தேர்தல் பத்திரங்கள் உண்மையில் யாருக்கு லாபம்? | Explained  Istock
இந்தியா

தேர்தல் பத்திரங்கள் உண்மையில் யாருக்கு லாபம்? | Explained

கடந்த 2019 - 20 காலத்தில், இந்தியாவில் விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் சுமார் 75 சதவீத தேர்தல் பத்திரங்கள், இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கே கிடைத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Gautham

எலெக்டோரல் பாண்ட்ஸ் என்றழைக்கப்படும் தேர்தல் பத்திரங்களைக் குறித்து நீங்கள் செய்திகளிலோ, சமூக வலைதளங்களிலோ படித்திருக்கலாம் அல்லது அக்கம்பக்கத்தினர் பேசிக் கேட்டிருக்கலாம்.

இந்த பத்திரங்கள் தொடக்கத்தில் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் இப்போது தேர்தல் பத்திரங்களில் கூட, சில அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. ஆகையால் இப்போதும் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு பணம் யாரிடமிருந்து வருகிறது என்கிற கணக்கு வழக்குகள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவதில்லை. அப்படி தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மைக்குப் பாதகமாக இருப்பது என்ன? வல்லுநர்கள் கூறுவது என்ன? வாருங்கள் பார்ப்போம்.

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?

இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க, கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் (எலெக்டோரல் பாண்ட்ஸ்) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொண்டு, நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீத வாக்குகளையாவது பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழியாக நன்கொடைகளைப் பெற முடியும்.

1,000 ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையான பத்திரங்கள் அரசு வங்கிகளில் ஆண்டு முழுவதும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

அந்த தேர்தல் பத்திரங்களை, ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாகக் கொடுக்கலாம். அரசியல் கட்சிகள் இந்த பத்திரங்களை அடுத்த 15 நாட்களுக்குள் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

யாருக்கு லாபம்?

இந்தியாவில் இதுவரை 19 தவணைகளில் வெளியான 1.15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனை ஆகியுள்ளதாக அரசு தரப்பிலேயே கூறப்பட்டது.

கடந்த 2019 - 20 காலத்தில், இந்தியாவில் விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் சுமார் 75 சதவீத தேர்தல் பத்திரங்கள், இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கே கிடைத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலில் இப்போது வரை முக்கிய எதிர்க்கட்சியாகக் கருதப்படும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 9% தேர்தல் பத்திரங்கள் மட்டுமே கிடைத்தது.

இந்தியாவில் உள்ள 7 பெரிய அரசியல் கட்சிகளின் 62% வருமானம் தேர்தல் பத்திரங்களில் இருந்து மட்டுமே வந்துள்ளது என அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் (Association for Democratic Reforms - ADR) என்கிற அமைப்பு கூறுகிறது.

ஏன் கொண்டு வரப்பட்டது? என்ன நடந்து கொண்டிருக்கிறது?

இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் பணத்துக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், அரசியலில் புழங்கும் பணம் எப்படி வந்தது என எல்லோருக்கும் தெரிய வேண்டும் என தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் தேர்தல் பத்திரங்களால் தற்போது பணம் இன்னும் ரகசியமாகக் கைமாறுகின்றன.

யார் தேர்தல் பத்திரங்களை வாங்குகிறார்கள், அது யாருக்கு கொடுக்கப்படுகிறது என இந்திய மத்திய அரசுக்கு வரிசெலுத்தும் குடிமக்கள் தொடங்கி பொதுவெளியில் யாருக்கும் எதுவும் தெரிவதில்லை. எனவே இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மற்றும் பிரச்சனைக்குரியது என வாதிடுகிறது ஏ டி ஆர் அமைப்பு.

ஏ டி ஆர் அமைப்பு சொல்லும் அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் அத்தனை ரகசியமாக எல்லாம் வைக்கப்படவில்லை, அரசு வங்கிக்கு யார் அப்பத்திரங்களை வாங்கினார்கள், யார் அப்பத்திரத்தின் மூலம் பணம் பெற்றார்கள் என்கிற விவரத்தை அரசு நினைத்தால் சேகரித்துவிடலாம் என்கிறார் ஏ டி ஆர் அமைப்பின் இணை நிறுவனர் ஜக்தீப் சோக்கர்.

அதை வைத்து நன்கொடை வழங்குபவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்றும் சுட்டிக் காட்டுகிறார். இது ஆளும் கட்சிக்கு ஒரு மிகப்பெரிய சாதக அம்சமாக அமையலாம், எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தலாம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

சுருக்கமாக ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடை யாருக்கும் தெரியாமல் இருக்க தேர்தல் பத்திரங்கள் என்கிற பெயரில் சட்டமியற்றி இருக்கிறார்கள்.

எனவே தான் தேர்தல் பத்திரங்களை வாங்குபவரோ, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றவரோ அதை எங்கும் பொதுவெளியில் குறிப்பிட வேண்டும் என்கிற அவசியம் இல்லாத சுழல் நிலவுகிறது.

இந்தியாவில் தேர்தல்கள் & செலவுகள் ஒரு பார்வை

உலகிலேயே ஒரு தேர்தலுக்கு அதிகம் செலவாகும் நாடுகள் பட்டியலில், அமெரிக்காவின் அதிபர் தேர்தலைத் தொடர்ந்து, இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 50,000 கோடி ரூபாய்) செலவாகி இருக்கலாம் என பிபிசி ஊடகத்தின் வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

1952ஆம் ஆண்டு ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை வெறும் 4 லட்சமாக இருந்தது, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 90 கோடியாக அதிகரித்ததுள்ளது. அதாவது அதிகப்படியான மக்களைச் சென்றடைய, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் களத்தில் நிறைய பணத்தைச் செலவழிக்க வேண்டியுள்ளது.

இது போக, இந்தியாவில் நாடாளுமன்ற அளவில் ஒரு தேர்தல், ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் டெரிட்டரி பகுதிகளுக்குத் தனி சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்... என பல தேர்தல்கள் நடைபெறுவதும் செலவுகள் அதிகரிப்புக்கு ஓரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

மறைமுக வருமானம்

இந்தியாவில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகள் அனைத்தும், ஒவ்வொரு ஆண்டும் தங்களின் கட்சி வருமானம் மற்றும் செலவுகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கின்றன. அதில் ஒவ்வொரு ஆண்டும் யாரிடமிருந்து நன்கொடை வந்திருக்கிறது என்றே தெரியாத வருமானங்களாக ஒரு பெரிய தொகை (கிட்டத்தட்ட 70%) காட்டப்படுகிறது. இதில் அரசு சட்டமியற்றி கொண்டு வந்த தேர்தல் பத்திர வருமானங்களும் அடக்கம்.

இக்கருத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான பைஜயந்த் ஜே பண்டா மறுக்கிறார். தேர்தல் பத்திரங்களுக்கு முன், பெட்டிகளில்தான் நன்கொடை பெறப்பட்டது. சில நேரங்களில் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு நன்கொடைகள் பெறப்பட்டன. ஆனால் இப்போது தேர்தல் பத்திரங்கள் வந்த பின், அரசியல் ரீதியிலான நன்கொடைகளில் ஒரு பெரிய முன்னேற்றம் காணப்படுகிறது என ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

ஒரு அரசியல் கட்சிக்கு எங்கிருந்து பணம் வருகிறது, யார் நன்கொடை வழங்குகிறார்கள் என்கிற வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம். தேர்தல் பத்திரங்கள், இதில் பல விஷயங்களை நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டார். 

தேர்தல் பத்திரங்களை இன்னும் மேம்படுத்த வேண்டும், இன்னும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று கூறலாம், ஆனால் தேர்தல் பத்திரங்களுக்கு முன்பிருந்த நிலையே மேலானது என்று கூற முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளார் ஜே பண்டா.

இந்தியாவில் அரசியல் தொடர்பான நிதி & நன்கொடை விவகாரங்களில் இன்னும் பல மாற்றங்கள் வேண்டும் என்பதை எவரும் மறுக்க முடியாது, அதே சமயம், இந்த சீர் திருத்தங்கள் எல்லாம் அரங்கேறுவதும் அத்தனை எளிதல்ல என்பதையும் உணர முடிகிறது. வருங்காலத்தில் இந்திய அரசியலில் மேலும் வெளிப்படைத்தன்மை மலரும் என நம்புவோம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?