ஏ ஐ எம் ஐ எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி இன்று உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு டெல்லி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாஜர்சி சுங்கச்சாவடி அருகே கார் சென்றுகொண்டிருந்த போது, 4 பேர் திடீரென கார் மீது 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின் துப்பாக்கியை வைத்துவிட்டு தப்பி ஓடினர். அதில் காரின் டயர்கள் பஞ்சர் ஆயின.
அதன்பின் அவர் பாதுகாப்பாக வேறு காரில் ஏறி சென்றுள்ளார். இதனை ஓவைசி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜோபைடன்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரான அபு இப்ராஹின் அல்-ஹாஷிமி அல்-குரேஷியை சிரியாவில் வைத்து தீர்த்துக்கட்டியிருக்கிறது அமெரிக்க ராணுவம். இந்த செய்தியை நேற்று உலகிற்கு அறிவித்திருக்கிறார் ஜோ பைடன். ஏற்கெனவே அந்த அமைப்பின் முன்னாள் தலைவரான அபு பக்கிர் அல் பாக்தாதியும் 2019-ம் ஆண்டு இதேபோல் கொல்லப்பட்ட நிலையில், அடுத்த தலைவரும் தற்போது உயிரிழந்திருக்கிறார்.
மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறார்.
நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை கடந்த (பிப்ரவரி 1-ம் தேதி) தமிழக அரசுக்கு விளக்கியிருப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், நீட் விலக்கு மசோதா, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்திருக்கிறது.
"ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப்பார்க்கிறேன்" என ட்விட் செய்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பத்துதல சிம்பு
தற்போது சிலம்பரசன் கைவசம் 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல', 'கொரோனா குமார்' உள்ளிட்ட மூன்று படங்கள் உள்ளன. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இதன்பின் 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடிக்கிறார். கன்னடத்தில் மிகப்பெரிய ஹிட்டான 'மஃப்டி' என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் அது. சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் Glimpse வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 2021, செப்டம்பர் மாதம் ஆரம்பமான இந்த படத்திற்கான ஷூட்டிங், சென்னை, நாகர்கோவில், விசாகப்பட்டினம் என பல இடங்களில் நடைபெற்றது. தற்போது வரை, மூன்று ஷெட்யூல்கள் நிறைவடைந்திருக்கின்றன.
கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், ரெடின் கிங்ஸ்லீ, டிஜே அருணாச்சலம், கலையரசன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் என பல நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசை, பிரவீன் கே. எல் படத்தொகுப்பு என டெக்னிக்கலாகவும் படம் ஸ்ட்ராங். படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். அதில் இரண்டு பாடல்களை முடித்து கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். ஏற்கனவே பத்து நாள்கள் தனக்கான போர்ஷனை முடித்துவிட்ட சிம்பு, தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். மார்ச் முதல் வாரத்தில் 'பத்து தல' ஷூட்டிங்கில் இணைய இருக்கிறார் சிம்பு. சிம்புவின் போர்ஷன் தவிர, மற்ற நடிகர்களுக்கான பகுதிகளை எடுத்து முடித்து அதன் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சிம்பு மீண்டும் இந்தப் படத்தில் கலந்துகொண்டதும், தீவிரமாக படப்பிடிப்பை நடத்தி ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
Beijing Olympic 2022
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க அல்லது நிறைவு விழாவில் இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார் என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (பிப்ரவரி 3) அறிவித்துள்ளது.
"ஒலிம்பிக்ஸை அரசியலாக்க சீனா முடிவு செய்திருப்பது வருத்தமளிக்கிறது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க அல்லது நிறைவு விழாவில் இந்தியா கலந்து கொள்ளாது" என, இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் கால்வான் சிப்பாயை சீனா தீப்பந்தம் ஏந்தி வருபவராக அறிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அறிக்கை அளித்தார். "ஒலிம்பிக்ஸை அரசியலாக்க சீனா தேர்வு செய்துள்ளது வருத்தமளிக்கிறது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க அல்லது நிறைவு விழாவில் இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார்" என்று அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.