நம்பி நாராயணன் என்கிற ராக்கெட் விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளரைக் குறித்து சமீபத்தில் மாதவன் நடிப்பில் ஒரு படம் வெளியானது.
அதில் அவர் இந்தியாவுக்காக எத்தனையோ இன்னல்களையும், சவால்களையும் கடந்து உழைத்தும், பல ஆண்டுகளுக்கு தேசத் துரோகி என்கிற பட்டத்தைச் சுமந்து வாழ்ந்ததாகவும், கடைசியில் உச்ச நீதிமன்றமே அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்ததாகவும் நாம் செய்திகளில் பார்த்தோம்.
அப்படி ஒரு சம்பவம் பல தசாப்தங்களுக்கு முன்பே ரஷ்யாவில் ஒரு தாவரவியலாளர், மரபியல் நிபுணருக்கு நடந்தது. ரஷ்யாவின் பஞ்சத்தைப் போக்கிவிட வேண்டும், இனி இந்த உலகில் பசி பட்டினி என்கிற பேச்சே இருக்கக் கூடாது என்கிற நோக்கோடு உழைத்த அந்த மாமனிதரின் பெயர் நிகோலாஜ் இவானோவிக் வாவிலோவ் (Nikolaj Ivanovich Vavilov).
ஆனால் காலக் கொடுமையாலும், சில அரசியல் காரணங்களினாலும் இவர் வெளிநாட்டு உளவு ஏஜெண்ட் என்று கூறி சிறையில் அடைக்கப்பட்டு காலமானார்.
நிகோலாஜ் இவானோவிக் வாவிலோவ் கடந்த 1887ஆம் ஆண்டு, ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்தார்.
சிறு வயதிலிருந்தே ரஷ்யாவில் ஏற்பட்ட பஞ்சத்தையும், பசி பட்டினியையும் பார்த்து வளர்ந்த மனிதர், இனி ரஷ்யாவில் பஞ்சமே இருக்கக் கூடாது என்கிற உன்னத நோக்கோடு வளர்ந்தார்.
அப்படியே பெட்ரோவ்ஸ்கயா விவசாயக் கல்லூரியில் (இன்று ரஷ்யன் ஸ்டேட் அக்ரேரியன் யுனிவர்சிட்டி என்று அழைக்கப்படுகிறது) படித்து 1910ஆம் ஆண்டு பட்டத்தோடு வெளியே வந்தார். கிரகர் மெண்டெல் (Gregor Mendel) என்கிற தாவர மரபியல் நிபுணரின் பணிகளில் மிகவும் ஈர்க்கப்பட்ட நிகோலாஜ், தாவர வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற தாவரங்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகாமல் இருப்பது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினார் என்கிறது kew.org என்கிற வலைதளம்.
ரஷ்யாவில் பல்வேறு மோசமான அரசியல் சூழல்களைத் தாண்டி, மெல்ல அரசியல் நிலைபெற்றது. 1921 - 22 காலகட்டத்தில் ரஷ்யா பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக அதற்கு முந்தைய ஆண்டு அறுவடையான ஒட்டுமொத்த கோதுமை அளவில் பாதி மட்டுமே அந்த ஆண்டு அறுவடையானது. அப்போது ரஷ்யாவின் தலைவராக இருந்த லெனின், பஞ்சத்தையும், பசி பட்டினியையும் சமாளிக்க எதையாவது செய்தே ஆக வேண்டும் என தீர்மானித்தார்.
அப்போது பயன்பாட்டு தாவரவியல் (Applied Botany) துறையின் தலைவராக இருந்த நிகோலாஜ் வாவிலோவை அமெரிக்காவுக்கு சில காட்டுப் பயிர்களைச் சேகரித்து வர அனுப்பி வைத்தனர்.
அந்த விதைகள் ரஷ்யாவின் கடுங்குளிரைத் தாங்கக் கூடிய, வறட்சியைத் தாங்கக் கூடிய, நோய்களை எதிர்த்து போராடி வளரக் கூடிய விதைக்கு அடித்தளமாக இருக்கும் என நம்பினார் வாவிலோவ்.
அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவுக்குத் திரும்பிய பிறகு, வாவிலோவ் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள், ஆப்கானிஸ்தான், வட ஆஃப்பிரிக்கா, எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்குப் பயணித்து பல்லாயிரக் கணக்கான கோதுமை விதைகளைச் சேகரித்தார். 1924ஆம் ஆண்டு முடிவில் அவர் சுமார் 60,000 விதைகளைச் சேகரித்திருந்தார்.
இந்த விதைகளை லெனின்கிராட் விதை வங்கியில் பாதுகாப்பாக வைத்தார். எதிர்காலத்தில் இந்த விதைகளைப் பயன்படுத்தி, புதிய திரிபு பயிர்களை உருவாக்கி உலகத்தில் பசியை ஒரு முடிவுக்குக் கொண்டு வரலாம் என்கிற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தார்.
பயிரிடப்பட்டு வந்த தாவரங்கள் இந்த உலகில் எந்த பகுதியில் முதன்முதலில் தோன்றின என்பது குறித்த நிகோலாஜ் இவானோவிக் வாவிலோவின் வரலாற்றுப் பதிவு 1926ஆம் ஆண்டு பிரசுரமானது. இந்த பதிவுக்காக, அந்த காலத்தில் ரஷ்யாவின் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட லெனின் பரிசு நிகோலாஜ் இவானோவிக் வாவிலோவுக்கு வழங்கப்பட்டது என்கிறது கிவ்.ஆர்க் வலைதளம்.
ட்ரோஃபிம் லைசென்கோ என்கிற இளைஞர் மரபியல் குறித்த ஆய்வுகளை புறந்தள்ளத் தொடங்கினார். லைசென்கோவின் தத்துவங்கள் ரஷ்யாவின் விவசாயத்துக்கே மிகப்பெரிய அழிவைக் கொண்டு வந்துவிடலாம் என்று அஞ்சினார் நிகோலாஜ் இவானோவிக் வாவிலோவ். எனவே லைசென்கோவை வெளிப்படையாக எதிர்த்தார் வாவிலோவ்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ரஷ்யாவின் தலைவர் லெனின் லைசென்கோவையும் லாமார்க் கோட்பாட்டை நம்பினார். ஒரு கட்டத்தில், வாவிலோவ் ரஷ்ய விவசாயத்தை தவறான அறிவியல் கொண்டு அழிப்பதாகப் பார்க்கப்பட்டது.
நிகோலாஜ் இவானோவிக் வாவிலோவ் அமெரிக்காவின் உளவு ஏஜெண்டோ என்கிற சந்தேகமும் எழுந்தது.
கடைசியில் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்ரைனில் வைத்து கைது செய்யப்பட்டார் வாவிலோவ். 1941ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 1942ஆம் ஆண்டு அவரது மரண தண்டனை 20 ஆண்டுகால சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது.
ஆனால் துரதிர்ஸ்டவசமாக 1943ஆம் ஆண்டே சிறையில் நிலவிய மிக மோசமான சூழல் காரணமாக காலமானார் உலகமே போற்றிக் கொண்டாட வேண்டிய வாவிலோவ் என்கிற விவசாய விஞ்ஞானி. அவர் இயற்கையான உடல் நலக் குறைவால் காலமானதாக ஒரு தரப்பும், அவருக்கு சரியான உணவு கொடுக்காமல் பட்டினியில் செத்துப் போனதாக ஒரு தரப்பும் சொல்கின்றனர்.
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் 1941 முதல் 1944 வரை சுமார் 28 மாத காலம் ஜெர்மனிக்கு ஆதரவான படைகள் லெனின்கிராடை முற்றுகையிட்டன. அப்போது ரஷ்ய படைகள் லெனின்கிராடில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விதைகள், வேர்கள், பழங்கள் எதையும் மீட்கவில்லை என சில வலைதளங்கள் சொல்கின்றன.
1940களின் தொடக்கத்திலேயே லெனின்கிராட் தான் உலகின் மிகப்பெரிய விதைகள் வைக்கப்பட்டு இருக்கும் கிடங்காக மிளிர்ந்தது இங்கு நினைவுகூரத்தகது.
ஆனால், நிகோலாஜ் இவானோவிக் வாவிலோவ் என்ன செய்திருக்கிறார், அவரது பணியின் நோக்கம் என்ன என்பதை உணர்ந்த ஜெர்மானிய தாவரவியலாளர் ஹெய்ன்ஸ் ப்ரூஷர் (Heinz Brücher), போரின் மத்தியிலேயே பல மாதிரிகளை ஆஸ்த்ரியாவுக்கு அருகிள் உள்ள ஸ்கட்ஸ்டாஃபில் (Schutzstaffel) இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பிலான்ட் ஜெனடிக்ஸ் ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்றார்.
ரஷ்ய விவசாயத்துக்கு மகத்தான பணி செய்திருந்த நிகோலாஜ் இவானோவிக் வாவிலோவின் அருமை 1960களில் ரஷ்யர்களுக்கு தெரிய வந்தது. 1965ஆம் ஆண்டு வாவிலோவ் விருது மற்றும் 1968ஆம் ஆண்டு வாவிலோவ் பதக்கங்களை அறிவித்தது யூ எஸ் எஸ் ஆர் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்கிற அமைப்பு.
1990களின் பிற்பகுதியில் அவர் பெயரில் சரடோவ் நகரத்தில் ஒரு சாலையும், அவருக்கு ஒரு சிலையும் வைத்து மரியாதை செய்துள்ளது ரஷ்யா.
இன்று புனித பீட்டர்ஸ்பெர்க் பகுதியில் உள்ள வாவிவ்லோவ் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பிலாண்ட் இண்டஸ்ட்ரி, இதே நிகோலாஜ் இவானோவிக் வாவிலோவ் பெயரில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நிகோலாஜ் இவானோவிக் வாவிலோவின் கதை 1990லேயே "Nikolai Vavilov" என்கிற பெயரில் 6 அத்தியாயங்களைக் கொண்டு டிவி சீரிஸாக வெளியானது.
எந்த ரஷ்யா நிகோலாஜ் இவானோவிக் வாவிலோவை கொண்டாவில்லையோ, இப்போது அதே ரஷ்யா அவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் கண்ட பசியில்லா உலகத்தை அமைக்கும் நோக்கம், இப்போதும் நிறைவேறாமல் நம் கண் முன்னே அப்படியே இருக்கிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust