மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்கும் போது, புரட்சி வெடிக்கிறது. அப்படி வெகுஜன மக்களின் புரட்சிக் கனல் வீதிக்கு வந்ததால் பல்வேறு சாம்ராஜ்ஜியங்கள், முடியாட்சிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. அதற்கு பிரான்ஸ் நாடும் ஒரு ஆகச் சிறந்த உதாரணம்.
பிரெஞ்சுப் புரட்சியின் போது, அந்நாட்டின் கடைசி ராணியாக இருந்த மரியா அன்டொனெட் (Marie Antoinette - 1755 - 1793) புரட்சியாளர்களால் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, முடியாட்சி ஒழிக்கப்பட்டு, பொது மேடையில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
பேரழியாகக் கருதப்பட்ட ஒரு ராணி, எப்படி பிரான்ஸ் நாட்டு போராட்டக்காரர்களால் சிர சேதம் செய்யப்பட்டார். அப்படி அவர் வாழ்கையில் செய்த தவறு என்ன? வாருங்கள் பார்ப்போம்.
1755ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் செல்வச் செழிப்பான சிசுவாகப் பிறந்த மரியா அன்டொனெட். தனது குழந்தைப் பருவத்தை வியன்னாவின் அரண்மனை மற்றும் ஹோஃப்பர்க் (Hofburg) அரண்மனை & ஷான்பர்ன் (Schönbrunn) அரண்மனையில் கழித்தார்.
மரியாவுக்கு ஓர் அரச குடும்ப வாரிசுக்கு எப்படி கல்வி வழங்கப்படுமோ, அப்படி வழங்கப்பட்டது. ஆடல், பாடல், இசைக்கருவிகள் வாசிப்பது போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றார்.
அவர் தனது மூத்த சகோதரி மரியா கரோலைனா உடன் பேரன்பு கொண்டிருந்தார். மரியாவின் இறுதிக் கால வாழ்க்கை வரை தன் சகோதரி உடனான நட்பு தொடர்ந்தது.
1756ஆம் ஆண்டில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா, வெர்சய்ல்ஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. 1754 - 63 வரையான ஏழு ஆண்டுகாலப் போரைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஒருவரையொருவர் ஆதரிப்பதே அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.
அமெரிக்காவில் இருந்த பிரிட்டிஷ், பிரெஞ்சு காலனிகளுக்கு உரிமை கோரி ஐரோப்பாவின் பல ஆதிக்க சக்திகளுக்கு இடையே தொடர்ச்சியாக போர்கள் மூண்டன.
இப்படிப்பட்ட நேரத்தில் இரு குடும்பத்துக்கும் இடையே ஒரு திருமண உறவு ஏற்பட்டால், இந்த ஒப்பந்தம் வலுப்பெறும் என்று கருதினர்.
அதன் விளைவாக, 14 வயதான மரியாவை பதினைந்தாம் லூயி மன்னரின் வாரிசான, லூயி - அகஸ்டேவுக்கு ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளாமலேயே ப்ராக்ஸி முறையில் 1770ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
1770ஆம் ஆண்டு மே 14ஆம் தேதிதான் மரியா, தன் கணவர் லூயி அகஸ்டேவை முதல் முறையாகச் சந்தித்தார். இந்த ஜோடிக்கு 1770ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி வெர்சய்ல்ஸ் அரண்மனையில் அதிகாரபூர்வமாக திருமணம் செய்துவைக்கப்பட்டது.
இந்த திருமண நிகழ்வைப் பார்க்க மக்கள் அலைமோதியதால் கூட்ட நெரிசலில் சில மரணங்கள் ஏற்பட்டதாகவும், அந்த மரணங்களை மறக்கடிக்கும் அளவுக்கு மரியாவின் அழகு அக்கூட்டத்தின் கண்களை மறைத்ததாகவும் கூறப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் செல்வத்துக்கா பஞ்சம்?
ஏற்கனவே அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மரியாவுக்கு, பிரான்ஸ் நாட்டின் மெருகூட்டப்பட்ட செல்வ செழிப்பான வாழ்க்கை வெகு விரைவிலேயே பழகிப்போனது. மெல்ல மரியா, சூதாட்டங்களில் கலந்து கொள்வதிலும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதிலும் ஆர்வம் காட்ட தொடங்கினார்.
அது போன்ற கேளிக்கை விஷயங்களில் அதிக நேரத்தை செலவிடத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
மரியாவின் கணவர் லூயி அகஸ்டே பொது விவகாரங்களில் பெரிய ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியே இருந்தார்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தம்பதி தங்களின் திருமணத்தை ரத்து செய்து கொள்ள முயன்றதாகவும், அது வெளியே தெரிய வந்து பெரிதும் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு மத்தியில் மன்னர் லூயி பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு 1774ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி காலமானார். இதனால் மரியாவின் கணவர் 16ஆம் லூயி அரியணை ஏற, 19 வயதே ஆன மரியா அன்டொனெட் பிரான்ஸ் நாட்டின் ராணியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
யார் விட்ட சாபமோ, அவர் செய்த பாவமோ... இதற்கு முன்னால் பதவியில் இருந்த அரசர்கள் செய்த தவறு, புதிதாக அரசனாகி இருந்த 16ஆம் லூயியை சோதிக்கத் தொடங்கியது.
மரியாவின் கணவர் லூயி அகஸ்டே, அரசவைக்கு தலைமை தாங்கிய அடுத்த சில வாரங்களிலேயே நாட்டில் கலவரம் வெடித்தது.
ஆண்டுக்கணக்கில் மக்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த அதிக வட்டி, பொய்த்துப்போன நிதிக் கொள்கைகள், பசி, பட்டினி என பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகள் மக்களை வெகுண்டெழச் செய்தன.
நாட்டில் கலவரச் சூழல் கருவுற்றிருந்த போது, ராணி மரியா அன்டொனெட் கருவுறாமல் இருப்பது அரச குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போதைய ரோமானிய பேரரசராக இருந்த மரியாவின் சகோதரர் ஜோசப், 1777ஆம் ஆண்டு வாக்கில் தன் தங்கையை பார்க்க அவரது அரண்மனைக்கே சென்றார்.
ஏன் தன் தங்கை இன்னும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என தெரிந்து கொள்வது தான் அவரது நோக்கமாக இருந்தது.
பாலியல் முன்னனுபவம், ஒருவர் மீது மற்றொருவருக்கு ஈர்ப்பு இல்லாதது என பல காரணங்கள் கூறப்பட்டன. எது எப்படியோ, ஜோசப் தன் தங்கையைப் பார்த்துவிட்டு நாடு திரும்பிய சில நாட்களிலேயே மரியா அன்டொனெட் கருத்தரித்தாகச் செய்தி வந்து சேர்ந்தது.
1778ஆம் ஆண்டு டிசம்பரில் மரியா தனது முதல் குழந்தையான மேரி தெரேஸைப் பெற்றெடுத்தார். இரண்டாவதாக 1781ஆம் ஆண்டு லூயிஸ் ஜோசஃப் என ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து லூயிஸ் சார்லஸ், சோஃபி என மொத்தம் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்தார் மரியா அன்டொனெட். ராஜ பரம்பரையின் தொடர்ச்சியாக மகன் பிறந்தது, ராஜ குடும்ப வட்டாரத்தை கொஞ்சம் ஆசுவாசப்பட அனுமதித்தது.
1780களில் பிரான்ஸ் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடையத் தொடங்கியது. அதன் விளைவாக தானியத்தின் விலை விண்ணைத் தொட்டது. அரசாங்கமும் பெருகி வரும் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளத் திணறியது.
அரண்மனைக்கு வெளியே வாழும் சாமானியர்கள் எப்படித் தங்களின் அன்றாட வாழ்கையைக் கழிக்கிறார்கள் என்கிற புரிதலே இல்லாமல், மகாராணி மரியா அன்டொனெட், தன் அரண்மனை அந்தப்புறத்தில் வழக்கமான சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அது பொதுவெளியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
அதைப் பார்த்தும் தன்னைத் திருத்திக் கொள்ளாத ராணி, பிரான்ஸ் மக்களின் கேலி கிண்டல், விமர்சனம் தாண்டி, கடுங்கோபத்துக்கு ஆளானார் ராணி மரியா.
இது போக, மரியா தனது நெருங்கிய ஆண் தோழர் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. கடைசியில் மரியாவுக்குப் பிறந்த குழந்தைகளின் உண்மையான தந்தை யார் என்கிற கேள்வி கூட எழுந்தது.
1783ஆம் ஆண்டில், வெர்சய்ல்ஸ் அரண்மனை மைதானத்தில் ஒரு விவசாய கிராமத்தை உருவாக்கத் தொடங்கியபோது ராணி மரியாவின் சொகுசு வாழ்கை புதிய உச்சத்தைத் தொட்டது. நாட்டு மக்கள் ஏழ்மையில் துடித்துக் கொண்டிருக்கும்போது தன்னையும் சாமானிய மக்களில் ஒருவராக காட்டிக் கொள்ள அவர் நாடகமாடியதாக சில காத்திரமான விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கிடையில், அரசர் லூயி அரசாங்கத்தை நிர்வகிக்கும் அணுகுமுறையால் பல தரப்பினரும் அதிருப்தி அடைந்தனர். வளர்ந்து வரும் அரசாங்கக் கடனை நிர்வகிப்பது, நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் விஷயங்களில் லூயி உறுதியற்றவராக இருந்தார்.
இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் மணிமகுடம் வைத்தாற் போல, ராணி மரியாவின் ஆடம்பர வாழ்க்கை அமைந்தது.
1789 மே 5ஆம் தேதி முதல் 1799 நவம்பர் 9ஆம் தேதி வரை பிரெஞ்சுப் புரட்சி நடந்ததாக பல வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
1789ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி, அரச குடும்பத்தின் மீதான வெறுப்பு உச்சத்தை எட்டியது. இதன் எதிரொலியாக, பாரிஸில் இருந்த சிறை ஒன்றின் மீது ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் நடத்தியது.
அந்நிகழ்வு பிரான்ஸ் நாட்டின் முடியாட்சியின் வீழ்ச்சியாகவும், பிரெஞ்சு புரட்சியின் தொடக்கமாகவும் அமைந்தது எனலாம்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த சில மாதங்களிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் வெர்சய்ல்ஸ் அரண்மனையைச் சுற்றி வளைத்து, அரசியல் ரீதியிலான சீர்திருத்தங்கள், ஆட்சி செய்யும் விதத்தில் மாற்றங்களை கோரி முழக்கமிட்டனர்.
முடியாட்சியை எதிர்த்த போராட்டக்காரர்கள், பின்னாளில் பாரிஸில் உள்ள டுயிலரீஸ் அரண்மனையில் அரச குடும்பத்தினரை சிறை வைத்தனர்.
பாரிஸ் நகரத்தில் புரட்சிகர நடவடிக்கைகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் இணைந்ததால், முடியாட்சி பற்றிய பொதுக் கருத்து மேலும் மோசமடைந்தது, குடியாட்சி முறை குறித்த விவாதங்கள் எழுந்தன.
இதனால், 1791ஆம் ஆண்டு வாக்கில், மரியா அன்டொனெட் தனது குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறி தன் தாய் நாடான ஆஸ்திரியாவில் தஞ்சம் புக திட்டமிட்டார்.
முயற்சி தோல்வியில் முடிந்தது. தப்பிக்க முயன்றபோது போராட்டக்காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் பாரிஸுக்கு கொண்டு வரப்பட்டனர்.
இனி போராட்டக்காரர்களை முழுமையாக எதிர்த்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது என்பதை உணர்ந்த பின், 1791ஆம் ஆண்டு, செப்டம்பரில் பதினாறாம் லூயி ஒரு அரசியலமைப்பு சார் ஆட்சியை பிரான்ஸ் நாட்டில் உருவாக்க ஒப்புக்கொண்டார்.
இதைவிட மிக முக்கியமாக, பிரான்ஸ் நாட்டு அரசர் என்கிற அதிகாரத்தை பிரெஞ்சுப் பேரவையுடன் பகிர்ந்து கொள்ளவும் ஒப்புக் கொண்டார். போராட்டக்காரர்களை தணிக்க அது போதுமானதாக இல்லை.
1792ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி போராட்டக்காரர்கள் டூயிலரீஸ் அரண்மனைக்குள் நுழைந்து, அரச குடும்பத்தை தீவிர கண்காணிப்பில் வைத்தனர். மன்னர் லூயி மற்றும் மரியாவைச் சிறைப்பிடித்தனர்.
அந்த காலகட்டத்தில், பிரெஞ்சுப் புரட்சியை எதிர்த்த பல பிரபுக்கள், அரச குடும்பத்தினர்கள்... என பலரையும் சிரச்சேதம் செய்து அலறவிட்டுக் கொண்டிருந்தது போராட்டக்காரர்கள் குழு.
1792ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்சின் பேரவை கூடி முடியாட்சியை ஒழிக்க வாக்களித்தது. அதே ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிரெஞ்சுக் குடியரசு உருவானது.
மறுபக்கம் பதினாறாம் லூயி தேசத்துரோக குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 1793ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி பாரிஸில் உள்ள பிளேஸ் டி லா கான்கார்டில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
ராணி மரியா அன்டொனெட் தனது மகனுடனேயே உறவு கொண்டதாக எல்லாம் குற்றம்சாட்டப்பட்டது. ஒருகட்டத்தில் ராணி மரியாவும் தேச துரோக குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பாரீஸ் நகரப் பொதுவெளியில் பிலேஸ் டி லா ரெவல்யூஷன் என்கிற இடத்தில் 1793 அக்டோபர் 16ஆம் தேதி சிரச் சேதம் செய்யப்பட்டார்.
மரணத்திற்குப் பிறகு, அவது உடல் பாரிஸில் உள்ள Madeleine என்ற அடையாளம் தெரியாதோரின் உடல்கள் புதைக்கப்படும் பகுதியில் தூக்கி வீசப்பட்டது. இந்த தம்பதியின் உடல் மிச்சங்கள் 1815ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி அன்று புனித டெனிஸ் தேவாலயத்தில் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust