ஒடேசா : உக்ரைனில் ரஷ்யா குறிவைக்கும் நகரம்!  Istock
உலகம்

ஒடேசா : உக்ரைனில் ரஷ்யா குறிவைக்கும் நகரம்! தொடரும் போர் - மினி தொடர் | பகுதி 2

Govind

ஒடேசாவில் மக்களிடையே போர் எதிர்ப்பு உணர்வு உச்சத்தில் உள்ளது. ஒடேசாவில் வாழும் ஆண்ட்ரியால் கூறுகிறார், “நாங்கள் பாசிசத்தை தோற்கடிக்க ரஷ்யர்களுடன் இணைந்து போராடினோம். இப்போது ரஷ்யர்கள் எங்கள் பேரக்குழந்தைகளைக் கொல்ல வருகிறார்கள்.”

ஒடேசாவில் உள்ள பெரும்பாலானோருக்கு ரஷ்யாவில் ஒரு உறவினர் இருக்கிறார். ஆனால் அவர்கள் எல்லா தொடர்புகளையும் துண்டித்து விட்டார்கள். ஒடேசாவில் வாழும் மக்களில் 90% பேர் ரஷ்ய மொழியைப் பேசுபவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களில் பாதிப்பேருக்கு உக்ரைன் மொழியிலும் பேச முடியும். இப்படி அவர்கள் ரஷ்ய மொழி பேசுவதால் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என ரஷ்யா நினைத்தது நடக்கவில்லை. மொழியில் வேறுபட்டாலும் நாங்கள் உக்ரைனியர்கள், சுதந்திரத்திற்காகப் போராடுகிறோம் என்கிறார்கள் மக்கள்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2014ஆம் ஆண்டில் ஒடேசா நகரம் பிளவுபட்டது. அப்போது ரஷ்ய ஆதரவாளர்களுக்கும் ஜனநாயக ஆதரவாளர்களுக்கும் இடையே ஆயுதங்களுடன் மோதல் நடந்தது. அதில் சிலர் கொல்லப்பட்டனர். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. அன்று ரஷ்யாவை ஆதரித்த மக்கள் கூட இன்று ரஷ்யா எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

போரின் தொடக்கத்திலிருந்த ஒரே கேள்வி என்னவென்றால் ரஷ்யா எப்படி ஒடேசாவை தாக்கும் என்பதே. கடலில் இருந்து தாக்குவார்களா? இல்லை பாராசூட்டிலிருந்து குதிக்கும் பறக்கும் படை மூலம் தரையிறங்குவார்களா? ஒடேசாவிற்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைகோலைவ் நகரத்திலேயே ரஷ்யப் படைகள் உக்ரைன் படைகளால் எதிர்க்கப்பட்டன. இதனால் ரஷ்யர்கள் திரும்பவும் கடலை நோக்கிப் பின்வாங்க நேர்ந்தது. ஒடேசா நகரம் தாக்கப்படாமல் தப்பித்தது.

மீண்டும் யூதர்கள் மீது அடக்குமுறை நடக்கிறதா?

ஒடேசா பகுதியில் உள்ள மோல்டோவேன்கா மாவட்டத்தில் யூதர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். 1905ஆம் ஆண்டில் காட்டுமிராண்டித்தனமான ரஷ்யர்களின் தாக்குதலால் நூற்றுக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இதை எழுத்தாளர் பேபல் தனது கதைகளில் விவரித்திருக்கிறார்.

ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் நாட்டை நாஜி சித்தாந்தத்திலிருந்து மீட்கப் போவதாகக் கூறியது உண்மையில் ஒடேசாவில் யூத இன நீக்கமாகத்தான் நடந்து வருகிறது.

எங்கள் தாத்தாக்கள் நாஜிக்களிடமிருந்து தப்பிக்க நியூரம்பெர்க்கை விட்டு பாலஸ்தீனத்திற்குச் சென்றனர். இப்போது எங்கள் குழந்தைகளை ரஷ்யாவிடமிருந்து காப்பாற்ற ஜெர்மனிக்குச் செல்கிறோம். இதை நம்ப முடிகிறதா என்று ஒடேசா யூதர்கள் கேட்கின்றனர். உண்மைதான் வரலாறு இப்போது தலைகீழாக நடக்கிறது.

கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000த்திற்கும் அதிகமான யூதர்கள் நகரத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ஜெர்மனி, ஆஸ்திரியா, ருமேனியா மற்றும் மால்டோவா நாடுகளுக்கு சென்றுள்ளனர். ஒடேசாவில் உள்ள நாஜிகளின் யூத இனப்படுகொலை அருங்காட்சியம் தற்போது மூடப்பட்டுள்ளது.

உக்ரைன் விடுதலை பெற்ற பிறகு ஒடேசா நகரம் யூதர்களுக்குப் பாதுகாப்பான நகரமாக இருந்தது. இப்போது அதிபர் புடின் தங்களை கொல்ல வருவதாக யூதர்கள் கருதுகிறார்கள். அதனால் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளில் அடைக்கலம் புகுந்திருக்கும் யூதர்கள் மீண்டும் நாடு திரும்புவார்களா என்பது சந்தேகமே. அதே நேரம் இன்னமும் கணிசமான யூதர்கள் ஒடேசா தான் தமது மண் என்று நகரை விட்டுப் போகாமல் போர் அபாய சங்கு ஒலித்தால் அறைகளில் தஞ்சம் அடைகிறார்கள்.

சோவியத் காலத்தில் ஒடேசா

ஒடேசா வட்டாரத்தில் இருக்கும் மைகோலைவ் நகரத்தில் உள்ள கருங்கடல் கப்பல் கட்டும் தளத்தில்தான் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் நீர்மூழ்கிக் கப்பல்களும், விமானந்தாங்கிக் கப்பல்களும் கட்டப்பட்டன. தற்போது அந்த சோவியத் கப்பல் கட்டுமானத் தளம் ஒரு கல்லறை போல மூடப்பட்டுள்ளது.

புடின் சோவியத் ஒன்றியத்தின் சரிவை 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புவிசார் அரசியல் பேரழிவு என்று அழைத்தார். ஆனால் சோவியத் சர்வாதிகாரத்திலிருந்து விடுதலையான பத்து கோடி மக்களுக்கு அது மிகப்பெரும் சுதந்திரமாக இருந்தது. சோவியத் கால இழப்பை மீட்க வேண்டும் என்பதே புடினின் நோக்கம். அதில் வெறியாகவும் இருக்கிறார். பண்டைய சோவியத் ஆட்சியைப் பலவந்தமாக மீட்டெடுக்கலாம் என்று அவர் மனப்பால் குடிக்கிறார்.

ஒடேசா பகுதியில் உள்ள நிலங்களில் கோதுமை, சோளம், பார்லி போன்றவை விளைகின்றன. இப்போது போரின் காரணமாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் கொண்டு செல்ல முடியாமல் தேங்கிப் போயுள்ளன.

ஜூலை மாதம் ரஷ்யாவோடு உக்ரைன் ஒப்பந்தம் ஒன்று போட்ட பிறகு ஒடேசா மற்றும் பிற துறைமுகங்களிலிருந்து சில கப்பல்களில் தானியங்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. ஆனால் அவை முழு வீச்சில் இன்னும் இயக்கவில்லை. இதனால் ஒடேசாவில் உள்ள விவசாய நிலங்களில் இருக்கும் தானியங்களை விற்பதற்கு நவம்பர் வரை ஆகலாம் என்று விவசாயிகள் கவலை கொண்டிருக்கின்றனர். போர் முடிவுக்கு வர இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இல்லையேல் முழு பேரழிவு ஏற்படும் என்று சில விவசாயிகள் கருதுகின்றனர்.

Russia

2014 ஆம் ஆண்டில் ரஷ்யா கிரிமியாவை ஆக்கிரமித்து இணைத்துக் கொண்டது. கிரிமியாவோடு நெருங்கிய தொடர்புள்ள ஒடேசா நகர மக்கள் பலருக்கும் இது உறவுகளைத் தொடர்வதில் பிரச்சினையை ஏற்படுத்தியது. கிரிமியாவில் உள்ள தமது உறவினர்களுக்குத் தபால் அட்டையையோ இல்லை பணத்தையோ கூட அனுப்ப முடியவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

இப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒடேசா நகரம் ரஷ்யத் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் ரஷ்யாவின் தாக்குதல் ஹிட்லர் காலத்து நாஜி ஜெர்மனியின் தாக்குதல் போல இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். அதனால்தான் ஒடேசா நகரக் குடிமக்கள் ரஷ்யப் படைகள் வந்தால் விரட்டி அடிப்பதற்குத் தயாராகவே உள்ளனர். பலரும் தன்னார்வ முறையில் உக்ரைன் படையில் சேர்ந்து தங்களாலான பணிகளை செய்து வருகின்றனர். இந்த அழகான நகரம் போரில் இருந்து தப்புமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?