த போது பிளாக்வாட்டர் என்ற தனியார் இராணுவத்தை பயன்படுத்தியது.

இதன் மிருகத்தனமான நடவடிக்கைகள் அப்போது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தின. அதன் பிறகு தங்களது பெயரை அகாடமி என மாற்றிக்கொண்டனர்.

இன்று அதே வெறியாட்டத்தை உக்ரைனில் நடத்தி வருகிறது வாக்னர் படை. 50,000 வீரர்கள் வரை இருக்கும் இந்த படை எப்படி உருவானது என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்பதை அறிவதன் மூலம் தனியார் இராணுவங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

வாக்னர் குழு

வாக்னர் குழு என்ற கூலிப்படை இருப்பதே 2014ல் தான் தெரியவந்தது. ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் அப்போது போர் நடந்துவந்தது.

போரில் ரஷ்ய பிரிவினையாளர்களை ஆதரித்து களத்தில் இறங்கியது வாக்னர் குழு. கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்ததில் வாக்னர் குழுவின் பங்கு அதிகம் என சொல்லப்படுகிறது.

இப்போது வாக்னர் குழுவினர் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் செயல்பட்டு வருகின்றனர்.

உக்ரைன் போருக்கு முன்பு வரை வாக்னர் படையில் 5,000 வீரர்கள் இருப்பார்கள் என கணிக்கப்பட்டது. ஆனால் மாஸ்கோவை நோக்கி முன்னேறுகையில் பிரிகோஜின் தன்னுடன் 25,000 வீரர்கள் இருப்பதாக தெரிவித்தார்.

வாக்னர் படையில் 50,000 வீரர்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ரஷ்யாவில் தனியார் கூலிப்படைகள் வைத்திருப்பது சட்டப்பூர்வமானதாக உள்ளது. அமெரிக்கா வாக்னர் குழுவை பணத்துக்காக குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைப்பாக கருதுகிறது.

வாக்னர் குழு எப்படி உருவானது?

கூலிப்படைத் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் கூறுவதன் படி அவர் 2014ம் ஆண்டு வாக்னரை உருவாக்கியிருக்கிறார். இவர் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

பணக்கார தொழிலதிபரும் கூட. மாஸ்கோவில் உணவக டெண்டர்களைப் பிடித்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் "புதினின் சமையல்காரர்" என அழைக்கப்படுகிறார்.

வாக்னர் குழுவின் உருவாக்கத்தின் முன்னாள் ரஷ்ய இராணுவ அதிகாரி டிமித்ரி உட்கின் என்பவரின் தலையீடு இருக்கலாம் என பிபிசி தளம் கூருகிறது.

வாக்னர் குழுவின் படையில் அதிகமாக ரஷ்ய இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால் இப்போது பிரிகோஜின் ரஷ்யாவின் சிறைகளில் இருந்து குற்றவாளிகளை தன் படையில் சேர்த்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சிறைக்கைதிகளை கடத்தும் அவர், "எங்களுக்காக 4 ஆண்டுகள் பணியாற்றினால் உங்களுக்கு விடுதலை கிடைக்கும். தப்பி ஓட நினைத்தால் உங்களைக் கொன்றுவிடுவோம்" என டீல் பேசுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

வாக்னர் குழுவின் செயல்பாடுகள்

2015ம் ஆண்டு வாக்னர் கூலிப்படையினர் சிரியாவில் அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டனர். எண்ணெய் வயல்களை பாதுகாத்து வந்தனர்.

லிபியாவில் உள்நாட்டு போர் நடந்த போது ஜெனரல் கலீஃபா ஹஃப்தாருக்கு ஆதரவான படைகளுடன் இணைந்து சண்டையிடுகின்றனர். இந்த போரில் வாக்னர் படையினருக்கு கவசங்கள் மற்றும் ஆயுதங்களை ரஷ்ய அரசு வழங்கியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவின் உள்நாட்டுப் போரில் வாக்னர் படை அரசுக்கு ஆதரவாக இறங்கியது. வைர சுரங்கங்களை பாதுகாக்கவும், சூடான் தங்க வயல்களையும் பாதுகாக்ககும் குழுவாகவும் வாக்னர் படை செயல்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலியில் இஸ்லாமிய ஆயுத படைகளுக்கு எதிராக சண்டையிட வாக்னர் படையினர் பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்த பாதுகாப்புகளை மேற்கொள்வதன் மூலம் பிரிகோஜின் அந்தந்த நாட்டு அரசுகளிடம் இருந்து பணம் ஈட்டுகிறார். இவர்களுக்கு தனித்தனியாக தலைமைத் தாங்குவது யார் என்ற விவரங்கள் இல்லை.

வாக்னர் குழு ஈடுபட்டுள்ள குற்றங்கள் என்ன?

ஆயுதம் இல்லாதவர்காளை கொலை செய்தல், பொதுமக்களை கொள்ளையடித்தல், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தல், மனித உரிமை மீறல்கள்களில் ஈடுபடுதல் மற்றும் பல போர் குற்றங்கள் வாக்னர் படை மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

ரஷ்ய படையினர் உக்ரைனில் நுழைந்த பிறகு அவர்களுடன் சென்ற வாக்னர் வீரர்கள், ஏப்ரல் 2022ல் கீவ் நகரில் இருந்த உக்ரைன் பொதுமக்களை சித்தரவதை செய்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

மார்ச் 2022ல், புச்சா நகரில் வாக்னர் படை பொதுமக்களை படுகொலை செய்ததாகவும் ஜெர்மன் உளவுத்துறையால் கூறப்படுகிறது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் வாக்னர் படை பொதுமக்களை கொள்ளையடித்ததாகவும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஐநாவின் அமைதிப்படையினரை கொலை செய்ததாகவும், பொதுமக்களில் குறிப்பாக இஸ்லாமிய சமூக மக்களை கொடுமைப்படுத்தியதாகவும் வாக்னர் மீது புகார்கள் உள்ளன.

லிபியாவில் செயல்பட்டு வரும் வாக்னர் படை அந்த நாட்டின் தலைநகரான த்ரிபோலியில் கண்ணிவெடிகள் மற்றும் பிற ஆபத்தான வெடிபொருட்களை புதைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

"ஆப்ரிக்க மக்களை மிரட்டி அவர்களின் இயற்கை வளங்களை கொள்ளையடித்து வருகிறது வாக்னர் கூலிப்படை" என அமெரிக்க அரசு இவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?