இயற்கை பல அவிழ்க்க முடியாத ஆச்சரியங்களை உள்ளடக்கியது. மனித சிந்தனைக்கு எட்டாத மர்மங்கள் இன்றும் இருக்கின்றன.
மரண பள்ளத்தாக்கு குறித்து கேள்விப்பட்டிருப்போம். ரத்த பனிப்பாறை, காந்த மலை என இந்த மர்மங்களின் பட்டியல் நீள்கிறது. அந்த வகையில், எலும்புக்கூடுகள் ஏரி ஒன்று இந்தியாவில் இருக்கிறது. அது பற்றி தெரியுமா?
இங்கு எலும்புக்கூடுகள் எப்படி வந்தன? இதன் பின்னால் இருக்கும் உண்மை என்ன?
சுமார் 16,500 அடி கடல்மட்டத்திற்கு மேல், இமயமலைத் தொடரில் அமைந்திருக்கிறது ரூப்குண்ட் ஏரி. 130 அடி அகலம் உள்ள இந்த நீர்நிலை, வருடத்தின் பெரும்பகுதிக்கு உறைந்தே இருக்கும்.
உறைந்திருக்கும் காலத்தில் அமைதியான ஒரு பிம்பத்தை கொடுக்கும் இந்த ஏரியில், கதிகலங்க வைக்கும் அமானுஷ்யம் அடங்கியிருக்கிறது.
பனிக்கட்டிகள் உருகி ஏரியில் நீர்த்தேங்கும்போது தான் அதனுள் இருக்கும் எலும்புக்கூடுகள் வெளிப்படுகின்றன. நூற்றுக்கணக்கில் குவிந்திருக்கும் இந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் மனிதர்களுடையது.
சில எலும்புகளில் சதைகள் கூட அப்படியே இருக்கும்.
இதனை 1942 ஆம் ஆண்டு வன அதிகாரியான எச் கே மதவால் என்பவர் கண்டறிந்தார். இவை மனிதர்கள் எலும்புக்கூடுகள் தான் என்றாலும், ஏரி அமைந்திருக்கும் இடத்திலிருந்து 5 நாட்கள் தொலைவில் அமைந்திருக்கிறது மனிதர்கள் வாழத் தகுதியான இடம். எனில் இவர்கள் யார்?
இந்த ஏரியில் மனித எலும்புக்கூடுகள் எப்படி வந்தன? இவை பத்திரமாக பாதுகாக்கப்படுவதும் எப்படி?
இந்த எலும்புக்கூடுகள் மன்னர் ஜசித்வால் மற்றும் அவரது குடும்பத்தினருடையது என பரவலாக நம்பப்படுகிறது.
மன்னருக்கு குழந்தை பிறக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக, ஆட்டம் பாட்டம் கச்சேரியுடன், மன்னர் ஜசித்வால், அவரது மனைவி, அவரது படையினர் மற்றும் நடனக்கலைஞர்கள் நிறைந்த பட்டாளம் இவ்வழியாக புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மன்னரின் ஏதோ ஒரு செயல் மலைகளின் கடவுளாக பார்க்கப்படும் நந்தா தேவியை கோபமடையச் செய்துள்ளது. இதனால் பெரும் பனிப்புயல் ஒன்று ஏற்பட்டு அதில் மன்னரின் பரிவாரம் முழுக்க உயிரிழந்தனர்.
இவர்களின் எலும்புக்கூடுகள் தான் இந்த ரூப்குண்ட் ஏரியில் நிறைந்திருப்பதாக நம்பப்படுகிறது.
மற்றொரு புறம், பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவை கைப்பற்ற நினைத்த ஜப்பானிய ராணுவ வீரர்கள் இங்கு சிக்கி உயிரிழந்ததாகவும், ஏரியில் இருப்பது அவர்களின் எலும்புக்கூடு என்றும் ஒரு கதை இருக்கிறது.
இவர்கள் அனைவரும் ஒரு கொடிய நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் என்ற கதையும் சொல்லப்படுகிறது.
மலைக்கடவுளான நந்தா தேவியின் பேச்சை கேட்காமல் பக்தர்கள் சிலர் ஒரு முறை புனித யாத்திரை மேற்கொண்டனர். கோபமடைந்த நந்தா தேவி இவர்கள் மீது அதிக எடைக் கொண்ட இரும்பு உருளைகளை தள்ளிவிட்டு அவர்களை கொன்றதாக சொல்லப்படுகிறது.
அதற்கான ஆதாரங்களும் இந்த எலும்புகூடுகளில் இருப்பதாக கூறுகிறது பிபிசி தளத்தின் அறிக்கை.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தொல்லியல் ஆராய்ச்சிகள், இவை சுமார் 1200 வருடங்கள் பழமையாக இருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது.
இந்த எலும்புக்கூடுகள் அனைத்துமே ஒரே காலக்கட்டத்தை சேர்ந்தவை அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இறந்த இவர்கள் ஒரே பகுதியை சேர்ந்தவர்களும் இல்லை.
ஒரு சில எலும்புக்கூடுகள் தெற்கு ஆசியப் பகுதியை சேர்ந்தவர்களுடையதாக இருக்கின்றன. இவர்கள் 7 ஆம் நூற்றாண்டு முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஒரு சில எலும்புக்கூடுகள் 19வது நூற்றாண்டை சேர்ந்தவர்களுடையது எனவும், இவர்கள் இன்றைய ஐரோப்பாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
சுமார் 38 எலும்புக்கூடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மரபணு மாதிரிகளில் 14 பேர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்
இவர்களது உடல்களில் காயங்கள் இல்லை. ஆயுதங்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. ஆனால், ஆடை அணிகலன்கள் இருக்கின்றன. ஆண், பெண், குழந்தைகள் என அனைவரின் எலும்புக்கூடுகளும் இருக்கின்றன.
அனைவருமே நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. எனில் இந்த எலும்புக்கூடுகள் குறிப்பிட்ட இந்த இடத்தில் எப்படி குவிந்தன என்பதற்கான அறிவியல் பூர்வமான விளக்கமோ, அல்லது இதிகாச விளக்கமோ இன்று வரை இல்லை.
அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு தான் வருகின்றன. இப்படித் தான் இந்த ஏரிக்கு எலும்புக்கூடு ஏரி என்ற பெயரும் வந்தது
இந்த மர்மமே இன்றுவரை அதிக சுற்றுலா பயணிகளை இந்த ரூப்குந்த் ஏரிக்கு ஈர்த்துவருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust