பாப் பீமன் : 53 ஆண்டுகளாக முறியடிக்கபடாத கருப்பின போராளியின் சாதனை - நம்பிக்கை பகிர்வு

இனவாத கருத்துகளுக்கு எதிராக கருப்பினத்தவர்களோடு சேர்ந்து சில புறக்கணிப்பு போராட்டங்களில் பாப் பீமன் கலந்துகொண்டார். இதனால் பீமானுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகையை அவர் இழந்திருந்தார்
பாப் பீமான்
பாப் பீமான் ட்விட்டர்

இறைவனோ, இயற்கையோ, மாயமோ, மந்திரமோ ஒரு சில சம்பவங்கள், சாதனைகள் உலகில் ஒருமுறை மட்டுமே நிகழும். அது காலப் போக்கில் பல தசாப்தங்கள் கடந்து வேறு ஒருவர் முறியடிக்கலாம் அல்லது அச்சாதனையை எவரும் தொட முடியாமல் நிலைத்தும் நிற்கலாம்.

உதாரணத்துக்கு இலங்கை அணிக்கு எதிராக ரோஹித் ஷர்மா அடித்த 264 ரன்களைச் சொல்லலாம். அதே ரோஹித் ஷர்மா இப்போது நினைத்தால் அந்த மேஜிக்கை நிகழ்த்த முடியாது.

அப்படி, இன்றுவரை ஒலிம்பிக் போட்டிகளில் எவரும் உடைக்க முடியாத சாதனை படைத்த கருப்பின வீரனின் கதையைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்

யார் இவர்?

நியூயார்க் நகரத்தின் தெற்கு ஜமைக்கா பகுதியில் பிறந்தவர் ராபர்ட் பீமன். மிகச் சிறிய வயதிலேயே, காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தாயை இழந்தார்.

தாய்வழிப் பாட்டியிடம் வளர்ந்த பாப் பீமன், சற்றே குறும்புகள் செய்யும் சிறுவனாக இருந்தார்

பள்ளியில் லேரி எல்லிஸ் என்கிற பிரபல தடகள பயிற்றுநரால் அடையாளம் காணப்பட்டார். அதன் பிறகு அவர் வாழ்கையில் தடகளம் அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளத் தொடங்கியது.

பாப் பீமான்
Mary Bell: பாலியல் தொழிலாளியின் மகள் சீரியல் கில்லரான கதை - ஒரு விறுவிறு வரலாறு

15 வயதிலேயே 7.34 மீட்டர் தூரம் தாண்டிய பாப் பீமன், உடல் ரீதியாகவே நீளம் தாண்டும் திறனோடு பிறந்தவர் போலிருந்தார் என்கிறது சில விளையாட்டு சேனல்கள் மற்றும் வலைதளங்கள்.

தன் 22ஆவது வயதில் 8.15 மீட்டர் தூரத்துக்கு மேல் தாண்டி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார் பீமான்.

மறுபக்கம், பிரிகம் யங் என்கிற கிறிஸ்தவ மதத் தலைவர் மற்றும் அரசியல்வாதி, பல தசாப்தங்களுக்கு முன் சில இனவாத கொள்கைகளை முன்வைத்திருந்தார்.

இதற்கு எதிராக கருப்பினத்தவர்களோடு சேர்ந்து சில புறக்கணிப்பு போராட்டங்களில் பாப் பீமன் கலந்துகொண்டார். இதனால் பீமானுக்கு டெக்ஸாஸ் எல் பசோவில் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகையை அவர் இழந்திருந்தார் என்கிறது இ.எஸ்.பி.என் வலைதளம்.

ஒருவழியாக 1968 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பாப் பீமனுக்குக் கிடைத்தது.

பாப் பீமான்
Coober Pedy: பாலைவன பூமிக்குள் பளபளக்கும் வினோத நகரம்- சுரங்கங்களில் வாழும் மக்களின் கதை!

1968 மெக்ஸிகோ ஒலிம்பிக்ஸ்:

1968 ஒலிம்பிக் போட்டிகள் மெக்சிகோவில் நடந்தது. ஆனால், அதிர்ஷ்டம் இவர் பக்கம் இல்லாதது போல இருந்தது.

பாப் பீமன், நீளம் தாண்டுதல் களத்தில் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற முடியாமல் சொதப்பிக் கொண்டு இருக்கிறார். முதல் இரு முயற்சிகளும் ஃபவுலாகிவிட்டன.

தன் மூன்றாவது முயற்சியை திருத்தமாக மேற்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார் அந்த அமெரிக்க கருப்பின வீரர்.

பீமானோடு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த சக அமெரிக்க வீரரான ரால்ஃப் பாஸ்டன், பீமனை ஆசுவாசப்படுத்தி சில அறிவுரைகளை வழங்கினார்.

மூன்றாவது முயற்சியில் 8.19 மீட்டர் தூரம் தாண்டி, ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் இரவு, அவருக்கு மனமே சரியில்லை. தன் வாழ்வில் எல்லாமே தவறாக நடப்பதாக வருத்தப்பட்டார். மேலும் அன்று இரவு, அவர் டகிலா அருந்தியதாகவும் சில வலைதளங்கள் குறிப்பிடுகின்றன.

அந்த நாள்:

நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டி நாளன்று, எல்லா சுக துக்கங்களையும் மறந்து, எண்ண சலனமற்ற, நிகழ்காலம் என்கிற பரிசை மட்டும் அனுபவிக்கும் யோகியைப் போல களத்துக்கு வந்தார் பாப் பீமன்.

அருகில் அமெரிக்காவின் ரால்ஃப் பாஸ்டன், சோவியத் ரஷ்யாவின் இகோர் டெர் ஓவனேசியன் போன்ற நீளம் தாண்டுதல் போட்டியின் ஜாம்பவான்கள் இருந்தனர். அப்போட்டியில் பாப் பீமன் ஒரு இளங்கன்று, அவ்வளவு தான்.

அவர் பதக்கம் வெல்வார் என்று கூட யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை.

பாப் பீமன் தன்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்கான வாய்ப்பு வந்தது. ஓடத் தொடங்கியதிலிருந்து ஆறு, ஏழு நொடிகளுக்குள்... துள்ளிக் குதித்து பறந்து வந்து விழுந்தார்.

என்ன தாண்டினார், எவ்வளவு தூரம் தாண்டினார் என்பதை எல்லாம் கூட பெரிதாகக் கண்டுகொள்ளாமல், தன்னுடைய சிறப்பான முயற்சியைக் கொடுத்த மகிழ்ச்சியில் இருந்தார் பாப் பீமன்.

Keerthanaa Ravikumar

20 நிமிடம் நிறுத்தப்பட்ட போட்டி:

ஆனால் நீளம் தாண்டுதல் களத்தில் ஒரே சலசலப்பு.

1968 மெக்ஸிகோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் நீளம் தாண்டும் வீரர்களின் தூரத்தை அளக்க புதிய தொழில்நுட்பக் கருவி ஒன்றைப் பயன்படுத்தத் தொடங்கி இருந்தனர்.

அக்கருவியோ, பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்க முயன்றால் பிசிறடித்தது, குழம்பியது, திணறியது.

அங்க என்னப்பா பஞ்சாயத்து? என, சில மூத்த ஒலிம்பிக் நிர்வாகிகள் நீளம் தாண்டுதல் போட்டியை சில நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

புதிய தொழில்நுட்பம் சொதப்புவதால், பழைய படி மீட்டர் டேப்பை எடுத்து, பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்கத் தொடங்கிய போது, நடுவர்களின் கண்கள் ஆறடிக்கு விரிந்தன.

ஒன்றுக்கு, இரு முறை, மூன்று முறை, நான்கு முறை என பல முறை தூரத்தை அளந்தனர். பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்கும் நடவடிக்கை சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்தது என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல்.

பாப் பீமான்
சர்வதேச அளவில் சர்ச்சைகளை சந்தித்த 8 திரைப்படங்கள் - சுருக்கமான வரலாறு

ஒலிம்பிக் சாதனை:

கிட்டத்தட்ட எல்லா தடகள ஒலிம்பிக் அதிகாரிகளும் கூட கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்து அதிர்ந்து போயினர். பாப் பீமன் 8.90 மீட்டர் தூரம் தாண்டி இருந்தார்.

அந்த காலகட்டத்தில் சுமார் 8.35 மீட்டர் தான் உலக சாதனையாக இருந்தது என சில வலைதளங்கள் சொல்கின்றன. அச்சாதனையை 55 சென்டிமீட்டர் தூரம் கூடுதலாகத் தாண்டி, நீளம் தாண்டுதலில் ஓர் எவரெஸ்ட் ஒலிம்பிக் சாதனையைப் படைத்திருந்தார் பாப் பீமன்.

இதை முறையாக ஒலிம்பிக் அதிகாரிகள் அறிவித்த போது, சுமார் 6 அடி 3 அங்குளம் அஜானுபாகுவான தோற்றத்தில் மிரட்டிக் கொண்டிருந்த பாப் பீமன் ஒரு குழந்தை போல மைதானத்திலேயே விழுந்து கண்ணீர் விட்டு அழுதார். சக வீரர்கள் தேற்றி சமாதானப்படுத்தினர்.

இந்த 8.90 மீட்டர் நீளம் தாண்டுதல் என்பது, இன்று வரை முறியடிக்கப்படாத சாதனையாக இருக்கிறது

தற்போது உலக அளவில் மைக் பவல் என்கிற அமெரிக்க வீரர் 8.95 மீட்டர் தூரத்தைத் தாண்டி உலக சாதனை படைத்து இருக்கிறார்.

ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் யாரும் இதுவரை 8.90 மீட்டரைத் தாண்டவில்லை என்கிறது உலக தடகள சம்மேளனத்தின் தரவுகள்.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்ன என்றால், அந்த ஒரு முறைக்குப் பிறகு பாப் பீமனாலேயே, 8.90 மீட்டர் தூரத்தைத் தாண்ட முடியவில்லை.

அவ்வளவு ஏன்? 1968 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு பாப் பீமானால் அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் கூட வெல்ல முடியவில்லை. இதற்கு wind Assistance ஒரு முக்கிய காரணம் என்றும் கூறுகிறார்கள்.

மெக்ஸிகோ ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு, பாப் பீமனுக்கு தொடர்ந்து காலில் காயம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என அவரே கூறியதாக இ.எஸ்.பி.என் வலைதள செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாப் பீமனின் 8.90 மீட்டர் சாதனை, புராணக் கதைகளில் வரும் பீமனைப் போல கடந்த 53 ஆண்டுகளாக யாராலும் உடைக்க முடியாத இமய சாதனையாக இன்றும் நிலைத்து நிற்கிறது.

எதிர்காலத்தில் வரும் ஒலிம்பிக் போட்டிகளிலாவது இவர் சாதனையை முறியடிப்பார்களா?

எந்த நாட்டைச் சேர்ந்த இளைஞர் முறியடிப்பார் என்பதற்கெல்லாம் காலம் தான் விடை சொல்ல வேண்டும்.

பாப் பீமான்
பசுமை வீடுகள்: புல்வெளியே கூரைகளாய் - ஆஹா, இப்படி வீடுகளா? - க்யூட் ஸ்டோரி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com