Rahul Gandhi: அதானியோடு என்ன தொடர்பு; மோடியை துளைத்தெடுத்த கேள்விகள் - அவையை அதிரவைத்த உரை Twitter
இந்தியா

அதானி விவகாரம் : மோடியை துளைத்தெடுத்த கேள்விகள் - ராகுல் காந்தி உரை தமிழில்

NewsSense Editorial Team

வெற்றிகரமாக பாரத் ஜோடா யாத்திரையை நிறைவு செய்த ராகுல் காந்தி, பிப்ரவரி 7ஆம் தேதி செவ்வாய்கிழமை, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பாரத் ஜோடா யாத்திரை குறித்தும், தொழிலதிபர் கெளதம் அதானியின் சொத்து விவரங்கள் பற்றியும், அவருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான நெருக்கம் தொடர்பாகவும் பல விஷயங்களைப் பேசினார்.

இனி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அவர்களின் உரையில் இருந்து:

கடந்த நான்கு மாதங்களில், தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மிக சிறப்பாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 3,600 கிலோ மீட்டர் பயணத்தில் கற்றுக்கொள்ள நிறைய கிடைத்தது. சாதாரண எளிய வெகுஜன மக்களின் குரல் தான் இந்தியாவின் குரல். அவர்களுடைய குரல் அழுத்தம் திருத்தமாகவும், ஆழமாகவும் என்னால் கேட்க முடிந்தது.

தொடக்கத்தில் மக்கள் கூறிய பல்வேறு பிரச்சனைகளுக்கு, இதுதான் காரணம் இவர்கள்தான் காரணம் என்று கூறிக் கொண்டிருந்த நான், ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சாக்கு போக்குகள் சொல்வதை நிறுத்திக் கொண்டேன். சொல்லப்போனால் அது தானாகவே நின்றுவிட்டது. அவர்கள் என்ன சொல்கிறார்கள், அவர்கள் கருத்து என்ன என்பதைக் கேட்கத் தொடங்கினேன்.

பாரத் ஜோடோ யாத்திரை நடந்து கொண்டிருந்தபோது பல்வேறு இளைஞர்கள் (படித்த இளைஞர்களும் அடக்கம்) வந்து வேலையில்லை, ஊபர் நிறுவனத்திற்காக டாக்ஸி ஓட்டிக் கொண்டிருக்கிறேன், கூலித் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறினர்.

அதே போல, யாத்திரையின் போது பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் வந்தனர். பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகைகளை எல்லாம் செலுத்துகிறோம், ஆனால் பேரிடர் என்று வரும்போது நாங்கள் செலுத்திய பிரீமியம் தொகைகள் எல்லாம் காணாமல் போய்விடுகின்றன. அரசு எங்களிடமிருந்து நிலங்களை அபகரித்துக் கொள்கிறது, எங்களுக்கு சரியான விலை கொடுக்கப்படுவதில்லை என்றனர்.

மலைவாழ் மக்களும், அவர்களுக்கான பிரத்தியேகமாக நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிலங்கள், அரசால் அபகரிக்கப்படுகின்றன எனபல பிரச்சினைகளைப் பட்டியலிட்டனர். இப்படி பல தரப்பினரும் பல பிரச்சனைகளை முன்வைத்தனர்.

இதில் முக்கியமான பிரச்சனைகள் என்னவென்று என்னைக் கேட்டால், வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், விவசாயிகள் பிரச்சனை ஆகிய மூன்று தான் தலையாயது என்பேன்.

விவசாயிகளைப் பொருத்தவரை குறைந்தபட்ச கொள்முதல் விலை தொடர்பான பிரச்சனைகள் இருக்கின்றன, விவசாயத்திற்கு தேவையான விதைகள் தொடர்பான பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றன. விவசாய சட்டங்கள் தொடர்பாகவும் விவசாயிகள் தங்கள் வருத்தங்களைத் தெரியப்படுத்துகின்றனர்.

அவ்வளவு ஏன் அக்னிவீர் திட்டம் தொடர்பான பிரச்சனைகளும் எழுப்பப்பட்டன. அக்னிவீர் திட்டத்தினால் இந்த நாட்டிற்கு பெரும் பயன் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் எளிய வெகுஜன இந்திய மக்களும், இளைஞர்களும் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகவில்லை.

அக்னிவீர் திட்டம் வருவதற்கு முன்பு, எங்களுக்கு இராணுவத்தில் சுமார் 15 ஆண்டு காலம் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது, அதனைத் தொடர்ந்து பென்ஷன் போன்ற திட்டங்களும் நடைமுறையில் இருந்தன. ஆனால் இப்போது 4 ஆண்டு கால சேவையோடு நாங்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவோம். எங்களுக்கு ஓய்வூதியம் போன்ற எந்த திட்டத்தின் மூலமும் அரசு உதவிகள் கிடைக்காது.

ஒரு சில ராணுவ மூத்த அதிகாரிகளே அக்னிவீர் திட்டம், இந்திய ராணுவத்திற்குள்ளிருந்து வந்ததாக தெரியவில்லை, அது ஆர் எஸ் எஸ் அமைப்பிலிருந்து, இந்திய அரசின் உள் விவகாரத்துறை அமைச்சகத்தில் இருந்தோ வந்ததாக இருக்கலாம் என்று கூறினர். இந்திய ராணுவத்தின் மீது அக்னிவீர் திட்டம் திணிக்கப்பட்டதாகவே அவர்கள் கூறுகிறார்கள். இது ராணுவத்தை பலவீனமாக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையில், அக்னிவீர் திட்டம் (ஒரு முறை மட்டுமே பேசப்பட்டது), வேலையில்லா திண்டாட்டம், மக்கள் அவதிப்படும் விலைவாசி மற்றும் பணவீக்கம்… போன்ற சொற்கள் ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை. ஆனால் பாரத ஜோடோ யாத்திரை முழுக்க இந்த சொற்களை திரும்ப திரும்ப கேட்க முடிந்தது. இது எனக்கு விசித்திரமாக இருக்கிறது.

தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம்… என இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அதானி என்கிற ஒரு சொல்லை மட்டும் திரும்பத் திரும்பக் கேட்க முடிந்தது. அதானி குறித்து பேசும்போது மக்கள் ஒரு கேள்வியை எழுப்பினர். இந்த அதானி குழுமம் எப்படிப்பட்ட வியாபாரத்திலும், எவருடைய வியாபாரத்திலும் புகுந்து விடுகிறார்கள், ஆனால் அவர்கள் தோற்பதில்லை, மாறாக எல்லா வியாபாரங்களிலும் வெற்றி பெறுகிறார்கள்.

தொடக்கத்தில் ஒரு சில துறைகளில் மட்டுமே வியாபாரம் செய்து வந்த அதானி, இன்று ஏர்போர்ட், சிமெண்ட், டேட்டா சென்டர், சோலார் மின்சாரம், மீடியா, மரபுசாரா ஆற்றல், ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை என பல துறைகளில் தற்போது வியாபாரம் செய்து வருகிறார். இது எப்படி சாத்தியமானது என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

அதேபோல கடந்த 2014 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தில் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலராக மட்டுமே இருந்த கௌதம் அதானியின் சொத்து மதிப்பு, சில வாரங்கள் முன்பு வரை சுமார் 140 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டது எப்படி? என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் 609 வது இடத்தில் இருந்த கௌதம் அதானி, திடீரென உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து விட்டார். என்ன மாயம் நடந்ததோ மந்திரம் நடந்ததோ தெரியவில்லை.

(காங்கிரஸ் தரப்பில் ‘மோதி ஹே தோ மும்கின் ஹே’ (மோதி இருந்தால் எல்லாமே சாத்தியம் தான்) என்று ஆர்ப்பரித்தனர்).

இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் வியாபாரம் யாரிடம் இருக்கிறது கௌதம் அதானியிடம், ஜம்மு காஷ்மீரில் ஆப்பிள் வியாபாரத்தை யார் கவனிக்கிறார்கள் அதானி குழுமம், இந்தியாவின் முன்னணி துறைமுகங்களை யார் நிர்வகிக்கிறார்கள் அதானி, இந்த சாலையில் நான் நடந்து கொண்டிருக்கிறேனே… இதை யார் போட்டது அதானி . இப்படி எல்லா வியாபாரங்களிலும் புகுந்து விளையாடி வெற்றி பெறும் அதானி குழுமத்திற்கு இது எப்படி சாத்தியமானது? இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும் கௌதம் அதானி அவர்களுக்குமான உறவு என்ன என்றும் கேள்வி எழுப்பினர்.

இதைப் பாருங்கள் என ராகுல் காந்தி கௌதம் அதானி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி அருகருகே ஒரு விமானத்தில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு படத்தை எடுத்துக் காட்டினார். (அவலையில் கடும் எதிர்ப்பு மற்றும் சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டதற்கு இணங்க, படங்களைக் கீழே வைத்தார் ராகுல் காந்தி)

இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் கௌதம் அதானிக்கும் இடையிலான உறவுமுறை நரேந்திர மோதி குஜராத்தின் முதல்வராக இருந்த காலகட்டத்தில் தொடங்கியது. அந்த காலகட்டத்தில் தான் குஜராத் ஒரு மிகப்பெரிய தொழில் கேந்திரமாக வைப்ரன்ட் குஜராத்தாக மிளிர்கிறது என்கிற பிம்பத்தை கட்டமைக்க கௌதம் அதானி உதவினார். இதன் காரணமாக கௌதம் அதானியின் தொழில் சாம்ராஜ்யம் அசர வேகத்தில் வளர்ந்தது.

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகுதான், அந்த மாய மந்திரங்கள் வேலை செய்ய தொடங்குகின்றன. இந்த மாய மந்திரங்கள் மூலமாகத்தான் எங்கோ பின் வரிசையில் இருந்த கௌதம் அதானி, சில ஆண்டுகளில் உலகின் டாப் பணக்காரராக பலரைப் பின்னுக்குத் தள்ளினார். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன நான் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

உதாரணமாக இந்தியாவில் இருக்கும் விமான நிலையங்களை இன்னும் சிறப்பாக மேம்படுத்த, கட்டமைக்க, அந்த விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களிடம் கொடுக்க அரசு ஒரு திட்டம் வகுத்தது. திட்டத்தில் விமான நிலையங்களை மேம்படுத்துவது மற்றும் கட்டமைப்பது தொடர்பான முன் அனுபவம் இல்லாத நிறுவனங்கள் இதில் அனுமதிக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த விதிகள் எல்லாம் தளர்த்தப்பட்டு அதானி குழுமத்திற்கு 6 விமான நிலையங்கள் கொடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்தியாவிலேயே லாபகரமாக இயங்கக்கூடிய மும்பை துறைமுகத்தை, அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஜி வி கே நிறுவனத்திடம் இருந்து பிடுங்கி அதானி குழுமத்திற்குக் கொடுத்தது இந்திய அரசு.

இதன் விளைவாக இன்று, இந்தியாவில் ஒட்டுமொத்த விமான பயணிகளில் 24 சதவீத விமான பயணிகள் அதானி குழுமத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் விமான நிலையங்களில் பயணிக்கின்றனர். இந்தியாவின் கணிசமான விமான சரக்கு போக்குவரத்துகள் அதானி குழுமம் நிர்வகிக்கும் விமான நிலையங்களில் வழியாகப் பயணிக்கின்றன. இந்திய பிரதமர் & இந்திய அரசு அதானி குழுமத்திற்கு இப்படி ஒரு வியாபார வழிவகைகளை செய்து கொடுத்துள்ளது.

ஒரு தனிநபரின் வியாபாரத்தை வளர்த்தெடுக்க அரசின் அதிகாரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போன்ற வணிகப் பள்ளிகள் இது குறித்து ஒரு ஆய்வே நடத்தி கேஸ் ஸ்டடியாக வைக்கலாம்.

அதானி குழுமத்திற்கு பாதுகாப்புத் துறை தொடர்பாக எந்த முன் அனுபவமும் இல்லை. ஆனால் இப்போது டிரோன்கள், பிஸ்டல், ரைஃபல்… உட்பட பல பாதுகாப்புத் துறை சார்ந்த வியாபாரங்கள் அக்குழுமத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அதேபோல இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதானி குழுமத்திற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கடன்களை கொடுக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார், அடுத்த சில பல வாரங்களிலேயே அந்நாட்டின் மின்சாரத் துறையில் ஒரு மிகப்பெரிய ஒப்பந்தப் பணி அதானிக்கு கிடைக்கிறது. இதே போல இலங்கையில் உள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அதானி குழுமத்திர்குக் கொடுக்கப்பட இந்திய பிரதமர் நரேந்திர மோதி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை தரப்பில் இருந்து கூறப்பட்டது. ஆக இது இந்தியாவிற்கான வெளியுறவுத் துறை கொள்கைகள் அல்ல, அதானிக்கு வெளிநாடுகளில் வியாபாரங்களை வைத்துக் கொடுப்பதற்கான கொள்கை.

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமத்திற்கு பல்வேறு போலி நிறுவனங்கள் இருப்பதாகவும், அந்த நிறுவனங்கள் வழியாக திரும்ப இந்தியாவில் பட்டியலிடப்பட்டு இருக்கும் அதானி குழும நிறுவனங்களுக்கே பணம் வந்து சேர்வதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பணம் யாருடைய பணம்? இந்த நிறுவனங்கள் யாருடைய நிறுவனங்கள்? என்கிற கேள்விகளுக்கு விடை காண்பது இந்திய அரசின் கடமை.

சமீபத்தில் இந்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்த பட்ஜெட்டில், கிரீன் ஹைட்ரஜன் திட்டங்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகைகள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். சமீபத்தில் தான் அதானி குழுமம் கிரீன் ஹைட்ரஜன் திட்டத்தில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவிருப்பதாகக் கூறியிருந்தது இங்கு நினைவு கூறத்தக்கது. ஆக, அரசு தரப்பிலிருந்து அதானிக்கு பல்வேறு ஊக்கத்தொகைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பாரத பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் எத்தனை முறை சர்வதேச பயணங்களின் போது கௌதம் அதானி உடன் ஒன்றாகப் பயணித்தார்? எத்தனை வெளிநாட்டு பயணங்களில் பிரதமர் நரேந்திர மோதியுடன் கௌதம் அதானி இணைந்து கொண்டார்? இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஒரு வெளிநாட்டு பயணத்தை முடித்த பிறகு எத்தனை முறை அதே நாட்டிற்கு கெளதம் அதானி பயணித்திருக்கிறார்? கடந்த 20 ஆண்டுகளில் கௌதம் அதானி பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை கோடி நன்கொடை கொடுத்திருக்கிறார்? என பல கேள்விகளை அடுக்கி தன் உரையை நிறைவு செய்தார் ராகுல் காந்தி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?