மோடி மற்றும் யோகி

 

Twitter

இந்தியா

Morning News Tamil : ஐந்து மாநில தேர்தலில் பாஜக சாதனை; உக்ரைனில் இரசாயன தாக்குதல்?

Antony Ajay R

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் - நான்கில் ஆட்சியமைக்கும் பாஜக

உத்திர பிரதேசம் மாநிலத்தில் 255 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது பாஜக. 2017 தேர்தலில் 312 இடங்களை வென்ற பாஜகவுக்கு இது கணிசமான வீழ்ச்சி என்றாலும். உத்திர பிரதேச அரசியல் வரலாற்றில் ஐந்து ஆண்டு ஆட்சியை முடித்து அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்ற ஒரே முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டுமே.

எதிர்கட்சியாக அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடி விளங்குகிறது. 111 இடங்களை அந்த கட்சி வென்றிருக்கிறது. காங்கிரஸ் 2 இடங்களும் பகுஜன் சமாஜ் 1 இடமும் மட்டுமே வென்றுள்ளன.

உத்தராகண்டில் உள்ள 70 தொகுதிகளில் 47-ஐ வென்று ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக. எதிர்கட்சியாக காங்கிரஸ் 19 இடங்கள் மட்டுமே வென்றிருக்கிறது.

பஞ்சாபில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி. 92 இடங்களை வென்று ஆட்சியை பிடிக்கிறது. எதிர்கட்சியாக காங்கிரஸ் 18 இடங்களை பிடித்திருக்கிறது. பாஜக 2 மட்டுமே. ஆம் ஆத்மி ஆளும் இரண்டாவது மாநிலமாக விளங்குகிறது பஞ்சாப்.

மணிப்பூரில் உள்ள 60-ல் 32 வென்று ஆட்சியமைக்கிறது பாஜக. 7 இடங்கள் மட்டுமே வென்ற தேசிய மக்கள் கட்சி எதிர்கட்சியாகிறது.

கோவாவில் ஆட்சியமைக்க 21 இடங்கள் தேவைப்படும் நிலையில் 20 இடங்களை கைப்பற்றி உள்ளது பாஜக. எதிர்கட்சியாக காங்கிரஸ் 11 இடங்களை வென்றுள்ளது.

இவ்வாறாக நான்கு மாநிலங்களில் பாஜகவும், ஒன்றில் ஆம் ஆத்மியும் வெற்றி பெற கப்சிப் ஆகியிருக்கிறது காங்கிரஸ்.

குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை

உக்ரைன் மருத்துமனையில் நடந்த தாக்குதலில் குழந்தை உட்பட மூவர் பலி; ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துமா ரஷ்யா?

ரஷ்ய ராணுவம் அனுப்பிய ஏவுகணை ஒன்று மரியுபோல் நகரில் இருந்த குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையைத் தாக்கியுள்ளது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும், குறைந்தது 17 பேர் இந்த தாக்குதலில் காயமடைந்து இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்ய மற்றும் உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. நேட்டோவில் சேர இனியும் அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்று உக்ரைன் அதிபர் கூறினாலும் ரஷ்ய தாக்குதலில் வீரியம் குறையவில்லை. இதற்கிடையில்
ரஷ்யா ரசாயன தாக்குதல் நடத்தக் கூடும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Stalin

"சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பது கடினமானதாக இருக்கும்" - காவலர் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு மற்றும் காவல் துறை அலுவலர்கள் மாநாடு நடந்தது.

இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"காவல்துறையின் பெரிய கவலையாகவும், பணியாகவும் இருக்கப்போவது, சமூக வலைதளங்களால் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுப்பதும், அதன் மேல் உடனடி நடவடிக்கை எடுப்பதும்தான்.

இன்னும் சொல்லவேண்டுமென்றால், நாட்டில் ஏற்படுகிற சாதி - மத மோதல்களுக்கும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு இடையூறு ஆகியவற்றுக்கும், தொடக்கப்புள்ளியாக இருப்பது, இந்த சமூக வலைதளம்தான். இங்கு பல்வேறு தலைப்புகளில் பேசுபவர்கள், களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளோடு, ஆன்லைனில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் உங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், கள நிலவரத்திற்கு ஏற்ப, சட்ட வரம்பிற்குட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை அவர்களாகவே மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தனியாக மேலிடத்திலிருந்து ஆணை வர வேண்டுமென்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, காத்திருக்கவும் கூடாது.

அரசின் நோக்கங்கள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, மக்கள் நலம் - சமுதாய நல்லிணக்கம் - குற்றங்கள் குறைந்த ஒரு வாழ்க்கை முறை - இதனைக் கொண்டுவர வேண்டியது உங்களது கரங்களில்தான் உள்ளது. அதனை நீங்கள் செயல்படுத்திட வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்." என்று பேசினார்

பாலியல் கொடுமை

கத்திமுனையில் துணை நடிகை பாலியல் வன்கொடுமை

சென்னை வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் பகுதியில் சினிமா துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் துணை நடிகை வீட்டில் அத்துமீறி நுழைந்த இருவர் அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் அவர் அணிந்திருந்த 4½ பவுன் நகையையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

இந்தப் புகாரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்தனர்.


குற்றவாளிகளில் ராமாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் முதலில் அடையாளம் காணப்பட்டார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரும் கண்ணதாசனும் சேர்ந்து துணை நடிகையின் வீட்டுக்கு சென்று கத்தி முனையில் கொள்ளையடித்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பமாக துணை நடிகை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

துணை நடிகை தனியாக இருப்பதை அறிந்து கொண்ட கண்ணதாசனும், செல்வக்குமாரும் அவரது வீட்டுக்குச் சென்று கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கின்றனர். இதன்படி நேற்று இரவு இருவரும் துணை நடிகையின் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்ததுடன் கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

விஜய், தமன்

தளபதி 66 : இந்த தீபாவளியில் விஜய் vs அஜித் போட்டி இருக்குமா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த 'பீஸ்ட்' வரும் ஏப்ரல் 14 ரிலீஸ் என்பதால், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே விஜய் அடுத்ததாக வம்சி பைடிபலியின் இயக்கத்தில் கமிட் ஆனார்.

இயக்குநர் வம்சி, தமிழ் ரசிர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். நாகார்ஜூனா, கார்த்தி நடித்த 'தோழா' படத்தின் மூலம் இங்கே அடியெடுத்து வைத்தார். அதன் வசனங்களை எழுதிய ராஜூமுருகன், முருகேஷ்பாபு இருவரும்தான் மீண்டும் வம்சியுடன் கை கோர்க்கிறார்கள்.

விஜய் படத்தின் ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி கமிட் ஆகியிருக்கிறார். பிரபாஸின் 'ஆதி புரூஷ்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர். விஜய்யின் ஜோடியாக பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா ஆகிய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. சமீபத்திய 'புஷ்பா' ஹிட்டினால் ராஷ்மிகாவுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

விஜய்யின் சென்டிமென்ட்டாக முதன்முதலில் சென்னையில்தான் படப்பிடிப்பு நடக்கிறது. பூந்தமல்லியில் உள்ள சுந்தர் ஸ்டூடியோவில் பிரமாண்ட வீடு ஒன்றை செட் அமைத்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து 'பீஸ்ட்' படப்பிடிப்பு நடந்த கோகுலம் ஸ்டூடியோவிலும் செட் அமைத்து உள்ளனர். இதில் விஜய் - தோனி சந்திப்பு நிகழ்ந்தது நினைவிருக்கலாம்.

சென்னையில் முதன்முதலாக விஜய் - ராஷ்மிகா காம்பினேஷனில் பாடல் ஒன்றை படமாக்க உள்ளனர். அதற்கான பாடலை தமன் ஏற்கெனவே போட்டுக் கொடுத்துவிட்டார். அரங்கப் பணிகள் நிறைவு பெறுவதை பொறுத்து இந்தப் பாடல் ஷூட்டை மட்டும் இம்மாதம் 23ம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை செட்கள் அமைக்கும் வேலைகளுக்கு மேலும் நாள்கள் தேவைப்படும் பட்சத்தில் வருகிற மாதம் ஏப்ரல் 2 சங்கராந்தியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த ஷெட்யூல் ஹைதராபத்தில் நடக்க உள்ளதாம். தீபாவளி ரிலீஸை நோக்கி திட்டமிட்டு வருகிறார்கள். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படமும் தீபாவளி வெளியீடு என்கிறார்கள், ஆக, இந்தத் தீபாவளி அஜித் - விஜய் ரசிர்களுக்கு ஸ்பெஷல் தீபாவளியாக இருக்கப் போகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?