நாட்டில் ஒரு எலி இருக்கக் கூடாது: ஸ்கெட்ச் போட்டு தூக்கும் நியூசிலாந்து – என்ன காரணம்?

நியூசிலாந்து ஏன் இப்படி எலிகளையும், அந்நிய வேட்டை விலங்குகளையும் முற்றாக அழிக்க நினைக்கிறது? உண்மையில் ஒரு நாடு முழுவதிலும் இருந்து எலிகளை ஒழிக்க முடியுமா? வேறு எங்காவது இப்படி செய்திருக்கிறார்களா? நியூசிலாந்து தனது இலக்கை அடைய என்ன வழிமுறையைப் பின்பற்றுகிறது? விரிவாகப் பார்ப்போம்.
நாட்டில் ஒரு எலி இருக்கக் கூடாது: ஸ்கெட்ச் போட்டு தூக்கும் நியூசிலாந்து
நாட்டில் ஒரு எலி இருக்கக் கூடாது: ஸ்கெட்ச் போட்டு தூக்கும் நியூசிலாந்துPexels

“எலித் தொல்லையால் தவித்த ஒரு நகரத்தைக் காப்பாற்ற மாயக் குழல் இசைப்பவர் ஒருவர் வந்தார். அவர் தெருவில் குழல் இசைத்தபடி நடக்க, நகரில் இருந்த எலிகள் முழுதும் அவர் பின்னால் வந்தன. எல்லா எலிகளையும் அவர் ஆற்றில் இறக்கி அழித்தார்” என்கிற கதையை பலர் படித்திருப்பீர்கள்.

எலிகளை மட்டுமல்ல, அதுபோல பல்கிப் பெருகும் பல வகை அந்நிய வேட்டை விலங்குகளை 2050ம் ஆண்டுக்குள் நாட்டில் இருந்து முற்றாக அழித்துவிட திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறது நியூசிலாந்து.

ஆனால், இந்த இலக்கை அடைய அவர்களுக்கு மாய குழல் இசைப்பவர் யாரும் இல்லை. ஏராளமான பணம், அறிவியல் தொழில்நுட்ப முறைகள், மனித வளம் ஆகியவற்றை ஈடுபடுத்தியே அவர்கள் இதை செய்யவேண்டும்.

2050ம் ஆண்டுக்குள் எலிகள் உள்ளிட்ட அந்நிய வேட்டை விலங்குகள் முழுவதையும் ஒழித்து பூர்வீகப் பறவையினங்களைக் காப்பாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது அந்நாடு.

நியூசிலாந்து ஏன் இப்படி எலிகளையும், அந்நிய வேட்டை விலங்குகளையும் முற்றாக அழிக்க நினைக்கிறது? உண்மையில் ஒரு நாடு முழுவதிலும் இருந்து எலிகளை ஒழிக்க முடியுமா? வேறு எங்காவது இப்படி செய்திருக்கிறார்களா? நியூசிலாந்து தனது இலக்கை அடைய என்ன வழிமுறையைப் பின்பற்றுகிறது? விரிவாகப் பார்ப்போம்.

உலகில் இதுவரை எலிகளை முற்றாக ஒழித்த மிகப்பெரிய தீவு தெற்கு ஜார்ஜியா தீவு அகும். தெற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள 170 கி.மீ. நீளமுள்ள தீவு இது. இந்த சாதனையை பிரிட்டனைவிட பெரிய பரப்பளவில் சாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த உயிரினக் காப்பாளர்கள். ஆனால், இதில் நடைமுறை மற்றும் அறம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதாக வேறு சில வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

நியூசிலாந்து நாட்டில் எலிகளையும், அந்நிய வேட்டை விலங்குகளையும் அழிக்கவேண்டும் என்று கருதுவதற்கு அந்நாட்டின் தனித்துவமான சூழலியலே காரணம்.

உலகின் மாபெரும் கண்டம் ஒன்றில் இருந்து 8.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துபோனது நியூசிலாந்து. பாலூட்டிகள் இவ்வளவு பல்கிப் பெருகாத காலம் அது. நிலம் வாழ் வேட்டை விலங்குகள் இல்லாத காரணத்தால், பறவைகள் நிலத்திலேயே கூடு கட்டின. பறக்காத பறவைகளும் வாழ்ந்தன.

அது தவிர, மனிதர்கள் கடைசியாக குடியேறிய பெரு நிலப்பரப்பு நியூசிலாந்துதான். 13ம் நூற்றாண்டில் பாலினீசியர்கள் தங்களோடு எலிகளையும், சுண்டெலிகளையும் கொண்டுவந்தார்கள். 6 நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெரிய பாலூட்டிகளைக் கொண்டுவந்தார்கள் ஐரோப்பியர்கள்.

பாதுகாப்பில்லாமல் அதுவரை வாழ்ந்துவந்த பறவை இனங்களை இந்தப் பாலூட்டிகள் கண்மூடித்தனமாக வேட்டையாடின.  மனிதர்கள் குடியேறிய பிறகு, அந்நாட்டின் பூர்வீக உயிரின வகைகளில் மூன்றில் ஒருபங்கு அழிந்து போயின. மிச்சமுள்ள உயிரினங்களைக் காப்பாற்றும் முயற்சிகளும் நீண்டகாலமாக நடப்பவைதான்.

1960களிலேயே நியூசிலாந்து நாட்டின் சில சின்னத் தீவுகளில் இருந்து எலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டன. ஆனால், எலிகள், வேட்டை விலங்குகளை ஒழிப்பது 2010ம் ஆண்டு முதல்தான் சமூக லட்சியமாக மாறத் தொடங்கியது. “20ம் நூற்றாண்டில் தீங்கு உயிரிகளாக கண்ணில் பட்டவை, தேர்ந்தெடுத்து அழிக்கும் நடவடிக்கைக்கு இலக்கானவை மான்கள், ஆடுகள் போன்ற தாவர உண்ணிகள்தான்.

நாட்டில் ஒரு எலி இருக்கக் கூடாது: ஸ்கெட்ச் போட்டு தூக்கும் நியூசிலாந்து
MUSA INGENS நியூ கினியா காடுகளில் வளரும் உலகின் மிக பெரிய வாழைப்பழ வகை | Interesting Facts

ஆண்டுக்கு 2.6 கோடி பறவைகளை அழிக்கும் விலங்குகள்

ஆனால், அகச்சிவப்புக் கதிர் மூலம் இயங்கும் கேமிராக்கள் வந்த பிறகு, இரவு நேரங்களில் எலி போன்ற சிறிய ரக பாலூட்டிகள் என்ன கேடுகளைச் செய்ய முடியும் என்பதை சில காணொளிப் பதிவுகள் காட்டின. பறவைகளின் முட்டைகளையும், குஞ்சுகளையும் எலிகள் தாக்குவதைக் காட்டும் வீடியோக்கள் ஏராளமாக பகிரப்பட்டன,” என்கிறார் ஆக்லாந்து பல்கலைக்கழக உயிரியலாளரும், 2050 எலி, வேட்டை விலங்கு ஒழிப்புத் திட்ட முன்னோடியும், ஆக்லாந்து பல்கலைக்கழக உயிரியலாளருமான ஜேம்ஸ் ரஸ்ஸல்.

ஒவ்வோர் ஆண்டும் நியூசிலாந்தில் 2.6 கோடி பறவைகள், எலிகள், வேட்டை விலங்குகளால் அழிவதாக அறிவித்தார் ஒரு சூழலியலாளர்.

2011ல் அந்நிய அந்நிய வேட்டை விலங்குகள் சுத்தமாக இல்லாத நியூசிலாந்து என்ற கனவை 2011ல் பிரபலமாக்கினார் புகழ் பெற்ற இயற்பியலாளர் சர் பால் கல்லகன். போதிய நிதியும், ஆட்களும் கிடைத்தால் அந்தக் கனவு சாத்தியம்தான் என்று கல்லகனும், இளம் உயிரினப் பாதுகாவலர்களும் குறிப்பிட்டனர். பிறகு, அரசியல் தலைவர்கள் இதில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர்.

நாட்டில் ஒரு எலி இருக்கக் கூடாது: ஸ்கெட்ச் போட்டு தூக்கும் நியூசிலாந்து
சிறை சுற்றுலா: ஒரு இரவு கைதியாக வாழ 500 ரூபாய் கட்டணம் - எங்கு?

சட்டம் வந்தது

மூன்று வகை எலிகள் (பசிபிக் எலிகள், கப்பல் எலிகள், நார்வே எலிகள்), மஸ்டிலிட் (ஸ்டோட்கள், வெசல்கள், ஃபெர்ரெட்டுகள்), போசம் ஆகியவை அழிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டு சட்டம் இயற்றப்பட்டது. 2050ம் ஆண்டு காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டது.

தேசிய அளவில் முற்றாக எலிகள், வேட்டை உயிரிகளை ஒழித்துவிட இலக்கு நிர்ணயித்தாலும், ஒரேயடியாக தேசிய அளவில் அதை செய்வது சிக்கலானது என்பதால், படிப்படியாக ஒரு சில நகரங்கள், ஒரு சில தீவுகளை எலிகள், வேட்டை விலங்குகள் இல்லாத பகுதிகளாக உருவாக்குவது என்கிற உபாயம் வகுக்கப்பட்டது. இப்படி உள்ளூர் அளவிலான சிறிய சிறிய திட்டங்களை உருவாக்கி, அவற்றுக்கு அரசாங்க, தனியார் நிதியாதாரங்களைத் திருப்பிவிடுவதற்காகவும், பலவித உத்திகளை பரிசோதித்துப் பார்க்கவும் Predator Free 2050 Ltd என்ற பெயரில் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. அத்தகைய உள்ளூர்த் திட்டங்களிலேயே, தலைநகர் வெலிங்டனில் இருந்து முற்றாக எலிகள், வேட்டை விலங்குகளை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘பிரிடேட்டர் ஃப்ரீ வெலிங்டன்’ புகழ் பெற்றதும், சவால் நிறைந்ததும் ஆகும். 2 லட்சம் மக்கள் வசிக்கும் அந்நகரில் இருந்து பல விதமான அந்நிய வேட்டை விலங்குகளை ஒழிக்கத் திட்டமிடப்பட்டது. அவற்றில் முக்கியமானவை எலிகள்தான். நகரச் சூழலில் பல்கிப் பெருக கூடியவை எலிகள்தானே?

இந்த திட்டத்தின் கீழ் 36 குழுக்கள் உருவாக்கப்பட்டன.

பயிற்சி இல்லாத எலி பிடிப்போர் பலருக்கும் பயிற்சியும் சாதனங்களும், எலி நஞ்சு போன்றவையும் அளித்து அவர்களை முறைப்படியான தீங்குயிரி அழிப்பாளர்களாக மாற்றுவது இந்தக் குழுக்களின் பணியாக இருந்தது.

எலிப் பொறிகளைவிட, ரத்தம் உறைவதைத் தடுத்து மெதுவாக உயிரைக் கொல்லும் நஞ்சு, எலி ஒழிப்பில் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இத்தகைய நஞ்சு, ஜிபிஎஸ் செயலிகள் ஆகியவை எலி பிடிப்போருக்கு வழங்கப்பட்டன. எலித் தொல்லை மிகுதியாக இருந்த இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

கேமிராவில், எங்காவது எலிகள் தென்பட்டால் அந்த இடங்களுக்கு அதிக அளவில் ஆட்களையும், தளவாடங்களையும் அனுப்பவேண்டும் என திட்டமிடும் குழு அறிந்துந்துகொள்ளும் என்கிறார்  பிரிடேட்டர் ஃப்ரீ வெலிங்டன் இயக்குநர் ஜேம்ஸ் வில்காக்ஸ்.

எலிகள் மிகவும் புத்திசாலியான சமூக விலங்குகள். தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என்று ஒரு விஷயத்தை அவை அடையாளம் கண்டுவிட்டால் அவற்றை அவை தவிர்க்கும். எனவே மெதுவாக செயல்புரிந்து கொல்லவேண்டும் என்பதற்காகவே ரத்தம் உறைதலைத் தடுக்கும் நஞ்சு பயன்படுத்தப்படுகிறது.

நஞ்சு கலந்த உணவை உண்ட எலிகள் தொலைவாக சென்று இறக்கின்றன. எனவே ஒரு எலி செத்துக் கிடந்தால் அது நஞ்சு சாப்பிட்டுதான் இறந்ததா? பொறி எந்த அளவுக்குப் பலனைத் தருகிறது? என்பதைப் புரிந்துகொள்வதற்காக செத்துக் கிடக்கும் ஒவ்வோர் எலியும் கூராய்வு செய்யப்படுகின்றன என்கிறார் வில்காக்ஸ்.

அது தவிர, செத்துக் கிடக்கும் எலி ஆணா? பெண்ணா? அது சமீபத்தில் குட்டிகள் போட்டதா? அங்கே இருப்பது ஒரு எலியா? இல்லை ஒரு கும்பலே இருக்கிறதா? என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்வதற்கும் எலிகளை பிணக் கூராய்வு செய்வது அவசியம்.

வெலிங்டனில் எலிகள், வேட்டை விலங்குகள் ஒழிப்பில் முன்னோடியாக திகழும் பகுதிகளில் ஒன்று மிராமர் தீபகற்பம். அங்கே இப்போது எலிகள் மிகவும் குறைந்துவிட்டன. அந்த தீபகற்பத்துக்கான பல பாரம்பரியப் பறவைகள் மீண்டும் அங்கே தென்படத் தொடங்கிவிட்டன. வெலிங்டனில் 1990ல் ஒரு சில ஜோடிகள் மட்டுமே உள்ளன என்று கண்டறியப்பட்ட ‘டுய்’ (tui) பறவைகளின் கீச்சுக் குரல்கள் இப்போது எங்கு பார்த்தாலும் கேட்கின்றன.

நாட்டில் ஒரு எலி இருக்கக் கூடாது: ஸ்கெட்ச் போட்டு தூக்கும் நியூசிலாந்து
அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா : உலகிலேயே அதிகமாக பில்லியனர்கள் இருக்கும் நாடு எது தெரியுமா?

8 கி.மீ. நீள தடுப்பு வேலி

முந்தைய காலத்தில் அமைக்கப்பட்ட வேட்டை விலங்குத் தடுப்பு வேலிகள் இப்போதைய  முயற்சியில் பெரிதும் உதவுகின்றன. உலகின் முதல் நகர்ப்புற சூழலியல் சரணாலயம் 1999ம் ஆண்டு இங்கே உருவாக்கப்பட்டது. நகரின் மையப் பகுதியில் இருந்து ஒரு மைல் தொலைவில் அமைக்கப்பட்ட இந்த இடம் இப்போது சீலாந்தியா என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் எலிகள், வேட்டை விலங்குகள் புகாமல் பாதுகாப்பது 8 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்ட விலங்குத் தடுப்பு வேலிகள்தான்.

இதற்குள் செல்லும் மனிதர்களின் பைகள் சோதிக்கப்பட்ட பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இரண்டு அடுக்கு கதவு பாதுகாப்பை தாண்டிதான் யாரும் உள்ளே செல்ல முடியும். ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் அரிதாக இருந்த பறவைகள் இப்போது பல்கிப் பெருகி அக்கம்பக்கத்தில் உள்ள பகுதிகளுக்கும் பரவிச் செல்கின்றன. இப்போது இது போல பல டஜன் வேலியிட்ட சரணாலயங்கள் நியூசிலாந்து நாட்டில் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது 700 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள புரூக் சரணாலயம். இது சீலாந்தியா போல மூன்று மடங்கு பெரியது. 2016ல் இங்கு வேலி அமைக்கப்பட்ட பிறகு உள்ளே இருந்த எலிகள் உள்ளிட்ட அந்நிய வேட்டை விலங்குகள் முற்றாக அழிக்கப்பட்டன.

வேலி மீது மரம் விழுந்தால் அலாரம் அடிக்கும்

இப்போது, வெளியில் இருந்து இத்தகைய விலங்குகள் உள்ளே வராமல் பார்த்துக்கொள்வதுதான் சவால். தொடர் கவனிப்பு மிக முக்கியம். தற்செயலாக ஒரு வேட்டைப் பறவை ஒரு எலியைக் கொண்டுவந்து போட்டுவிடலாம். வேலி மீது எங்காவது மரம் விழுந்து அதன் வழியாக ஒரு வேட்டை விலங்கு உள்ளே வந்துவிடலாம். எனவே, எங்காவது வேலியில் சேதாரம் ஏற்பட்டால் உடனடியாக அலாரம் ஒலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “நடு இரவில் அலாரம் ஒலித்தாலும் யாராவது ஒருவர் சென்று பார்ப்போம்,” என்கிறார் புரூக் சரணாலய ஆபரேஷன்ஸ் மேலாளர் நிக் ராப்சன்.

இது தவிர கேமிராக்கள், இங்க் பேட்கள் ஆகியவையும் வேட்டை விலங்குகள் உள்ளே நுழைந்துவிட்டால், அது குறித்து எச்சரிக்கை அளிக்கும். இவை எல்லாவற்றையும்விட முக்கியமான கண்காணிப்புக் கருவிகள் நாய்கள்தான். சில குறிப்பிட்ட வகை விலங்குகளை கண்டறியும் வகையில் நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு எலி நுழைந்தால் எங்கள் கருவிகள் கூட கண்டுபிடிக்கத் தவறிவிடும், ஆனால், நாய்கள் கண்டுபிடிக்கத் தவறாது என்கிறார் ராப்சன்.

எலிகள் எவ்வளவு தூரம் நீரில் நீந்தும் தெரியுமா?

தரையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் தண்ணீருக்குள் அமைந்திருக்கும் ராகியுரா அல்லது ஸ்டீவர்ட் தீவில் எலிகள் உள்ளன. ஆனால், மஸ்டிலிட் என்ற விலங்குகள் இங்கே சுத்தமாக இல்லை. தரையில் இருந்து மிக நீண்ட தொலைவில் இருப்பதால் அரிய வகை பறவைகள் இங்கே கூடு கட்டுகின்றன. ஆனால், இங்கே வேட்டை விலங்குகள் வந்துவிடாமல் பாதுகாப்பது சவாலான பணி. எலிகள் 800 மீட்டர் தூரம் மட்டுமே நீரில் நீந்தக் கூடியவை என்பதால், இந்த தீவு எலிகளிடம் இருந்து பெருமளவில் பாதுகாப்பாக உள்ளது.

நாய்க்கு ஃபேஸ்புக் பக்கம் – ஏன்?

இங்கே வருகிற படகுகளில் வேட்டை விலங்குகள், எலிகள் இருக்கின்றனவா என்று சோதிக்கும் வேலையை செய்கிறது ஒரு நாய். அந்த நாய்க்கு ஒரு ஃபேஸ்புக் பக்கம்கூட உள்ளது. அந்த நாயை நீங்கள் பின் தொடரலாம். சர்செட் என்ற இயற்கை பாதுகாப்பு அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக இங்கே எலிகள், பிற வேட்டை உயிரிகள் நுழையாமல் பாதுகாத்து வருவதால், தரையில் கூடுகட்டும் மட்டன் பர்ட்ஸ் என்ற பறவையினம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தப் பறவையினம் நியூசிலாந்து பெருநிலப் பரப்பில் காணாமலே போய்விட்டது.

நாட்டில் ஒரு எலி இருக்கக் கூடாது: ஸ்கெட்ச் போட்டு தூக்கும் நியூசிலாந்து
காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்
நாட்டில் ஒரு எலி இருக்கக் கூடாது: ஸ்கெட்ச் போட்டு தூக்கும் நியூசிலாந்து
கத்தார் முதல் ஓமன் வரை: இயற்கையாக காடுகளே இல்லாத உலகின் 4 நாடுகள்!

தானாக லோட் செய்துகொள்ளும் எலிப் பொறி

2050 திட்டத்தின் கீழ் ராகியுராவை பாதுகாக்க நிதியுதவி வழங்கப்படுகிறது. அதைக் கொண்டு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடிகிறது. பொறியில் சிக்கிய எலிகள் இறந்தவுடன் அவற்றை மண்ணில் உதறிவிட்டு மீண்டும் தானாக லோட் செய்துகொள்ளும் எலிப் பொறிகளை, இந்த நிதியுதவியால் வாங்கிக் கொள்ள முடிகிறது. இந்த தானியங்கி எலிப் பொறிகளைப் பராமரிப்பதும் மிக எளிது.

ராகியுராவுக்கு வெலிங்கடன் அளவுக்கு நிதியுதவி கிடைப்பதில்லை. ஆனால், வெறும் 440 பேர் மட்டுமே வசிக்கும் இந்த தீவில், இந்தப் பணியில் தன்னார்வலர்களாக இணைந்து பணியாற்ற 261 பேர் முன்வந்துள்ளனர்.

பெரிய எலி பிடித்தால் பரிசு

கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு எலிப் பொறிகள் விநியோகிக்கப்பட்டன. நிறைய எலி பிடித்தவர்களுக்கு, பெரிய எலியைப் பிடித்தவர்களுக்கு, பெரிய பல் உள்ள எலிகளைப் பிடித்தவர்களுக்கு, மிகுந்த அடர்ந்த முடியுள்ள எலியைப் பிடித்தவர்களுக்கு என்று விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன.

பூனைகள் வளர்ப்பவர்கள் பூனைகள் உடலில் மைக்ரோ சிப் பொறுத்தவேண்டும் என்ற விதியையும் சிர்செட் அமைப்பு விதித்துள்ளது. பறக்கும் திறனற்ற கிவி பறவைகளை பொம்மை என்று நினைத்து நாய்கள் கடித்துவிடக்கூடும் என்பதால், விரும்பும் உரிமையாளர்களின் நாய்களுக்கு ஒரு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் எலக்ட்ரானிக் பொம்மை கிவிகளோடு நாய்களை விளையாட விடுகிறார்கள். இந்த பொம்மை கிவிகளை நாய்கள் தொட்டால் அவற்றுக்கு லேசாக ஷாக் அடிக்கும். இப்படி கிவியை தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற எண்ணத்தை நாய்களுக்கு உண்டாக்குவதன் மூலம் கிவி பறவைகளுக்கு நாய்களிடம் இருந்து பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என்று யோசிக்கின்றனர்.

நாட்டில் ஒரு எலி இருக்கக் கூடாது: ஸ்கெட்ச் போட்டு தூக்கும் நியூசிலாந்து
ஓமன் : ஓர் அரபு நாட்டின் அசுர வளர்ச்சி - வியக்க வைக்கும் சுவாரஸ்ய வரலாறு

அப்போ மனுசன் யாரு?

ஆனால், 2050ல் எலிகள், அந்நிய வேட்டை விலங்குகள் இல்லாத நியூசிலாந்து நாட்டை உருவாக்கிவிடுவது சாத்தியமா, அது தேவையா என்று கேட்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் சீலாந்தியா நிறுவனர் ஜேம்ஸ் லின்ச் ஒருவர். உள்நாட்டுப் பறவைகள் வாழ எலிகள், அந்நிய வேட்டை விலங்குகள் சுத்தமாக அழிந்துவிடவேண்டும் என்பதில்லை. அவை கொஞ்சமாக இருந்தால் சிக்கலில்லை என்கிறார் அவர். நாடு முழுவதில் வேட்டை விலங்குகளை அழிப்பதற்குப் பதிலாக, வேலியிட்ட காட்டுப் பகுதிகளில் முற்றாக இவற்றை அழித்தாலே பறவைகள் மீண்டும் அதிகரித்துவிடும் என்கிறார் இவர்.

கடந்த 150 ஆண்டுகளாக நியூசிலாந்து நாட்டில் தீங்கிழைக்கும் உயிரிகள் என்று கருதப்பட்ட, முயல்கள், மான்கள் உள்ளிட்டவற்றை முற்றாக அழிக்க மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன என்கிறார் உயிரினப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் வேய்ன் லிங்க்லேடர்.

அறிவுத் திறன் மிகுந்த உயிரிகளை முற்றாக அழிப்பது சாத்தியமற்றது  மட்டுமல்ல, அறம் சார்ந்து தவறானதும் ஆகும் என்கிறார் அவர். “நிறைய பொருளைத் திரட்டி, வளங்களையும் செலவிட்டு, மக்களிடையே ஆர்வத்தை கிளறி மிகப்பெரிய கொடுமையை இழைத்துவருகிறோம். நாம் கொல்லும் விலங்குகளின் துயரம் குறித்து நாம் எப்படி பாராமுகமாக இருக்க முடியும்?” என்று கேட்கிறார் அவர்.

“சில விலங்குகளை கொடியவை என்று முத்திரை குத்தி, எதிரியாக்கி, அவற்றை அழிக்கிறோம். எனில், பாலூட்டிகளிலேயே மிக மோசமான ஆக்கிரமிப்பு உயிரினம், பிற உயிரிகளின் வாழிடங்களை அழிக்கிற இனம், மனித குலம்தானே. இந்த மனித குலம் தன்னோடு ஒரு தீவுக்கு கொண்டுவந்த உயிரினங்கள் மீது தானே போர் தொடுப்பதா?” என்று கேட்கிறார் அவர்.

சில கேள்விகளுக்கு விடை சொல்வது கடினமானது. இல்லையா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com