மனிதர்களுக்கு எப்போதும் மர்மங்களின் மீது ஒரு தீராத ஆர்வம் இருக்கும். அதற்கு திரில்லர் படங்கள் சக்கைபோடு போடுவதே ஓர் எதார்த்த சாட்சி.
அதே மர்மம் உண்மையாக, இன்று வரை தீர்க்கப்படாத ஒன்றாக இருந்தால், அந்த முடிவு கிடைக்காத சம்பவத்தைப் படிக்கவே ஒரு பெருங்கூட்டம் காத்திருக்கிறது. அப்படி இன்று வரை உலகில் தீர்க்கப்படாத மர்ம சம்பவங்கள், கொலைகள் குறித்து தான் பார்க்க போகிறோம்.
1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள சொமர்டன் கடற்கரையில் ஒரு ஆணின் சடலம் கண்டு எடுக்கப்படுகிறது. பிரமாதமான சூட் ஆடை, நன்கு பாலிஷ் செய்து மெருகேற்றப்பட்டிருந்த ஷீ... என நேர்த்தியாக உடையணிந்திருந்த அந்த மனிதர் மாரடைப்பு போன்ற இதய நோயால் இறந்திருக்கலாம் அல்லது விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதினர். ஆனால் பிரேத பரிசோதனை செய்த போது விஷத்துக்கான எந்த தடையமும் இல்லை.
இறந்த மனிதரின் உடையில் எந்த ஒரு பணப்பையோ, அடையாளங்களோ இல்லை. அவரது விரல் ரேகைகளை பரிசோதித்த போதும் எதனோடும் ஒத்துப் போகவில்லை. செய்தித்தாள்களில் இவரது படம் போட்டு விசாரித்தும் எதுவும் கிடைக்கவில்லை.
அந்த ஆணின் உடல் கிடைத்து சுமார் 4 மாதங்கள் கழித்து, புலன் விசாரனை அதிகாரிகள் அந்த நபரின் பேன்டில் ஒரு ரகசிய பாக்கெட்டைக் கண்டுபிடித்தார்கள். அதில் Rubáiyát என்கிற அரிதான புத்தகத்தில் இருந்து "Tamám Shud” என்கிற வார்த்தை மட்டும் இருக்கும் ஒரு சிறு காகிதத் துண்டு இருந்தது.
அந்த இரு சொல் எந்த Rubáiyát புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர். இதற்கிடையில் அந்த ஆணின் உடல் யாருடையது, அந்த மனிதர் யார்..? என்கிற விவரங்கள் ஏதும் தெரியாமலேயே நல்லடக்கம் செய்யத் தீர்மானித்தனர்.
சுமார் 8 மாதங்கள் கழித்து ஒரு நபர் காவல் நிலையத்துக்கு வந்து, அந்த ஆணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின், சொமர்டன் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த தன் காரின் பின்பக்கத்தில் Rubáiyát புத்தகம் இருந்ததாகக் கூறினார். இறந்த மர்ம நபரின் பேன்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 'தமம் ஷுத்' என்கிற சொல்லைக் கொண்ட காகிதம், அந்த புத்தகத்தோடு ஒத்துப் போனது. அப்புத்தகத்துக்குள் ஒரு தொலைபேசி எண் இருந்தது.
அது காவல் துறையை, அருகில் வாழ்ந்து வந்த ஜெசிகா தாம்சன் என்கிற பெண்ணிடம் கொண்டு சேர்த்தது. அவரை விசாரித்த போது, இறந்த ஆணைக் குறித்து எதுவும் தெரியாது என்று கூறினார். ஆனால் Rubáiyát புத்தகத்தை ஆல்ஃப்ரெட் பாக்ஸால் என்கிற நபருக்கு விற்றதாகக் கூறினார். ஆல்ஃப்ரெட்டோ உயிரோடு இருந்தார். இன்றுவரை சொமர்டன் கடற்கரையில் இறந்த மனிதர் யார் என எந்த விவரங்களும் தெரியவில்லை. Rubáiyát புத்தகத்தின் இரண்டு சொற்கள் எப்படி அவரின் ரகசிய பாக்கெட்டுக்குள் சென்றது என்றும் மர்மம் விலகவில்லை.
1971ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி, நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போர்ட்லேண்டில் இருந்து சியாட்டில் நகரத்துக்கு செல்லும் 305 விமானத்தில் $20 பயணச்சீட்டோடு ஏறினார் டேனியல் கூப்பர்.
சுமார் 40களில் மிடுக்கான வணிகர்கள் உடுத்தும் சூட், ஒரு ஓவர் கோட், பிரவுன் நிற ஷீ, வெள்ளை சட்டை, ஒரு கருப்பு டை அணிந்திருந்ததாகவும், கையில் ஒரு சிறு பெட்டி, ஒரு பிரவுன் நிற பேப்பர் பை வைத்திருந்ததாக கூறுகின்றனர்.
விமானம் வானில் பறக்கத் தொடங்கிய பின் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக ஒரு விமானப் பணியாளரைக் கூப்பிட்டு தன் பெட்டியைத் திறந்து காட்டினார் டேனியல் கூப்பர். பிறகு தனக்குத் தேவையானவற்றை எல்லாம் எழுதி விமானத்தின் கேப்டனிடம் கொடுக்கச் சொன்னார். பெரிய கில்லாடி, அவர்களிடம் ஒரு கிரைம் செய்துவிட்டு எவராலும் தப்பிக்க முடியாது, அவர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி என்ன... என அமெரிக்காவின் புகழ் பாடிக் கொண்டிருந்தவர்களுக்கே டி பி கூப்பரின் வழக்கு செக் வைத்தது. டி பி கூப்பரைப் பற்றி நெட்ஃப்ளிக்ஸில் ஒரு தனி வெப் சீரிஸே வந்துவிட்டது முடிந்தால் பாருங்கள்.
அன்று மாலைக்குள் 2 லட்சம் அமெரிக்க டாலர் வேண்டும், அதுவும் $20 நோட்டுக்களாக knapsack பையில் வேண்டும், விமானத்தின் முன்பக்கத்தில் இருக்கும் பாராசூட்களில் 2, விமானத்தின் பின்பக்கத்தில் இருக்கும் பாராசூட்களில் 2, விமானம் தரையிறங்கிய உடனேயே எரிபொருளை நிரப்பிக் கொள்ள ஒரு டிரக்... என பட்டியல் நீண்டது.
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்குப் பொறுப்பான எஃப் பி ஐ அமைப்பு, டி பி கூப்பர் கேட்டா எல்லாவற்றையும் சியாட்டில் விமான நிலையத்தில் தயாராக வைத்திருந்தது.
காவல் துறை & பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை நெருங்கக் கூட முடியாதபடி நேக்காக பணம் & பாராசூட்டை ஒரு விமானப் பணிப் பெண் மூலம் பெற்றுக் கொண்டார் டி பி கூப்பர். எல்லா பயணிகளும் சியாட்டில் நகரத்தில் இறக்கிவிடப்பட்டனர். விமான ஓட்டிகள் & 6 விமானப் பணியாளர்களோடு மீண்டும் வானில் பறக்கத் தொடங்கியது 305 விமானம்.
இப்போது மெக்ஸிகோ நகரத்தை நோக்கி 100 நாட் (185 கிமீ) வேகத்தில், 10,000 அடி உயரத்தில் பறக்கச் சொன்னார் டி பி கூப்பர். அதோடு கேபினில் அழுத்தம் இருக்கக் கூடாது, லேண்டிங் கியர் தரை இறங்கத் தயாராக இருக்க வேண்டும்.
ரெக்கை ஃப்ளாக்ஸ்கள் 15 டிகிரி தாழ்வாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். சுமார் 8 மணிக்கு மேல், சீயாட்டில் நகரத்தில் இருந்து ரெனோ நிவாடா பகுதிக்கு இடையில், விமானத்தின் பின் பக்க வாயில் வழியாக பணத்தோடும் பாராசூட்டோடும் டி பி கூப்பர் குதித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை. 45 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.
அமெரிக்கா உளவு விவகாரத்தில் பெரிய கில்லாடி, அவர்களிடம் ஒரு கிரைம் செய்துவிட்டு எவராலும் தப்பிக்க முடியாது, அவர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி என்ன... என அமெரிக்காவின் புகழ் பாடிக் கொண்டிருந்தவர்களுக்கே டி பி கூப்பரின் வழக்கு செக் வைத்தது. டி பி கூப்பரைப் பற்றி நெட்ஃப்ளிக்ஸில் ஒரு தனி வெப் சீரிஸே வந்துவிட்டது முடிந்தால் பாருங்கள்.
1947ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி, 22 வயதான எலிசபெத் ஷார்ட் என்கிற இளம்பெண், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள நார்டன் அவென்யூ பகுதியில் இடுப்பு வரை ஒரு துண்டாகவும், இடுப்புக்குக் கீழ் ஒரு துண்டாகவும் கச்சிதமாக வெட்டப்பட்டு பிணமாகக் கிடந்தார். உடலில் ரத்தமே இல்லை, மருத்துவர்கள் துல்லியமாக வெட்டியது போல் இருந்தது.
முகத்தில், உதட்டின் இரு பக்கத்திலும் காது வரை கிழிக்கப்பட்டு எப்போதுமே முகம் சிரிப்பது போல் இருந்தது. உடல் கிடந்த இடத்தில் ரத்தமே இல்லை.
எனவே கொலை செய்யப்பட்ட பிறகு இடம் மாற்றப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
எலிசபெத்தின் உடல் கிடைத்து 9 நாட்கள் கழித்து, செய்தித் தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் அச்சிடப்பட்ட எழுத்துக்களை வெட்டி ஒட்டி எழுதப்பட்ட கடிதம் ஒன்று அவ்வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த காவல் துறைக்கு வந்து சேர்ந்தது.
அதோடு, எலிசபெத்தின் பல உடமைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்திலும் இருக்கும் கை ரேகைகளை அழிக்க கேஸோலைன் கொண்டு கழுவப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து மார்ச் 14ஆம் தேதி பென்சிலால் எழுதப்பட்ட தற்கொலைக் கடிதம் ஒன்று, ஆண்கள் ஆடை குவிந்திருந்த இடத்தில் ஒரு ஷீவில் வைக்கப்பட்டு இருந்தது. அக்கடிதத்தில் நான் கொல்லப்படுவதில் இருந்து, காவல்துறை என்னை காப்பாற்றும் என காத்திருந்தேன் ஆனால் காப்பாற்றவில்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என பொருள்படும் விதத்தில் எழுதியதாக பல வலைதளங்களில் கூறப்படுகிறது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பல பேர் விசாரிக்கப்பட்டனர். ஆனால் இதுநாள் வரை ஒருவரையும் உறுதியாக குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை. 70 ஆண்டுகளாக இந்த வழக்கு தீர்க்கப்படாமல் தொக்கி நிற்கிறது.
அமெரிக்க பங்குச் சந்தையின் இதயம் என்றால் அது நியூயார்க் வால் ஸ்ட்ரீட் தான். 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பட்டப் பகலில், ஜே பி மார்கன் கட்டடத்துக்கு அருகில் ஒரு குதிரை வண்டி நிறுத்தப்பட்டது. அதை ஓட்டி வந்த ஒரு நபர் (அவரை விவரிக்க முடியவில்லை என்றே பல வலைதளங்கள் சொல்கின்றன) சட்டென வண்டியை நிறுத்திவிட்டு இரங்கிச் கூட்டத்தோடு கூட்டமாகக் கரைந்து போகிறார்.
ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த குதிரை வண்டி வெடித்துச் சிதறுகிறது. உடனடியாக 30 பேர் உயிரிழக்கின்றனர். அந்த வெடிப்பினால் பாதிக்கப்பட்டு சுமார் 300 பேர் படுகாயமடைகின்றனர். ஒவ்வொரு மணி நேரமும் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. தொடக்கத்தில் இது ஒரு வெடி விபத்தாகவே பார்க்கப்பட்டு, பிறகு தான் இது குண்டுவெடிப்பு என விசாரிக்கத் தொடங்கியது நியூயார்க் காவல் துறை.
பங்குச் சந்தை, நிதி விவகாரம் என்பதால் ராவோடு ராவாக விபத்து நடந்த சுவடே தெரியாத அளவுக்கு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு இடம் சரி செய்யப்பட்டது. அடுத்த வியாபாரம் வழக்கம் போல் நடந்தது.
முதல்கட்ட விசாரனையில் குதிரை வண்டிக்குள் டைனமைட் + இரும்புத் துண்டுகள் கிடந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு டைமர் வைத்து குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டதாக சில வலைதளங்கள் கூறுகின்றன.
நியூயார்க் காவல் துறை தாண்டி, அமெரிக்க ரகசிய சேவைப் படை, எஃப் பி ஐக்கு முந்தைய உள்நாட்டு பாதுகாப்புப் படையான பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்... என பல அமைப்புகள் இந்த வெடிகுண்டு சம்பவத்தைக் கையில் எடுத்தன.
சில அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கடுமையான சொற்களோடு சில விளம்பரத் துண்டுகள் கிடைத்தன. அதே போல கடந்த ஆண்டு இரு குண்டு வெடிப்புப் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்ட விளம்பரத் துண்டுச் சீட்டுகள் வடிவமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விளம்பரத் துண்டுச்சீட்டு எங்கு அச்சிடப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க பெருமுயற்சி எடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.
தொடக்கத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ராஜகவாதி லூகி கலியானி இந்த வெடிகுண்டை வெடிக்க வைத்திருக்கலாம் என சந்தேகித்தது. ஆனால் அதை நிரூபிக்க முடியவில்லை. அதோடு கலியானி ஏற்கனவே அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப்பட்டது. எல்லா வழக்குகளைப் போல இந்த வழக்கும் ஒரு கட்டத்தில் பெரிய முன்னேற்றமின்றி கோப்புகளுக்கு இடையில் மூழ்கிப் போனது.
கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சுற்றுலா வந்திருந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் எலிசா லாம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள சிசில் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினார். பிப்ரவரி 1ஆம் தேதியில் இருந்து அவர் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை, அதே நேரம் தன் பெற்றோரிடமும் பேசவில்லை என காவல் துறையிடம் புகாரளிக்கப்பட்டது. தேடுதல் வேட்டை தொடங்கியது.
18 நாட்கள் கழித்து பிப்ரவரி 19ஆம் தேதி, சிசில் ஹோட்டலின் மேற்கூரையில் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் டேங்கில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். கடைசியாக சிசில் ஹோட்டலின் லிஃப்டில் அவர் வித்தியாசமாக நடந்து கொண்டது பதிவாகி இருந்தது. சொல்லப் போனால் அந்த காணொளிப் பதிவு அப்போது இணையத்தில் வைரலானது. அவர் யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருப்பது போலிருந்தது.
எலிசா லாம், பை போலார் டிஸ்ஆர்டர் என்கிற மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும், அதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்து வந்தார் என்றும் செய்திகள் வெளியாயின. ஆனால் மருத்துவர்கள் பரிந்துரைத்த அளவுக்கு அவர் சரியாக மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என காவல் துறை கண்டுபிடித்தது. எனவே அவர் பை போலார் டிஸ்ஆர்டர் பிரச்னையின் தாக்கத்தால் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறி வழக்கு முடிக்கப்பட்டது.
ஹோட்டல் பணியாளர்களுக்கு மட்டுமே பாஸ்வேர்ட் போட்டு கடந்து செல்லக் கூடிய கதவுகளை எலிசா லாம் எப்படிக் கடந்தார்? ஏணி போட்டு ஏறி செல்லக் கூடிய தண்ணீர் டேங்கில் அவர் எப்படி ஏறினார். அப்படியே தண்ணீர் டேங்கில் இறங்கினாலும் உள்ளே இருந்த படி எப்படி சுமார் 10 கிலோ (20 பவுண்ட்) எடை கொண்ட மூடியை வைத்து டேங்கை மூட முடியும் என்கிற கேள்விகளுக்கு இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை.
1888ஆம் ஆண்டு லண்டன் மாவட்டத்தில் உள்ள ஒயிட் சேப்பல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து ஐந்து பெண்கள் கொல்லப்பட்டனர். இவர்களை கனோனிகல் ஃபைவ் என்று அழைக்கின்றனர். அவர்களைக் கொன்றது ஜாக் தி ரிப்பர் என்கிற சீரியல் கில்லர் என பல வலைதளங்கள் சொல்கின்றன. அவரைக் குறித்த எந்த ஒரு விஷயமும் யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை.
பெண்களைத் தேடிப் பிடித்து முதலில் அவர்களுடைய தொண்டைப் பகுதி அறுக்கப்பட்டு, பிறகு வயிற்றுப் பகுதியைக் கிழித்துக் கொல்வது ஜாக் தி ரிப்பரின் வாடிக்கையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் மூன்று பெண்களின் சில உள் உறுப்புகள் நீக்கப்பட்டு இருந்தன. ஆக கொலைகாரனுக்கு அறுவை சிகிச்சை குறித்த அறிவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
கொலைகாரனிடமிருந்து பல கடிதங்கள் ஊடகங்களாலும், ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையாலும் பெறப்பட்டதாகவும் சில வலைதளங்கள் சொல்கின்றன. ஜாக் தி ரிப்பர் குறித்த தொடர்ச்சியான செய்திகள் பிரசுரமானதால் சர்வதேச அரங்கில் ஜாக் தி ரிப்பர் மீதான பயம் கலந்த புகழ் பரவியது. இன்று வரை அந்த கொலைகாரன் யார்...? இந்த பெண்கள் எப்படிக் கொல்லப்பட்டனர்? ஏன் அந்த சீரியல் கில்லர் இவர்களைக் கொலை செய்தான்? என எந்த ஒரு கேள்விக்கும் விவரம் இல்லாமல் இன்று வரை பலரின் கற்பனையிலும், கதையிலும் வாழ்ந்து வருகிறான் ஜாக் தி ரிப்பர்.
அமெரிக்காவில் 1960களின் கடைசி காலத்தில் சோடியாக் கில்லர் என்கிற பெயரில் ஒரு சீரியல் கில்லர் ஒட்டுமொத்த வடக்கு கலிஃபோர்னிய மாகாணத்தையே அச்சத்தில் உறைய வைத்தார்.
1968ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி கலிஃபோர்னியாவில் உள்ள வலெஜோ பகுதியில் லேக் ஹெர்மன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் அமர்ந்திருந்த 17 வயது டேவிட் ஃபாரடே & 16 வயது பெட்டி லூ ஜென்சனை சுட்டார் ஒரு மர்ம மனிதர். அதில் பெட்டி உயிரிழந்தார், டேவிட் மருத்துவமனைக்கு சேர்க்கப்படுவதற்கு முன் உயிரிழந்தார். அது தான் சோடியாக் கில்லர் அரங்கேற்றிய முதல் கொலை.
இப்படி இளம் ஜோடிகளைக் குறித்து இவர் அரங்கேற்றிய கொலை முயற்சியில் 5 பேர் உயிரிழந்தனர், 2 பேர் படுகாயமடைந்து உயிர் பிழைத்தனர். ஆனால் சோடியாக் கில்லரோ தான் 37 பேரைக் கொலை செய்திருப்பதாக கூறினார்.
எல்லா சீரியல் கொலைகாரர்களைப் போல, தன்னைக் குறித்து பத்திரிகையாளர்களுக்கு செய்திகளை வழங்கினார். சோடியாக் கில்லர் கொஞ்சம் வித்தியாசமாக தன்னைக் குறித்த செய்திகளை பிரசுரிக்கவில்லை எனில், பத்திரிகை அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் என மிரட்டினார்.
அவருடைய பல கடிதங்கள் கிரிப்டோகிராம் அல்லது சைபர்ஸ் (Ciphers) முறையில் கோட் செய்யப்பட்டு இருந்தது. இன்று வரை அதில் ஒரு விடுகதை பொதிந்த செய்தியை புரிந்து கொள்ள முடியவில்லை. கடைசியாக சோடியாக் கில்லரிடமிருந்து 1974ஆம் ஆண்டு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை. இன்று வரை அந்த சோடியாக் கில்லர் யார் என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இப்போது வரை அந்த வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் காலராடோ மாகாணத்தில் 1996ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஆறு வயதான குழந்தை ஜான்பெனெட் ராம்சேவைக் காணவில்லை என அக்குழந்தையின் அம்மா, அப்பா, சகோதரர் ஆகியோர் தேடினர்.
அப்போது அவர்கள் கையில் ஒரு மிரட்டல் கடிதம் கிடைக்கிறது. அதில் குழந்தை வேண்டும் என்றால் பணம் வேண்டும் என்கிற பொருளில் எழுதப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட 8 மணி நேரத்துக்குள், அதே வீட்டின் பேஸ்மெண்டில் குழந்தை கழுத்து நெறித்து கொல்லப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதோடு அக்குழந்தையின் மண்டை ஓடு உடைந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. காரணம் ஜான்பெனெட் தன் 6 வயதுக்குள்ளேயே கிட்டத்தட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற குழந்தை மாடல்களில் ஒருவராக இருந்தார். அதோடு குழந்தையின் தாய் பேட்ஸி ராம்செவும் ஒரு முன்னாள் மாடல் அழகி.
தொடக்கத்தில் பெற்றோர் கொலை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரிக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு, அக்குழந்தையின் ஆடையிலிருந்து கிடைத்த டி என் ஏ மரபணுவை வைத்து பரிசோதனைகளை மேற்கொண்ட போது, பெற்றோர் ஜான்பெனெட்டை கொலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது. இன்று வரை அக்குழந்தை மாடலைக் கொன்றது யார்? ஏன் கொன்றார்கள்? என எதுவும் யாருக்கும் தெரியவில்லை.
பாராசிடமால் மாத்திரையை Acetaminophen என்பர். தலை வலி, தசை வலி, ஜலதோசம், தொண்டை கரகரப்பு, பல் வலி, முதுகு வலி போன்ற உடல் வலிகள், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகளுக்கு எல்லாம் Acetaminophen எடுத்துக் கொள்ளும் பழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போதும் பலர் மருத்துவர்களை அணுகாமல் தாங்களே Acetaminophen எடுத்துக் கொள்கிறார்கள்.
இதே பாராசிடமால் மருந்தை, ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், டைலெனால் (Tylenol) என்கிற பெயரில் விற்றது. துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்த மருந்தைச் சாப்பிட்ட 7 பேர் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்தனர்.
இதில் ஆடாம் ஜனஸ் என்பவரும் அடக்கம். அவருடைய இறப்புக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஸ்டான்லி ஜனஸ் & தெரசா ஜனஸ் ஆகியோரும் டைலெனால் (Tylenol) பிராண்டின் மருந்தைச் சாப்பிட்டு இறந்து போயினர்.
என்ன ஏது என காவல்துறை விசாரித்த போது டைலெனால் (Tylenol) மருந்து பாட்டிலில் இருந்து பாதாம் கொட்டை போன்ற வாசனை வந்தது.
அப்போது தான் டைலெனால் (Tylenol) மருந்தில் யாரோ பொட்டாசியம் சைனைட் கலந்திருந்தது தெரிய வந்தது. இறந்தவர்களின் ரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்த்த போது 100 - 1,000 மடங்கு அதிகமாக பொட்டாசியம் சைனைட் அவர்கள் ரத்தத்தில் இருந்தது தெரிய வந்தது.
இது விஷயம் டைலெனாலின் தாய் நிறுவனமான ஜான்சன் & ஜான்சனுக்கு தெரிய வந்த போது, 31 மில்லியன் டைலெனால் (Tylenol) பாட்டில்களை திரும்ப அழைத்துக் கொண்டது. புதிய பாட்டில் டைலெனால் (Tylenol) மருந்தைக் கொடுத்தது, சிலருக்கு நஷ்ட ஈடு கொடுத்தது.
ஆனால் இன்று வரை டைலெனால் (Tylenol) மருந்தில் பொட்டாசியம் சைனைடைக் கலந்தது யாரென எவருக்கும் தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு தான் மருந்து பாட்டில்களில் பாதுகாப்பு சீல் வைக்கும் கான்செப்ட் பெரிய அளவில் புழக்கத்துக்கு வந்தது.
1922ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஜெர்மனி நாட்டில் பவாரியா பகுதியில் ஹின்டர்கைஃபெக் (Hinterkaifeck) பண்ணையில் 6 பேர் பிக் ஆக்ஸ் எனப்படும் கூரான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டு இருந்தனர். இதில் இரண்டு குழந்தைகளும் அடக்கம். மற்ற 4 பெரியவர்களும் தானியங்களை சேமித்து வைக்கும் இடத்தில் கொல்லப்பட்டு ஒருவர் மீது ஒருவர் என அடுக்கி வைக்கப்பட்டு இருந்தனர்
அந்த ஆறு பேரையும் கொலை செய்த நபர், அடுத்த 3 - 6 நாட்களுக்கு அவர்களுடனேயே வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட பிறகு, கால்நடைகளுக்கு உணவு வழங்கப்பட்டிருந்தது, தொடர்ந்து சமையலறை பயன்படுத்தப்பட்டது, சிம்னியில் இருந்து புகை வெளியேறியது, தபால்காரர் வந்த போது, நாய் வெளியே ஒரு கம்பத்தில் கட்டிப்போடப்பட்டு இருந்தது என கொலை நடந்த பிறகு அங்கு யாரோ ஒரு சிலர் வாழ்ந்ததற்கு பல ஆதாரங்கள் திரட்டப்பட்டன.
இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய ட்விஸ்ட் விஷயம் என்னவென்றால், மரியா என்கிற வீட்டுவேலை உதவியாளர் அப்போது தான் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். மரியாவுக்கு முன் அந்த வீட்டில் பணியாற்றிய பெண், அந்த வீட்டில் ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்பதாகவும், அமானுஷ்யமாக ஏதோ நடப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினாராம். எது எப்படியோ, கொலை செய்தவர் யார் என இதுநாள் வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஜெர்மனி நாட்டின் வரலாற்றிலேயே தீர்க்கப்படாத மர்மக் கொலைகள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டது இச்சம்பவம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust