திருபாய் அம்பானி Twitter
பிசினஸ்

Jio Ambani History : பங்குச் சந்தையின் பிதாமகன் ஆனது எப்படி? - பகுதி 10

தன்னுடைய ரிலையன்ஸ் நிறுவன ஐபிஓக்களில் முதலீடு செய்யப்படும் நடுத்தர சாமானிய மக்களின் பணம் பத்திரமாக இருக்கும், அது மென்மேலும் வளரும் என்பதை தன் விளம்பரங்கள் வழி நம்ப வைத்தார்.

Gautham

பொதுவாக ஐபிஓ பணிகள் என்ற உடன், பெரிய பெரிய வங்கிகள், முதலீட்டு ஆலோசகர்கள், தங்கள் நிறுவனத்தின் ஆடிட்டர்கள் மற்றும் சட்ட நிபுணர்களோடு தான் கலந்தாலோசிக்கத் தொடங்குவார்கள். ஆனால் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் ஐபிஓ பங்கு வெளியீட்டுக்கான பணியை விளம்பரத்திலிருந்து தொடங்கினார் அம்பானி.

மேலும் பலரின் தலையை சொரிய வைத்த விஷயம் என்னவென்றால், அந்த விளம்பரங்களும் அதுவரை இந்திய சந்தை பார்த்திராத ஒன்றாக இருந்தது என்பதுதான்.

1970களின் பிற்பகுதியில் இந்திய நடுத்தர மக்கள் 'ரிஸ்க்' என்கிற வார்த்தையை உச்சரிக்கவே தயங்கினர். தங்கள் பணம் வெறும் 4.25 சதவீத வட்டியை ஈட்டினாலும் பரவாயில்லை, அசல் தொகை பாதுகாப்பாக இருப்பதை மட்டும் பலமாக உறுதி செய்து கொண்டு, பிரைனுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே... என நிம்மதியாகத் தூங்கி எழுந்தனர்.

இந்த உளவியலை, சோர்வாட்டில் பிறந்த கிராமத்தானுக்குப் புரிந்தது. தன்னுடைய ரிலையன்ஸ் நிறுவன ஐபிஓக்களில் முதலீடு செய்யப்படும் நடுத்தர சாமானிய மக்களின் பணம் பத்திரமாக இருக்கும், அது மென்மேலும் வளரும் என்பதை தன் விளம்பரங்கள் வழி நம்ப வைத்தார்.

2021 : ஆண்டு பொதுக்கூட்டம்

மறுபக்கம் ரிலையன்ஸில் நல்ல பேச்சுத் திறமை கொண்ட, வெகுஜன மக்களுடன் சகஜமாகக் கலந்து பேசக்கூடிய ஊழியர்களைத் தேர்வு செய்து நடுத்தர மக்கள் வாழும் பகுதிகளில், ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் ஐபிஓவில் முதலீடு செய்வதால் ஏற்படும் நன்மை என்ன? ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி என்ன? எதிர்காலத்தில் எந்த அளவுக்கு ரிலையன்ஸ் டெக்ஸ்டைலின் பங்குகளின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது... அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? என்று எடுத்துரைத்து முதலீடு செய்ய ஊக்குவித்தார் திருபாய் அம்பானி.

1977 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் ஐபிஓ என்றிழைக்கப்படும் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் வெளியானது. வெறும் 10 ரூபாய் முகப்பு விலையிலேயே பங்கு வெளியானது. 1977 ஆம் ஆண்டு வெளியான ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளுக்கு, ஏழு மடங்கு அதிகமாக மக்கள் விண்ணப்பித்திருந்தனர். இதை ஆங்கிலத்தில் over subscribed என்பர். 1978ஆம் ஆண்டு முதல்முறையாக அவை சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகத்துக்கு வந்தபோதே 23 ரூபாயாக உயர்ந்து இருந்தது. அடுத்த சில மாதங்களிலேயே அதிகபட்சமாக 50 ரூபாய் வரை தொட்டது. சுருக்கமாக திருபாய் அம்பானியின் விளம்பரங்கள் & பிரசாரங்கள் நடுத்தர & வெகுஜன மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது உறுதியானது.

அன்றைய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

சுமார் 60,000 பேர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 28 லட்சம் பங்குகளை வாங்கி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 2.8 கோடி ரூபாய் கொடுத்தனர். நரோடா ஆலையின் விரிவாக்கப் பணிகள் கான்கார்ட் ஜெட் வேகத்தில் நடைபெற்றன.

ரிலையன்ஸ் நிறுவனம், தொழில் சார்ந்து முக்கிய முடிவுகளை எடுக்கும் போதெல்லாம் தன் பங்குதாரர்களுக்கு, நிறுவனத்தின் பங்கு நிலை எப்படி இருக்கிறது... எவ்வளவு உயர்ந்திருக்கிறது... எனத் தபால் மூலம் தெரியப்படுத்தி வந்தது. ரிலையன்ஸ் நிறுவன பங்குதாரர்களுக்கு எழுதப்படும் ஆயிரக் கணக்கான கடிதங்களால் தபால் நிலையங்கள் திணறின. ரிலையன்ஸ் ஊழியர்களே, தங்கள் ஊர்களுக்குச் செல்லும் போது, அந்த ஊர் கடிதங்களை, தங்கள் ஊர் தபால் நிலையத்தில் கொடுத்தார்களாம்.

வெகுஜன மக்கள் அதிகம் முதலீடு செய்திருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்கள் காட்டாத வளர்ச்சியை சில ஆண்டுகளில் காட்டியது. இதுபோக ரிலையன்ஸ் நிறுவனம் ஈட்டும் லாபத்தில் ஒரு பங்கு, ஈவுத்தொகையாகப் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டது. அதைத்தாண்டி போனஸ் பங்குகள் வேறு. முதலீடு செய்தவர்களின் மனங்கள் குளிர்ந்திருந்தன.

நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களை, ஆண்டுக்கு ஒருமுறை அழைத்து நிறுவனத்தின் லாப நஷ்டங்கள், நிதி நிலை, புதிய பொறுப்பேற்புகள், எதிர்காலத் திட்டங்கள், சந்தை சூழல்... போன்றவற்றை விவாதிக்க வேண்டும் என்பது இந்தியப் பங்குச் சந்தையில் உள்ள ஒரு பொது விதி.


வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளை, மற்ற நிறுவனங்கள் நட்சத்திர ஹோட்டல்களில் லசானியா, பெஸ்டோ பாஸ்டா சாப்பிட்டுக் கொண்டு ...thats's the spot we are heading to gentlemen எனப் பேசி, உயர் தட்டு மக்கள் மத்தியிலேயே நடந்து முடிந்து கொண்டிருந்தது.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் சாமானியர்கள் லட்சக்கணக்கானோர் முதலீடு செய்திருந்ததால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் பெரும் விளையாட்டு மைதானங்களில் திறந்தவெளியில் நடைபெற்றன.

1984ஆம் ஆண்டின் நிதி நிலைகளை ரிலையன்ஸ் பங்குதாரர்கள் அங்கீகரிக்க 1985ஆம் ஆண்டு மும்பையிலுள்ள கூப்பரேஜ் கால்பந்து மைதான அரங்கில் பங்குதாரர்களுக்கான ஆண்டுப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது திருபாயின் புகழ் உச்சிக்குச் சென்றது.

அச்செய்தியை, லண்டன் நகரத்தில் பிரசுரிக்கப்படும் புகழ்பெற்ற ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டது. இந்த பொதுக் கூட்டத்தில் தான் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என பெயர் மாற்றப்பட்டது.

திருபாய் அம்பானி தன்னுடைய எளிய ஆங்கிலம் தவிரப் பிராந்திய மொழிகளிலும் எதார்த்தமாகப் பேசுவார். அந்த அளவுக்கு ரிலையன்ஸ் பங்குதாரர்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?