ரஷ்யா எடுத்த ஒற்றை முடிவு குளிரில் தவிக்கப் போகும் ஐரோப்பா  Pexels
உலகம்

Nord Stream : ரஷ்யா எடுத்த ஒற்றை முடிவு குளிரில் தவிக்கப் போகும் ஐரோப்பா - என்ன நடக்கிறது?

NewsSense Editorial Team

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிக் கட்டுமா என ஊர்ப்புறத்தில் இன்னும் சொடக்குப் போட்டு பேசுவோர் இருக்கிறார்கள். உக்ரைனும் ரஷ்யாவும் நடத்தும் போரால், அவற்றுக்கு சம்பந்தமில்லாமல் மற்ற ஐரோப்பிய நாடுகளின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கும் அளவுக்கு நெருக்கடி சூழல் ஏற்பட்டிருக்கிறது. காரணம், முதலாம் நோர்டு எரிவாயுக் குழாய்ப் பாதை!

கடந்த சில வாரங்களாகவே ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பிரச்னை தீவிரமாகிவிட்டது. நோர்டு எரிவாயுத் தடத்தை முன்வைத்து உருவான இந்த விவகாரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் பல முறை கலந்துரையாடல்களை நடத்திவிட்டது.

குளிர்காலத்துக்காக எரிவாயு

கடந்த செவ்வாயன்று நடத்தப்பட்ட கூட்டத்தில், வரப்போகும் குளிர்காலத்துக்காக எரிவாயுவைச் சேமித்து வைக்க வேண்டும்; இதற்கான அவசரக்கால திட்டத்தை உறுப்பு நாடுகள் அறிவிக்க வேண்டும் என ஒன்றியத்தின் எரிசக்திக் கொள்கை தலைவர் கத்ரி சிம்சன் கேட்டுக்கொண்டார். 20 சதவீதம் எரிவாயுப் பயன்பாட்டை உறுப்பு நாடுகள் குறைத்துக்கொள்ள வேண்டும் என எரிவாயுக் குழாய்த் திட்ட நிறுவனமான கேஸ்ப்ரம் அறிவித்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அவர் சாடினார்.

பொதுவாக, ஐரோப்பியக் குளிரில் கட்டடங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்வது அவசியம்; அதற்கான மின்சாரத்துக்கு எரிவாயு முக்கியம். குளிர்காலத்தில் தேவை கூடுதல் எனும் நிலையில், அடுத்துவரக்கூடிய மாதங்களுக்கான தேவைக்காக, இப்போதே எரிவாயுவை சேமித்துவைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஐ. ஒன்றிய நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.

நோர்டு 1 எரிவாயுப் பாதை

பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய அரசாங்கத்தின் விளையாட்டுதான் பிரச்னை என்கின்றன. இதைப் புரிந்துகொள்ள சற்று பின்னோக்கிப் பார்க்கவேண்டும்.

சர்ச்சைக்குரிய இந்த நோர்டு 1 எரிவாயுப் பாதை என்பது ரஷ்யாவிலிருந்து மேற்கு ஐரோப்பாவுக்கு பால்டிக் கடல் வழியாக கடலுக்கு அடியில் எரிவாயுவை எடுத்துச்செல்லும் ஒரு வழித்திடத் திட்டம். பின்லாந்தையொட்டி ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியான வைபார்க்கிலிருந்து ஜெர்மன் நாட்டின் வடகிழக்குப் பகுதியான கிரீப்ஸ்வால்டுக்கு இந்த எரிவாயுத் தடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ஏன் விவகாரமானது நோர்டு எரிவாயுப் பாதை 1?

  • முதலாம் நோர்டு எரிவாயுப் பாதை நிறுவனத்தை கேஸ்ப்ரம் நிறுவனம் பேரளவில் கட்டுப்படுத்துகிறது. இந்த நிறுவனம் முழுக்க ரஷ்ய அரசின் சார்பு நிறுவனம் ஆகும்.

  • ஐரோப்பிய ஒன்றியமே ரஷ்யாவின் எரிவாயுவையே பெருமளவில் நம்பியுள்ளது. கடந்த ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இயற்கை எரிவாயுவில் ரஷ்யா மட்டும் 40 சதவீதத்தை வழங்கியுள்ளது.

  • அது இந்த ஆண்டில் சற்று குறைந்து வருகிறது; இதன் காரணமாக எரிசக்தியை ஆதாரமாகக் கொண்ட தொழில்கள் இக்கட்டில் மாட்டிக்கொண்டுள்ளன; கூடவே, உற்பத்திப் பொருட்களின் விலையும் மேலும் மேலும் உயர்ந்துவருகிறது.

  • எரிவாயுத் தடத்தில் செய்யப்பட வேண்டிய பராமரிப்புப் பணியே காரணம் என கேஸ்ப்ரம் நிறுவனம் கூறுகிறது. கடந்த பிப்ரவரி முதல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை உண்டாகி, அதில் இந்த விவகாரமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுவரை என்ன நடந்திருக்கிறது?

கடந்த மாதம் நோர்டு முதல் தடத்தில் 40 சதவீதம் வரை எரிவாயு வழங்கலை நிறுத்தி வைத்தது. காரணம், பழுது சரிசெய்யப்பட்டு கனடா நாட்டிலிருந்து வரவேண்டிய டர்பைன் ஒன்று இன்னும் வந்துசேரவில்லை என்கிறது ரஷ்யத் தரப்பு. ஆனால் இதை முற்றாக நிராகரிக்கும் ஜெர்மனி அரசோ, தொழில்நுட்பக் காரணம் சொல்வதற்கான நியாயமே இல்லை என்கிறது.

அதன்பிறகும் 10 நாள்களுக்கு மொத்த எரிவாயுப் பாதை இயக்கத்தையே நிறுத்திவைத்தனர். வருடாந்திரப் பராமரிப்பு எனக் கூறி, கடந்த 21ஆம் தேதி அன்றுதான் வழக்கமான விநியோகத்தையே ஆரம்பித்தது. ஆனாலும் அதே 40 சதவீதம் என்கிற அளவில்தான்!

கடந்த திங்கள்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட கேஸ்ப்ரம் நிறுவனம், நோர்டு முதல் எரிவாயுப் பாதையில் எந்திரம் ஒன்றின் நுட்பமான சிக்கலால், கடைசி இரண்டு டர்பைன்களின் இயக்கத்தையும் நிறுத்துவதாகத் தெரிவித்தது.

அதையடுத்து, ஜூலை 27 அதாவது இன்று முதல் ஐரோப்பாவுக்கான எரிவாயு வழங்கலில் மொத்த அளவில் 20 சதவீதத்தைக் குறைக்கப்போவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்திக் கொள்கை தலைவர் கத்ரி அம்மையாரோ, தொழில்ரீதியான காரணம் எதுவும் இதில் இல்லை என்றுதான் எங்களுக்குப் படுகிறது என்றதுடன், ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒன்றியம் பதிலடி தரும்வகையில், எரிவாயு நுகர்வைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் என்ன அரசியல் இருக்கிறது?

  • ரஷ்யத் தரப்பில் கிரெம்ளின் மாளிகை செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் திங்களன்று ஊடகத்தினரிடம் விளக்கம் அளித்தார். அப்போது, ”ஐரோப்பாவுக்கு வழங்கும் முழு எரிவாயுவையும் நிறுத்த நாங்கள் விரும்பவில்லை; ஐரோப்பிய ஒன்றியமானது இடைவிடாமல் தன்னுடைய தடைகளையும் கட்டுப்பாடுகளையும் ரஷ்யா மீது விதிக்குமானால் நிலைமை மேலும் மாற்றமடையும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

  • ரஷ்யா அதிபர் விளாதிமின் புதினும் இதே தொனியில் பேசியுள்ளார். அண்மைய எரிவாயுக் குறைப்பு, மேற்கு மீதான எச்சரிக்கை என்பதாக உணர்த்த முற்பட்டார். ரஷ்யா மீதான மேற்குலகின் தடைகள் தொடர்ந்தால், உலகம் முழுவதும் எரிசக்திக்கான செலவும் கட்டணமும் நினைத்துப்பார்க்க முடியாதபடி அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு என்றார்.

  • இது ஐரோப்பா மீது எரிவாயுவைக் கொண்டு ரஷ்யா நடத்தும் போர் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உசுப்பிவிட்டதுடன், ரஷ்யா மீதான தடைகளை இன்னும் தீவிரமாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

  • ஜெர்மனியின் பொருளாதார அமைச்சகமோ, எரிவாயுக் குறைப்பில் எந்தவகையிலும் தொழில்நுட்பக் காரணமும் இல்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளது. டிபிஏ செய்தி முகமைக்கு ஜெர்மனி பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபக் அளித்த பேட்டியில், புதின் நம்பிக்கைத்துரோக விளையாட்டு ஆடுகிறார் எனச் சாடியுள்ளார்.

அடுத்து என்ன நடக்கும்?

  • கனடாவிலிருந்து இன்னும் டர்பைன் வந்துசேரவில்லை; அது வந்துசேர்ந்ததும் ஆக விரைவில் அதைப் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார், ரஷ்ய அதிகாரி திமித்ரி பெஸ்கோவ்.

  • என்னதான் மீண்டும் மீண்டும் உறுதிமொழிகளை ரஷ்யா வழங்கினாலும், வரும் குளிர்காலத்துக்கான எரிவாயுவில் ரஷ்யா குறைக்க வாய்ப்புண்டு; அப்படிக் குறைத்தால் ஜெர்மனியானது பொருளாதார மந்த நிலைக்குச் செல்லக்கூடும். ஏற்கெனவே ரஷ்யா - உக்ரைன் போரால் அங்கு உணவு, எரிசக்தி செலவு கடுமையாக அதிகரித்துள்ள அங்கு, தானாகவே விலைவாசி உயரும்.

  • ஐரோப்பாவின் பெரும் பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனியானது, அதன் பொருள் கொள்வனவுகளில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவையே சார்ந்திருக்கிறது. வரக்கூடிய குளிர்காலத்துக்காக அந்த நாடு இப்போதே இருக்கக்கூடிய அனைத்து எரிவாயுக் கலங்களிலும் நிரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

  • செவ்வாயன்று கூடிய ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர்கள், அவசரக்கால உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டனர். அதன்படி, வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் எரிவாயு நுகர்வில் 15 சதவீதம் அளவுக்கு தாங்களாகவே குறைத்துக்கொள்ளவேண்டும். இதைச் செய்தால், குளிர்காலத்துக்குத் தேவையான 4,500 கோடி கன மீட்டர் எரிவாயுவைச் சேமிக்கமுடியும்.

  • கிரீஸ், இத்தாலி, போலந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இதற்கு எதிர்ப்பாக இருந்தாலும், இலக்கை அடைந்தாக வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு கட்டாயமாக ஆக்கமுடியும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?