LULU யூசுஃப் அலி Newssense
பிசினஸ்

LULU யூசுஃப் அலி : அரபு நாடுகளில் கொடிக்கட்டி பறக்கும் ஓர் இந்தியரின் வெற்றி கதை

NewsSense Editorial Team

இந்தியாவின் டாப் 50 பணக்காரர்களில் ஒருவர், ரீடெயில் கிங், ரிலையன்ஸ் ரீடெயில், டி மார்ட், ஃப்யூச்சர் ரீடெயில் மார்ட், பிக் பசாருக்கு எல்லாம் முன்னோடி எனலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் முறையான அனுமதியின்றி சிக்கிய அப்பாவி இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க இந்திய தரப்பில் பேச்சு வார்த்தை நடத்துவது, இந்தியாவில் அமீரகம் ஸ்மார்ட் சிட்டி கட்டமைக்கும் திட்டத்தைக் கொண்டு வருவது என இந்தியாவுக்கும், அரபு உலகத்துக்கும் ஒரு பாலமாகத் திகழும் இவருக்கு அமீரக அரச குடும்பம் வரை நல்ல செல்வாக்கு உண்டு.

அவர் பெயர் எம் ஏ யூசுப் அலி. அவரைக் குறித்துப் பார்க்க வேண்டுமானால், இந்தியாவின் அரபிக் கடலோரம் அழகாய் அமைந்திருக்கும் கேரளத்திலிருந்து தொடங்க வேண்டும். 1955 ஆம் ஆண்டு திருச்சூர் மாவட்டத்தில் நதிக்கா (Nattika) கிராமத்தில் பிறந்தவர் யூசுப் அலி.

சாதாரண நடுத்தர குடும்ப வாழ்க்கை தான், ஆனால் வியாபார குடும்பம். அதே கிராமப் புறத்திலேயே பள்ளிப் படிப்பும், பிசினஸ் மேனேஜ்மெண்டில் டிப்ளோமாவும் படித்து முடித்த கையோடு 18 வயதில் 1973-ல் அபுதாபிக்கு டிக்கெட் போட்டார். அதன் பிறகு கல்லூரிக்குச் சென்று பாடம் படிக்கவில்லை. எல்லாமே பிராக்டிக்கல் தான்.

மாமா எம் கே அப்துல்லாவின் மளிகைக் கடை வியாபாரத்தில் இணைந்து கொண்டார் யூசுப் அலி. அது ஒரு குடும்ப வியாபாரமாக நடத்தப்பட்டு வந்தது. மளிகைக் கடை என்பதைத் தாண்டி, மெல்ல இறக்குமதி மற்றும் மொத்த விலைக் கடை வியாபாரமாகப் பரிணமிக்கத் தொடங்கியது. அப்படியே உணவு மற்றும் உணவு அல்லாத துறைகளிலும் வியாபாரத்தை வளர்த்தார் யூசுப் அலி.

1980களில் மேலை நாடுகளில் பால் இறைச்சி போன்ற எளிதில் கெட்டுப்போகும் பொருட்களுக்கு குளிர்சாதன வசதி பயன்படுத்தும் கலாச்சாரம் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அதை தன் சில்லறை மற்றும் மொத்தவில்லை வியாபாரத்தில் பயன்படுத்தினார் யூசுப் அலி.

அதே 1980-களுக்குள்ளேயே, லூலூ நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெரும் வணிக நிறுவனமாக தன் தடத்தைப் பதித்திருந்தது. ஒரு கட்டத்தில், மாமாவிடமிருந்து பிரிந்து வந்து, தனக்கென தனியாக ஒரு சாம்ராஜ்ஜியத்தை நிறுவத் தீர்மானித்தார் யூசுப் அலி.

1990-கள் வரை ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் மளிகைக் கடைகளின் முகம், ரீடெயில் ஸ்டோர் வியாபாரமாக வளர்ச்சி காணத் தொடங்கியிருந்தது. Continent (தற்போது Carrefour) என்கிற நிறுவனம் துபாயில் ரீடெயில் வியாபாரத்தின் முகத்தையே மாற்றி எழுதிக் கொண்டு இருந்தது. சில்லறை வணிகத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கனகச்சிதமாகப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல தன் லூலூ கடைகளையும் வாடிக்கையாளர்களுக்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்தார்.

1990களின் தொடக்கத்தில் வளைகுடா போரால் பல முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளையும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். ஆனால் அதே 1990களில் யூசுப் அலி, அமீரகத்திலிருந்த வாய்ப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கடை விரித்தார். முதலில் லூலூ சூப்பர் மார்கெட்டாகத்தான் தொடங்கப்பட்டது. 2000வாக்கில் தான் ஹைப்பர்மார்கெட்டாக லூலூ பரிணமித்தது.

சூப்பர் மார்கெட் Vs ஹைப்பர் மார்க்கெரட்

பொதுவாக சூப்பர் மார்கெட் பெரிய சைஸ் மளிகைக் கடை போன்று இருக்கும். ஆனால் ஹைப்பர் மார்க்கெட் என்பது மளிகை + அடிப்படை ஆடை அணிகலன்கள் + ஸ்டேஷனரி பொருட்கள் + பாத்திர பண்டங்கள் + பிளாஸ்டிக் பொருட்கள் + விளையாட்டு சாமான்கள் + ஹோட்டல் என பல்வேறு கடைகளை ஒருங்கே கொண்டதாக இருக்கும். உதாரணத்துக்கு டி மார்டைக் குறிப்பிடலாம்.

இந்த ஐடியாவை ரிலையன்ஸ், ஃப்யூச்சர் நிறுவனத்தின் கிஷோர் பியானி, டி மார்டின் ராதா கிஷண் தமானி ஆகியோருக்கு முன்பே 2000 ஆண்டு வாக்கில் அரபு உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் யூசுப் அலி.

இவரது பல லூலூ ஹைப்பர்மார்க்கெட் கடைகள், அரபு உலக நாடுகளில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன.

2000-ம் ஆண்டில் லூலூ குரூப் இண்டர்நேஷனல் என கம்பெனியை பதிவு செய்தார். இன்று உலகின் பல நாடுகளில் 255 கடைகள் திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார். சுமார் 57,000 பேர் இவரது நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

லூலூ நிறுவனம் அமீரகம், ஓமன், குவைத், கத்தார், செளதி அரேபியா, போன்ற நாடுகளில் பிரதானமாக வியாபாரம் செய்து வருகிறது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட யூசுப் அலி இந்தியாவில் அதிகம் தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிலாய்ட்டி (Deloitte) என்கிற பெரிய தணிக்கை மற்றும் கணக்கு வழக்கு நிறுவனம், உலகில் வேகமாக வளரும் சில்லறை வணிக நிறுவனங்களில் லூலூவும் ஒன்று எனப் பட்டியலிட்டு இருக்கிறது.

யூசுப் அலியின் சொத்து மதிப்பு தற்போதைக்கு 5 பில்லியன் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை வலைத்தளம். லூலூ இன்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து ஆண்டுக்கு 8 பில்லியன் டாலர் வருவாய் வருகிறது என்றும் கூறுகிறது ஃபோர்ப்ஸ். இது போக அவருக்குச் சொந்தமாகப் பல ஹோட்டல்களும் இருக்கின்றனர்.

இந்த வியாபாரங்கள் எல்லாம் போக, தன் சொந்த மாநிலமான கேரளத்தைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் கத்தோலிக்க சிரியன் வங்கி (Catholic Syrian Bank)-ல் 4.99 % பங்குகளை வாங்கி இருக்கிறார். அதே போலக் கேரளத்தின் ஃபெடரல் வங்கியிலும் சுமார் 4.47 % பங்குகளை வாங்கியிருக்கிறார். தனலட்சுமி வங்கியில் 4.99% பங்குகளை வாங்கிவைத்துள்ளார். சவுத் இந்தியன் பேங்க் வங்கியில் 2% பங்குகளை வாங்கி வைத்துள்ளார்.

உலகம் முழுக்க சுற்றிச் சுற்றி வியாபாரம் செய்யும் யூசுப் அலியின் நிறுவனத்தில், அபுதாபியின் ராஜ குடும்பமே சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்தது, ராஜகுடும்பத்துக்கு யூசுப் அலி மீதான நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகவும், அவரது வியாபாரத் திறனை அங்கீகரிப்பதுமாகவே இருக்கிறது.

தமிழக முதல்வருடன் யூசுப் அலி

இத்தனையும் செய்த மனிதர், 2013ஆம் ஆண்டு தான் இந்தியாவில் தன் முதல் கடையைத் தொடங்கினார். 2021ஆம் ஆண்டு வரை, ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் லூலூ குழுமத்துக்கு 4 கடைகள் மட்டுமே உள்ளதாக அவர்களின் வலைத்தளம் கூறுகிறது.


இரு கடைகள் கேரளத்திலும் (கொச்சி, திருவனந்தபுரம்), ஒரு கடை பெங்களூரிலும் உள்ளது. மற்றொரு கடை லக்னெளவில் திறக்கப்பட உள்ளது.

சமீபத்தில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் துபாய்க்குச் சென்றிருந்த போது, தமிழ்நாடு அரசு, லூலூ குழுமத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் இரு கடைகளும், சுமார் 1,000 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் ஒரு உணவுப் பதப்படுத்தும் ஆலையையும் அமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கோவையில் ஒரு லூலூ மால் அமைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்ட ஒருவருக்கு உதவியது, மலையாளி ஒருவருக்கு அமீரகத்தில் வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து அவரை விடுவிக்க சுமார் 1 கோடி ரூபாயை அபராதமாகச் செலுத்தி விடுவித்தது, முறையான அனுமதிச்சீட்டுகளின்றி அப்பாவி இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு அமீரகத்தில் சிக்கும் போது இந்தியா சார்பாக அமீரக அதிகாரிகளிடம் பேசி அவர்களை விடுவிப்பது... என பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார் யூசுப் அலி.


இவருக்கு அண்டர்வேர்ல்ட் எனப்படும் மர்ம உலகத்தோடு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அதில் வரும் பணத்தை வைத்து தான் இத்தனை பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருவதாக சில குற்றச்சாட்டுகளும் சொல்லப்படுகிறது.

கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, பெரிய பட்டப் படிப்புகள் ஏதுவுமின்றி இந்தியாவின் டாப் 50 பில்லியனர்களில் ஒருவராக வலம் வரும் யூசுப் பலி உண்மையிலேயே போற்றுதலுக்கு உரியவர் தான். வெல்கம் டூ தமிழ்நாடு யூசுப் பாய்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?