நம் வீட்டில் நாம் என்ன சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது, வாகனத்தில் தொடர்ந்து பயணிக்கலாமா, பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருளைப் பார்த்து நாம் பயப்பட வேண்டுமா கூடாதா என்பதை எல்லாம் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. அதில் நம் இந்திய ரூபாய் மதிப்பும் ஒன்று என்றால் நம்புவீர்களா..?
நம்பித் தான் ஆக வேண்டும்.
உலகிலேயே மிக வலுவான கரன்சி என்கிற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது அமெரிக்க டாலர். ஆகையால் தான் பெரும்பாலான ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்கள் அமெரிக்க டாலரில் பேரம் பேசப்பட்டு இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது.
இன்றைய சூழலில் $1 = ₹70 என்றால் இந்திய ரூபாய் மதிப்பு வலுவடைந்திருக்கிறது (அமெரிக்க டாலர் பலவீனமடைந்திருக்கிறது) என்று பொருள். $1 = ₹90 என்றால் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது (அமெரிக்க டாலர் பலமடைந்திருக்கிறது) என்று பொருள்.
தொடர்ந்து வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து முதலீடுகளை விற்று அமெரிக்க டாலராக மாற்றிக் கொண்டு வெளியேறி வருகிறார்கள். கடந்த 2022 ஜூன் மாதத்தில் மட்டும் 6.6 பில்லியன் அமெரிக்க டாலர் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறி இருக்கிறது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பின்வலித்த மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் (2 ஆண்டுகள்) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய முதலீடுகளிலிருந்து பின்வலித்த மொத்தத் தொகை 23 பில்லியன், முதலீடு செய்த தொகை 21 பில்லியன். ஆக நிகர விற்பனையே (Net Sold) 2 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. பலமான டாலர், பலவீனமான இந்தியப் பொருளாதார வளர்ச்சி இருக்கும் போது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பது இயல்பான ஒன்றே.
இப்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை இந்தியாவிலிருந்து வெளியே எடுத்து அமெரிக்க டாலராக மாற்றிக் கொள்ளும் போது தன்னிச்சையாகவே டாலருக்கான டிமாண்ட் கூடும், இந்திய ரூபாய்க்கான டிமாண்ட் குறையும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ கரன்சி, ஜப்பானின் யென் கரன்சி, பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங், கனடியன் டாலர், ஸ்வீடிஷ் க்ரோனா, சுவிஸ் ஃப்ராங்க் ஆகிய உலகின் முக்கிய ஆறு கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு எப்படி இருக்கிறது என்பதைக் கூறும் ஒரு குறியீடு தான் அமெரிக்க டாலர் இண்டெக்ஸ்.
இந்த குறியீடு 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சுமார் 9 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதாவது அமெரிக்க டாலர் இந்த ஆறு முக்கியமான சர்வதேச கரன்சிகளுக்கு எதிராக 9% வலுவடைந்துள்ளது.
இது போக, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நடக்கும் பூகோள ரீதியிலான போர், பலவீனமான பங்குச் சந்தைகள், அதிகப்படியான இறக்குமதிகள்... போன்ற பல காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிறது, மேலும் சரிந்து வருகிறது.
நோமுரா என்கிற தரகு நிறுவனம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2022ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 82 ரூபாய் வரையும், நான்காவது காலாண்டில் 81 ரூபாய் வரையும் சரியலாம் என கணித்துள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும் அடுத்த 3 மாத காலத்துக்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் வரையும், 6 மாத காலத்துக்குள் 81 டாலர் வரையும், 12 மாத காலத்துக்குள் 81 ரூபாய் வரை சரியலாம் எனக் கணித்துள்ளது.
முன்பே குறிப்பிட்டது போலச் சர்வதேச அளவில் பல பணப்பரிமாற்றங்கள் அமெரிக்க டாலரில்தான் நடக்கும் என்பதால் இந்திய அரசாங்கத்தின் வர்த்தகப் பற்றாக்குறையும் (Trade Deficit), நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் (Current Account Deficit) அதிகரிக்கும்.
கடந்த 2022 ஜூன் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை வரலாறு காணாத அளவுக்கு 25.6 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு நடப்புக் கணக்கு பற்றாக்குறை இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 1.2 சதவீதமாக இருந்தது, இந்த 2022ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாக அதிகரிக்கலாம் எனப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் பெரும்பாலான (கிட்டத்தட்ட 80 சதவீதம்) கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படுகின்றன. எப்பாடு பட்டாவது கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தே ஆக வேண்டும். அதிக விலை கொடுத்து டாலரை வாங்கி இறக்குமதி செய்வதால், இந்தியப் பொருளாதாரத்தில் பணவீக்கம் ஏற்படும்.
2021ஆம் ஆண்டில் இந்தியாவின் சராசரி நுகர்வோர் பணவீக்கம் (CPI Inflation) 5.5 சதவீதமாக இருந்ததாகவும், இந்த 2022ஆம் ஆண்டில் சராசரி பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கலாம் எனக் கணித்திருக்கிறது கிரிசில் தர மதிப்பீட்டு நிறுவனம் இது கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத பணவீக்க உயர்வு என்பது கவனிக்கத்தக்கது.
இந்திய அரசாங்கம் வாங்கி இருக்கும் கடன்களுக்கான வட்டித் தொகை மற்றும் அசல் தொகையை அமெரிக்க டாலரில்தான் செலுத்த வேண்டி இருக்கும். இனி அதே அளவுக்கு வட்டி மற்றும் அசல் தொகையைச் செலுத்துவதற்குக் கூட, அதிக ரூபாயைச் செலவழிக்க வேண்டி இருக்கும்.
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பணத்தை அனுப்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாடுகளில் வேலை பார்த்து இந்தியாவில் இருக்கும் தங்கள் குடும்பங்களுக்குப் பணத்தை அனுப்பும் இந்தியர்களுக்கு வழக்கத்தை விடக் கூடுதலாக இந்திய ரூபாய் கிடைக்கும். இது இந்தியப் பொருளாதாரத்துக்கும் கொஞ்சம் நன்மை பயக்கும்.
ஐடி, மென்பொருள், பார்மா... போன்ற ஏற்றுமதி சார் துறைகள் நல்ல லாபம் பார்க்கும். ஏற்றுமதி செய்து பணம் ஈட்டும் சாதாரண ஏற்றுமதியாளரும் அதிக லாபம் பார்க்கலாம்.
அமெரிக்க டாலருக்கு நிகராக சரிந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த, கடந்த 2022 மார்ச் மாதத்தில் மத்திய ரிசர்வ் வங்கி தன் கையிலிருந்து சுமார் 20 பில்லியன் டாலரை ஸ்பாட் சந்தையில் விற்றது. இது கடந்த 10 ஆண்டு கால ஆர்பிஐ வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இந்திய ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுத்து நிறுத்த ஆர்பிஐ மேற்கொள்ளும் சில அதிரடி நடவடிக்கைகளால், கடந்த 2022 பிப்ரவரி 25ஆம் தேதி 631 பில்லியன் டாலராக இருந்த ஆர்பிஐயின் அந்நிய செலாவணி கையிருப்பு, கடந்த 2022 ஜூன் 17ஆம் தேதியன்று 590 பில்லியன் டாலராக சரிந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, நம் ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்பைக் கூட கடுமையாகப் பாதிக்கும் என்பதற்கு இதுவே சாட்சி.
கச்சா எண்ணெய்
இந்தியாவின் பெரும்பாலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக முன்பே குறிப்பிட்டிருந்தோம். கச்சா எண்ணெய்யை Multiplier Commodity என்பார்கள். கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தால் காய்கறி, பழங்கள், இறைச்சி, மளிகை பொருட்கள்... போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதைக் கவனித்திருப்பீர்கள். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தால், அதிக ரூபாய் கொடுத்து டாலரை வாங்கி கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டி வரும், எனவே அதே பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற நம் பர்ஸில் இருந்து அதிகப் பணத்தைச் செலவழிக்க வேண்டி வரும்.
ஸ்மார்ட்ஃபோன், எலெக்ட்ரானிக்ஸ் போன்றவற்றின் மூலப்பொருட்கள் கணிசமாக இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலையும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் அதிகரிக்கும்.
ஆப்பிள் ஐமேக், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்... போல இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் டாலரில் விலையிடப்பட்டிருக்கும். உதாரணமாக ஒரு ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சின் விலை 300 டாலர் என வைத்துக் கொள்வோம். 2021ஆம் ஆண்டில் $1 = 75 ரூபாய் என வைத்துக் கொள்வோம். 2021ஆம் ஆண்டில் இந்த வாட்சை வாங்க வேண்டுமானால் 22,500 ரூபாய்க்கு வாங்கிவிடலாம்.
இப்போது 2022 ஜூலை மாதத்தில் $1 = 80 ரூபாய் என வைத்துக் கொள்வோம். இப்போது அதே 300 டாலர் வாட்சுக்கு 24,000 ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கும். இப்படி இறக்குமதி செய்யப்படுவதன் மூலம் அதிகரிக்கும் விலைவாசியை ஆங்கிலத்தில் Imported Inflation என்பர்.
இறக்குமதி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் இறக்குமதி சார் தொழில்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்ளும் அல்லது தங்கள் பொருட்களுக்கு அதிக விலை வைத்து விற்க வேண்டிய சூழல் ஏற்படும். உதாரணமாகக் கச்சா எண்ணெய்யை மூலப் பொருளாகப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்களை எடுத்துக் கொள்வோம்.
கச்சா எண்ணெய்யை அதிக விலை கொடுத்து வாங்கி, பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்வர். இதில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்த செலவையும் பெட்ரோலியப் பொருட்கள் மீது தான் சுமத்த வேண்டி இருக்கும். எனவே இறக்குமதி சார் துறைகள் தாங்கள் தயாரித்த பொருட்களுக்கு அதிக விலை வைத்து விற்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
இந்தியாவைச் சேர்ந்த பல நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு சார்ந்த பல திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றன. அத்திட்டங்களில் முதலீடு செய்வதாகக் கூறிய தொகையை இந்திய நிறுவனங்கள் செய்ய வேண்டுமானால் கூட, அதிக ரூபாயைச் செலவழிக்க வேண்டி இருக்கும்.
இந்தியாவில் உள்ள சாமானியர்கள் கூட வெளிநாட்டுச் சொத்துபத்துக்கள் மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய Liberalised Remittance Scheme என ஒரு திட்டம் இருக்கிறது. அத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் ஒரு நிதியாண்டு காலத்தில் 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்) வரை முதலீடு செய்து கொள்ளலாம். அப்படி முதலீடு செய்பவர்களுக்குக் குறைந்த அளவிலான பணமே டாலர் மூலம் முதலீடு செய்ய முடியும்.
வெளிநாட்டுக்குப் படிக்கச் செல்பவர்கள், வெளிநாட்டில் படிக்கக் கல்விக் கடன் வாங்கியவர்கள் அனைவரும் இனி அதிக இந்திய ரூபாயைச் செலவழிக்க வேண்டி இருக்கும். கல்விக் கடன் வாங்கியவர்கள் வெளிநாட்டுக்குக் கல்விக்கான பட்ஜெட்டை மீண்டும் மாற்றியமைக்க வேண்டி வரலாம்.
வெளிநாடுகளில் மருத்துவ சிகிச்சைக்குச் செல்பவர்கள் இதுவரை போட்டிருந்த பட்ஜெட்டை கட்டாயம் மாற்றியமைக்க வேண்டி இருக்கும். மருத்துவச் செலவு, விமானக் கட்டணம், தங்கும் இடத்துக்கான செலவு, உணவுச் செலவுகள் என எல்லாமே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
இப்படியே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தரைதட்டிக் கொண்டிருந்தால், இந்தியாவில் வாழ்பவர்களே இருசக்கர வாகனத்திலிருந்து சைக்கிளுக்கு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்பொருளாதாரப் பிரச்சனையை அரசு கவனத்தில் கொள்ளும் என நம்புவோம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust