டொனால்ட் டிரம்ப்: முன்னாள் அமெரிக்க அதிபர் கைது செய்யப்பட்டால் என்ன நடக்கும்?  ட்விட்டர்
உலகம்

டொனால்ட் டிரம்ப்: முன்னாள் அமெரிக்க அதிபர் கைது செய்யப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும்?

இந்த பிரச்னை பூதாகாரமாக வெடித்து சிதறிக் கொண்டிருந்த போது, பிரச்னையைச் சமாளிக்கும் நோக்கில், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு டிரம்பின் வழக்கறிஞர் மைக்கெல் கோஹென் 1.3 லட்சம் அமெரிக்க டாலரைக் கொடுத்து டேனியல்ஸின் வாயை அடைக்க முயன்றார். இது அமெரிக்க சட்டப்படி தவறல்ல.

NewsSense Editorial Team

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 2016ஆம் ஆண்டு நீலப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு 1.3 லட்சம் அமெரிக்க டாலர் பணம் கொடுத்த வழக்கில் இன்று (செவ்வாக்கிழமை) கைது செய்யப்படலாம் என அவரே கூறி இருந்தார்.

அமெரிக்க அதிபர் ஒருவர் குற்றவியல் வழக்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறை. இப்படிப்பட்ட சூழலில் தான் சில அடிப்படைக் கேள்விகள் எழுகின்றன. அதை எல்லாம் பார்ப்பதற்கு முன், டொனால்ட் டிரம்ப் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை என்ன என்பதைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

டிரம்ப் மீதான குற்றச்சாட்டு:

நீலப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், தனக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையே கடந்த 2006ஆம் ஆண்டு வாக்கில் உறவு இருந்ததாக 2016ஆம் ஆண்டு ஊடகங்களிடம் கூறினார்.

இந்த பிரச்னை பூதாகாரமாக வெடித்து சிதறிக் கொண்டிருந்த போது, பிரச்னையைச் சமாளிக்கும் நோக்கில், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு டிரம்பின் வழக்கறிஞர் மைக்கெல் கோஹென் 1.3 லட்சம் அமெரிக்க டாலரைக் கொடுத்து டேனியல்ஸின் வாயை அடைக்க முயன்றார். இது அமெரிக்க சட்டப்படி தவறல்ல.

இதை டொனால்ட் டிரம்ப் தன் கணக்கு வழக்கில் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தால் பிரச்னை இல்லை. மாறாக, அந்த 1.3 லட்சம் அமெரிக்க டாலரை வழக்கறிஞர் கட்டணமாகக் கணக்கில் காட்டினார். இதனால் இந்த விஷயம் மீண்டும் வேறு ஒரு வடிவத்தை எடுக்கத் தொடங்கியது.

இப்படி டொனால்ட் டிரம்ப் கணக்கு காட்டியிருப்பது, தன் வணிக நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை தவறாகக் காட்டுவதற்குச் சமம். சொல்லப் போனால் சட்டப்பட தவறு. நியூயார்க் நகரத்தில் இது ஒரு குற்றச் செயல்.

மேலும், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு டொனால்ட் டிரம்ப் தரப்பு பணம் கொடுத்த விஷயத்தை மறைக்க நினைப்பது, தேர்தல் சட்டத்தையும் மீறுவதாகப் பொருள் கொள்ளப்பட்டு குற்றம்சுமத்தப்படலாம்.

தனக்கு வாக்களிக்க இருக்கும் வேட்பாளரைக் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பது இதன் நோக்கமாக குறிப்பிடலாம். இதை எல்லாம் விட மோசமான விஷயம் என்னவென்றால், ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு, தவறான பதிவுகளைக் கொடுப்பது மிகப் பெரிய மற்றும் தீவிரமான குற்றமாக அமெரிக்காவில் கருதப்படும்.

டொனால்ட் டிரம்ப் வழக்கு:

டொனால்ட் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுப்பது நியூ யார்க் நகர அட்டர்னி ஜெர்னரல் ஆல்வின் ப்ராக்கின் கையில் தான் இருக்கிறது. அவர் தான் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அளவுக்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதை விசாரிக்க குழு அமைத்தார். அவர் ஒருவரால் மட்டும் தான் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படுமா? ஆம் என்றால் எப்போது தொடுக்கப்படும் என்கிற பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்.

கடந்த வாரம், ஜூரி விசாரணைக் குழுவிற்கு முன் ஆஜராக டிரம்புக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக, டிரம்பின் வழக்கறிஞர் கூறி இருந்தார். இது ஜூரி விசாரணைக் குழு தன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதையே குறிக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு தான் டிரம்பின் இன்னாள் சட்ட ஆலோசகர் மைக்கெல் கோஹென் மற்றும் முன்னாள் சட்ட ஆலோசகர் ராபட் காஸ்டெல்லோ தங்கள் தரப்பு பிரமாணங்களை முன்வைத்தனர். சரி இந்த கதைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கேள்விகளுக்கு வருவோம்.

ஈராக் மீது 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா போர் தொடுத்தது ஏன்? - ஒரு வரலாற்று பயணம்

டிரம்ப் கைது செய்யப்பட்டால் என்ன ஆகும்?

டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டால், சில நடைமுறைகள் பின்பற்றப்படும். முதலில் டிரம்ப் ஃப்ளோரிடாவில் இருக்கும் மர்-அ-லாகோ வீட்டில் இருந்து நியூ யார்க் நகர நீதிமன்றத்துக்கு வர வேண்டும். அதன் பின் கைரேகைகள் எடுக்கப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்படும்.

முறையாக வழக்கு பதியப்பட்டு, நீதிபதி தேர்வு செய்யப்பட்ட பின், மற்ற விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். அதன் பிறகு தான் எப்போது விசாரணை நடக்கும், என்ன மாதிரியான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், ஜாமீன் வாங்குவதற்கு என்ன விஷயங்கள் எல்லாம் தேவை போன்ற விஷயங்கள் தெரிய வரும்.

அமெரிக்காவைப் பொருத்த வரை இன்னாள் மற்றும் முன்னாள் அதிபர்கள் அனைவரும் ரகசிய பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் டொனால்ட் டிரம்புக்கும் ரகசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

எனவே, டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அப்படையினரும் சில திட்டங்களை வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

டொனால்ட் டிரம்ப் தவறான நடத்தையின் கீழ் தண்டிக்கப்பட்டால் வெறும் அபராதத்தோடு தப்பிக்கலாம், ஒருவேளை Felony என்றழைக்கப்படும் குற்றத்தின் கீழ் குற்றம் உறுதி செய்யப்பட்டால், அதிகபட்சமாக 4 ஆண்டு காலம் சிறை தண்டணை விதிக்கப்படலாம்.

Silicon Valley Bank: அமெரிக்காவின் முன்னணி வங்கி மூடு விழா கண்டது எப்படி? Explained

போராட்டங்கள் ஏதாவது நடக்குமா?

டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. டிரம்பும் தொடர்ந்து பெரிய அளவில் போராட்டங்களை நடத்த தன் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன் பேசியது போலவே, இப்போதும் பேசி இருக்கிறார் என பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே டொனால்ட் டிரம்ப் வழக்கு தொடர்பாக கலவரங்கள் கூட ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதிகார வட்டத்திலிருந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்தது போல ஒரு ஒருங்கிணைந்து நிர்வகிக்கப்பட்ட பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறுவதற்கான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதிபர் தேர்தலுக்கு போட்டி இடலாமா?

ஒரு நபர் குற்றவியல் வழக்கில் குற்றவாளி (criminal conviction) என்று அறிவிக்கப்பட்டால் கூட, அவர் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் ஒருவேளை டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டால், அது அவரது அதிபர் பிரச்சாரத்தை சிக்கலாக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

இனி டொனால்ட் டிரம்ப் என்ன ஆவார்? சிறை செல்வாரா? தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமா? ஒருவேளை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் அவர் அதிபர் தேர்தலில் நிற்பாரா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?