Pakistan News Sense
உலகம்

அடுத்த இலங்கை : திவாலாகும் நிலையில் பாகிஸ்தான் - என்ன நடக்கிறது அங்கே?

இலங்கையைப் போல பாகிஸ்தானும் திவாலாகும் நிலையில் இருப்பதாக பல்வேறு வலைத்தளங்களில் பல செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதன் உண்மை நிலை என்ன? ஏன் பாகிஸ்தானுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது? வாருங்கள் பார்ப்போம்.

Gautham

ஒருநாட்டின் பொருளாதாரம் என்பது அந்நாட்டின் அரசியலோடு பின்னிப் பிணைந்த ஒரு விஷயம்தான் என்பதற்கு வரலாறு நெடுக பல சான்றுகள் உள்ளன.

அரசின் ஒரு கொள்கை முடிவைக் கொண்டு, ஒட்டுமொத்த சர்வதேச தொழில் சமூகத்தை ஈர்க்கவும் முடியும், புறக்கணிக்கவும் முடியும். ஒரு சில கொள்கை முடிவுகள் அறிவிக்கும் போது சாதாரணமாகத் தெரியும், ஆனால் காலப் போக்கில் ஒட்டுமொத்த நாட்டையே தலைகீழாக மாற்றும்.

நம் கண் முன்னே தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கை, அதற்கு மிக சமீபத்தைய உதாரணம்.

இப்போது பாகிஸ்தானும் திவாலாகும் நிலையில் இருப்பதாக பல்வேறு வலைத்தளங்களில் பல செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதன் உண்மை நிலை என்ன? ஏன் பாகிஸ்தானுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது? வாருங்கள் பார்ப்போம்.

பாகிஸ்தானில் தற்போதைய நிலை:

பாகிஸ்தான் நாட்டின் கையில் இருக்கும் அந்நிய செலாவணி சுமார் 10 பில்லியன் டாலர் அளவு மட்டுமே எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல வரும் ஜூன் 2022 காலத்துக்குள் பாகிஸ்தான் அரசு சுமார் 4.8 பில்லியன் டாலர் கடனை சந்தையில் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அது போல வரும் 2022 டிசம்பர் 5ஆம் தேதி ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் பத்திரங்கள் வேறு முதிர்ச்சி அடைய உள்ளன. அதாவது அப்பத்திரங்களுக்கான வட்டி அசல் சேர்த்து பாகிஸ்தான் அரசு பணம் கொடுக்க வேண்டும்.

ஏழ்மை

ஏற்கனவே பாகிஸ்தான் அரசின் வருவாயை விடச் செலவு அதிகமாக உள்ளது. இதை ஆங்கிலத்தில் பட்ஜெட்டரி டெஃபிசிட் என்பர். இது சுமார் 5 ட்ரில்லியனைத் தொட உள்ளது.

பாகிஸ்தானின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (ஏற்றுமதி செய்யும் தொகையை விட இறக்குமதிக்குச் செலவழிக்கும் தொகை அதிகமாக இருக்கும் நிலை) வேறு 20 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

எனவே பாகிஸ்தானால் கடனை குறித்த நேரத்தில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் அவதி

முன்பு வாங்கிய கடன்களைத் திரும்பச் செலுத்துவது, மீண்டும் கடன் வாங்குவது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், பாகிஸ்தானில் மக்களின் அன்றாட தேவைக்குப் பயன்படுத்தும் உணவு, எரிபொருள் போன்ற பொருட்களைக் கூட பணம் செலுத்தி இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சில வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகிட்டத்தட்ட இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி நிலையை ஒத்து உள்ளது.

imran khan

ஏன் இந்த பிரச்சனை?

பாகிஸ்தான் கடந்த பல தசாப்தங்களாக தன்னை தொழில் ரீதியில் மேம்படுத்திக் கொள்ளவில்லை. வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் துணிந்து முதலீடு செய்யும் வகையில் தன் நாட்டில் ஒரு நிலையான கொள்கையையும், தீவிரவாத அச்சுறுதல் எழாத அளவுக்கு ஒரு பாதுகாப்பான முதலீட்டுச் சூழலையும் உருவாக்கத் தவறிவிட்டது பாகிஸ்தான்.

அமெரிக்கா, சீனா எனப் பல நாடுகள், அவ்வப்போது தங்கள் அரசியல் சூழல் மற்றும் பூகோள ரீதியிலான அரசியலைக் கருத்தில் கொண்டு எடுத்த பல முடிவுகளுக்கு தன் எதிர்காலத்தைக் குறித்து தொலைநோக்கோடு சிந்திக்காமல் உதவித் தொகை என்கிற பெயரில் பல்வேறு உதவிகளைப் பெற்றுக் கொண்டது பாகிஸ்தான் அரசு.

தற்போது உலகின் இரண்டாவது சக்தி வாய்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவே பாகிஸ்தானுக்கு நண்பனாக இருந்தும், அவர்களால் சீனாவிடமிருந்து போதிய அளவுக்கு உதவிகளைப் பெற முடியவில்லை. ஆனால் பாகிஸ்தானைச் சீனா பல வகையில் கனகச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டது.

இந்தியா போன்ற அண்டை நாடுகளுடனான பகையைக் கருத்தில் கொண்டு பல சக்தி வாய்ந்த ஏவுகணைகளை எல்லாம் உருவாக்கியது பாகிஸ்தான். ஆனால் தன் நாட்டில் என்ன மாதிரியான தொழில் வளங்கள் இருக்கின்றன, அதை எப்படி மேம்படுத்த வேண்டும் எனப் பாகிஸ்தான் கவனிக்கத் தவறியது.

ஷெபாஸ் ஷரீஃப்

பாகிஸ்தான் முன் உள்ள சவால்கள்

பல்வேறு அரசியல் குழப்பங்கள் மற்றும் நிலையற்றதன்மையைத் தாண்டி, தற்போது ஷெபாஸ் ஷரீஃப் என்பவர் பாகிஸ்தானின் பிரதமராகப் பதவியில் இருக்கிறார்.

மறுபக்கம் இம்ரான் கான், விரைவில் தேர்தல் அறிவிக்க வேண்டும், இல்லையெனில் மொத்த தேசத்தோடு தலைநகருக்குத் திரும்புவேன் என ஆர்பறித்துக் கொண்டிருக்கிறார். முதலில் இந்த அரசியல் கொந்தளிப்புகள் அடங்கி, யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

அதன் பின், நிலுவையில் இருக்கும் கடன் பிரச்சனைகளையும், சர்வதேசச் சந்தையில் பாகிஸ்தான் செலுத்த வேண்டிய கடன் தொகைகளையும் செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.

மக்களுக்குத் தேவையான உணவு, எரிபொருள் போன்ற விஷயங்கள் தடைப்பட்டால், அது ஆட்சிக்கு எதிரான கூக்குரலாக மாறி, அது ஒட்டுமொத்த அரசையும் ஸ்தம்பிக்கச் செய்துவிடும். எனவே அதுவும் தடைப்படாத வண்ணம் விநியோகம் சீர்படுத்தப்பட வேண்டும்.

இதன் பிறகு தான், நடப்புக் கணக்குப் பிரச்சனைகள், புதிய முதலீடுகள், அடுத்த ஐந்து ஆண்டுக் காலத்துக்குள் பொருளாதாரத்தை வளர்க்கும் முயற்சிகளைக் குறித்து ஆலோசிக்க முடியும்.

இந்த நெருக்கடியான நேரத்தில் பாகிஸ்தானை ஆட்சி செய்பவர்கள் இதை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்வார்களா? அல்லது பதவி தான் முக்கியம் என அரசியல்வாதிகள் மக்களைக் கைவிடுவார்களா? இலங்கை போல ஒரு நெருக்கடியான சூழல் பாகிஸ்தானில் உருவாகுமா? அப்படி உருவானால் பாகிஸ்தான் அரசால் அதை தாக்குப்பிடித்து நிற்க முடியுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?