Modi Twitter
இந்தியா

Morning News Wrap : இராணுவத்துக்கு இந்தியா எவ்வளவு செலவு செய்திருக்கிறது தெரியுமா?

2021-ம் ஆண்டில் உலகிலேயே அதிக அளவில் ராணுவத்திற்குச் செலவு செய்த முதல் 5 நாடுகளாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் மற்றும் ரஷியா உள்ளன.

NewsSense Editorial Team

ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த நாடுகள் - இந்தியாவுக்கு 3-வது இடம்!

உலக நாடுகளின் ராணுவ செலவு குறித்த ஆய்வு அறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 2021-ம் ஆண்டில் உலக நாடுகளின் ராணுவ செலவு இதுவரை இல்லாத அளவில் 2.1 டிரில்லியன் டாலர்களை எட்டியிருக்கிறது. இதுகுறித்து, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டியாகோ லோப்ஸ் டா சில்வா கூறுகையில், "கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும், உலக நாடுகளின் ராணுவ செலவுகள் சாதனை அளவை எட்டியிருக்கிறது. பணவீக்கம் காரணமாக வளர்ச்சி விகிதத்தில் ஒரு மந்தநிலை இருந்தபோதிலும், ராணுவ செலவு 6.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது" எனக் கூறினார். இந்தப் பட்டியலில், 2021-ம் ஆண்டில் உலகிலேயே அதிக அளவில் ராணுவத்திற்குச் செலவு செய்யும் முதல் 5 நாடுகளாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் மற்றும் ரஷியா உள்ளன. இந்த 5 நாடுகளின் ராணுவ செலவு, உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவில் 62 சதவிகிதமாக உள்ளது. இந்தியா, 2021-ம் ஆண்டில் ராணுவத்திற்காக 76.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்திருப்பதாக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சசிகலா

விரைவில் அரசியல் பயணத்தைத் தொடங்குவேன் - வி.கே.சசிகலா

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.கே.சசிகலாவிடம், ஆன்மீக பயணத்தை நிறைவு செய்த நிலையில் அரசியல் பயணத்தை எப்போது தொடங்கப் போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்தவர், விரைவில் அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ளேன் என்றார். அத்துடன் பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிச்சயம் விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

பல்கலைக்கழக துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசு அதிகாரம் பெற்றுள்ளது. கர்நாடக மாநில சட்டத்தின்படி துணைவேந்தர்கள் மாநில அரசின் இசைவுடன்தான் நியமிக்க முடியும். அதன்படி, 1923-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகச் சட்டம் உட்பட, 13 பல்கலைக்கழகங்களில் சட்டங்கள் திருத்தப்படவுள்ளன. இனி மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தமிழ்நாடு அரசு நியமிக்கும் வகையில் சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்படுகிறது." எனத் தெரிவித்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருப்பதி கோயில்

திருப்பதி கோயிலில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்குச் சிறப்பு தரிசன டிக்கெட் விநியோகம்!

இந்தியாவிலுள்ள மிகப்பெரிய வழிபாட்டுத்தலங்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில். பக்தர்கள் கூட்டம் எப்போதும் இங்கு அமலைமோதும். மாற்றுத்திறனாாளிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் சிரமப்படும் நிலை உருவாகும். இதையொட்டி, கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்றுமுதல் ஆன்லைனில் பெறலாம் என்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்குச் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்

ட்விட்டரை வாங்கினார் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்!

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்று ட்விட்டர். உலகப் பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முயன்று வந்தார். ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்தார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவிகித பங்குகளை வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேர்வதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்க டாலர் என்ற கணக்கில் மொத்த பங்குகளையும் வழங்க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. வார இறுதியில் இதற்கான ஒப்பந்தம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க்கிடம் விற்பனை செய்ய ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா

கொரோனா பரவல் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாகக் கூட்டம்!

சமீபமாக, இந்தியாவில் மீண்டும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலமாக நாளை ஆலோசனை நடத்துகிறார். இதற்கான அழைப்பும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமருடனான கூட்டங்களைத் தவிர்த்துவந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

IPL 2022 : CSk vs PBKS

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?