தமிழில் சாப்பிடுவது சமைப்பது குறித்த யூடியூப் சேனல்கள் சமீபத்திய ஆண்டுகளில் பெரு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான இந்த சேனல்கள் மூலம் நீங்கள் தினுசு தினுசாக சாப்பிடுவதையோ இல்லை சமைப்பதையோ காணலாம். ஒவ்வொரு ஊரிலும் எந்த ஓட்டலில் என்ன உணவு வகை பிரபலம் என்பதை அறிந்து கொண்டு உணவு சுற்றுலாவிற்கு படையெடுக்கிறார்கள்.
ஆயினும் இந்த எண்ணிக்கை சிறுபான்மைதான். பெரும்பான்மையோ வெந்ததை தின்று விட்டு விதி வந்தால் சாவோம் என்றுதான் நாட்களைக் கழித்து வருகின்றது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மற்றும் டவுன் டு எர்த் பத்திரிகை Centre for Science and Environment (CSE) and Down to Earth magazine வெளியிட்டுள்ள அறிக்கை என்ன கூறுகிறது தெரியுமா? 70% இந்தியர்களால் அன்றாடம் சத்தான ஆரோக்கியமான உணவை சாப்பிட முடிவதில்லை. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 17 இலட்சம் இந்திய மக்கள் மோசமான உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனர்.
உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி ஆரோக்கியமான உணவு என்பது ஒரு நபரின் வருமானத்தில் 63 சதவீதத்தைத் தாண்டும் போது அது கட்டுப்படியாகாமல் போகிறது. அல்லது எவரும் தனது வருமானத்தில் 63 சதவீதத்தை உணவுக்காக ஒதுக்க முடியாது. அவரது வீட்டு வாடகை, போக்குவரத்து, மின்சாரம், கல்வி என எண்ணிறந்த பிற செய்தே ஆக வேண்டிய செலவினங்கள் இருக்கின்றன.
ஒருவரது உணவில் போதுமான பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், சர்க்கரை பானங்கள் இல்லாத போது அது ஆரோக்கியமற்ற உணவாக மாறுகிறது. நமது பெரும்பான்மை மக்கள் அன்றாடம் அதிக அளவில் வெறும் சோறும், காரமான ஒரு புளிக்குழம்பையும் வைத்து நாட்களை நகர்த்துகின்றனர். இதில் கலோரிக்கு தேவைப்படும் மாவுச்சத்தைத் தவிர வேறு சத்துக்கள் ஏதுமில்லை.
உலக அளவில் 42% மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாது என்றால் இந்தியாவில் அது 71% ஆக இருக்கிறது என 2021ஆம் ஆண்டின் உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை கூறுகிறது. இந்த இலட்சணத்தில் இந்தியாவை வல்லரசு நாடு என்றும் வேகமாக வளரும் பொருளாதாரம் என்றும் புகழ்கிறார்கள்.
ஆரோக்கியமான உணவு என்பது ஒரு நாள் உணவில் வைட்டமின்கள், மினரல்கள், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து போன்றை குறைந்த பட்சமாக எத்தனை சதவீதம் இருக்க வேண்டும் என்பதை பரிந்துரைக்கிறது.
ஒரு நாளைக்கு 200 கிராம் அளவில் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்தியர்கள் ஒரு நாளைக்கு 35.8 கிராம் பழங்கள் மட்டுமே சாப்பிடுகிறார்கள். அதே போன்று அன்றாடம் 300 கிராம் காய்கறி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு 168.7 கிராம் காய்றிகள் மட்டுமே நுகர்கின்றனர். மேலும் இந்திய மக்கள் ஒரு நாளைக்கு 24.9 கிராம் பருப்பு வகைகளையும், ஒரு நாளைக்கு 3.2 கிராம் கொட்டை வகைகளையும் (பாதாம், பிஸ்தா போன்றவை) எடுத்துக் கொள்கிறார்கள். இவையெல்லாம் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை விட மிகக் குறைந்தவை.
இப்படியாக உணவு சாப்பிடுதல் என்பது ஆரோக்கியமாக இல்லை. இதன் மூலம் சத்துக்குறைபாடுள்ள சந்ததியினரை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று மேற்கண்ட அறிக்கை கூறுகிறது. உணவு உற்பத்திக்கு மனித செலவு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார செலவுகள் குறிப்பிடத்தக்கவை. இருந்தும் பெரும்பான்மை மக்களுக்கு உரிய உணவுத் தேவை போய்ச்சேரவில்லை என்றால் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த இலக்குகளை அடைவதில் பின் தங்கி விடுவோம் என்றும் அறிக்கை மேலும் கூறுகிறது.
உணவுப் பொருட்களின் விலைகள் குறித்தும் இந்த அறிக்கை ஆய்வு செய்துள்ளது. அறிக்கையின் படி நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் (CFPI) பணவீக்கம் கடந்த ஆண்டில் 327 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இதை உள்ளடக்கிய நுகர்வோர் விலைக் குறியீடு 84 சதவீதம் உயர்ந்துள்ளது. பொதுவில் அனைத்து பொருட்களின் விலைகள் உயர்ந்திருந்தாலும் உணவுப் பொருட்களின் விலை மற்றும் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
உணவு பணவீக்கம் அதிகரித்திருப்பதற்கு உற்பத்தி செலவு அதிகரிப்பு, சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மேலும் தீவிர வானிலை தொடர்பான பிரச்சினைகள் போன்றவை காரணமாயிருக்கின்றன.
மார்ச் - ஏப்ரல் 2022 இல் நகர்ப்புறங்களை விடக் கிராமப்புறங்களில் உணவு விலைகள் அதிக விகிதத்தில் அதிகரித்துள்ளன என்பதை தங்களது தரவுகள் காட்டுகின்றன என்று டவுன் டு எர்த் இதழின் நிர்வாக ஆசிரியர் ரிச்சர்ட் மஹாபத்ரா கூறினார்.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை அமல்படுத்தப்பட்டதால் ஏராளமான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு வேலையிழப்பு, செலவு அதிகரிக்க வைக்கும் பணவீக்கம் போன்றவை ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு வந்த இரு வருட கொரோனா பொது முடக்கம் இந்த பொருளாதார தேக்கத்தை அதிகரித்து விட்டது.
விளைவாக இன்றைக்கு அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததோடு கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்திருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் ஆரோக்கியமான உணவை விடுங்கள் ஏதோ ஒரு உணவைக் கூட நினைத்துப் பார்க்கும் நிலையில் இல்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust