உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக சீனா உருவெடுத்திருப்பதும், சீனாவில் ஏதேனும் பிரச்னை என்றால் அதனால் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தின் விநியோக சங்கிலிகள் பாதிக்கப்படுவதையும் கடந்த சில ஆண்டுகளாக நாம் பல செய்திகளில் பார்க்க முடிந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே சீனா தொடர்பான பிரச்னைகள் சர்வதேச அரங்கில் முக்கிய இடம் பிடித்து வருகின்றன.
உதாரணத்துக்கு அமெரிக்க சீன வர்த்தகப் போர், கொரோனா வைரஸ் வூஹானில் இருந்து தான் பரவியது என்கிற கருத்து, பெல்ட் & ரோட் திட்டம், இந்தியா சீனா எல்லைப் பதற்றம் என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஆனால் ஒரே ஒரு பிரச்னை குறித்து சீனா பேசும் போதெல்லாம் அமெரிக்கா தன் கருத்தைக் கூறி உலகத்தையே பதறச் செய்கிறது. அந்தப் பிரச்னையின் பெயர் "சீனா - தைவான்" பிரச்னை.
கடந்த 24 மணி நேரத்திற்குள் சீன ராணுவம் தைவான் நாட்டை நோக்கி சுமார் 71 விமானங்கள் மற்றும் கப்பல்களை அனுப்பி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் தைவான் நாட்டுக்கு தன் ஆதரவை வழங்கியது அமெரிக்கா.
அதோடு தைவான் மீது சீனா ஏதேனும் தாக்குதல் நடத்தினால் அதற்கு சீனா மிகக்கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்ததும் இங்கு நினைவுகூறத்தக்கது.
சீனா & தைவான் நாட்டுக்கு இடையிலான பிரச்னைதான் என்ன?
தைவான் தன்னிடமிருந்து பிரிந்து போன ஒரு மாகாணம், எனவே அது சீனாவின் ஒரு பகுதியே என்கிறது "பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஆஃப் சைனா" என்கிற சீன அரசாங்கம்.
ஆனால் தைவானில் உள்ள மக்களோ, தாங்கள் சீனாவின் ஒரு பகுதி அல்ல, தங்களை தாங்களே ஆட்சி செய்து கொள்பவர்கள் என்று கருதுகிறார்கள். அதிகாரப்பூர்வமாக சுதந்திரத்தை அறிவித்துக் கொள்ளவில்லை என்றாலும் தைவான் சீனாவின் ஒரு பகுதி அல்ல என்று கருதுகிறார்கள்.
இன்று தைவன் என்று அழைக்கப்படும் நிலப்பகுதியில் ஒரு காலத்தில் இன்றைய தெற்கு சீன பகுதியைச் சேர்ந்த ஆஸ்ட்ரோநேஷியன் (Austronesian) என்கிற மலைவாழ் மக்கள் குடியேறி வாழ்ந்து வந்தனர் என்கிறது பிபிசி வலைதளம்.
கிபி 239ஆம் ஆண்டிலேயே சீனர்களின் பதிவுகளில் தைவான் தீவு குறித்த விஷயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சீன சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர்கள், பல தேசங்களை புதிதாக கண்டுபிடிக்க ஒரு படையை அமைத்து அனுப்பிய போது தைவான் நிலப்பரப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தைவான், சீனாவின் ஒரு பகுதியே என்று கூறுவதற்கு சீனா இந்த ஆதாரங்களை வாதங்களாக முன்வைக்கிறது.
1624 முதல் 1661 ஆம் ஆண்டு வரை தைவான் நிலப்பகுதி டச்சக்காரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன்பின் 1683 ஆம் ஆண்டு முதல் 1895 ஆம் ஆண்டு வரை தைவான் நிலப்பகுதியை சீனாவின் குவிங் ராஜவம்சத்தினர் ஆட்சி செய்தனர்.
17ஆம் நூற்றாண்டில் பல்வேறு காரணங்களால் சீனாவில் வாழ்ந்து வந்த ஹோக்லோ சைனீஸ் (Hoklo Chinese) என்று அழைக்கப்படும் ஃபுஜியன் மாகாணத்தை சேர்ந்த சீனர்கள், தைவான் நிலப்பகுதியில் மிகப்பெரிய அளவில் குடியேறினர்.
1895 ஆம் ஆண்டு முதல் சீனோ ஜப்பானிய போரில் ஜப்பான் வென்றது. குயிங் ராஜவம்சத்தினர், தங்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த தைவான் நிலப்பகுதியை ஜப்பானுக்கு விட்டு கொடுத்தனர்.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் சரணடைந்ததை நாம் பல செய்திகளில் படித்திருப்போம். அப்போது வெற்றி பெற்ற தரப்பில் சீனாவும் ஒரு நாடாக இருந்தது. ஜப்பான் சரணடைந்ததால் அவர்கள் போரில் வென்ற பல பகுதிகள், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. ஜப்பானின் ஆளுகையின் கீழ் இருந்த தைவான் நிலப்பரப்பு மீண்டும் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
அடுத்த சில ஆண்டுகளிலேயே சீனாவில் மிகப்பெரிய உள்நாட்டுப் போர் வெடித்தது. அப்போது சீனாவை Kuomintang என்றழைக்கப்பட்ட பரம்பரையினர் ஆட்சி செய்து வந்தனர். அந்தப் பரம்பரையைச் சேர்ந்த சியாங் கை ஷெக் (Chiang Kai-shek) துருப்புகள் மா-சேதுங்கின் கம்யூனிஸ்ட் ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டனர்.
அப்போது சியாங் தலைமையிலான அரசு மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் என சுமார் 15 லட்சம் பேர் 1949 ஆம் ஆண்டு தைவான் நாட்டில் குடிபெயர்ந்தனர்.
இந்தக் குழு தங்களை மையநில சீனர்கள் (mainland chinese) என்று அழைத்துக் கொண்டனர். அப்போதே தைவான் நாட்டில் வாழ்ந்து வந்த 14 சதவீதத்திற்கும் குறைவான இந்த மையநில சீனர்கள் தான், தைவான் நாட்டின் அரசியலை பல தசாப்தங்களுக்கு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
சீனாவில் இருந்து தப்பி வந்த சியாங், தைவான் நாட்டில் தனக்கென ஒரு தனி சீன அரசாங்கத்தை நிறுவி சுமார் 25 ஆண்டுகளுக்கு நடத்தினார். அதன் பெயர் "ரிபப்ளிக் ஆஃப் சீனா" (ROC).
அதே 1949ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி மையநில சீனாவில் "பிப்பிள் ரிபப்ளிக் ஆஃப் சீனா" (PRC) என்கிற அரசு நிறுவப்பட்டது.
சீயாங் கை ஷெக் காலமான பிறகு அவருடைய மகன் சீயான் சிங் குவோ (Chiang Ching-kuo) நிறைய ஜனநாயக ரீதியிலான மாற்றங்களை அனுமதித்தார். இருப்பினும் தைவான் நாட்டைச் சேர்ந்த மக்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய அதிருப்தி இருந்தது. மறுபக்கம் தைவான் நாட்டிலேயே வலு பெற்று வந்த ஜனநாயக இயக்கங்கள் காரணமாக அரசியல் ரீதியிலான அழுத்தமும் மிகக் கடுமையாக இருந்தது.
அவருக்குப்பின் தைவனின் அதிபர் பொறுப்புக்கு வந்த லீ டெங் (Lee Teng-hui) பல்வேறு அரசியலமைப்புச் சட்ட மாற்றங்களுக்கு வழி வகுத்தார். அதன் விளைவாக 2000ஆம் ஆண்டு கே எம் டியைச் சேராத ஒரு புது அதிபர் உருவாக காரணமாக அமைந்தது.
தைவான் என்றால் என்ன என்பதிலேயே பல முரண்பாடுகளும் குழப்பங்களும் நிலவி வருகின்றன. தைவான் தனக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், சுமார் மூன்று லட்சம் பேரைக் கொண்ட பாதுகாப்பு படை பிரிவுகள் என எல்லாம் இருக்கிறது.
நம் முன்பே கூறியது போல 1949 ஆம் ஆண்டு சீயானங் கை ஷெக் தைவானுக்கு வந்து ஆர் ஓ சி அரசாங்கத்தை உருவாக்கிய போது, அந்த அரசாங்கத்தையே ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல அமைப்புகளும் அங்கீகரித்தன. பல மேற்கத்திய நாடுகளும் ஆர் ஓ சி அரசை மட்டுமே சீன அரசாங்கமாக அங்கீகரித்தது.
ஆனால் 1970களின் தொடக்கத்திலேயே, தாய்ப்பே அரசு, சீன மைய நிலப்பகுதியில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு பிரதிநிதியாக இருக்க முடியாது என பல நாடுகள் வாதிடத் துவங்கின.
1971ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பீஜிங் நகரத்தில் உள்ள அரசையே சீன அரசாக அங்கீகரித்தது. ரிபப்ளிக் ஆப் சைனா (ஆர் ஓ சி) என்கிற பெயரில் தைவன் பகுதியில் இயங்கி வந்த அரசாங்கத்தை வெளியேற்றியது.
1978 ஆம் ஆண்டு வாக்கில் சீனா தன் பொருளாதாரத்தை மெல்ல மேற்கத்திய நாடுகளுக்கும், உலக பொருளாதாரத்துக்கும் திறந்துவிடத் தொடங்கி இருந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தன் நாட்டு பொருளாதாரத்தையும் முன்னேற்ற அமெரிக்கா 1979ஆம் ஆண்டு பிஜிங்கில் செயல்பட்டு வந்த அரசை சீன அரசாக அங்கீகரித்து அதனோடு ஒரு ராஜ்ஜிய உறவையும் ஏற்படுத்திக் கொண்டது.
இது போன்ற அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களினால் தைவான் பகுதியில் நிறுவப்பட்டு செயல்பாட்டில் இருந்த ரிபப்ளிக் ஆப் சைனா என்கிற அரசை உலக அளவில் வெறும் 15 நாடுகள் மட்டுமே ஆதரித்தன.
தற்போது ஒரு தனி நாடு என்கிற நிலைக்கு தேவையான எல்லா விஷயங்களும் தைவானில் இருந்தும், தைவானின் அரசியல் அமைப்புகள் சீனாவிடமிருந்து பெரிய அளவில் மாறுபட்டு இருக்கும் போதும், சட்ட ரீதியில் தைவானின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
1980களில் சீனா மற்றும் தைவான் இடையிலான உறவு மேம்பட தொடங்கியது. சீனாவில் இருந்து வந்து செல்வது மற்றும் சீனாவில் தைவான் முதலீடுகளை மேற்கொள்ளும் விதிகள் எல்லாம் தளர்த்தப்பட்டன. 1991ஆம் ஆண்டு பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஆப் சீனா அரசாங்கத்துடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக, தைவானின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கே எம் டி அமைப்பு அறிவித்தது.
அப்போதுதான் சீனா "ஒரு நாடு, இரு முறை" (one country, two systems) திட்டத்தை முன்மொழிந்தது. இந்தத் திட்டத்தை தைவான் ஏற்றுக் கொண்டால் கணிசமான தன்னாட்சி அதிகாரத்துடன் சீனாவின் கீழ் இருக்க தைவான் அனுமதிக்கப்படும் என்று கூறியது.
தைவான் அதை முழுமையாக புறக்கணித்தது. 2000ஆம் ஆண்டு வாக்கில் சென் சுய் பியன் (Chen Shui-bian) என்கிற கே எம் டி-யைச் சேராத நபர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெமாக்ரடிக் ப்ராக்ரசிவ் பார்ட்டி என்கிற கட்சி அதிகாரத்திற்கு வந்தது. அவர்கள் தைவானின் சுதந்திரத்திற்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்தனர்.
2004 ஆம் ஆண்டு, மீண்டும் அதே சென் சுய் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதுதான் சீன அரசு பிரிவினைவாதத்திற்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்தது. பிரிவினை குறித்து தைவான் பேசினால் "நான் பீஸ்ஃபுல் மீன்ஸ்" என்கிற அமைதியற்ற வழிமுறைகளையும் சீனா கையில் எடுக்கும் என உலகுக்கு உரக்கச் சொன்னது.
2008 ஆம் ஆண்டு கே எம் டி-யின் Ma Ying-jeou அதிகாரத்திற்கு வந்தார். சில பொருளாதார ஒப்பந்தங்கள் மூலம் சூழலை சரி செய்ய முயற்சித்தார். பெரிய பலன் ஏதும் கிடைக்கவில்லை.
தற்போது தைவனின் அதிபராக இருக்கும் சய் இங் வென் (Tsai Ing-wen) 2016 ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்றார். அவர்தான் தற்போது டெமாக்ரடிக் ப்ராக்ரசிவ் பார்ட்டி கட்சியை வழிநடத்தி வருகிறார்.
தைவான், சீனாவின் ஒரு பகுதியாக சர்வதேச நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு சீனா வலியுறுத்தியது அழுத்தம் கொடுத்தது. அப்படிச் செய்யவில்லை என்றால் சீனாவில் தங்களுடைய வியாபாரத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மிரட்டவும் செய்தது சீனா.
2020 ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவில் 82 லட்சம் வாக்குகளோடு வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பொறுப்பேற்றார் சய் இங் வென்.
தைவான் மற்றும் சீனாவுக்கு இடையில் அரசியல் ரீதியாக பெரிய முன்னேற்றங்கள் இல்லை என்றாலும், பொருளாதார ரீதியில் இருவருக்கும் இடையில் மிக நெருங்கிய உறவு இருக்கிறது.
1991 முதல் 2021 மே வரையிலான காலகட்டத்தில், சீனாவில், தைவான் மேற்கொண்டு இருக்கும் மொத்த முதலீடு சுமார் 193.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் என்கிறது தைவான் தரப்பு.
தற்போது தைவானின் பொருளாதாரத்தில் கணிசமான பகுதி சீனாவை நம்பி இருப்பதாக சில தைவான் மக்கள் வருத்தப்படுகிறார்கள். மற்றொரு தரப்பினரோ, சீனா மற்றும் தைவானுக்கு இடையில் நெருக்கமான பொருளாதார உறவு இருப்பதால்தான், சீனா காட்டுமிராண்டித்தனமாக தன்னுடைய ராணுவ நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடவில்லை என்று கூறுகிறார்கள்.
2014 ஆம் ஆண்டு ஒரு சர்ச்சைக்குரிய வர்த்தக ஒப்பந்தத்தினால் 'சன் ஃபிளவர் மூவ்மெண்ட்' என்கிற இயக்கம் உருவானது. மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு தங்கள் போராட்டத்தை பறைசாற்றினர்.
தைவான் மீது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும் தங்கள் முழக்கங்களில் வெளிப்படுத்தினர்.
டெமாக்ரடிக் ப்ராக்ரசிவ் கட்சி சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்கு தன் ஆதரவை தெரிவித்து வருகிறது. கே எம் டி அமைப்போ, தைவான், சீனாவோடு இணைக்க தன் ஆதரவை தெரிவித்து வருகிறது.
2022 ஜூன் மாதம், நேஷனல் செங்சீ பல்கலைக்கழகம் (National Chengchi University) மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றில், கணிசமான தைவான் மக்கள், தற்போது இருப்பது போலவே காலவரையறை இன்றி தொடர ஏதேனும் வழிவகை செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
5.2% தைவான் மக்களே சுதந்திரம் பெற வேண்டும் என்றும், 1.3% மக்களே சீனாவோடு இணைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளதாக கருத்துக்கணிப்பின் அறிக்கையில் சொல்கின்றன.
அமெரிக்கா "பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஆஃப் சீனா" அரசை சீன அரசாங்கமாக ஏற்றுக்கொண்டு, அதனோடு ராஜரிக ரீதியிலான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. அதே நேரம் ஒற்றை சீன கொள்கையையும் ஆதரித்தது என்றே கூறலாம்.
ஆனால் அதே அமெரிக்க அரசு, தைவான் மீது சீனா போர் தொடுத்தால் அமெரிக்காவின் ராணுவ ரீதியிலான தலையீடுகள் இருக்கும் என்றும் ஒரு கட்டத்தில் கூறியது.
சில மாதங்களுக்கு முன்பு கூட, சீனா தைவான் பிரச்னை பதற்றம் உச்சத்தில் இருந்தபோது, தைவான் நாட்டிற்கு அமெரிக்கா சார்பில் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும், ஏதேனும் தாக்குதலை மேற்கொண்டால் மிக மோசமான விளைவுகளை சீனா எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் அமெரிக்க தரப்பில் கூறப்பட்டது இங்கு மீண்டும் நினைவு கூறத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust