இந்திய ஜவுளித் துறையில் ரிலையன்ஸுக்கு போட்டியாக இருந்த பாம்பே டையிங் நிறுவனத்தின் தலைவர் நுஸ்லி வாடியாவை முன்னேறவிடாமல், அரசு எந்திரம் தொடர்ந்து முட்டுக்கட்டைகளைப் போட்டன.
உதாரணத்துக்கு: ரிலையன்ஸ் நிறுவனம் பாலியஸ்டரைத் தயாரிக்க பி டி ஏ ஆசிடைப் பயன்படுத்திய போது, நுஸ்லி வாடியா Dimethyl Terephthalate (DMT) ரசாயனத்தைப் பயன்படுத்தி பாலியஸ்டர் தயாரிக்க விரும்பினார். அரசிடம் விண்ணப்பித்துப் பல அலுவலகங்களுக்குச் செருப்பு தேய நடந்தாகிவிட்டது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.
சஞ்ஜெய் காந்தி காலமான பிறகு, ராஜிவ் காந்தி மெல்ல அரசியல் வட்டத்துக்குள் நுழையத் தொடங்கினார். அப்போது நுஸ்லி வாடியா ராஜிவ் காந்தியோடு நட்பானார். வாடியாவின் சிரமத்தைப் புரிந்து கொண்டு, அவருக்கு உதவ விரும்பினார் ராஜிவ். சுமார் 2.5 ஆண்டுக்குப் பிறகு 1981ஆம் ஆண்டு தான் DMT ஆலைக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் ஆலையைத் திறக்க முடியவில்லை.
பாம்பே டையிங் இறக்குமதி செய்த அமெரிக்க நிறுவனத்தின் எந்திரங்களைச் சுங்க வரித் துறையிடமிருந்து அனுமதி பெற்று உடனே வெளியே கொண்டு வர முடியவில்லை. அப்போது பம்பாயின் சுங்கவரி அதிகாரியாக இருந்த எஸ் சீனிவாசன் அவ்வியந்திரங்களை முழுமையாகச் சோதிக்க உத்தரவிட்டார்.
அதே சீனிவாசன், சுங்க வரித் துறையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ரிலையன்ஸ் குழுமத்தின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார். கடைசியில் 1985ஆம் ஆண்டு தான் டி எம் டி ரசயணங்கள் உற்பத்தி செய்யப்படத் தொடங்கின. இதை எல்லாம் கடந்து, பாம்பே டையிங் நிறுவனம் தன் உற்பத்தியைத் தொடங்கிய போது, பத்திரிகைகள் பாம்பே டையிங் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் டி எம் டி ரசாயனம் மோசமாக இருப்பதாக விமர்சித்தன. உபயம்: அம்பானியின் பாலியஸ்டர் ஆடைகளை உடுத்திய பத்திரிகையாளர்கள் என விமர்சனங்கள் எழுந்தன.
நீங்கள் இந்தியன் அல்ல: நுஸ்லி வாடியாவுக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட தொல்லைகள் போக, 1989 ஜூலையில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் நுஸ்லி வாடியா இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. வாடியாவின் குடும்பம் சுமார் 4 - 5 தலைமுறைகளாக இந்தியாவில் தொடர்ந்து வாழ்ந்து வந்தவர்கள் என்பது நினைவுகூரத்தக்கது. அவர் தந்தையும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார் நுஸ்லி வாடியா. இந்த சிறிய வழக்கில், அவரை எதிர்த்து, இந்தியாவின் கூடுதல் சாலிசிடர் ஜெனரல் ஜி ராமசாமி வாதாடினார். அப்போதைய சிபிஐ இயக்குநர் மோகன் கத்ரே இந்த சிறிய வாடியா விவகார வழக்கை நேரில் வந்து கண்காணித்தார்.
பொதுவாக சிபிஐ இயக்குநர்கள், நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தான் நேரடியாக வந்து வழக்கின் போக்கை கண்காணிப்பர். இப்படி தீப்பெட்டி வழக்குகளைக் குறித்து நேரில் வந்து ஆஜராவது எல்லாம் இன்று வரை மிகவும் ஆச்சர்யத்தைக் கொடுக்கும் விஷயம். இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில், அவ்வழக்கில் சிபிஐ ஒரு மனுதாரரோ, கட்சிக்காரரோ கூட கிடையாது. மோகன் கத்ரேவின் மகன், ரிலையன்ஸுடன் பெரிய அளவில் வியாபாரத் தொடர்புகள் கொண்டிருந்ததாகப் பின்னாளில் தெரியவந்த போது, தன் மகனின் சம்பாத்தியம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார் சிபிஐ இயக்குநர் மோகன். அக்கருத்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற சில பத்திரிகைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
தொழில் போட்டியின் உச்சமாக கிர்தி அம்பானி என்கிற ரிலையன்ஸ் ஊழியர், நுஸ்லி வாடியாவை கொலை செய்ய முயன்றதாக நடந்த சதி வலை ஒன்று வெளியானது. அந்த பிரச்சனை பெரிதாக வெடிப்பதற்குள் சிபிஐ இயக்குநர் மோகன் கத்ரே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று கூறி தன் பொறுப்பின் கீழ் எடுத்துக் கொண்டார்.
ஒருகட்டத்தில் காங்கிரஸ் மட்டுமின்றி, பாஜகவினரோடும் தன் நெருங்கிய உறவை வலுப்படுத்தினார் திருபாய் அம்பானி. 1996ஆம் ஆண்டு குஜராத்தில் ஷன்கெர்சின் வகேலாவை முதல்வராக்க அம்பானி முயன்றிருக்கலாம் எனவும், கூவத்தூர் ஃபார்முலாவை அப்போதே பயன்படுத்தியதாகவும் அரசல் புரசலாகப் பேசப்பட்டது.
1996ஆம் ஆண்டு முதல்முறையாக இந்தியாவில் பாஜக அரசு அமைந்த போது, ஜஸ்வந்த் சிங் நிதியமைச்சரானார். பதவியேற்றுக் கொண்ட உடனேயே, மனிதர் ரிலையன்ஸுக்கு எதிராக நிறுவன சட்டங்களை மீறியதற்கான சடசடவென விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பச் செய்தார். அதில் 29 குற்றங்கள் சுமத்தப்பட்டன.
பாஜக அரசு கவிழ்ந்த பின், தேவ கெளடா பிரதமரானார். ஆட்சி மாறிய பின் மெல்லக் காட்சிகள் மாறின. அவர் அம்பானியோடு நெருக்கமாக இருந்ததாகச் செய்திகள் வெளியாயின. அதே நேரத்தில் பங்குச் சந்தை சார் பிரச்சனைகளிலிருந்து ரிலையன்ஸ் மயிரிழையில் தப்பியது. மீண்டும் 1999ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால் அம்பானிக்கு எதிராக எந்த பெரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
2001ஆம் ஆண்டு குருமூர்த்தி ஸ்வதேஷி ஜாக்ரன் மன்ச் என்கிற பாஜகவின் அமைப்பின் தலைவரானார். அவரே 2003ஆம் ஆண்டில் அம்பானியை எதிர்க்க யாருக்கும் எந்த அரசியல் தலைவருக்கும், அதிகாரிக்கும் துணிவில்லை என தன் வருத்தத்தைப் பதிவு செய்தார். பாஜக ஆட்சியில் அம்பானிகள் மீதோ அல்லது ரிலையன்ஸ் மீதோ எந்த வித கடுமையான நடவடிக்கைகளோ, விசாரணையோ நடத்தப்படவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com