ரிலையன்ஸ் நிறுவனம் 1977ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐபிஓ மூலம் தன் பங்குகளை வெளியிட்டது முதல்,
தன் பங்குதாரர்களின் எண்ணிக்கையை போனஸ் பங்கு வெளியீடு மற்றும் உரிமைப் பங்கு வெளியீடு மூலம் கணிசமாக அதிகரித்துக் கொண்டது.
ஒரு கட்டத்தில் திருபாய் அம்பானி பங்குகளை வெளியிட்டு முதலைத் திரட்டுவதற்குப் பதிலாக கன்வர்டெபில் டிபென்சர்களை என்றழைக்கப்படும் கடன் பத்திரங்களை வெளியிட்டு கணிசமாக முதலைத் திரட்டினார். இது நாளடைவில் திருபாய் அம்பானிக்கு எதிராகவும் திரும்பியது தனிக் கதை.
இப்போது 1982 Partially Convertible Debentures கதைக்கு வருவோம். அது ஒரு வகையான கடன் பத்திரம் தான். அந்த கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் பணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட காலம் வரை கடன் பெறும் நிறுவனம், கடன் கொடுப்பவர்களுக்கு வட்டி செலுத்தும். அதில் வெளியிட்ட கடன் பத்திரங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி நாளடைவில் ஈக்விட்டி பங்குகளாக மாறிவிடும்.
இப்படி 1982ஆம் ஆண்டு ஒரு உரிமைப் பங்கு வெளியீடு மூலம் Partially Convertible Debentureகளை வெளியிட ரிலையன்ஸ் நிறுவனம் தயார் செய்து கொண்டிருந்தது. இந்த உரிமைப் பங்கு வெளியீட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தன்நிறுவனப் பங்குகளின் விலையைச் செயற்கையாகக் கட்டுப்படுத்துவதாக பியர் ஆபரேட்டர்கள் நம்பினர். எனவே பியர்கள் ஷார்ட் செல் செய்தனர்.
சுருக்கமாக பங்கு சந்தையில் ஒரு நிறுவன பங்கின் விலை குறையும்போது, முதலில் அதிக விலைக்கு விற்று, பிறகு குறைந்த விலைக்கு வாங்குபவர்கள்தான் இந்த பியர் ஆபரேட்டர்கள்.
உதாரணமாக உருளைக்கிழங்கு வியாபாரத்தை எடுத்துக் கொள்வோம். இன்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 50 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அடுத்தடுத்த நாட்களில் உருளைக்கிழங்கின் வரத்து அதிகரித்து விலை குறையுமென சீனு என்கிற வியாபாரி கணிக்கிறார். இன்றைய விலை போக்கை வைத்து மற்ற பல வியாபாரிகள் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 50 ரூபாய் என 1,000 கிலோ கேட்கிறார்கள். அதையும் சீனு கவனிக்கிறார்.
இப்போது அந்த வியாபாரிகளிடம் சென்று நீங்கள் கேட்கும் 1,000 கிலோ உருளைக்கிழங்கை இன்னும் இரண்டு நாட்களில் கொடுத்துவிடுகிறேன். ஆனால் எனக்கு இன்றே ஆயிரம் கிலோ உருளைக்கிழங்குக்கான பணமாக 1,000 * 50 = 50,000 ரூபாயை கொடுத்து விடுங்கள் என்கிறார்.
வியாபாரிகளும் 50,000 ரூபாயைக் கொடுத்துவிட்டு இரண்டு நாட்களில் சரக்கை கொடுக்குமாறு கூறி செல்கிறார்கள். இப்போது சீனுவின் கையில் ஒரு உருளைக்கிழங்கு கூட இல்லை. ஆனால் 1,000 கிலோ உருளைக் கிழங்கை விற்று 50,000 ரூபாய் பணமிருக்கிறது.
கோயம்பேடு சந்தைக்கு இந்தியாவின் மற்ற பல மாநிலங்களிலிருந்தும் உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்துவிட்டது. இப்போது இரண்டு நாட்களில், சீனு கணித்தது போலவே ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 40 ரூபாயாக சரிகிறது.
இப்போது சீனு ஒரு கிலோ உருளைக்கிழங்கு 40 ரூபாய் என ஆயிரம் கிலோ சரக்கை வாங்கி, வியாபாரிகளுக்கு அனுப்பிவிடுவார். கையில் ஒரே ஒரு உருளைக்கிழங்கு கூட இல்லாத சீனு, தனக்குக் கிடைத்த தகவல்களை மட்டுமே வைத்து ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கு பத்து ரூபாய் என ஆயிரம் கிலோவுக்கு 10,000 ரூபாய் சம்பாதித்து இருப்பார். இதை அப்படியே பங்குச்சந்தையில் செய்தால் இதை ஷார்ட் செல்லிங் என்பார்கள். இப்படி அடிக்கடி ஷார்ட் எடுப்பவர்களை பியர் ஆபரேட்டர் என்பர்.
இப்படித்தான் பியர் ஆப்பரேட்டர்களும் பங்குச்சந்தையில் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை வைத்து விலை குறையப் போகும் நிறுவனத்தின் பங்குகளை முன்கூட்டி விற்று லாபம் பார்ப்பர். 1982ஆம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் இதே கதைதான் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளிலும் நடந்தது.
முன்பே கூறியது போல, ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய உரிமைப் பங்கு வெளியீட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக தங்களின் நிறுவனப் பங்கு விலையைச் செயற்கையாக உயர்த்தி வைத்திருப்பதாக பியர் ஆபரேட்டர்கள் நம்பினர்.
எனவே சரமாரியாக, கையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் இல்லாமல் அந்நிறுவனப் பங்குகளை விற்றுத் தள்ளிக் கொண்டிருந்தனர். நாளை அந்நிறுவனப் பங்கின் விலை குறையும்போது மலிவான விலையில் வாங்கி டெலிவரி கொடுத்துவிடலாம் என்று பியர் ஆபரேட்டர்கள் கருதினர்.
பியர் ஆபரேட்டர்களின் ஏற்படுத்திய இந்த பதற்றம் மற்ற முதலீட்டாளர்களையும் பாதித்தது எனவே பலரும் ரிலையன்ஸ் நிறுவனப் பங்கை விற்று வெளியேறத் தொடங்கினர். சுமார் 131 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த ரிலையன்ஸ் நிறுவனப் பங்கின் விலை 121 ரூபாய்க்குச் சரிந்தது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com