குற்றம் செய்பவர்கள் திருந்தி வாழ்வதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை சிறை வாழ்க்கை. இந்த சிறையில் இருக்கும் கைதிகளின் வாழ்வு நிச்சயம் நம்முடையது போலானது அல்ல. பல கொடுமைகளையும் வலிகளையும் அவர்கள் தாங்க வேண்டியிருக்கும். குற்றம் செய்த ஒருவர் அல்லது குற்றவாளியாக வாழும் ஒருவரை திருத்த வேண்டும் என்றால் அதற்காக ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையை கையாளுகின்றனர். நம் சிறைகள் எப்படியிருக்கும் என்பதை விருமாண்டி, வட சென்னை போன்ற படங்களைப் பார்த்து தான் தெரிந்துகொண்டிருப்போம். நம் தலைவர்களின் சிறை வாழ்க்கை குறித்து புத்தகங்களில் படித்து தெரிந்து கொண்டிருப்போம். ஆனால் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது ஜப்பானிய சிறைகள்.
ஜப்பானில் உள்ள 74 சிறைகளில் சுமார் 70,000 கைதிகள் இருக்கின்றனர். இந்த சிறைக் கைதிகளை சமாளிக்கவும் திருத்தவும் ஜப்பான் காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இங்கு கைதிகள் மிகவும் வித்தியாசமான வாழ்வை வாழ்கின்றனர்.
இங்கிருக்கும் சிறைக்காவலர்கள் கையில் எந்த ஆயுதமும் இருக்காது. சில சிறைகளில் பெரிய சுவர்கள் கூட இல்லை. வெறும் மூங்கில் வேலி தான்.
ஜப்பானிய சிறைகளில் ஓரினச்சேர்கை பாலியல் வன்புணர்வு, சிறையிலிருந்து தப்பித்தல், சிறைக்குள் ஆயுதங்கள் வைத்திருத்தல், போதை பொருட்கள் புழக்கம் போன்ற குற்றங்கள் மிகக் குறைவு. நடப்பதே இல்லை எனலாம்.
கைதிகளுக்குள் சண்டைகள், கலவரங்களும் மிகக் குறைவு. இங்கு அதிகமான காவலர்கள் பணியில் இருப்பதால் வன்முறைகள் எளிதாக கட்டுப்படுத்தப்படுகின்றதன.
உதாரணமாக மேற்கு டோக்கியோவில் உள்ள ஃபுச்சு சிறைச்சாலையில், முக்கிய குற்றவாளிகளுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்படும். அங்கிருக்கும் 2300 கைதிகளைக் கவனித்துக்கொள்ள 500 காவலர்கள் உள்ளனர்.
இதில் 500 பேர் வெளிநாட்டு கைதிகள். இவர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
அவர்களுக்கு வெளிநாட்டு செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் கிடைக்கின்றன. தொலைக்காட்சி பார்க்கவும் நேரம் கிடைக்கிறது. இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு சிறப்பு உணவுகள் கிடைக்கும்.
தனிச்சிறை இல்லை எனில், ஒரு அறையில் இருக்கும் 6 கைதிகள் எப்போதும் ஒன்றாகவே இருக்க வேண்டும். அவர்கள் ஒன்றாகவே உண்ணவும் குளிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது ஜப்பான் முழுவதும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் 6 பேர் இருக்க வேண்டிய அறையில் 7 பேர் வரை தங்கவைக்கப்படுகின்றனர்.
தினமும் காலை 6:45 மணிக்குச் சிறை கைதிகள் எழுகின்றனர். அவர்களுக்குத் தினமும் 8 மணி நேரம் வேலைக் கொடுக்கப்படுகிறது. அதற்கிடையில் 40 நிமிடம் உணவு இடைவேளையும் காலை ஒரு முறை மாலை ஒரு முறை 10 நிமிடம் தேநீர் இடைவேளையும் உண்டு. தினசரி 2 மணி நேரம் அவர்கள் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.
அமெரிக்க சிறைச்சாலைகளை விட ஜப்பான் சிறைகள் மிக சுத்தமானவை மற்றும் வன்முறை அற்றவை என கூறப்படுகிறது.
சிறைவாசிகளுக்கு அரிசி சாதம், வறுத்த மீன், காய்கறிகள், மிசோ சூப், சாலட் அடங்கிய தரமான உணவு கொடுக்கப்படுகிறது.
வயதானவர்களுக்காக தனி சிறைச்சாலைகள் ஜப்பானில் இருக்கின்றன. அங்கு அவர்களின் உடல் நலம் கவனிக்கப்படுகிறது. இன்னும் அதிக ஊட்டச்சத்து மிக்க தரமான உணவு வழங்கப்படுகிறது. நல்ல படுக்கை, தொலைக்காட்சி, கழிவறை ஆகியவற்றைக் கொண்ட தனி அறை வழங்கப்படுகிறது.
பெரும்பாலான வயதான சிறைவாசிகள் சிறையை விட்டு வெளியில் செல்ல விரும்புவதில்லை. அப்படியே அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து வெளியில் வந்தாலும் திருட்டு போன்ற சாதாரண குற்றங்களில் ஈடுபட்டு மீண்டும் சிறைக்கு வருகின்றனர்.
சிறையில் இருந்து வெளியேறுபவர்களுக்கு செல்வதற்கு வேறு இடம் இல்லாததும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றது. அப்படியே புதிதாக வாழ்க்கையைத் தொடங்கினாலும் அவர்களுக்கு சிறை அனுபவம் மட்டுமே இருக்கும். சரி வயதானவர்களை விட்டுவிட்டு கடுமையான சிறைகளின் கதவை திறப்போம்.
தனிமை எனும் தண்டனையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது தான் ஜப்பான் கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. கைதிகள் விதிகளை மீறாத வரையிலும் எந்த குழப்பமும் இல்லாமல் தங்கள் வேலைகளை செய்ய முடியும். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் அளவு விதிகளை மீறும் போதும் சிறைக்குள் குற்றம் இழைக்கும் போதும் கொடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
The Shawshank Redemption படத்தில் குற்றம் செய்பவர்களை இருட்டு அறையில் அடைத்து வைப்பதைக் காட்சிபடுத்தியிருப்பர். அதை விட மோசமானது ஜப்பானின் தனிமைச் சிறை.
ஜப்பானில் முக்கிய கைதிகள் அல்லது சிறை விதிகளை மீறும் கைதிகளுக்கு தனிமைச் சிறைதான். இந்தக் கைதிகள் யாருடனும் பேச அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்கள் அறையைவிட்டு வெளியில் செல்லும் போது சக கைதிகளின் கண்களைக் கூட பார்க்க கூடாது. வெளியில் நடக்க வேண்டியிருந்தால் அணிவகுப்பில் நடப்பது போன்று தான் நடக்க வைக்கப்படுவார்கள்.
எந்த உடல் செயல்பாடுகளும், தொலைக்காட்சி, செய்திதாள் போன்ற பொழுது போக்கும் இல்லாமல் வெற்றுமனதுடன், சிந்திப்பதற்கு எந்த காரியமும் இல்லாமல் தனி அறையில் அடைக்கப்படுகின்றனர்.
அந்த அறையிலும் மண்டியிட்டபடியோ வேறு முறையிலோ ஒரே மாதிரியாக அமர வைக்கப்படுகிறார்கள். அவர்கள் நாள் முழுவதும் கருப்பு வெள்ளை சுவற்றை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு குறைந்தது 8 மணி நேரம் இப்படி அமருகிறார்கள். இது அவர்கள் செய்த குற்றத்தைப் பொருத்து 2 மாதம் வரையிலும் கூட தொடரும்.
1999 ஆம் ஆண்டு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கையில் இந்த தகவல்கள் வந்த போது மனித உரிமை இயக்கங்களிடம் இருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு கைதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில், “கைதிகள் ஒரே மாதிரியாக வேலை செய்யவும், சாப்பிடவும் அறிவுறுத்தப்பட்டார்கள். இடப்பக்கம், வலப்பக்கம் திரும்பிப் பார்ப்பதே குற்றமாக கருதப்பட்டது. தூங்கும் போது கூட ஒரே மாதிரியாக தான் தூங்க வேண்டும், புறண்டு படுக்க முடியாது.” எனக் கூறியிருந்தார்.
காவலர்கள் கையில் ஆயுதம் கூட இருக்காது என முன்னர் கூறியிருந்தேனே? அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, ஒரு கைதி காவலர் ஒருவரிடம் கடுமையாக பேசியதற்காக தனிமைச் சிறையில் உலோக விலங்குகளால் கட்டப்பட்டு தோல் பெல்ட்டால் அடிக்கப்பட்டார். தோல் பெல்ட் கொண்டு அடிப்பது தற்போது தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் தனிமைச் சிறை இன்றும் தொடர்கிறது. ஒரு காவலரை முறைத்தால் கூட அவ்வளவு தான்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஜப்பானில் கஞ்சா விற்றதுக்காக கைது செய்யப்பட்டார். தனது சிறை வாழ்க்கை குறித்து அவர் கூரும் போது, “நான் ஒரு முறை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னை கட்டிவைத்து விலங்கிட்டு, பெல்டால் அடித்தனர். இந்த கொடூர தண்டனைகள் எனக்கு கொடுக்கப்பட்டது, நான் சாப்பிடும் போது நிமிறக் கூடாது என்ற விதியை மீறியதனால்... தனிமைச் சிறையில் என் கைகளைக் கட்டி என்னை கிண்ணத்தில் இருக்கும் உணவை குனிந்து சாப்பிட கட்டாயப்படுத்தினர்.” எனக் கூறியிருக்கிறார்.
சிறைக் கைதிகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பொம்மை செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். வேலை செய்யும் போதும் அவர்கள் குனிந்தே இருக்கின்றனர். நிமிர்வதில்லை, மற்ற கைதிகளுடன் ஒரு வார்த்தை பேசுவதில்லை, கண் தொடர்பு கூட கிடையாது.
அமெரிக்க சிறைகளில் வன்முறை, புதிய கைதிகள் மேல் சக கைதிகளால் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை, கொலை, கேங்க் வார், போதை மருந்து எல்லாமே உண்டு. விரும்பிய படி ஜெயிலில் வாழ சுதந்திரமும் உண்டு. ஆனால் ஜப்பானில் சிறை வாழ்க்கை என்பது துளியும் சுதந்திரமற்ற நரக வாழ்க்கை. இதன் மூலம் தான் குற்றவாளிகளை திருத்த முடியுமென நம்புகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust