ராஜபக்‌ஷே

 

Twitter

உலகம்

இலங்கை : விண்ணைத் தொட்ட விலைவாசி, வீதியில் இறங்கிய மக்கள் - என்ன நடக்கிறது அங்கே?

Govind

இலங்கையின் முக்கியமான வருவாய் சுற்றுலா மூலம் வருகிறது. கொரோனா முடக்கத்தால் இரு வருடங்களாகச் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதில்லை. இது போகச் சொல்லிக் கொள்ளுமளவு ஓரளவாவது சுயச் சார்பு பொருளாதாரம் இலங்கையில் இல்லை. அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. புலிகளுடனான போருக்காக இலங்கை அரசு இராணுவத்திற்கு பெரும் செலவு செய்திருக்கிறது. இப்போதும் இராணுவத்தின் பட்ஜெட் அதிகம்.

எல்லாம் சேர்ந்து இப்போது நெருக்கடியில் சிக்கியிருக்கிறது இலங்கை. கடந்த சில தினங்களாக அன்னிய செலவாணி கையிருப்பு குறிப்பாக டாலர் இல்லாததால் எதையும் இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கிறது இலங்கை.

கச்சா எண்ணெய் வந்தால்தான் இலங்கையின் அனைத்து வகை போக்குவரத்து நடக்கும். தற்போது எண்ணெய் பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல் விலை மடங்கு உயர்ந்திருக்கிறது. மேலும் தினசரி மின்சாரத் தடை பல மணிநேரம் நீடிக்கிறது. இதனால் தேர்வுக்குத் தயார் செய்யும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

தலைவர்கள்

மின்சாரமின்றி பல தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. தொழிற்துறைகளில் பணிபுரிவோர் வேலைகளை இழந்து வருகின்றனர். சமையல் எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக பல உணவகங்கள் மூடப்பட்டன. அதில் பணிபுரிவோரின் வாழ்வும் கேள்விக்குறியாகி விட்டது. சிமெண்ட் விலை உயர்வால் பல கட்டுமானப் பணிகள் நின்று போயுள்ளன.

உதவி கேட்டு இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே நேற்று தில்லி வந்தார். பிரதமர் மோடியைச் சந்தித்து இந்தியா வழங்கிய நிதியுதவிக்காக நன்றி தெரிவித்தார். இந்த வருடத்தில் இந்தியா இதுவரை 1.40 பில்லியின் டாலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது.

தற்போது இலங்கை ரூபாயின் வீழ்ச்சி, அன்னியச் செலாவணி இருப்பின்மை, எரிபொருள் தட்டுப்பாடு எல்லாம் சேர்ந்து விலைவாசியைக் கடுமையாக உயர்ந்திருக்கிறது. அரிசி ஒரு கிலோ இலங்கை ரூபாயில் 448 ஆகவும் இந்திய ரூபாயில் 128 ஆகவும் உள்ளது. அதே போன்று ஒரு லிட்டர் பால் இலங்கை ரூ.263. இந்திய ரூபாயில் 75.

ஆப்பிள் பழம் கூட கிலோ கணக்கில் இல்லாமல் ஒன்றின் விலை ரூ 150 என விற்கப்படுகிறது. பால், கோதுமை மாவு, சர்க்கரை, பருப்பு அனைத்தின் விலையும் விண்ணைத் தொட்டிருக்கின்றன. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.283, டீசல் ரூ.176 விற்கின்றது. பல வாகனங்கள் ஓட முடியாமல் சாலையோரம் நிற்கின்றன. பேருந்து கட்டணத்தை உயர்த்தப் போவதாக பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்திருக்கிறது. தங்கத்தின் விலையும் சவரன் ஒன்றுக்கு 1,50,000 ஆக உயர்ந்துள்ளது.

இது போக, நாளொன்றுக்கு ரூ. 600 கூலி வாங்கும் மலையகத் தமிழர்கள் மத்தியில் பிரச்சினை கடுமையாக இருக்கிறது. இத்தனை விலைவாசியில் அவர்கள் எதை வாங்கி உண்ண முடியும்? இந்த விலை உயர்ந்த உணவுப் பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் எல்லாக் கடைகளிலும் பகலிலும், இரவிலும் நீண்ட வரிசையில் மக்கள் நிற்கின்றன

இடையில் அத்தாவசியமற்ற 367 பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை செய்தது. இதன் விளைவாகச் செல்பேசி கூட 30% விலை உயர்ந்திருக்கிறது.

வரிசையில் நிற்கும் மக்கள்

விலைவாசி உயர்வைக் கண்டித்து இலங்கை அரசு, அதிபரை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக வேண்டுமெனப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா, சீனா, பன்னாட்டு நாணய நிதியம் எனப் பலரிடம் கடன் பெற்றுச் சமாளிக்க முயல்கிறது இலங்கை. ஏற்கனவே இலங்கைக்கு 7 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன் உள்ளது. அந்தக் கடன் சுமையும் இந்த நெருக்கடிக்கு ஒரு காரணம். இந்நிலையில் இன்னும் கடன் வாங்கினால் நெருக்கடி அதிகரிக்குமே அன்றி குறைவதற்கு வாய்ப்பில்லை. அல்லது உலகநாடுகள் இலவசமாக உதவி செய்ய வேண்டும். உக்ரைன் போரில் கவனம் கொண்டிருக்கும் உலகநாடுகள் இப்போதைக்கு இலங்கை பக்கம் பார்வையைத் திருப்புவது கடினம்.

என்ன செய்வார்கள் இலங்கை மக்கள்?

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?