இயேசு நாதர் உண்மையில் பார்க்க எப்படி இருந்தார்? என்ன அணிகலன்கள் அணிந்திருந்தார்? ட்விட்டர்
Wow News

இயேசு நாதர் உண்மையில் பார்க்க எப்படி இருந்தார்? என்ன அணிகலன்கள் அணிந்திருந்தார்?

இயேசு மீதான பக்தி அல்லது அன்பின் காரணமாக இன்று அவர் ரொட்டித் துண்டுகளில் எல்லாம் தென்படுகிறார். உண்மையில் அவர் எப்படி இருந்தார்?

NewsSense Editorial Team

இயேசு கிறிஸ்து பிறந்த தினமாக டிசமப்ர் 25ஆம் தேதி உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. மேற்கத்திய கலை உலகத்தில் அதிகம் வரையப்பட்ட நபர் இயேசு நாதர்தான் என்றால் அது மிகையல்ல.

நீண்ட தலைமுடி, தாடி, நீண்ட கைகளைக் கொண்ட (பொதுவாக வெள்ளை நிறத்தில்) தளர்வான அங்கி, அதன் மீது நீல நிற மேலங்கி... இப்படி எல்லோருக்கும் யேசு நாதர் என்ற உடன் ஒரு பொதுவான பிம்பம் கண் முன் வந்து போகலாம்.

இயேசு மீதான பக்தி அல்லது அன்பின் காரணமாக இன்று அவர் ரொட்டித் துண்டுகளில் எல்லாம் தென்படுகிறார். உண்மையில் அவர் எப்படி இருந்தார்?

இப்போது நாம் மேலே பார்த்த யேசு நாதர், பைசாண்டைன் (Byzantine) காலத்தில் இருந்து வந்தவர். ஒரு பேரரசர் மணிமகுடத்தை ஏற்றுக் கொண்டு, அவரின் ஆட்சியைத் தொடங்குவது போல வரையப்பட்டது. ரோம் நகரத்தில் உள்ள சாண்டா புடென்சியானாவில் (Santa Pudenziana) இப்படிப்பட்ட ஓவியத்தைக் காணலாம்.

இயேசுபிரான் தங்க நிறத்திலான டோகா என்கிற தளர்ச்சியான ஆடையை அணிந்திருப்பது போல அந்த ஓவியத்தில் இருக்கிறது. அவர் தான் உலகத்தின் அரசர் என்பது போல உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது.

பைசாண்டைனைச் சேர்ந்த கலைஞர்கள் யேசுவை பிரபஞ்சத்தின் அரசனாகக் காட்ட விரும்பி, சூஸ் கடவுளின் இளம் வயதுக்காரரைப் போல உருவாக்கினர் என்கிறது பிபிசி வலைதளம்.

அப்படி உருவாக்கப்பட்ட படத்தில் கொஞ்சம் ஹிப்பித்தனமும் கலந்து, இன்று நாம் பார்க்கும் ஒரு ஸ்டாண்டர்ட் மாடல் இயேசுவின் படங்கள் உருவாகியுள்ளன. அவர் உண்மையில் பார்க்க எப்படி இருந்திருக்கக் கூடும்?

1. தலை முடி & தாடி

தொடக்க கால கிறிஸ்தவர்கள் இயேசுவை ஒரு விண்ணுலகத்தை ஆள்பவர் போலக் காட்டவில்லை, சக மனிதர்களில் ஒருவராகக் காட்டினர். அதில் தாடியும் இல்லை, நீண்ட முடியும் இல்லை. ஆனால் எதார்த்தத்தில் பல பிரதேசங்களுக்கு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த ஆன்மிக சாமியார் இயேசுவுக்கு தாடி இருந்திருக்கும்.

காரணம் அவர் சிகை அலங்கார மையங்களுக்குச் சென்றிருக்கமாட்டார் என்பதே கொடுக்கப்படும் எளிய விளக்கம்.

யேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் நீண்ட அழகான தலைமுடி மற்றும் தாடி ஒரு கடவுளுக்குரிய லட்சணங்களாகப் பார்க்கப்படவில்லை, அது எதார்த்த ஆண்கள் ஃபேஷனில் பிரதிபலிக்கவும் இல்லை. அந்த காலத்தில் வாழ்ந்த ஒரு பிரபல தத்துவவாதி கூட தன் தலை முடியையே சிறியதாகவே வைத்திருந்தார்.

ரோமானியர்கள், ஜெருசலேம் நகரத்தை கிபி 70ல் கைப்பற்றிய பிறகு வெளியிட்ட நாணயங்களில் யூத ஆண்கள் தாடி வைத்திருப்பதை வெளிப்படுத்துகிறது. எனவே யேசு பிரானுக்கு சிறிய தாடி இருந்திருக்கலாம், ஆனால் அவரது தலைமுடி அத்தனை நீளமாக இருந்திருக்க வாய்ப்பில்லை என பல்வேறு வலைதளங்கள் சொல்கின்றன.

2. இயேசுவின் ஆடை

இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில், பணக்காரர்கள் நீண்ட அங்கியை சில பிரத்யேக தருணங்களில் அணிந்து கொண்டு, தங்களின் சமூக அந்தஸ்தை வெளி உலகுக்குக் காட்டினர்.

இயேசு தன் அறிவுரைகளிலேயே இது போல நீண்ட ஆடைகளை அணிந்து கொண்டு வெட்டி ஜம்பத்தை வெளிப்படுத்துபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு Mark chapter 12, verses 38 - 39-ல் கூறியுள்ளதாகச் சில வலைதளங்கள் குறிப்பிடுகின்றன.

எனவே இயேசுநாதர் படத்தில் இப்போது நாம் பார்ப்பது போல நீண்ட அங்கிகளை அணிந்திருக்கமாட்டார் என புரிந்துகொள்ள முடிகிறது.

பொதுவாக அவர் காலத்தில் வாழ்ந்த ஆண்கள் முட்டி வரை உடலை மறைக்கும் டுனிக் (tunic), சிதோன் (chiton) என்றழைக்கப்பட்ட ஆடைகளையே உடுத்தினர். பெண்கள் கணுக்கால் வரையிலான ஆடைகளை உடுத்தினர்.

அதன் மீது உடலை வெப்பமாக வைத்திருக்க மேண்டில் (himation) என்றழைக்கப்படும் மேலங்கி அணிந்தனர். ஒரு பெண்மணி தன் நோய்நொடிகளில் இருந்து குணமாக, யேசு நாதர் அணிந்திருந்த மேலங்கியைத் தொட்டார் என Mark chapter 5, verse 27-ல் கூறப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறது பிபிசி.

இயேசு முதலில் வெள்ளை ஆடை அணிந்திருக்கவில்லை என்றும், அவர் மலை மீது பிரார்த்திக்கத் தொடங்கிய போது, அவர் ஒளிவீசத் தொடங்கியதாகவும், அவர் அணிந்திருந்த ஆடை வெளிரத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது நடைமுறையில் இருந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவரும் வெளுக்கமுடியாத அளவுக்கு இயேசுவின் ஆடை வெளுத்து இருந்ததாகவும் பிபிசி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் போது, ரோமானிய துருப்புகள் அவரது 2 மேலங்கியை நான்காகக் கிழித்ததாகவும், அதில் ஒன்று யூதர்கள் பிரார்த்தனையின் போது பயன்படுத்தும் ஷால் என்றும் கூறப்படுகிறது.

அந்த மேலங்கி, சாயம் ஏற்றப்படாத கிரீம் நிற வுல்லன் ஆடை என்றும், அந்த ஆடையில் ஆங்காங்கே இண்டிகோ நிற திட்டுக்கள் அல்லது நூலிழைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

3. காலணி

இயேசு வாழ்ந்த காலத்திலேயே பலரும் காலணிகளை அணியத் தொடங்கி இருந்தனர். மரணக் கடல் & மசாடா பகுதிக்கு அருகில் இருக்கும் பாலைவன குகைகளில், யேசு காலத்தில் பயன்படுத்தப்பட்ட காலணி மாதிரிகள் கிடைத்திருக்கின்றன.

ஒரு அழுத்தமான சோல் என்றழைக்கப்படும் அடிப்பகுதியும், காலில் இருந்து காலணி வெளியேறிவிடாமல் இருக்க, வார்களைப் போன்ற மேற்பகுதியும் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆக யேசுவும் இதே போன்றதொரு காலணியை அணிந்திருக்கலாம். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?