Shanti Devi Twitter
இந்தியா

முன் ஜென்மத்தில் பெற்ற குழந்தையை அடையாளம் கண்டு கண்ணீர் விட்ட பெண் - சாந்தி தேவியின் கதை

இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த 1926 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்த சாந்தி தேவி, குழந்தைகளுக்கே உரியச் சுட்டித் தனத்தோடு வளர்ந்து வந்தார். சுமார் 4 வயதில் தன் கடந்த ஜென்மம் தொடர்பான விஷயங்களைக் கூற தொடங்கினார்.

NewsSense Editorial Team


இந்த வண்டி சாவிய இங்கதான வெச்சிருந்தேன் பாத்தியா? சார் உங்கள எங்கயோ பாத்திருக்கென், ஆனா உங்க பேரு ஊரு சரியா நினைவில்லயே,

என் மொபைல் போனை இங்க தான் சார்ஜ் போட்டிருந்த எங்க போச்சு...

இப்படி நம் நினைவாற்றல் நம்மைப் பல நேரம் காலை வாரிய சம்பவங்கள் நமக்கு நிறையவே நடந்திருக்கும், இனியும் நடக்கும்.

ஆனால், ஒரு பெண் தன்னுடைய இந்த ஜென்ம நினைவுகளைக் கடந்து, முந்தைய ஜென்மத்தில் நடந்தவற்றை எல்லாம் கூறினால் எப்படி இருக்கும். அப்படி தன் பூர்வ ஜென்ம விஷயங்களை புட்டு புட்டு வைத்து உலக அளவில் புகழ்பெற்றர் தான் சாந்தி தேவி.

இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த 1926 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்த சாந்தி தேவி, குழந்தைகளுக்கே உரியச் சுட்டித் தனத்தோடு வளர்ந்து வந்தார். சுமார் 4 வயதில் தன் கடந்த ஜென்மம் தொடர்பான விஷயங்களைக் கூற தொடங்கினார்.

ஒருகட்டத்தில் தன்னுடைய பூர்வ ஜென்மம் குறித்த பல நுணுக்கமான விஷயங்களை தன் பெற்றோரிடம் கூறி ஆச்சரியப்பட வைத்தார். சரி பச்சிளங்குழந்தை எனப் பெற்றோர், சாந்தி கூறியவற்றுக்கு அதிக மதிப்பு கொடுக்காமல் கடந்து போயினர்.

Shanti Devi

முற்பிறவியில் தன் பெயர் லுக்டி என்றும், 1925ஆம் ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் பிரசவத்தின் போது, ஒரு மகனைப் பெற்றெடுத்துவிட்டு மரணித்துவிட்டதாகச் சாந்தி கூறிய போது வீட்டிலிருந்த அனைவரும் மிரண்டு போய்விட்டனர்.

அது போக, பிரசவ வலி குறித்து அவர் விளக்கிய விஷயங்கள் அனைவரையும் மலைக்கச் செய்தது. என்னதான் பெரிய அறிவாளியாக இருந்து, சிறு வயதிலேயே பல புத்தகங்களைப் படித்தாலும், அது போல நுணுக்கமாகப் பிரசவ வலியை விவரித்துக் கூற முடியாது என்கிற அளவுக்கு விளக்கினார் சாந்தி.

நாளடைவில், தன் கணவரின் இடது கண்ணத்தில் ஒரு மரு இருக்கும் என்றும், தன் பூர்வ ஜென்ம வீடு மதுரா நகரத்தில் இருப்பதாகவும் கூறினார். திடீரென ஒரு நாள், தன் கணவரின் பெயர் பண்டிட் கேதார்நாத் செளபே என்று கூறி பெற்றோர், உற்றார் உறவினர்களை ஸ்தம்பிக்க வைத்தார்.

இனியும் சாந்தி தேவி கூறுவதை உதாசீனப்படுத்தக் கூடாதென, அவரது பெற்றோர், தங்கள் குடும்ப நண்பரை அழைத்து ஆலோசித்தனர்.

Shanti Devi

அந்த நண்பர் மூலம், மதுரா நகரத்தில் கேதார்நாத் என்பவருக்கு, சாந்தி கூறிய விவரங்களை வைத்து, கேதார்நாத்தின் இறந்து போன மனைவி லுக்டி தேவி குறித்து ஒரு கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என கேதார்நாத் பதில் கடிதம் எழுதிய போது அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

அதையும் மீறி, சாந்தி தேவி உண்மையாகவே கேதார்நாத்தை அறிந்திருக்கிறாரா இல்லையா என்பதைச் சோதிக்க, கேதார்நாத்தின் சகோதரர் ஒருவரை, இவர் தான் கேதார்நாத் என்று கூறி சாந்தி தேவியிடம் அறிமுகப்படுத்தினர்.

அவரைப் பார்த்த உடனேயே, சாந்தி தேவி, இவர் என் முந்தைய ஜென்ம கணவர் கேதார்நாத்தின் சகோதரர் என்று கூறி, கூடி இருந்தவர்களை மிரள வைத்தார்.

பிறகு கேதார்நாத் மற்றும் அவரது மனைவி லுக்டி பெற்றெடுத்த 10 வயது மகன் நுழைந்த போது, சாந்தி தேவியின் கண்கள் கண்ணீரில் மிதந்தன. குடும்ப நண்பர்களைப் போலச் சாந்தி தேவி, கேதார்நாத், அவரது மகன் சிறிது காலம் ஒன்றாக வாழ்ந்தனர்.

Shanti Devi

பிறகு கேதார்நாத் மற்றும் அவரது மகன் மதுரா சென்றுவிட்டனர். சாந்தி தேவியும் மதுரா செல்லவேண்டும் என விரும்பினார். அதோடு, மதுராவில் உள்ள தனது கணவர் வீட்டில் ஒரு புதையலை மறைத்து வைத்திருப்பதாகவும் கூறினார். சாந்தி தேவியின் பெற்றோர் அப்பயணத்தை மறுத்தனர்.

ஆனால், இந்த விஷயம் மகாத்மா காந்திக்குத் தெரிய வந்தது. சாந்தி தேவியின் நிலையைக் குறித்து ஆராய டஜன் கணக்கிலான அறிஞர் பெருமக்கள் நிறைந்த ஆணையத்தை அனுப்பினார் காந்தி.

1935 நவம்பர் மாதம் இந்த குழுவினர் சாந்தி தேவியைச் சந்தித்தது. சாந்தி தேவியே மதுராவில் இருக்கும் தன் கணவர் வீட்டுக்குக் கச்சிதமாக வழிகாட்டினார். அங்கு அவர் மறைத்து வைத்திருந்த புதையலையும் அடையாளம் காட்டினார்.

தன் மனைவி லுக்டி இறந்த பின், அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டதாகக் கூறினார் கேதார்நாத். கணவர் வீட்டைத் தொடர்ந்து, லுக்டி தேவியாக பிறந்து வளர்ந்த வீட்டையும் அடையாளம் காட்டினார் சாந்தி தேவி.

அப்படியே சுமார் 50 பேர் கூடி இருந்த கூட்டத்தில், லுக்டி தேவியாக பிறந்த போது தனக்கு தாய் தந்தையாக இருந்தவர்களையும் அடையாளம் கண்டு அன்போடு பேசினார்.

தன்னுடைய முற்பிறவியைக் குறித்து பேசிக் கொண்டிருந்த சாந்தி தேவி, 1936 மற்றும் 1939 காலத்தில் தன் நிகர மரண (Near Death Experience) அனுபவத்தையும் விளக்கினார்.

சாந்தி தேவியின் மறுபிறப்பு விவரங்கள் தொடர்பாக ஆராய வந்த அறிஞர்கள் குழு, இந்த விஷயங்களுக்கு எந்த ஒரு எதார்த்தமான விளக்கங்களையும் கொடுக்க முடியவில்லை என்று கூறினர்.

முற்பிறவி, பூர்வ ஜென்மம்.... என இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சாந்தி தேவி, 1961ஆம் ஆண்டு காலமாகும் வரை எவரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?