ஷெபாஸ் ஷெரிஃப் Twitter
உலகம்

5 மனைவிகள்; 1400 கோடி பணம்; சிறைத் தண்டனை - பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் கதை

ஷெபாஸ் ஷெரீஃப் மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படாவிடிலும், பாகிஸ்தானில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என முடிவெடுக்கும் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்புகளின் ஆதரவு ஷெபாஸுக்கு இருக்கிறது. அந்த ஆதரவே, இம்ரான்கான் அரசை வீழ்த்தவும் செய்தது என்கிறார்கள்!

Antony Ajay R

பாகிஸ்தானின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ஷெபாஸ் ஷெரீஃப். இம்ரான்கானின் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சிகளாக இருந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (PML- N), பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) மற்றும் இம்ரான்கானின் பிடிஐ கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்ட சில கட்சிகளும் சேர்ந்து பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃபை பிரதமராகத் தேர்வு செய்திருக்கின்றன. பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமையவிருக்கிறது.


யார் இந்த ஷெபாஸ் ஷெரீப்?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரர் தான் ஷெபாஸ். ஷெரீஃபின் குடும்பம் காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்டது. அங்கிருந்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜதி உம்ரா என்ற ஊருக்குத் தொழில் செய்யப் புலம்பெயர்ந்து தனது குடும்பத்தை அழைத்துவந்தார் தந்தை முகமது ஷெரீஃப். இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட பிறகு, அங்கிருந்து லாகூருக்கு குடி பெயர்ந்தது ஷெரீஃப் குடும்பம்.

அங்கு 1949-ம் ஆண்டு நவாஸ் ஷெரீஃபும், 1951-ம் ஆண்டு ஷெபாஸ் ஷெரீஃபும் பிறக்கின்றனர். எஃகு தொழில் தொடங்கிய ஷெரீஃப் குடும்பம் அதில் கொடிகட்டிப் பறந்தது. இப்போது வரை ஷெரீஃப் குடும்பம் செல்வ செழிப்பு மிக்கதாகவே இருக்கிறது.

அந்தக் குடும்பத்திலிருந்து நவாஸ் ஷெரீஃப் முதலில் அரசியலுக்குள் நுழைகிறார். குடும்பத் தொழிலைக் கவனித்துக் கொண்டே தம்பி ஷெபாஸும் அண்ணனின் அடியொற்றி அரசியலுக்குள் நுழைந்தார்.

இம்ரான் கான்

நாடு கடத்தப்பட்ட சகோதரர்கள்

1988-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக நவாஸ் பதவியேற்றபோது, சட்டப்பேரவை உறுப்பினராக முதல்முறை தேர்வு செய்யப்பட்டார் ஷெபாஸ்.

பின்பு காலங்கள் மாறி, நவாஸின் அரசியல் தேசிய அளவில் வளர்ந்தது. 1990-ம் ஆண்டு முதல் முறை நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் பிரதமரானார். ஊழல் உள்ளிட்ட பல காரணங்களால் குடியரசுத் தலைவரால் நவாஸின் ஆட்சி குடியரசுத் தலைவரால் கலைக்கப்பட்டது.

1997-ம் ஆண்டு 2-வது முறையாகப் பிரதமரானார் நவாஸ். அப்போது பஞ்சாபில் அரசியல் செல்வாக்கைப் பெற்றிருந்த ஷெபாஸ் முதல் முறையாகப் பஞ்சாபின் முதல்வரானார். மீண்டும் ஷெரீஃப் குடும்பத்துக்கு நெருக்கடி எழுந்தது.

1999-ம் ஆண்டு பர்வேஸ் முஷாரஃப், நவாஸின் ஆட்சியை ராணுவம் கொண்டு கைப்பற்றினார். இதையடுத்து நவாஸ் ஷெரீஃப், ஷெபாஸ் ஷெரீஃப் என ஒட்டுமொத்த குடும்பமும் சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டது. 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவையடுத்து மீண்டும் ஷெரீஃப் குடும்பம் பாகிஸ்தான் வர அனுமதி கிடைத்தது.

2008-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார் ஷெபாஸ் ஷெரீஃப். 2013-ம் அண்ணன் நவாஸ் ஷெரீஃப் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராக, தம்பி ஷெபாஸ் பஞ்சாபின் முதல்வராக மூன்றாவது முறை பதவியேற்றார்.

ஷெபாஸ் ஷெரிஃப் மற்றும் நவாஸ் ஷெரிஃப்

ஊழல், கருப்புப் பணம், சிறைவாசம்

நவாஸ் ஷெரீஃபுக்கு இந்தமுறையும் நெருக்கடி ஏற்பட்டது. உலகையே உலுக்கிய பனாமா பேப்பர்ஸ் கருப்புப் பண முதலீட்டில், நவாஸின் பெயரும் சிக்கியது. பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

இதையடுத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் பதவி ஷெபாஸின் கைக்கு வந்தது. சிறைத்தண்டனை அனுபவித்த நவாஸ், பிணையில் வெளியில் வந்து சிகிச்சைக்காக தற்போது லண்டனில் இருக்கிறார். லண்டனிலிருந்து நவாஸ் கொடுக்கும் உத்தரவின் பேரில் ஷெபாஸ் பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஊழல், பண மோசடிப் புகார் ஷெபாஸையும் விட்டுவைக்கவில்லை. 2020-ம் ஆண்டு பண மோசடி, வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தல் ஆகிய வழக்குகளை பிரதமர் இம்ரான் கான் அரசு ஷெபாஸ் மீது போட்டு முடக்கியது. பல மாதங்கள் சிறை வாசத்திற்குப் பிறகு பிணையில் வெளியே வந்தார் ஷெபாஸ். தற்போதும் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

அதுபோக, லண்டனில் அவர் மீது 1,400 கோடி பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் பணமோசடி வழக்கு ஒன்று நடந்து வருகிறது. அந்த வழக்கிலும் அவர் பெயிலில் இருக்கிறார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்காத ஷெபாஸ், இவையெல்லாம் அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இம்ரான் கானின் அரசுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

ஷெபாஸ் ஷெரிஃப்

ஷெபாஸ் ஷெரிஃபின் குடும்பம்

ஷெபாஸுக்கு 5 முறை திருமணம் நடந்திருக்கிறது. 3 மனைவிகளை விவாகரத்து செய்திருக்கிறார். தற்போது நுஸ்ரத், தெஹ்மீனா துராணி ஆகிய இரு மனைவிகளோடு வாழ்ந்து வருகிறார். ஷெபாஸுக்கு 2 மகன்கள் 4 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகன் ஹம்ஸா, பஞ்சாப் மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். பஞ்சாப் முதல்வர் பதவியைப் பிடிக்கும் முனைப்பில் இருக்கிறார். இரண்டாவது மகன் சுலைமான், ஷெபாஸ் குடும்பத்தின் தொழிலைக் கவனித்து வருகிறார். அவர் மீதும் லண்டனில் பணமோசடி வழக்கு இருப்பதால், தலைமறைவாக இருக்கிறார்.

இப்படிப்பட்ட தொடர் ஊழல், பண மோசடி, சொத்துக் குவிப்பு வழக்குகளைக் கொண்டு, சிறை தண்டனை அனுபவித்த ஷெரீஃப் குடும்பத்தின் கைக்குத்தான் பாகிஸ்தானின் ஆட்சி செல்கிறது. ஷெபாஸ் ஷெரீஃப் மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படாவிடிலும், பாகிஸ்தானில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என முடிவெடுக்கும் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்புகளின் ஆதரவு ஷெபாஸுக்கு இருக்கிறது. அந்த ஆதரவே, இம்ரான்கான் அரசை வீழ்த்தவும் செய்தது என்கிறார்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?