சீனா கொரோனா வைரஸ் பிரச்னை twitter
உலகம்

சீனா கொரோனா வைரஸ் பிரச்னையில் இருந்து மீளாதது ஏன்? ஜீரோ கோவிட் டு தடுப்பூசிகள்; ஓர் அலசல்

Gautham

உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவில், கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக ஒருவர் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். சீன அரசின் மிக கடுமையான கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாண்டியும், அந்நாட்டில் கொரானா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் முறையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பு.

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பிரச்னை:

கடந்த நவம்பர் 20ஆம் தேதி ஒரே நாளில் சீனாவில் 26,824 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 2022 ஏப்ரல் காலகட்டத்தில் கொரோனா உச்சத்தில் பரவிக்கொண்டிருந்த நிலை என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

அதோடு, கடந்த சில நாட்களில், சீனாவின் தலைநகரான பீஜிங்கில் மட்டும் மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சீனா முழுக்க மீண்டும் கொரானா வைரஸ் பரவி கொண்டிருக்கிறது. குறிப்பாக தெற்கு சீன பகுதியில் குவாங்டாங் (Guangdong) கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது.

சீனாவின் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகள் என்ன?

ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொரோனா வந்தாலே ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஊரடங்கு விதித்து கொண்டிருந்த சீனா, தற்போது அத்தனை கடுமையான ஊரடங்குகளை அறிவிப்பதில்லை.

சொல்லப்போனால் கடந்த காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த, சீனா கையாண்ட பல நடவடிக்கைகள் & நடைமுறைகளை தற்போது குறைத்துள்ளது.

ஆனால் சீன மத்திய அரசோ, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொரோனா வைரஸ் பறவத் தொடங்கினாலே ஊரடங்கு உத்தரவு உட்பட பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளூர் நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது.

சீனாவில் ஏதாவது ஒரு பகுதியில் கொரோனா பரவத் தொடங்கினால் அப்பகுதியில் வாழும் மக்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. யாராவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் வீட்டில் அல்லது அரசின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் தனிமைப்படுத்திக் கொள்ளும் இடங்களில் தனிமைப் படுத்தப்படுகிறார்கள்.

கொரோனா பரவலை தடுக்க பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் என பெரும்பாலான நிறுவனங்கள் & அமைப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன. இதில் உணவு பண்டங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு.

உலகிலேயே கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து மேற்கொள்ளப்படும் மிகக் கடுமையான நடவடிக்கைகளில் சீனாவின் நடவடிக்கைகளும் ஒன்று. புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கும் வரை ஊரடங்கு விதிக்கும் பழக்கத்தை சீனா கடைபிடித்து வருகிறது. குறைந்தபட்சம் சில மாதங்களுக்கு முன்பு வரை கடைபிடித்து வந்தது.

சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல லட்சக்கணக்கான சீன மக்கள் ஊரடங்கு உத்தரவின் பேரில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

சீனாவின் தெற்கு பகுதியில் இருக்கும் குவாங்சோ மாகாணத்தில் சுமார் 1.9 கோடி பேர் வசிக்கிறார்கள். சில தினங்களுக்கு முன், அம்மாகாணத்தில் உள்ள பயூன் என்கிற மாவட்டத்தில் ஐந்து நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குவாங்சோ மாகாணத்திலேயே மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் மாவட்டம் அது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனாவில் தொடக்கத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது, அது தற்போது வெறும் எட்டு நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது.

நீண்ட நாட்கள் கழித்து சீனா வெளிநாட்டு பயணிகளை தன் நாட்டிற்குள் அனுமதிக்க தொடங்கியுள்ளது. அப்படி சீனாவுக்கு வர விரும்பும் பயணிகள் சீனாவிற்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது

இப்போதும் சீனா ஜீரோ கோவிட் கொள்கையை கடைபிடிப்பது சரியா?

உலகில் உள்ள பல நாடுகள் கொரோனாவை முற்றிலும் ஒழித்து விட்டு வாழ்வதற்கு பதிலாக கொரோனா உடன் வாழப் பழகிவிட்டன. சொல்லப் போனால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா உடன் பல நாடுகள் சகஜமான வாழ்கைக்குத் திரும்பிவிட்டன. சீனாவும் ஜீரோ கோவிட் கொள்கையை மிகத் தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது.

இந்த ஜீரோ கோவிட் கொள்கையினால் லட்சக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாக்கப்படும், சீனா போன்ற அதிக மக்கள் நெருக்கடி கொண்ட பகுதியில், ஜீரோ கோவிட் கொள்கை கடைபிடிக்கப்படவில்லை எனில், எளிதில் உடல் நலம் பாதிக்கக்கூடிய பலரையும் கொரோனா மிகக் கடுமையாக பாதிக்கும் அபாயம் இருப்பதாக சீன அரசு வாதிடுகிறது.

சீனாவின் இந்த ஜீரோ கோவிட் பாலிசியால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக 5,200 பேர் மட்டுமே உயிரிழந்து இருக்கிறார்கள் என்கிறது பிபிசி வலைதளம்.

இது அமெரிக்கா பிரிட்டன் போன்ற முன்னேறிய மேற்கத்திய நாடுகளை விட மிக மிக குறைவான எண்ணிக்கை. அமெரிக்காவில் ஒரு மில்லியன் பேரில் 3,000 பேரும், பிரிட்டனில் ஒரு மில்லியன் பேரில் 2,400 பேறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்கள். ஆனால் சீனாவில் ஒரு மில்லியன் பேரில் மூன்று பேர் மட்டுமே மரணித்துள்ளனர்.

பொருளாதாரம் என்னென்ன தாக்கங்களை எதிர்கொள்கிறது?

கடந்த சில மாதங்களில் சீனாவின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சீனாவின் டெக்னாலஜி துறையின் இதயமாக திகழும் ஷென்ஷென் மாகாணத்தில் மட்டும் சுமார் 1.75 கோடி பேர் வாழ்கிறார்கள். சீனாவின் உற்பத்தி மையமாக திகழும் ஷாங்காயில் சுமார் 2.6 கோடி பேர் வாழ்கிறார்கள். இந்த இரு பெரும் மாகாணங்களுமே கடந்த சில மாதங்களில் ஒரே நேரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இப்படி தொழில் வளமிக்க மாகாணங்கள் மூடப்பட்டதால், அப்பகுதியில் இருக்கும் பல்வேறு தொழிற்சாலைகளும் நீண்ட நாட்களாக மூடப்பட்டன. தொழிற்சாலைகளை நம்பி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் இதனால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

சீன தொழிற்சாலைகளை நம்பி இருக்கும் பல நிறுவனங்களுக்கு சரியாக பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைக்காததால் உலகம் முழுக்க பல வணிகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். உதாரணமாக செங்ஷோ (Zhengzhou) கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சரியாக இயங்காததால் உலகம் முழுக்கவே ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இன்னும் நான்கு வார காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுக்க கொண்டாடப்படும். அதற்கு தேவையான விளையாட்டு பொருட்கள், பொம்மைகள், சீனாவில் இருந்து சந்தைக்கு போதிய அளவு வராமல் போகுமோ என்கிற அச்சம் நிலவுவதாக பிபிசி கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஜீரோ கோவிட் தவறு என உலக சுகாதார அமைப்பு கருதுவது ஏன்?

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுக்க பரவத் தொடங்கிய காலத்தில், சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கை சரியான ஒன்றாகத் தோன்றியது.

கொரோனா வைரஸின் பல்வேறு திரிப்புகள் புதிதாக உருவெடுத்து பரவின, இப்போதும் பரவிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஓமைக்கிரான் திரிப்பு மிக எளிதில் அதிக அளவில் பரவக்கூடியதாக இருப்பதை உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. எனவே கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று என உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது, அது தன் நடத்தைகளை தொடர்ந்து மாற்றிக் கொண்டே வருகிறது. எனவே அதற்கு தகுந்தார் போல் உலக நாடுகளின் தடுப்பு நடவடிக்கைகளும் மாற வேண்டியது மிகவும் அவசியம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை மருத்துவர் டெட்ராஸ் அதனம் கூறியுள்ளார்.

ஆனால் சீன அதிபர் அல்லது சீன அரசாங்கம், உலக சுகாதார அமைப்பின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. சீனா ஜீரோ கோவிட் கொள்கையைக் கைவிட்டால் மிகப்பெரிய எண்ணிக்கையில் சீனாவில் உயிரிழப்புகள் ஏற்படும் குறிப்பாக முதியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சீன அரசு கூறி வருகிறது.

அதிக அளவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துவது தீர்வாக அமையுமா?

சீனாவில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு இருக்கிறது. 51% பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி கொண்டுள்ளனர். 59 சதவீதம் பேர் மட்டுமே தங்களுடைய முதல் டோஸ் தடுப்பூசியைச் செலுத்தி கொண்டுள்ளனர். இப்போது வரை 41 சதவீதம் பேர் ஒரு டோஸ் கூட தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பிரச்னையில் வயதானவர்கள் மற்றும் முதியோர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது தொடக்கம் முதலே கூறப்படும் ஒரு அடிப்படையான விஷயம். இதைக் கூட நிறைவேற்றாமல் ஜீரொ கோவிட் கொள்கையைக் கடைபிடித்து என்ன பலன்? என்பதே நிபுணர்கள் எழுப்பும் முக்கிய கேள்வி.

அதேபோல சீனா பயன்படுத்தும் சினோவேக் மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகளின் செயல் திறனும் இந்த இடத்தில் கேள்விக்கு உள்ளாகப்படுகிறது. இந்த இரு தடுப்பூசிகளுமே செயலற்ற கொரோனா வைரஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை.

பல ஆய்வுகளில் இந்த இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் ஒமைக்கிரான் கொரோனா வைரஸ் திரிப்புக்கு எதிராக மிகக் குறைந்த அளவிலேயே பாதுகாப்பு வழங்குவதாக கூறப்படுகிறது.

அதோடு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சீனாவுக்கு எம் ஆர் என் ஏ கொரோனா தடுப்பூசிகளை வழங்கியபோதும் அதை பெரிய அளவில் பயன்படுத்தவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?