Videocon: இந்தியாவுக்கு கலர் டிவி கொடுத்த கம்பெனியின் கதை பிளாக் & ஒயிட் ஆனது ஏன்?

இந்திய தொலைக்காட்சி சந்தையில் கொடி கட்டிப் பறந்த வீடியோகான், ஒரு தவறான முடிவால் சரியத் தொடங்கி, அடுத்தடுத்து தவறான பாதையில் பயணித்து காணாமல் போன கதையைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
Videocon venugopal
Videocon venugopalNewssense

ஒரு தனி மனிதர் அல்லது ஒரு வணிக நிறுவனம் உருவாக ஆயிரக் கணக்கிலான சரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், அது கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் அது ஆயிரம் பிறைகளைக் காணும் சாம்ராஜ்ஜியமாக உருவாகும்.

தனி மனிதர்களின் லயோனல் மெஸ்ஸி, மஹேந்திர சிங் தோனி போன்றவர்களைக் குறிப்பிடலாம். நிறுவனங்களைப் பொறுத்தவரை டாடா குழுமம், ரிலையன்ஸ் குழுமங்களைக் குறிப்பிடலாம்.

எத்தனை பிரமாண்டமான நிறுவனமாக இருந்தாலும் சரி, ஒரே ஒரு தவறான முடிவு எடுத்தால் கூட, அதிலிருந்து மீள பல ஆண்டுகள் தேவைப்படும்.

சில நிறுவனங்கள் அந்த ஒற்றை தவறான முடிவால், ஒட்டுமொத்தமாக மூடுவிழா கண்ட கதைகளை எல்லாம் நாம் நிறையவே கேட்டிருக்கிறோம். அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் தான் வீடியோகான்.

இந்திய தொலைக்காட்சி சந்தையில் கொடி கட்டிப் பறந்த வீடியோகான், ஒரு தவறான முடிவால் சரியத் தொடங்கி, அடுத்தடுத்து தவறான பாதையில் பயணித்து காணாமல் போன கதையைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

Videocon venugopal
இன்கா நாகரிகம்: துரோகத்தால் வீழ்ந்த ஒரு பெரும் நாகரிகத்தின் வரலாறு

வீடியோகான் எனும் இளங்கன்று:

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரத்தில் பிறந்த வேணுகோபால் தூத் புனே நகரத்தில் உள்ள காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்கில் படித்துவிட்டு, 1979ஆம் ஆண்டு வீடியோகான் கம்பெனியைத் தொடங்கினார்.

இந்தியாவில் முதல் முறையாக கலர் டிவியைக் கொண்டு வந்த நிறுவனங்களில் வீடியோகானும் ஒன்று என பிபிசி இந்திய பிரிவின் வணிக ஆசிரியர் நிகில் இனாம்தார் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.

1990களில் வீடியோகான் நிறுவனத்தை ஒரு நுகர்வோர் சாதனங்கள் (White Goods என்றழைக்கும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏசி போன்ற பொருட்களைக் கூறலாம்) நிறுவனமாக உருவாக்கியதில் வேணுகோபால் தூத்துக்குப் பெரிய பங்குண்டு.

தொடக்கத்தில் டிவி செட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக தங்கள் பயணத்தைத் தொடங்கி, நாளடைவில் எல்லா வித கன்ஸ்யூமர் கூட்ஸ்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கியது வீடியோகான். இதனாலேயே "இந்தியாவின் ஒயிட் கூட்ஸ் ராஜா" என்கிற பட்டத்தோடு வலம் வந்தார் வேணுகோபால் தூத்.

ஒரு துடிப்பான தொழிலதிபருக்கே உரிய தோற்றத்தோடு, எல்லா வித தொழில்துறை சார் நிகழ்ச்சிகளிலும் பங்கெடுப்பது, பல்வேறு தனிப்பட்ட கார்ப்பரேட் பார்ட்டிகளில் கலந்து கொள்வது, பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்வதென 360 டிகிரி சுற்றிச் சுழன்று வலம் வந்தார். அந்த காலத்தில் ஒரு சாதாரண பத்திரிகையாளர் கூட வேணுகோபால் தூத்தை அணுகி பேசி விட முடியும் என்கிற அளவுக்கு பலதரப்பினரோடும் அணுக்கமான உறவைப் பேணி வந்தார் வீடியோகான் நிறுவனர்.

நம்பர் 1 கம்பெனி:

சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாத, ஒரு சிறிய நகரத்து இளைஞராக இந்திய வணிகத் துறையில் நுழைந்தவருக்கு அது ஒரு தடையாக இல்லை. அரசியல்வாதிகள், சக தொழிலதிபர்களோடு நல்ல உறவுமுறையைப் பேணி வந்தார் வேணுகோபால் தூத்.

1990கள் வரை இந்தியாவில் பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய மிக அதிகமாக இறக்குமதி வரி, சுங்க வரி போன்றவைகளைச் செலுத்த வேண்டி இருந்தது. இதனாலேயே பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களால் இந்தியாவில் கால் பதிக்க முடியவில்லை. அது வீடியோகான் நிறுவனத்துக்கு ஒரு மிகப் பெரிய சாதக அம்சமாக இருந்தது.

கிரிக்கெட் பிரபலங்களை வைத்து விளம்பரப்படுத்துவது போன்ற அடித்து நொறுக்கும் பிராண்டிங் நடவடிக்கைகள், நல்ல விநியோகத் திட்டம், சரியான விநியோகச் சங்கிலி ஆகிய காரணங்களால் சுமார் இரு தசாப்தங்களுக்கு இந்தியாவில் வீடியோகான் நிறுவனத்தை எவராலும் அசைக்க முடியவில்லை எனலாம்.

Videocon venugopal
டாடா குழுமம் உருவாக்கிய இந்திய குடியரசுத் தலைவர்- ஒரு வரலாற்றுப் பதிவு

1991ஆம் ஆண்டு, பி வி நரசிம்மா ராவ் காலத்தில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த போது எல் பி ஜி என்றழைக்கப்படும் உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு சாம்சங் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மெல்ல இந்திய சந்தையைப் பிடிக்கத் தொடங்கியது. அப்போது கூட, வீடியோகான் 2ஆவது அல்லது 3ஆவது இடத்திலேயே இருந்தது என்றால் வீடியோகான் எந்த அளவுக்கு இந்திய சந்தையில் வேறூன்றி இருந்தது என்பதைப் நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

2008 - 09 காலகட்டம் வரை கன்ஸ்யூமர் கூட்ஸில் மட்டுமே பெரிய அளவில் கவனம் செலுத்தி வந்த வீடியோகான் நிறுவனம். அச்சந்தையில் ஒரு நல்ல நிலையிலேயே தொடர்ந்தது.

சொதப்பல் ஆரம்பம்

2009ஆம் ஆண்டில் வீடியோகான் திடீரென மொபைல் ஃபோன் சந்தையில் குதித்தது. 2016ஆம் ஆண்டு ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் குதித்தது. அடுத்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியத் துறையில் கால் வைத்து வழுக்கி விழுந்தது.

திடீரென தொலைத் தொடர்புத் துறையில் நுழைந்து இந்தியாவில் வெகு சில பகுதிகளில் மட்டும் வியாபாரம் செய்துவிட்டு, நெருக்கடிகளைத் தாக்குபிடிக்க முடியாமல் தன் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் விற்று வெளியேறியது.

இன்ஷூரன்ஸ் துறையிலும் பூஜை போட்டு கம்பெனியைத் தொடங்கி கை காலை உடைத்துக் கொண்டது வீடியோகான்.

இப்படி கண்டமேனிக்கு வியாபாரத்தைப் பெரிதாக்க வாங்கிய கடன்கள் 2012ஆம் ஆண்டிலேயே வீடியோகான் நிறுவனத்தின் கழுத்தை நெறிக்கத் தொடங்கின. 2015 - 16 காலகட்டத்தில் வீடியோகான் நிறுவனத்தின் கடன் அளவு கட்டுக்கடங்காமல் வெடிக்கத் தொடங்கின.

Videocon venugopal
UAE : நிதி மோசடி - மிகப்பெரிய சிக்கலில் சிக்க இருக்கும் அரபு அமீரகம் - பொருளாதாரம் வீழுமா?

அதன் விளைவாக கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவின் திவால் விவகார நீதிமன்றம், வீடியோகான் நிறுவனம் திவாலாகிவிட்டதாகக் கூறி திவால் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியது.

இப்படி தொழிலில் மட்டும் தோற்றிருந்தால் கூட, என்னமோ நேரம் சரியில்லை போல, அதான் ஒரு காலத்தில் ராஜா போலிருந்த மனிதர் தற்போது தரை தட்டிவிட்டார் என மக்கள் கருதி இருப்பர்.

ஆனால் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியான, 2009 - 11 காலத்தைச் சேர்ந்த சில முறைகேடுகள், வீடியோகான் நிறுவனத்தைத் தாண்டி, வேணுகோபால் தூத்தின் தனிமனித பிம்பத்தையும் சிதைத்தது.

3,250 கோடி கடன் பிரச்னை:

வீடியோகான் நிறுவனம், தன் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள ஜூன் 2009 - அக்டோபர் 2011 ஆண்டு வாக்கில் ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பல தவணைகளில் (ஆறு தவணை என்கிறது தி இந்து பத்திரிகை) சுமார் 1,875 கோடி ரூபாயை கடனாகப் பெற்றது.

அப்போது ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக சந்தா கோச்சர் பதவியில் இருந்தார். அவருடைய கணவர் தீபக் கோச்சர். இப்படிக் கொடுக்கப்பட்ட கடன்கள் ஐசிஐசிஐ வங்கியின் செயல்படாத கடன்களில் சென்று சேர்ந்தது.

அதோடு ஐசிஐசிஐ வங்கி கடன் கொடுப்பதற்கான கொள்கைகளை சரியாக பின்பற்றவில்லை, பல விதிகளை மீறி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் கொடுத்ததாகக் கூறப்பட்டது.

சந்தா கோச்சரும், அவருடைய கணவர் தீபக் கோச்சரும் சேர்ந்து திட்டமிட்டு தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதை எல்லாம் விட, ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து கடன் வாங்கிய அடுத்த நாளே, நு பவர் என்கிற தீபக் கோச்சரின் (சந்தா கோச்சரின் கணவர்) நிர்வகித்து வந்த NuPower Renewables Ltd (NRL) என்கிற கம்பெனியில் வேணு கோபால் தூத் 64 கோடி ரூபாயை முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வேணுகோபால் தூத் மேற்கொண்ட இந்த முதலீட்டுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சந்தா கோச்சர் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சர் தொடர்ந்து கூறி வந்தனர்.

Videocon venugopal
Jio அம்பானி கதை: அரசியல் சதுரங்கத்தை சாதுர்யமாக ஆடிய திருபாய் | பகுதி 15

ஆக, ஐசிஐசிஐ வங்கியின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் இது ஐசிஐசிஐ வங்கியின் பங்குதாரர்களை பாதிக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த பிரச்னை 2016ஆம் ஆண்டு வெளியே வந்த போது பெரிய அளவில் யாரும் கவனிக்கவில்லை. 2017ஆம் ஆண்டே வீடியோகான் நிறுவனத்துக்கு கொடுத்த கடன்கள் என் பி ஏ பட்டியலில் சேர்க்கப்பட்டபோது பலரின் கவனத்தை ஈர்த்தது.

இந்த விவகாரம் மெல்ல Serious Fraud Investigation Office (SFIO) கைக்குச் சென்று, ஐசிஐசிஐ விவகாரத்தை விசாரிக்க இந்திய கார்ப்பரேட் அமைச்சகத்திடம் அனுமதி கோரியது.

2018ஆம் ஆண்டிலேயே பி என் ஶ்ரீகிருஷ்ணா என்கிற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், ஐசிஐசிஐ வங்கிக் கடன் விவகாரத்தில் ஒரு சுயாதீன விசாரணையை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் சந்தா கோச்சர் தன் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைப் பொறுப்பில் (சி இ ஓ & எம் டி) இருந்து விலகினார்.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாத காலத்தில் அமலாக்கத் துறை சந்தா கோச்சருக்கு எதிராக சார்ஜ் ஷீட்டை சமர்பித்தது. மத்திய புலனாய்வு அமைப்பான சி பி ஐ, 2022 மே மாதத்தில் சந்தா கோச்சருக்கு எதிராக வழக்கு தொடுத்து, முதல் தகவல் அறிக்கையைச் சமர்பித்தது.

இந்த வழக்கைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் சந்தா கோச்சர் & அவரது கணவர் தீபக் கோச்சர் சி பி ஐயால் கைது செய்யப்பட்டனர். மறுபக்கம் வேணுகோபால் தூத் அவர்களும் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவுக்கு கலர் டிவி கொண்டு வந்த முன்னணி கம்பெனிகளில் ஒன்றான வீடியோகான், இன்று இந்தியாவில் இருக்கும் இடம் தெரியாமல் மோசடி வழக்குகளில் சிக்கி, அதன் நிறுவனர் வேணுகோபால் தூத் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

ஒரு தவறான முடிவு, அதை சமாளிக்க தவறான பாதையில் மேற்கொள்ளும் பயணம், உங்கள் வாழ்கையையே மாற்றிவிடும் என்பதற்கு வீடியோகானும், வேணுகோபால் தூதுமே சாட்சி.

Videocon venugopal
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com