திருமணத்துக்காக இந்தியாவை படையெடுத்த பிரிட்டிஷ் இளம்பெண்கள் Pexels
உலகம்

திருமணத்துக்காக இந்தியாவை படையெடுத்த பிரிட்டிஷ் இளம்பெண்கள்: ஏன் எப்போது..?

17ஆம் நூற்றாண்டில், கிழக்கு இந்தியக் கம்பெனி நிர்வாகம், ஒரு பிரச்சனையை எதிர்கொண்ட போது, பெண்களை இந்தியா அனுப்ப தீர்மானித்தது. அப்படி பிரிட்டனுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? பெண்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டாலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

இந்திரா நூயி (பெப்ஸி முன்னாள் சி இ ஓ), இந்திரா காந்தி (முன்னாள் இந்தியப் பிரதமர்), சுசெதா கிருபலானி (இந்தியாவின் முதல் பெண் முதல்வர்), ஃபாத்திமா பீபி (இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி) போன்ற பெண்மணிகள் சாதிப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, சர்வதேச அளவிலேயே பெண்கள் கிட்டத்தட்ட இரண்டாம் தரக் குடிமக்கள் போலத் தான் நடத்தப்பட்டார்கள்.

16 - 17ஆம் நூற்றாண்டுகளில் எல்லாம், ஒரு பெண் அழகாக பதுமை போல வளர்ந்து ஒரு நல்ல ஆணை திருமணம் செய்து கொள்வதே வாழ்வின் மிக உயரிய லட்சியம் போல வளர்க்கப்பட்டார்கள்.

உலகிலேயே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதன்முதலில் கொடுத்த நாடு நியூசிலாந்து தான். அந்த நாட்டிலேயே 1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது என்றால், மற்ற நாடுகளின் நிலையை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

17ஆம் நூற்றாண்டில், கிழக்கு இந்தியக் கம்பெனி நிர்வாகம், ஒரு பிரச்சனையை எதிர்கொண்ட போது, பெண்களை இந்தியா அனுப்ப தீர்மானித்தது.

அப்படி பிரிட்டனுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? பெண்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டாலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

பிரிட்டிஷ் ஆட்சி:

இந்தியா என்கிற பரந்து விரிந்த நிலபரப்பை மெல்ல தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஆங்கிலேயர்கள் முயற்சித்துக் கொண்டிருந்த காலம். கிட்டத்தட்ட 17ஆம் நூற்றாண்டு என வைத்துக் கொள்ளலாம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்களுக்கென ஒரு தனி நிர்வாக அமைப்பை வலுவாக உருவாக்க விரும்பினர். அதற்காக பல்வேறு ராணுவ அதிகாரிகள், ஐ சி எஸ் என்றழைக்கப்படும் ஆட்சிப்பணி அதிகாரிகளை இந்தியாவுக்கு அனுப்பியது கிழக்கு இந்தியக் கம்பெனி.

என்ன தான் வேலை, கெளரவம், சம்பளம் என்று எல்லா சுக போகங்கள் கிடைத்தாலும், தங்களுக்கென ஒரு குடும்ப வாழ்கையை பிரிட்டிஷ் அதிகாரிகளால் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரிட்டிஷ் அதிகாரிகளோ, தூதர்களோ, அரசுப் பணியாளர்களோ இந்தியர்களைத் திருமணம் செய்து கொள்ளப் போனால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர், ஊக்கப்படுத்தப்படவில்லை.

பிரிட்டன் பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொள்ள பிரிட்டிஷ் அதிகாரிகள் ஊக்கப்படுத்தப்பட்டனர்.

பிரிட்டிஷ் இனம் தான் உயர்ந்தது. அந்த உயர்ந்த இன மக்கள், இந்தியர்களைப் போல மற்ற இனத்தவரைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது, தங்கள் இனத்தில் தூய்மை பறிபோய்விடக் கூடாது என்கிற கருத்து பிரிட்டிஷ் மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது.

அதோடு ஆள்பவர்கள் மற்றும் ஆளப்படுபவர்களுக்கு இடையில் ஒரு இடைவெளி இருக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷ் மக்கள் விரும்பினர்.

இதை எல்லாம் மீறி இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பிரிட்டிஷ் மக்கள், தங்கள் சமூகத்திலிருந்தே விலக்கி வைக்கப்பட்டனர் அல்லது ஒதுக்கப்பட்டனர். குறிப்பாக 1857ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த பிரிவினை வலுவடைந்தது.

எனவே இந்தியாவின் கடுமையான தட்ப வெப்பநிலையைக் கடந்து தங்கள் பணிகளை திறம்பட செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஒரு நல்ல குடும்ப வாழ்கையை அமைத்துக் கொடுக்க விரும்பியது கிழக்கு இந்தியக் கம்பெனி.

அதே நேரத்தில், பிரிட்டன் நாட்டில் அதிக எண்ணிக்கையில் பெண்களும் குறைந்த எண்ணிக்கையில் ஆண்களும் இருந்தனர். அங்கு பெண்களுக்கும் ஒரு நல்ல மண வாழ்வு அமையவில்லை.

நாம் முன்பே கூறியது போல, 17ஆம் நூற்ராண்டில் எல்லாம், பெண்கள் என்றால் தங்கள் அழகை பராமரித்துக் கொண்டு, நல்ல மாப்பிள்ளையைப் பிடித்து வாழ்கையில் செட்டில் ஆவது தான் அப்போது ஒரே பெரிய இலக்காக இருந்தது.

25 வயதைக் கடந்த பெண்கள் வயதான வீட்டு வேலைக்காரிகள் (old maids) என்று அழைக்கப்பட்டனர்.

திருமணம் செய்து கொள்ளாத பெண்களின் எதிர்காலம் சூனியமாகவே இருந்தது. 17ஆம் நூற்றாண்டு காலத்தில், பிரிட்டனின் அரசுப் பணிகளில் கூட பெண்களுக்கு இடமளிக்கப்படவில்லை. பெண்களுக்கு கல்வி பெரிய அளவில் கொடுக்கப்படவில்லை, வேலை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

கப்பலில் அனுப்பப்பட்ட பெண்கள்:

இந்த இரு பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக, பிரிட்டனில் இருந்த பெண்களுக்கு தலா 300 பவுண்ட் ஸ்டெர்லிங் பணம் கொடுத்து (தங்களை நல்ல ஆடை, அணிகலன்களோடு அலங்கரித்துக் கொள்ள இந்த தொகை என்று கூறப்படுகிறது) இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தது கிழக்கு இந்தியக் கம்பெனி நிர்வாகம்.

அப்படி அனுப்பபடும் பெண்களுக்கு ஒரே ஒரு இலக்கு தான். நல்ல பிரிட்டன் அதிகாரி அல்லது பிரிட்டிஷ் அரசு ஊழியரைப் பார்த்து திருமணம் செய்து கொள்வது தான்.

எக்காரணத்தைக் முன்னிட்டும் பிரிட்டிஷ் பெண்கள், இந்தியர்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது.

இதில் இந்திய சமஸ்தானங்களை ஆட்சி செய்து வந்த ராஜா, மகாராஜாக்களும் அடக்கம்.

இந்த ஒரு திட்டத்தினால், இந்தியாவில் கடுமையான பணி அழுத்தத்தில் இருந்த பிரிட்டன் அதிகாரிகளுக்கு பிரிட்டன் பெண்களே மணமகள்களாயினர்.

அப்படியே குடும்பத்தோடு இந்தியாவில் தங்கி, குழந்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக இந்தியாவில் பிரிட்டனின் அரசுப் பணியை மேற்கொண்டனர்.

இப்படி கிழக்கு இந்தியக் கம்பெனி 1671ஆம் ஆண்டு முதல் முறையாக 20 திருமணமாகாத இளம் பெண்களை பம்பாய் நகரத்துக்கு அனுப்பியதாக நியூ யார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி அனுப்பப்பட்ட பெண்களுக்கு பிரிட்டன் அரசு சுமார் ஓராண்டு காலத்துக்கு நிதி உதவி செய்ததாக டி என் ஏ இந்தியா வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் இளைஞர்களை மணக்க, இந்தியாவுக்கு படையெடுத்து வந்த பிரிட்டன் பெண்களை “ஃபிஷ்ஷிங் ஃப்ளீட்” (Fishing Fleet) என்கிற பட்டப் பெயர் வைத்து அழைத்தனர்.

ஒருவேளை இந்த திட்டத்தின் கீழ் இந்தியா சென்று தங்களுக்கென ஒரு நல்ல மாப்பிள்ளையை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்ள முடியாதவர்கள் மீண்டும் பிரிட்டனுக்கே திருப்பி அனுப்பபட்டனர். அவர்களை “Returned Empties” என்கிற பட்டப் பெயர் வைத்து அழைத்தனர்.

1850களில் எல்லாம், பல பிரிட்டன் குடும்பத்தினரே தங்கள் பெண் பிள்ளைகளுக்கு ஒரு குறைந்தபட்ச கல்வி கொடுத்து, இந்தியா அனுப்பி வைத்தனர் என்கிறது டி என் ஏ இந்தியா வலைதளம். அது போக வயதில் மூத்த திருமணமான பெண்மணிகள், இளம்பெண்கள் தங்களுக்குப் பிடித்த திருமகணைத் தேர்வு செய்ய உதவியதாகவும் கூறப்படுகிறது.

தனிமையில் வாழ்ந்த பிரிட்டன் பெண்கள்:

அடித்துப் பிடித்து இந்தியாவில் ஒரு நல்ல இளைஞனைத் தேடிப் பிடித்து திருமணம் செய்து கொண்டாகிவிட்டது. பிரிட்டிஷ் அதிகாரியின் மனைவி, அவருடனான இல்லற வாழ்கையில் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு தாய், இந்திய சேவகர்களால் மேம்சாஹிப் என்றழைக்கப்படும் எஜமானி அம்மா என்கிற பதவி எல்லாம் இருந்தன.

கூப்பிட்டால் ஓடோடி வரும் பணியாளர்கள், சொடுக்கினால் கேட்டது கிடைக்கும் செல்வ வளம் என எல்லாம் இருந்தும், பிரமாண்ட அரண்மனைகளில் பிரிட்டிஷ் பெண்கள் தனிமையில் வாடியதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிறது.

இது போக, மண வாழ்கைக்காக இந்தியா வந்தடைந்த பெண்கள் இந்தியாவின் கடுமையான தட்ப வெப்பநிலையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறினர்.

இன்றைய தேதிக்கு தமிழ்நாடு போல சீரான தட்ப வெப்பநிலையில் வாழ்ந்த ஒருவராலேயே டெல்லி வெயிலைத் தாங்க முடியாது.

பிரிட்டனில் குளிர் சிலிர்க்கும் வானிலையில் வாழ்ந்த பிரிட்டிஷ் பெண்களால் எப்படி டெல்லி வெயிலை தாக்குபிடித்திருக்க முடிந்திருக்கும் என நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அதே போல, இந்தியாவில் 17, 18ஆம் நூற்றாண்டிகள் பயணிப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல.

எனவே பிரிட்டன் பெண்களால் இந்தியாவுக்கு வந்த பின், பிரிட்டனில் தங்கள் விருப்பப்படி பயணித்தது போல எளிதில் பயணங்களை மேற்கொள்ள முடியவில்லை.

17ஆம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த “ஃபிஷ்ஷிங் ஃப்ளீட்" பழக்கம், 1930களுக்குப் பிறகு தான் கணிசமாகக் குறைந்தது.

இது குறித்து மேலதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள “The Fishing Fleet: Husband-Hunting in the Raj” என்கிற தலைப்பில் Anne De Courcy என்பவர் விரிவாக ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார். அப்புத்தகம் அமேசான் கிண்டில் எடிஷனிலும், ஹார்ட் கவராகவும் கிடைக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?