Ukraine: லித்தியம் டு டைட்டானியம் - இயற்கை வளங்களுக்காக தான் போர் நடக்கிறதா?
Ukraine: லித்தியம் டு டைட்டானியம் - இயற்கை வளங்களுக்காக தான் போர் நடக்கிறதா? Newssense
உலகம்

Ukraine: லித்தியம் டு டைட்டானியம் - இயற்கை வளங்களுக்காக தான் 'போர்' நடக்கிறதா?

NewsSense Editorial Team

ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் ஒரு மிக முக்கிய புள்ளியாக இருக்கிறது. பூகோள அமைப்பு ரீதியாக உக்ரைன் அமைந்திருக்கும் இடமும் அதற்கு ஒரு காரணம்.

சொல்லப் போனால் மேற்கத்திய நாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஐரோப்பிய நாடுகளையும் ரஷ்யாவையும் இணைக்கும் சங்கிலிக் கன்னி உக்ரைன் என்றால் அது மிகையல்ல. எனவே கடந்த தசாப்தத்தில் உக்ரைன் நாடு பல கடினமான விஷயங்களைத் தேர்வு செய்ய வேண்டி இருந்தது. 

உக்ரைன் நேட்டோ அமைப்பில் உறுப்பு நாடாகவும்,  ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு உறுப்பினராகவும் இணைய விரும்புகிறது.  ஆனால் ரஷ்யாவோ தன்னுடைய கொள்ளைப் புறத்திலேயே ஒரு நேட்டோ உறுப்பினர் இருப்பதை உறுதியாக விரும்பவில்லை. 

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததுக்கும், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதற்கும், அந்நாடு அமைந்திருக்கும் இடத்தை தவிர, அந்நாட்டில் கொட்டிக் கிடக்கும் அரிய வகை உலோகங்கள் மற்றும் தனிமங்கள் காரணமாக இருக்கலாம்.  அப்படி உக்ரைனில் என்ன இயற்கை வளம் இருக்கிறது? இந்த அளவுக்கு பில்ட் அப் கொடுக்கிறார்களே…

கச்சா எண்ணெய் & எரிவாயு

ஒட்டுமொத்த ஐரோப்பாவிலேயே,  அதிக அளவில் இயற்கை எரிவாயு இருப்பு வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் உக்ரைனுக்கு இரண்டாவது இடம். இந்த நாட்டின் வசம் மட்டும் சுமார் 1.09 ட்ரில்லியின் கியூபிக் மீட்டர் அளவுக்கு இயற்கை எரிவாயு இருப்பதாக,  இந்தியா டுடே வலைதள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  முதலிடத்தில் இருக்கும் நார்வே நாட்டில் 1.53 ட்ரில்லியன் கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு இருப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த இயற்கை எரிவாயு சம்பந்தமாக உக்ரைன் முழுமையாக களத்தில் இறங்கவில்லை. 

இதில் மற்றொரு முரணான விஷயம் என்னவென்றால்,  இத்தனை பெரிய இயற்கை எரிவாயு கையிருப்பை வைத்துக் கொண்டும், உக்கரை நாடு தன்னுடைய எரிவாயு தேவையை இறக்குமதி மூலம் தான் பூர்த்தி செய்து கொள்கிறது. 

ரஷ்யா vs உக்ரைன்

எரிவாயு டிரான்சிட் வியாபாரம்

அப்படி என்றால் உக்ரைன் நாடு எரிவாயு மூலம் பத்து பைசா கூட சம்பாதிப்பது இல்லையா..? சம்பாதிக்கிறது. ஆண்டுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சம்பாதிக்கிறது உக்ரைன். இது அவர்கள் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் சுமார் 4 சதவீதம். எரிவாயுவை ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் வழித்தடங்கள் (Gas Transit Lines) உக்ரைனில் பதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த எரிவாயு டிரான்சிட் தடங்களுக்கான கட்டணமாகத் தான் மேற்கூறிய தொகையைச் சம்பாதிக்கிறது உக்ரைன். 

இன்றைய தேதிக்கு,  ஐரோப்பாவின் ஒட்டுமொத்த எரிவாயு நுகர்வில் 40 முதல் 50 சதவீதத்தை ரஷ்யா தான் பூர்த்தி செய்கிறது.  அதுவும் நார்ட் ஸ்ட்ரீம் 1 (Nord Stream 1) என்று அழைக்கப்படும் ட்ரான்சிட் நெட்வொர்க் மூலம் தான் பூர்த்தி செய்கிறது. இந்த டிரான்சிட் நெட்வொர்க்கில் ஒரு கணிசமான பகுதி உக்ரைன் நாட்டில் பதிக்கப்பட்டு இருக்கின்றன. 

உலோகங்கள் & தனிமங்கள்:

இயற்கை எரிவாயு தவிர,  உக்ரைன் நாட்டில் நிலக்கரி,  இரும்பு,  டைட்டானியம்  போன்ற பல்வேறு  உலோகங்கள் மற்றும் தாதுப் பொருட்களும் உக்ரைனில் கொட்டிக் கிடக்கின்றன. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் தாக்கங்கள், உலக அளவில் நிலக்கரி மற்றும் மின்சார உற்பத்தியில் எதிரொலிக்கலாம். 

கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில் இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகள் பட்டியலில் உக்ரைனுக்கு ஐந்தாவது இடம். உக்ரைன் நாட்டுக்குள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் இரும்புத் தாதுக்கு மூன்றாவது இடம்.

லித்தியம்

உக்ரைன் நாட்டின் டோன்பாஸ் பிராந்தியம் முழுக்க இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அது எதிர்காலத்துக்கு மிகப் பெரிய அளவில் பொருளாதார ரீதியாகக் கை கொடுக்கும். 

Kirovohrad, Donetsk, Zaporizhzhia oblasts… போன்ற பல பகுதிகளில் இன்றைய தேதிக்கு பல தொழில்நுட்ப சாதனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் தாதுப் பொருள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் இந்தப் பகுதிகளில் எல்லாம் தற்போது சுரங்கப் பணி நடப்பதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

லித்தியம் தாதுப் பொருள் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தற்போது பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் உலக அளவில் லித்தியம் இருப்பைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன.

டைட்டானியம்

உலக அளவில் கணக்கிடப்பட்டிருக்கும் டைட்டானியம் இருப்பில்,  சுமார் 20% டைட்டானியம் இருப்பு உக்ரைன் நாட்டில் மட்டும் இருப்பதாக ஒரு மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக இந்திய டுடே வலைதள கட்டுரை ஒன்றில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. 

சுரங்கத்தில் டைட்டானியத்தைத் தோண்டி எடுப்பது முதல் அதை ஒரு பொருளாக உருவாக்கி விற்பது வரையான அனைத்து பணிகளையும் ஒரு குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் இணைந்து மேற்கொள்ளும் நாடுகளில் உக்ரைனும் ஒன்று.

கடந்த 2021 ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் டைட்டானியம் இரும்புத் தாதை அதிக அளவில் இறக்குமதி செய்த நாடுகள் பட்டியலில் சீனாவுக்கு முதலிடம் (24.4%),  ரஷ்யாவுக்கு இரண்டாவது இடம் (15.3%), துருக்கிக்கு மூன்றாவது இடம் (14.5%).

சரி,  இந்த டைட்டானியம் சந்தையில் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும்? பொதுவாகவே டைட்டானியம் எடை குறைவான அதே நேரத்தில் மிக வலுவான உலோகங்களில் ஒன்று. எனவே பயணிகள் விமானம்,  சரக்கு விமானங்களை தயாரிக்க மிகப்பெரிய அளவில் டைட்டானியம் உலோகம் பயன்படுத்தப்படுகிறது.

இன்று வரை போயிங் போன்ற உலகின் மிகப்பெரிய விமான உற்பத்தியாளர்கள், அதிக அளவில் ரஷ்யாவின் டைட்டானியம் உலோக விநியோகத்தையே நம்பி இருக்கிறார்கள்.  உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால்,  போயிங் போன்ற நிறுவனங்களுக்கு தேவையான டைட்டானியம் உலோகம் சரியான நேரத்தில், குறைந்த விலையில் கிடைப்பதில் மிகப்பெரிய சிக்கல் எழுவதாக அந்நிறுவனமே சில வாரங்களுக்கு முன் தன் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டதும் இங்கு நினைவு கூறத்தக்கது.

உணவு பாதுகாப்பு பிரச்சனை:

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் காரணமாக,  உக்ரைன் நாட்டின் பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கப்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியானதை நாம் பார்த்தோம். அதன் பிறகு சில சிறப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் உக்ரைனில் இருந்து உணவுப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

அந்த அளவுக்கு உக்ரைன் விவசாயத்திலும் ஒரு முக்கிய தடத்தைப் பதித்திருக்கிறது. உலக அளவில் சோளம் மற்றும் கோதுமையை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் உக்ரைனுக்கும் ஒரு தனி இடம் உண்டு. 

ஒரு ஆண்டில், உக்ரைன் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சோளம் மற்றும் கோதுமையில் சுமார் 40 சதவீதத்திற்கும் மேல் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த இரு நாடுகளுமே தங்களுடைய உணவு தேவைகளுக்கு வெளிநாட்டை சார்ந்து இருப்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.  அதுபோக உக்ரைன் நாட்டில் விளையும் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதும் அந்நாட்டு பொருளாதாரத்தில் கணிசமாகப் பங்களித்து வருகிறது.

ஒருவேளை உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் விரைவில் ஒரு சுமூகமான முடிவுக்கு வராமல் தீவிரமடைந்தால்,  உலக அளவில் உணவுப் பாதுகாப்பு பிரச்சனை எழலாம் என்பதையும் இங்கு மறுப்பதற்கு இல்லை.

உக்ரைன் முக்கியம்:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா, உலக அளவில் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, உக்ரைன் மேற்கத்திய உலக நாடுகளின் பக்கம் திரும்புவதை உறுதி செய்யலாம். ஆனால், அதை ரஷ்யா அனுமதிக்குமா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. 

எரிசக்திக்காக ஐரோப்பா தன்னைச் சார்ந்து இருப்பதை வைத்துக் கொண்டு, ரஷ்யா ஐரோப்பா மீது அதிகாரம் செலுத்துவதை நிறுத்த விரும்புகிறது அமெரிக்கா. இதைத் தான் ஃப்ளிங்கன் “weaponizing heat” என்று குறிப்பிட்டார். இன்று வரை ஐரோப்பா குளிர் காலத்தில் தங்களை கதகதப்பாக வைத்துக் கொள்ள, ரஷ்யாவின் எரிவாயு தேவைப்படுகிறது. அதைப் பெரிய அளவில் சார்ந்து இருக்கிறது.

இத்தனை விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், உக்ரைன் இப்போதும் பெரிய அளவில், முழுவீச்சில் செயல்படாத, இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் நாடு. உக்ரைனில் ஒரு நாடு கால் தடத்தைப் பதிப்பது, அந்நாட்டுக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும். பொருளாதார செல்வ வளத்தையும், பாதுகாப்பு விவகாரங்களில் பூகோள ரீதியில் ஒரு முக்கியமான இடத்தைக் கொடுக்கும். அதர்காகத் தான் இந்தப் போர் தொடர்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வளர்ப்பு நாய்க்கு ₹2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?