Putin Facebook
உலகம்

ஒடேசா : துரத்தும் புடின், எதிர்த்து நிற்கும் மக்கள் - ஒரு வரலாற்று நகரத்தின் கதை | பகுதி 1

Govind

உக்ரைனின் தெற்கு எல்லையில் கருங்கடலில் இருக்கும் துறைமுக நகரம் ஒடேசா. தானியங்கள் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற இத்துறைமுகத்தைக் கைப்பற்றவேண்டும் என்பது ரஷ்ய அதிபர் புடினின் இலக்கு!

நகரில் இருக்கும் அருங்காட்சியகம் கிட்டத்தட்ட காலியாக இருக்கிறது. முன்னெச்சரிக்கையாக ஒடேசாவின் நுண்கலை அருங்காட்சியகத்தில் இருந்த 12,000த்திற்கும் மேற்பட்ட படைப்புகளை அகற்றி பாதுகாப்பாக வேறு இடத்தில் வைத்து விட்டனர். எஞ்சியிருப்பது ரஷ்யப் பேரரசி கேத்தரின் உருவப்படம் மட்டும்தான். இந்தப்படம் ரஷ்யப் பேரரசின் வெற்றியை குறிக்கும் வண்ணம் உள்ளது. பேரரசி ஆடம்பரமான கவுனில் நிற்க அவருக்குப் பின்னே துருக்கியை 1792 இல் வென்ற ரஷ்யக் கப்பல்கள் உள்ளன.

ரஷ்யா மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணத்திற்கு இந்தப் படம் நல்லதொரு பிரச்சாரம். இது ரஷ்யாவின் பழைய கீர்த்தியை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. எனவே இதை வேண்டுமென்றே விட்டு விட்டுச் சென்றிருக்கிறார்கள் ஊழியர்கள்.

பேரரசி கேத்தரின் தான் ஒடேசா துறைமுகத்தை 1794 ஆம் ஆண்டில் நிறுவினார். ரஷ்யாவிலிருந்து கருங்கடல் வழியாக மத்திய தரைக்கடலுக்கு செல்லும் வாயிலாக இந்த நகரம் திகழ்ந்தது. தற்போதைய கொடூரமான உக்ரைன் போரால் இப்பகுதியில் ரஷ்ய மொழி பேசும் மக்களிடம் கூட அதிபர் புடின் தனிமைப் பட்டிருக்கிறார்.

ஒடேசா உலகின் தானிய துறைமுகம் என்று அழைக்கப்படுகிறது. யூதர்களின் வலி நிறைந்த வரலாறும் இந்த நகரத்திற்கு உண்டு. ரஷ்ய படையெடுப்பிற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பேசிய அதிபர் புடின் இந்த நகரத்தில் ரஷ்யாவிற்கு எதிரான குற்றவாளிகளைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றார்.

போரின் ஆரம்பத்தில் உக்ரைன் நாட்டின் தலைநகரமான கீவை கைப்பற்றி செலன்ஸ்கியின் அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியும் என்று புடின் நம்பினார். ஆனால் அவரது எதிர்பார்ப்பிற்கு மாறாக உக்ரைன் எதிர்த்து நின்று போராடியதால் அங்கிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்க வேண்டியதாயிற்று. அதன் பிறகு ரஷ்யாவின் கவனம் தெற்கு உக்ரைனில் திரும்பியது. அங்கிருக்கும் ஒடேசா துறைமுகத்தைக் கைப்பற்றினால் உக்ரைன் கடல்வழியில்லாத நிலத்தால் சூழப்பட்ட நாடாக மாறிவிடும். இதுதான் புடினின் நோக்கம். ஒடேசாவைக் கட்டுப்படுத்தினால் முழு கருங்கடலையும் கட்டுப்படுத்த முடியும். அப்படி இராணுவ ரீதியில் முக்கியமான இலக்கு ஒடேசா.

மூன்று வாரங்களாக ஒடேசா பிராந்தியத்தைத் தீவிரமான குண்டு வீச்சால் ரஷ்யா தாக்கி வருகிறது. தாக்குதல் பற்றி எச்சரிக்கும் சைரன் ஒலிகள் நாள் முழுக்க ஒலித்து வருகின்றன. ஆங்காங்கே குழந்தைகளின் அழுகுரலும் கேட்கிறது.

வரலாற்று பாரம்பரியம் கொண்ட இந்த நகரம் ஒரு போரினால் என்ன ஆகும்?

ஆறு மாதங்கள் கழித்தும் ஒடேசா எதிர்த்து நிற்பதால் ரஷ்யப் படைகளால் அதைத் தொட முடியவில்லை. அழகான அந்த நகரின் இயல்பு வாழ்க்கை திரும்பியது போலத் தோன்றுகிறது. உணவகங்கள், ஓபரா அரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதே நேரம் அங்கே அமைதியின்மையும் ஒளிந்திருக்கிறது. கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் ரஷ்யப்படைகள் நிலை கொண்டிருக்கின்றன. நகரில் பல இடங்களில் மணல் மூட்டைகளும், முள்வேலிகளும் அரணாகக் காத்து நிற்கின்றன. இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. தூங்கினால் அடுத்த நாள் எழுந்திருப்போமா என்று தெரியாது. அப்படித்தான் மக்கள் அங்கு வாழ்கிறார்கள்.

ஒடேசாவின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் அழிக்க விரும்புகிறார் புடின் என்று ஒடேசாவின் 57 வயதான மேயர் ஜெனடி ட்ருகானோவ் கூறினார். மேலும் ரஷ்யா ஒரு கொலைகார தேசமாக மாறிவிட்டது என்றும் கூறுகிறார். இவ்வளவிற்கும் அவர் ஒரு முன்னாள் ரஷ்ய அனுதாபி. மட்டுமல்ல அங்கே ரஷ்ய மொழி பேசும் மக்களின் எதிர்ப்பையும் புடின் சம்பாதித்து இருக்கிறார்.

ssdசெர்ஜி ஐசென்ஸ்டீனின் திரைப்படமான 1925 இல் வெளியான போர்க்கப்பல் பொட்டெம்கினில் ஒடேசா வருகிறது. அங்கிருக்கும் பிரம்மாண்டமான படிக்கட்டுகள் சோவியத் ஆட்சியின் போது பொட்டெம்கின் படிக்கட்டுகள் என்று அழைக்கப்பட்டது. தற்போது அது ப்ரிமோர்ஸ்கி படிக்கட்டுகள் என்று சோவியத்திற்கு முன்பு இருந்த பெயரால் அழைக்கப்படுகிறது.

இத்திரைப்படத்தில் ஜார் மன்னனது துருப்புக்களை எதிர்த்து பொட்டெம்கின் கப்பலில் இருந்த புரட்சியாளர்கள் சண்டையிடுவார்கள். படிக்கட்டுகளில் இருந்த ஜார் மன்னனது துருப்புகள் மக்களை நோக்கி சுடும். அதில் ஒரு குழந்தையின் தாயார் ஓடிவருவார். அவரது குழந்தை இருக்கும் இழுவண்டி படிகளில் ஓடும். இத்தகை கொடூர காட்சியின் அடையாளமாக இப்போது ஒடேசா நகரமே மாறிவிட்டது. அன்று ஜாரின் படைகள் என்றால் இன்று அதிபர் புடினின் படைகள் தாக்குகின்றன.

19ஆம் நூற்றாண்டில் இந்நகரில் கிரேக்கர்கள், இத்தாலியர்கள், டாடர்கள், ரஷ்யர்கள் மற்றும் துருக்கியர்கள் கலந்து வாழ்ந்த ஒரு முரட்டுத்தனமான நகரமாக ஒடேசா இருந்தது. அதே போன்று ஐரோப்பாவின் பல இடங்களில் இருந்து யூதர்களும் இங்கே குடியேறினர். 1900வாக்கில் ஒடேசாவில் இருந்த 4,03,000 மக்கள் தொகையில் சுமார் 1,38,000 பேர் யூதர்களாக இருந்தார்கள்.

ஒடேசா கதைகள் என்ற புகழ் பெற்ற புதினத்தை எழுதிய ஐசக் பாபெல் 1894 இல் ஒடேசாவில் பிறந்தார். 1940இல் அவர், ரஷ்ய அதிபர் ஸ்டாலினால் பொய்க்குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது கதைகளில் ஒடேசாவின் அன்றைய வாழ்க்கையும், நாயகர்களும் இருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது சோவியத் யூனியனின் செம்படையானது நாஜிப்படையின் கட்டுப்பாட்டிலிருந்த ஒடேசா நகரத்தை 1944இல் விடுவித்தனர். தற்போது வரலாறு திரும்புகிறது. இப்போது ரஷ்யப் படைகள் ஒடேசா நகரத்தைக் கைப்பற்றத் தாக்குதல் தொடுத்து வருகின்றன.

உக்ரைன் மீதான தனது படையெடுப்பை நியாயப்படுத்தி ரஷ்ய அதிபர் புடின் கடந்த ஆண்டில் 5000 வார்த்தைகள் அடங்கிய ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டார். அதில் ரஷ்யாவும் உக்ரைனும் ஒரே வரலாற்றையும் ஆன்மாவையும் கொண்டிருக்கின்றன என்று எழுதினார். மேலும் உக்ரைன் 1991இல் சுதந்திரம் பெற்றதால் உண்மையில் ரஷ்யா கொள்ளையடிக்கப்பட்டது என்றும் கூறினார். உக்ரைன் ஒரு கற்பனையான தேசம் என்பதுதான் அவரது புரிதல். அதற்கான பதில்தான் அவர் பிப்ரவரி 24இல் உக்ரைன் மீது நடத்திய படையெடுப்பு. இதன் மூலம் பாசிசம் என்பது எப்படி ஒரு கதையை உருவாக்கி உண்மைக்கு மாறான ஒரு சித்திரத்தை உருவாக்க விரும்புகிறது என்பதை புடின் உலகிற்கு நினைவுபடுத்தியுள்ளார்.

Russia-Ukraine

அதனால்தான் உக்ரைனின் மற்ற நகரங்களை விட அதிகமாகவே ஒடேசாவில் உக்ரைனின் தேசிய உணர்வு அதிகமாக எழுவதற்கு புடின் உதவியுள்ளார். தற்போது ஒரு சிறுபான்மை மக்கள் போக பெரும்பான்மை மக்கள் ரஷ்யாவை எதிர்க்கின்றனர். இது ஒரு மிகப்பெரிய மாற்றம் என்கிறார் ஒடேசா வரலாற்றை ஆய்வு செய்யும் அறிஞர் ஷெரி டிப்ரோவ்.

லிபியாவும், நடாலியாவும் ஒடேசாவிற்கு தப்பி வந்த பல்லாயிரக்கணக்கான உக்ரைன் மக்களுக்கு உதவும் வண்ணம் ஒரு இல்லத்தை நடத்தி வருகின்றனர். அங்கே உக்ரைன் தலைநகருக்கு அருகில் இருக்கும் புச்சா மற்றும் இர்பின் பகுதிகளில் ரஷ்யப் படையினர் நடத்திய வன்புணர்வு, கொலைகள் குறித்து மக்கள் கதை கதையாய்ச் சொல்கிறார்கள். அங்கிருக்கும் பள்ளி ஆசிரியரான லியோனிடோவா, ரஷ்யா ஒரு ஜார் மன்னன் போல தங்களை ஆட்சி செய்ய விரும்புவதாகக் கூறினார்.

ஒடேசாவில் உள்ள ஒவ்வொரு கட்டிடத்திலும் உக்ரைனின் தேசிய வண்ணங்களான நீலம் மற்றும் மஞ்சள் வண்ணப்பூச்சுகள் உள்ளன. கதவுகளின் மீது உக்ரைன் கொடு பறக்கின்றது. ஒரு விளம்பரப் பலகையில் " ரஷ்ய சிப்பாயே நீங்கள் இங்கே பூக்களுக்குப் பதிலாகத் தோட்டாக்களைப் பெறுவீர்கள்" என்றும் மற்றொன்றில் "1941இல் பாசிச்ச ஆக்கிரமிப்பு, 2022இல் ரஷ்ய ஆக்கிரமிப்பு என்றும் எழுதப்பட்டிருக்கின்றன. இப்படி ஒடேசா முழுவதும் ரஷ்ய எதிர்ப்புணர்வு நிரம்பி இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?