திருபாய் அம்பானி Twitter
பிசினஸ்

Jio அம்பானி கதை: ரிலையன்ஸ் பங்கு சந்தையில் முறைகேடு; ஒரு பெண் கிளப்பிய புயல் | பகுதி 13

ரிலையன்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், ஒரே பங்குக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சான்றிதழ்களை வெளியிட்டதாகச் செய்திகள் வெளியாயின. சுருக்கமாக ரிலையன்ஸ் பங்கின் உண்மையான சான்றிதழுக்கு 300 ரூபாய் மதிப்பு என்றால், போலி ரிலையன்ஸ் சான்றிதழ் 10 ரூபாய் கூட தேராது.

Gautham

ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து கிடைத்த பணத்தைக் கொண்டு தன் பிள்ளைகளின் திருமணத்தை எல்லாம் நடத்தி முடித்த கதைகளை நிறையக் கேட்டிருப்பீர்கள்.

இன்று இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான். சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்போடு இந்தியாவின் நம்பர் 1 நிறுவனமாக வர்த்தகமாகி வருகிறது. ஆனால் அதற்கான விதை திருபாய் அம்பானியால் தூவப்பட்டது.

1949 முதல் 1979 வரையான காலத்தில் இந்தியாவில், பங்குச் சந்தை மூலம் சராசரியாக ஆண்டுக்கு 58 கோடி ரூபாய் தான் முதல் தொகை திரட்டப்பட்டது. அதிகபட்சமாக ஓராண்டு காலத்தில் 92 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. இதுவே 1983 ஆம் ஆண்டுக்குள் பங்குச் சந்தையில் திரட்டப்படும் பணத்தின் அளவு சுமார் 1000 கோடி ரூபாயாக அதிகரித்தது. அதற்கு மிக முக்கிய காரணம் ரிலையன்ஸ்.

1980ல் சுமார் 10 லட்சத்துக்கும் குறைவாக இருந்த இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 1985 காலத்தில் தோராயமாக 40 லட்சமாக உயர்ந்திருந்தது. இதில் ரிலையன்ஸ் நிறுவன பங்குதாரர்களின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்துக்கு மேல். இது அன்றைய தேதிக்கும் உலகிலேயே அதிக பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனப் பட்டியலில் ரிலையன்ஸுக்கும் ஒரு தனி இடத்தைப் பெற்றுக் கொடுத்தது.

திருபாய் அம்பானி

1980களில், Convertible Debenture என்றழைக்கப்படும் ஈக்விட்டிகளாக மாற்றப்படக் கூடிய கடன் பத்திரங்களை இந்தியா பிரபலமாக்க முயன்றது. அதையும் முதலில் பயன்படுத்திக் கொண்டு லாபமடைந்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பல Partially Convertible Debentureகளை பிற்காலத்தில் முழுமையாக ஈக்விட்டியாக மாற்றியதாக அம்பானி மீதும், ரிலையன்ஸ் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. இப்படி கடன்பத்திரங்களைப் பங்குகளாக மாற்றியதன் மூலம் ரிலையன்ஸ் குழுமத்தின் பெரும்பகுதியான கடன்கள் மளமளவெனக் கரைந்தன.

1991 - 92 காலம் வரை கன்ட்ரோலர் ஆஃப் கேப்பிட்டல் இஸ்ஸூஸ் (Controller of Capital Issues) என்கிற அமைப்பு தான், இந்தியப் பங்குச் சந்தைகளை நிர்வகித்து வந்தது. அதன் பிறகு தான் செபி அமைப்பு இந்தியப் பங்குச் சந்தையை நிர்வகிக்கத் தொடங்கியது.

ரிலையன்ஸ் பங்குகளில் வர்த்தகம் மேற்கொள்வது, பங்குச் சந்தைத் தரகர்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு உதவியது. 1986ம் ஆண்டுக்குள் ரிலையன்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் என்கிற நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவன பங்குதாரர்களின் பங்குச் சான்றிதழ்களை எல்லாம் தானே நிர்வகிக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

திருபாய் அம்பானி

அந்நிறுவனம், ஒரே பங்குக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சான்றிதழ்களை வெளியிட்டதாகச் செய்திகள் வெளியாயின. சுருக்கமாக ரிலையன்ஸ் பங்கின் உண்மையான சான்றிதழுக்கு 300 ரூபாய் மதிப்பு என்றால், போலி ரிலையன்ஸ் சான்றிதழ் 10 ரூபாய் கூட தேராது. இதெப்படி சந்தைக்குத் தெரிய வந்தது.

திருபாய் அம்பானி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த போது, ரஜுல் வசா என்கிற பெண் ஃபிசியோ தெரபிஸ்ட் அவருக்குச் சிகிச்சை வழங்கி வந்தார். அவருக்கு மருத்துவ கட்டணத்தோடு, கொஞ்சம் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளையும் கொடுத்தார் திருபாய் அம்பானி.

1994ஆம் ஆண்டு ரஜுல் மற்றும் அவரது கணவர் சுமார் 25,000க்கும் மேற்பட்ட ரிலையன்ஸ் பங்குகளை ஒரு தரகர் மூலம் சந்தையில் விற்றனர். ஆச்சர்யம் என்னவெனில், அச்சான்றிதழ்களோடு அதற்கு முன் விற்ற பங்குகள் என மொத்தம் சுமார் 33,000 பங்குகள் போலியானவை என்று தெரிய வந்தன. இது குறித்து ரிலையன்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸுக்கு புகார் எழுதினார் ரஜுல். காதும் காதும் வைத்தாற் போல, ரிலையன்ஸ் தரப்பிலிருந்து புதிய சான்றிதழ்கள் கிடைத்தன, அதை மெரில் லின்ச் என்கிற நிறுவனத்துக்கு விற்று பணமாக்கினார் ரஜுல். ஆனால் இந்த விஷயம் எப்படியோ பங்குச் சந்தைக்குத் தெரிய வந்தது.

அம்பானி


அதே போல சில ஆண்டுகளுக்கு முன் 1992 பிப்ரவரியில் ஃபேர் குரோத் (Fair Growth) என்கிற நிறுவனம் 15 லட்சம் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளை வாங்கி இருந்தது. அதை ரிலையன்ஸ் கன்சல்டன்சி மூலம் விற்க முயன்ற போது பரிவர்த்தனை நடக்கவில்லை. அதனைத் தொடர்ந்து யூடிஐ 25 லட்சம் பங்குகள் வாங்கி பரிவர்த்தனை செய்ய முடியாமல் போலி சான்றிதழ் பிரச்சனையால் திணறியது.

இதைப் பிரபலமாக ஃபேர் குரோத் வழக்கு மற்றும் ரஜுல் வசா வழக்கு என்றார்கள். இச்செய்தி, பங்குச் சந்தையில் சத்தமாக எதிரொலித்தன. விளைவு ரிலையன்ஸ் பங்கு விலை வீழ்ந்தது.

பிரச்சனை முற்றிப் போய், ஒரு கட்டத்தில், மும்பை பங்குச் சந்தையிலிருந்து டீ லிஸ்ட் (நிறுவனம் பிஎஸ்இ சந்தையை விட்டு வெளியேறுதல்) செய்து கொள்ளவிருப்பதாகக் கூறியது ரிலையன்ஸ். ஆனால் பிஎஸ்இ அனுமதிக்கவில்லை. அப்போது நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் செபி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறையோடு இணைத்து ஒரு கூட்டு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்திரா காந்தியுடன் அம்பானி

எல்லா நிதி நிறுவனங்களையும், தங்களிடம் இருக்கும் பங்குகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கூறினார். செபியிடம் ரிலையன்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் கூறிய விளக்கங்கள் செல்லுபடியாகவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயர் மற்றும் அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை சந்தையில் பெரிதும் அடிவாங்கியது.

ஆனால் 1996க்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் அரசியல்வாதிகளுடனான நட்பு காரணமாக ரிலையன்ஸ் பங்குச் சந்தை முறைகேடுகளிலிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டது ரிலையன்ஸ்.

1999 - 2004 வரை பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரஷீத் அல்வி, சுமார் 1,500 பக்கம் கொண்ட திருபாய் அம்பானியின் முறைகேடுகள் குறித்து (பிரத்யேகமாக ரிலையன்ஸின் பங்குச் சந்தை குளறுபடிகள்) ஒரு புகாரை அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிடம் கொடுத்தார். 2001ஆம் ஆண்டு அதை வெளியிட்டார் அல்வி. ஆனால் அப்புகாரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?