whatsapp app Pixabay
உலகம்

WhatsApp Hi mum Scam : 57 கோடியை இழந்த நபர், ‘மக்களே கவனம் தேவை' - விரிவான தகவல்கள்

இப்படி பல ஆஸ்திரேலியா மக்கள் இந்த புதிய வாட்ஸ் அப் ஸ்கேனில் சிக்கி சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பணத்தை இழந்து இருக்கிறார்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 57 கோடி ரூபாய் என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கும் தொகை.

NewsSense Editorial Team

இன்று ஒட்டுமொத்த மனித இனமே சைபர் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சாதாரணமாக ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடுவது தொடங்கி, வங்கிப் பணத்தை பரிமாற்றம் செய்வது, முதலீடுகளை மேற்கொள்வது, சொத்து பத்து விவரங்களைக் கணினியில் பார்ப்பது, வியாபாரம், வணிக நோக்கிலான ஒப்பந்தங்கள் மற்றும் விவரங்களை இணையத்தின் உதவியோடு அதிவிரைவாக பரிமாறிக் கொள்வது... என எல்லாவற்றிற்கும் இணையம் தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்து இருக்கிறது.

காலப்போக்கில் ஒருவர் மற்றொருவரை சந்திக்க கூட வீட்டில் இருந்தபடியே ஒரு பொது இடத்தில் சந்திப்பது போன்ற விஷயத்தை விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) ஆக்மெண்டட் ரியாலிட்டி (Augmented Reality) போன்ற தொழில்நுட்பங்கள் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சி சாத்தியமாகி இருக்கும் போதும், ஒருவர் தன்னுடைய முகத்தைக் கூடக் காட்டாமல், மற்றொருவர் வங்கி கணக்கில் இருந்தோ அல்லது அந்த நபரை ஏமாற்றியோ பணத்தைத் திருடும், மோசடிகளை மட்டும் எவராலும், எந்த நாடுகளாலும் முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஒரு காலத்தில் ஓடிபி ஸ்கேம் மிகப் பிரபலமாக இருந்தது. எனவே வங்கி போன்ற நிதி நிறுவனங்கள், யார் வந்து கேட்டாலும் ஓடிபி போன்ற முக்கியமான விவரங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம் என்று கூறினர்.

பிறகு அது காலப்போக்கில் யு பி ஐ வழியாக பணத்தை திருடுவது, சிம் ஸ்கேம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடுவது... என பல புதிய திருட்டு முறைகள் பரிணமித்தன. இன்று புதிய டெக்னிக்காக, உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பில் மோசடிக்காரர்கள் பணத்தைப் பறிக்க தொடங்கியுள்ளனர்.

அது என்ன 'Hi Mum' வாட்ஸ்அப் ஸ்கேம்

முன்பின் தெரியாத ஏதோ ஒரு நபரிடம் இருந்து அல்லது நெருங்கிய உறவினரிடமிருந்து சில குறுஞ்செய்திகள் வரும். அது அப்பா, அம்மா போன்றவர்கள் தொடங்கி மாமன் மச்சான் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் வரை எவராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இப்படி மிக நெருக்கமானவர்களுடைய பெயரையோ அடையாளங்களையோ பயன்படுத்தி முதலில் நன்றாக பேசத் தொடங்குவார். பிறகு தன்னுடைய செல்போன் தொலைந்து விட்டது அல்லது பாதிக்கப்பட்டு செயலிழந்து விட்டது என்று கூறுவர். பிறகு வேறு ஏதோ ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து அழைத்துப் பேசவும் முயலலாம்.

இப்படி முதலில் குறுஞ்செய்தி அனுப்ப தொடங்கிய நபர் எதிரில் உள்ளவரை அழைத்துப் பேசும் அளவுக்கு நெருங்கிவிட்டால் அவரிடம் மெல்ல பணத்தைக் கறக்கத் தொடங்குவார்.

சரி உங்கள் மொபைல் கேடாகிவிட்டது என்றால், டெபிட் கிரெடிட்... கிரெடிட் கார்டு... போன்ற வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாமே என்று பேச்சு எடுத்தால், தற்காலிகமாக என்னுடைய பண அட்டைகளோ கடன் அட்டைகளோ முடக்கப்பட்டிருக்கிறது அல்லது வங்கி பரிவர்த்தனையில் ஏதோ சில தடைகள் ஏற்படுவதாகக் கூறி சமாளிப்பர்.

எதிரில் உண்மையிலேயே தனக்கு வேண்டப்பட்டவர், நெருக்கமானவர், நண்பர்.. சிரமத்தில் இருக்கிறாரோ என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவர் கேட்கும் பணத்தை அனுப்புவார்.

யாருடைய பெயரைப் பயன்படுத்தி இந்த பணத்தை பறித்தார்களோ அந்த நபரிடம் ஏமாறியவர் சென்று விவரத்தை கூறும் போது "நான் அப்படி எதையும் சொல்லவில்லையே, நான் உன்னை அழைக்கவே இல்லையே நான் உன்னிடம் பணத்தைக் கேட்கவில்லையே" என்பர். அப்போது தான் பணத்தை இழந்தவருக்கு என்ன நடந்தது, தாங்கள் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்பது தெரியவரும்.

Whatsapp

இப்படி பல ஆஸ்திரேலியா மக்கள் இந்த புதிய வாட்ஸ் அப் ஸ்கேனில் சிக்கி சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பணத்தை இழந்து இருக்கிறார்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 57 கோடி ரூபாய் என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கும் தொகை.

இது 2022ஆம் ஆண்டில் மட்டுமே ஏற்பட்ட இழப்பு. இந்த வாட்ஸ் அப் மோசடியில் சுமார் 11,100 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சில வலைதளங்கள் சொல்கின்றன. இப்படி பணத்தை இழந்தவர்களில் பெரும்பாலானோர் 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களே என்பது வருத்தத்துக்குரியது.

ஆஸ்திரேலியா அரசாங்கமோ, இந்த புதிய வாட்ஸ்அப் மோசடித் திட்டத்தை மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறது. ஒருவருக்கு பணம் அனுப்பும் முன் அவர்கள் உண்மையானவர்கள் தானா? என்பதை ஒன்றுக்கு பலமுறை சரி பார்த்து பணத்தை அனுப்புமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சைபர் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  • எப்போதும் எந்த ஒரு சூழலிலும் யாருடனும் ஓடிபி விவரங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

  • நண்பர்களோ உறவினர்களோ... ஏன் பெற்றோரிடம் கூட கடன் அட்டை மற்றும் பண அட்டையின் பின் & சி வி வி எண்களை தெரியப்படுத்தாதீர்கள்.

  • இந்த லிங்கை கிளிக் செய்தால் ஒரு கோடி கிடைக்கும்... இந்த லிங்க் கிளிக் செய்தால் மாலத்தீவிற்கு இலவசமாக சுற்றுலா செல்லலாம்... போன்ற வதந்தி விளம்பரங்கள், முன்பின் தெரியாத இணைப்புகளை எக்காரணத்தை முன்னிட்டும் கிளிக் செய்து விடாதீர்கள்.

  • அதிகாரப்பூர்வ மற்றும் பாதுகாப்பான வலைதளங்களிலேயே உங்களுக்கு தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள், பிரவுஸ் செய்யுங்கள்.

  • எந்த அதிகாரப்பூர்வமற்ற, சட்டத்துக்கு முரணான வலைதளமாவது உங்களுடைய தரவுகளைக் கேட்டாலோ லாகின் செய்யுமாறு கூறினாலோ செய்யாதீர்கள்.

  • அதிவேகமாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பல்வேறு இ-காமர்ஸ் வலைதளங்களும் உங்களுடைய பண அட்டை மற்றும் கடன் அட்டை விவரங்களை சேமித்துக் கொண்டு அடுத்த முறை பயன்படுத்த அனுமதி கேட்கிறது. 20 முதல் 30 நொடிகள் கூடுதலாக விவரங்களை டைப் செய்ய சோம்பேறித்தனப் பட்டுக்கொண்டு பணம் மற்றும் கடன் அட்டை விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்ள அனுமதி கொடுக்காதீர்கள்.

  • இ-காமர்ஸ் ஒரு மிகப்பெரிய வரம் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் சரியான நபர்களின் வலைதளங்கள் தானா... முன்பின் தெரியாத வலைதளங்களாக இருந்தால் அதுவும் குறிப்பாக அரசு அனுமதி பெறாத வலைத்தளங்களாக இருந்தால் அதிலிருந்து பொருட்களை சேவைகளையும் பெறாதீர்கள்.

  • வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள், பான் அட்டை விவரங்கள், ஆதார் எண், வாக்காளர் எண் போன்ற முக்கியமான தனி நபர் விவரங்களை சகல ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?