ஆடம்பரம் என்ற வார்த்தையைக் கேட்டது முதலில் நம் நினைவுக்கு வருவது வைரங்கள் தான்.
கண்கள் கூசும் மினுமினுப்பு பெண்களை வெகுவாக ஈர்த்துவிடுவதனால் உலகம் முழுவதும் காதலியின் சம்மதத்தைப் பெறும் கருவியாக வைரத்தை உபயோகிக்கின்றனர்.
வைரத்தொழில் உலகம் முழுவதும் பிரபலமானதாக இருப்பதற்குக் காதலுக்கும் பங்குண்டு எனலாம்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பெர்லி, பெல்ஜியம் நாட்டில் உள்ள அன்ட்வெர்ப் ஆகிய நகரங்களுடன் குஜராத்தில் இருக்கும் சூரத் நகரமும் உலக அளவில் வைர உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது.
இந்தியாவின் வைர நகரமாக அறியப்படும் சூரத்தில் குறைந்த அளவே வைரம் கிடைத்தாலும் வைரத்தைத் தீட்டுவது மற்றும் ஜொலிக்க வைக்கும் தொழிலில் சூரத் முன்னணி வகிக்கிறது.
உலக அளவில் வைர உற்பத்தி தொழிலை ஆளும் நகரமாக சூரத் வளர்ந்த கதை இது!
இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றுப் படுகைகளில் படிந்திருக்கும் வண்டல் கற்களை வெட்டி எடுத்ததன் மூலம் வைரத் தொழில் ஆரம்பமானது என்று நம்பப்படுகிறது.
சூரத்தில் இந்த தொழில் பிரபலமாக, அந்த நகரம் இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்தது முக்கியக் காரணம்.
சூரத் வழியாகப் பிரஞ்சு மற்றும் பிற ஐரோப்பிய வியாபாரிகள் இந்தியாவின் மசாலாப் பொருட்கள், பருத்தி, பட்டு உள்ளிட்ட பொருட்களை வாங்க நுழைந்தனர்.
கடற்கரை நகரமாக இருந்த சூரத் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் லாவகமாக இருந்தது.
தங்கம், வெள்ளி மற்றும் தாமிரத்தை, பட்டு மற்றும் பருத்தியுடன் சேர்த்து புதுமையான ஜவுளிகளை உற்பத்தி செய்வதில் கை தேர்ந்தவர்களாக விளங்கினர் சூரத் மக்கள்.
படேல் வகுப்பு மக்களின் கையிலிருந்த ஜவுளித் தொழிலால் சூரத்துக்கு, ‘சாரி நகரம் (Zari City)’ என்ற பெயரும் இருந்தது.
இந்த காரணங்களால் வைரத் தொழில் சூரத்தைத் தேடி வந்தது.
1901ம் ஆண்டு வைரத்தை மெருகூட்டுவதற்கான எந்திரங்களை கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தார் சூரத்தில் பண்டிதர் வகுப்பைச் சேர்ந்த தொழிலதிபர்.
இப்போதிருக்கும் அபார வளர்ச்சியை அப்போது அடையவில்லை என்றாலும் இந்த தொழில் 50 ஆண்டுகள் சிறுக சிறுக வளர்ந்தது.
இரண்டாம் உலகப் போர் சூரத் வைர நகரமாக மாறுவதற்கு முக்கிய பங்காற்றியது.
அதுவரை வைரத்தைப் பட்டைத் தீட்டும் பணியில் முன்னணியிலிருந்த ரங்கூனை இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் கைப்பற்றியது.
இதனால் அங்கிருந்து வைர பணியாளர்கள் துரத்தப்பட்டனர்.
ஏற்கெனவே தங்கம் மற்றும் வெள்ளி தயாரிப்பு தொழிலில் கை தேர்ந்த நகரமாக இருந்த சூரத்தை நோக்கி வைரத் தொழில் நகர்ந்தது.
1960 முதல் 80கள் வரை சூரத்தில் வைரத் தொழில் அபார வளர்ச்சி பெற்றது.
தொழிலதிபர்கள் கரடுமுரடான வைரத்தை மூட்டை மூட்டையாக சூரத்துக்கு அனுப்பினர். அவற்றை இறக்குமதி செய்து பளபளக்கும் வைரமாக, நகைகளாக சூரத் தொழில்முனைவோர் ஏற்றுமதி செய்தனர்.
சௌராஷ்டிராவைச் சேர்ந்த பட்டேல்களும், வடக்கு குஜராத்தைச் சேர்ந்த ஜெயின் மக்களும் இணைந்து சூரத்தின் வைரத் தொழில் செழிக்க உதவினார்கள்.
1991ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல் உள்ளிட்ட பொருளாதார கொள்கைகள் சூரத் வணிக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது.
உலகின் மொத்த வைர உற்பத்தியில் 90% சூரத்தில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
வைரத்தைத் தீட்டும் தொழிலில் 10 - 15 லட்சம் மக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சூரத்தில் குறைந்த சம்பளத்துக்குத் தொழிலாளர்கள் கிடைப்பதனால் உலக அளவில் வணிகம் செய்பவர்களால் விரும்பப்படும் நகரமாக இருக்கிறது.
1.7 லட்சம் கோடி முதல் 1.9 லட்சம் கோடி வரை லாபம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
சூரத் இந்தியாவை வைர ஏற்றுமதியில் முன்னணி நாடாக வைத்திருக்கிறது.
இங்குத் தயாரிக்கப்படும் வைரங்களின் வர்த்தக மையமாக மும்பை செயல்படுகிறது. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான அதானி மும்பை வைர வர்த்தகத்தில் தான் தனது தொழிலைத் தொடங்கினார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
சூரத்துக்கு பெரும்பாலான கரடு முரடான வைரக் கற்கள் இஸ்ரேலிலிருந்து தான் இறக்குமதியாகின்றன.
இங்கு பணியாளர்கள் இரவும் பகலுமாக வேலை செய்துகொண்டே இருக்கின்றனர்.
பணியாளர்கள் வைரத்தைச் செதுக்குவதில் நிபுணத்துவம் பெறாமலிருப்பது பெரும் பிரச்னையாகப் பார்க்கப்பட்டது. இதனைச் சரி செய்ய அரசும் வைர தொழில் முனைவோர் சங்கமும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அத்துடன் பல வேலைகள் கணினிமயமாக்கப்பட்டு விட்டன.
ரஷ்யா - உக்ரைன் போரால் சூரத்தின் வைரத் தொழில் பாதிப்படைந்திருக்கிறது.
வைரத்துக்கான வாடிக்கையாளர்கள் உலக அளவில் அதிகரித்துக்கொண்டே போவதனால் இந்த பாதிப்புகளிலிருந்து எளிதில் மீண்டு விடுவோம் என நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர் வைர தயாரிப்பில் ஈடுபடும் தொழிலதிபர்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust