ஒரு நாட்டின் கொடி என்பது, அந்நாட்டின் பிரதிநிதி போன்றது. ஒரு நாட்டின் கொடி உயரப் பறக்கவிடப்படுவதற்கும், அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படுவதற்குமே அத்தனை அர்த்தங்கள் இருப்பதை நாம் செய்திகளில் படித்திருப்போம். இந்த 75ஆவது சுதந்திர தின நன்னாளில், இந்தியாவின் தேசியக் கொடியை நாம் நம் வீடுகளில் ஏற்றி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு அடிப்படைக் கேள்வி எழுகிறது.
சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி முதன் முதலில் எந்த நாட்டில் ஏற்றப்பட்டது? என்கிற கேள்விக்குப் பலரும் பல நாடுகளின் பெயரைக் கூறலாம். ஆனால் உண்மையில் சுதந்திர இந்தியாவின் கொடி ஆஸ்திரேலியா நாட்டில் தான் முதல் முறையாக ஏற்றப்பட்டது.
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு எத்தனை நாட்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் கொடி ஏற்றப்பட்டது? யார் ஏற்றி வைத்தார்? ஏற்றியவரின் பின்னணி என்ன... என்பதை எல்லாம் இக்கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்?
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. சில நூற்றாண்டு காலம் நேரடியாகவும் சில நூற்றாண்டு காலம் மறைமுகமாகவும் இந்தியாவை ஆட்சி செய்து வந்த பிரிட்டன் அரசு இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்து வெளியேறியது.
அப்போது இந்தியா சார்பாக ஆஸ்திரேலியா நாட்டின் ஹை கமிஷனராக சர் ரகுநாத் புருஷோத்தம் பிரான்ச்பே என்பவர் இருந்தார்.
ரகுநாத் புருஷோத்தம் பிரான்ச்பே மெத்தப் படித்த மேதாவி. இந்தியாவின் அரசியல், கல்வி, இலக்கியம்... என பல தளங்களில் ஆர்வத்தோடு பணியாற்றியவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பாடத்தில் பட்டப் படிப்பை நிறைவு செய்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணித பாடத்தில் மிகப் பிரமாதமான மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சீனியர் ராங்ளர் (Senior Wrangler) என்கிற பட்டம் வழங்கப்படும். அப்பட்டத்தை 1899 ஆம் ஆண்டு பெற்று முதல் இந்திய சீனியர் ராங்ளர் ஆனார்ட் ரகுநாத் புருஷோத்தம் பிரான்ச்பே.
இத்தனை பிரமாதமான கல்வி பின்புலம் கொண்ட ரகுநாத் புருஷோத்தம், இன்றைய மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனா நகரத்தில் இருக்கும் பெர்குசன் கல்லூரியில் கணிதவியல் துறையின் தலைவராக பணியாற்றினார். 1906 ஆம் ஆண்டு முதல் 1926 ஆம் ஆண்டு வரை அதே கல்லூரியின் தாளாளராக பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மும்பை மற்றும் லக்னோ பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக தன் பணியைத் தொடர்ந்தார்.
1944 ஆம் ஆண்டு தான் இந்தியா சார்பாக ஆஸ்திரேலியாவின் ஹை கமிஷனர் ஆக அப்பொதைய இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். வெறுமனே கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஒரு நல்ல கல்வியாளர், ஆஸ்திரேலியாவின் ஹை கமிஷனராக என்ன செய்து விடுவார் என்கிற கேள்வி அப்போது பலரால் எழுப்பப்பட்டது.
அதற்கு தன் செயலில் விடை காட்டினார் ரகுநாத். ஆஸ்திரேலிய ஹை கமிஷனராக பதவி ஏற்ற உடனேயே ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையில் நேரடி வணிக மற்றும் கடல் வழித் தடங்களை அமைக்கத் தொடர்ந்து பேசி வந்தார். ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையில் இப்படி நேரடி கடல் வழித் தடங்கள் மற்றும் வர்த்தகங்கள் வருவதால் இருநாட்டுக்கும் வர்த்தக ரீதியில் நல்ல பலன் கிடைக்கும் எனத் தொடர்ந்து ஊடகங்களிடமும் பேசி வந்தார்.
இதற்கிடையில் தான் இந்தியாவுக்குப் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட ரகுநாத் புருஷோத்தம் பரான்ச்பே உடனடியாக சுதந்திர இந்தியாவின் கொடியை விமான மூலம் இந்தியாவிலிருந்து வரவைத்தார்.
ஆஸ்திரேலியாவில் மார்ட்டின் பிளேஸ் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்த புருடென்ஷியல் பில்டிங் என்கிற கட்டடத்தின் உச்சியில் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
ரகுநாத் புருஷோத்தம் பரான்ச்பே உடன் சுமார் 350 விருந்தினர்கள் அக்தக் கொடியேற்றும் விழாவில் பங்கேற்றனர். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இந்தியச் சமூகத்தவர்கள், ஆஸ்திரேலியாவின் அமைச்சர்கள், வெளிநாட்டு உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள்... எனப் பல தரப்பினர் கலந்து கொண்டனர்.
சுதந்திர இந்தியாவின் கொடி பெருமிதத்தோடும் மகிழ்ச்சியோடும் சில கண்ணீர்த் துளிகள் சிந்த ஏற்றப்பட்டது. இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்து ஏழு மணி நேரத்துக்குள் முதன் முதலாக (ஒரு வெளிநாட்டில்) ஆஸ்திரேலியாவில் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
பிறகு அக்கொடியில் உள்ள மூவர்ணம் மற்றும் அசோக சக்கரம் குறித்து அங்குக் கூடியிருந்த விருந்தினர்களிடம் பெருமை பொங்க எடுத்துரைத்தார் ரகுநாத் பரான்ச்பே.
இந்தியா உலகில் உள்ள அனைத்து மக்களின் சுதந்திரத்திற்காகவும் நாடுகளுக்கு இடையிலான அமைதிக்காகவும் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் என்று கூறினார்.
அப்போது ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்த பென் சிஃப்லே (Ben Chifley), சுதந்திர இந்தியாவின் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அப்போது ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த முனைவர் ஹெச் வி இவாட் (Dr H. V. Evatt) இந்தியாவின் வளர்ச்சியை ஆஸ்திரேலியா நட்போடு பார்க்கும் என்று கூறினார். மேலும் சர் ஐவன் மகாய் (Sir Iven Mackay) என்பவரை ஆஸ்திரேலியா சார்பாகச் சுதந்திர இந்தியாவின் முதல் ஆஸ்திரேலியா ஹை கமிஷனர் ஆக நியமித்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust